பொருளாதாரத்தின் பொக்கிஷம் வெள்ளவத்தை | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதாரத்தின் பொக்கிஷம் வெள்ளவத்தை

கொழும்பில் தெற்கு எல்லையில் அமைந்த நிலையில் இன்று செயற்பாடுகளின் கூடமாக விளங்கும் வெள்ளவத்தை நகரம், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் மக்கள் நடமாட்டமற்ற வெறிச்சோடிப்போன, குடிசன அடர்த்தி குறைந்த சிறிய நகரமாக இருந்துள்ளதென்பதை நம்புவது கடினமானதாகும்.

சிங்கள மொழியில் இது கைவிடப்பட்ட பிரதேசமொன்றாகவே அர்த்தப்படுத்தப்படுகின்றது.

அப்போது இந்தச் சிறிய நகரம் ஒருசில பறங்கி இனக் குடும்பங்களின் ஆதிக்கத்தின் கீழேயே இருந்தது. கடல் பக்கமாகவுள்ள அதிகளவு நிலப்பரப்பு சார்லிமொன்ட் ஜொனதன் கோடர் எனும் பெயருடைய பறங்கியின கனவான் ஒருவருக்குச் சொந்தமான பரந்தளவிலான தென்னந் தோட்டமொன்றாகவே இருந்ததாகக் கூறப்படுகின்றது. அவரினதும் அவரது நெருங்கிய உறவினர்களான பிரெட்ரிக்கா, கொலிங்வூட், அலெக்ஸாண்ட்ரா மற்றும் பிரான்சிஸ் ஆகியோரினதும் பெயர்களில் வீதிகள் பல இன்றும் காணப்படுகின்றமை இதற்குச் சான்று பகர்கின்றது.

எது எப்படியிருப்பினும், இன்றைய காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையான தமிழ் மக்கள் செறிந்துவாழும் பூமியாக விளங்குவதால், இது “குட்டி யாழ்ப்பாணம்” என அனைவராலும் அழைக்கப்படுகின்றது.

கடலுக்குள் விடப்படு முன்னர் வீதிப் பாலமொன்றினால் மூடப்பெற்றுள்ள வெள்ளவத்தை கால்வாய், இந்தப் பிரதேசத்தின் முக்கியமான அம்சமொன்றாக விளங்கியது. இந்தக் கால்வாயில் சிறிய அலங்கார மீன்களைத் தம்மால் பிடிக்க முடிந்ததாக இங்கு முன்னர் வாழ்ந்திருந்த மக்கள் இன்றும் நினைத்துப் பார்க்கின்றனர்.

1960கள் வரை, அதன் கரையோரங்களில் சிறிய குடிசைகள் முளைப்பதற்கு முன்னர் அது சுத்தமானதாகவே காணப்பட்டது. கைத்தொழில் கழிவுகள் அதனை மாசுபடுத்தத் தொடங்கின. கடலை முத்தமிட்ட கால்வாயின் இரு மருங்கிலும் உள்ள இரண்டு அலை தாங்கிகளும் தூண்டில் போட்டு மீன் பிடிப்போரின் நிலையான இடமாகவே காணப்பட்டது. அத்துடன், கால்வாய்க்கு அண்மையில் வாழ்ந்துவந்த மக்களால் புதிய மீன்களைக் கொள்வனவு செய்ய முடிந்தது.

முன்னொரு காலத்தில் உறங்கிப் போயிருந்த நற்பாங்கான நகரமாகக் காட்சியளித்த வெள்ளவத்தை, இன்று அனைவரும் மூக்கில் விரல் வைக்குமளவுக்கு, பரபரப்புமிகுந்த நிலையில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு செல்லும் நகரமாக எழிற்கோலம் பூண்டுள்ளது.

கடந்த 50, 60 மற்றும் 70 களில் வெள்ளவத்தைக்கு வரைவிலக்கணமாகத் திகழ்ந்த பிரபல்யம் வாய்ந்த 08 இடங்கள் பற்றிய சுவாரஸ்யமான குறிப்புகளைப் பார்ப்போம்.

சவோய் சினிமா

கடந்த இரண்டாம் உலகப் போரின் போது இங்கு நிலைகொண்டிருந்த வெளிநாட்டுத் துருப்பினரை மகிழ்விக்கும் வகையில், சீ. வி. டி. சில்வா என்பவர் சவோய் சினிமாத் திரையரங்கைக் கட்டுவித்தார். லண்டன் மாநகரின் அதிகம் பிரசித்திபெற்ற சவோஸ் சினிமாவை அடியொற்றியே இதற்குப் பெயரைச் சூட்டினார்.

கடந்த 50 களில், இலங்கை சினிமா வரலாற்றுக் காலப்பகுதியில் என்றுமே கண்டிராத காட்சிகளை சவோய் சினிமாவில் காணமுடிந்தது. ஆமாம்! கடந்த 1956இல் பில் ஹலியையும் வால் நட்சத்தரங்களையும் சித்திரிக்கும் Rock Around the Clock எனும் இசைச்சித்திரம் திரையிடப்பட்ட போது பறங்கியின பையன்கள் சிலர் சினிமா திரையரங்கினுள் நடனமாடத் தொடங்கினர். அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்குப் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். கலரியில் இருந்து பார்ப்பதற்கு 50 சதமும், இரண்டாம் வகுப்பு கட்டணமாக ஒரு ரூபாவும், முதலாம் வகுப்புக் கட்டணமாக 2 ரூபாவும், பல்கனிக்கென 3 ரூபாவும் அறவிடப்பட்டன.

பிளாஸா சினிமா

காலி வீதியில் இருந்து ரோஹினி வீதிக்குத் திரும்பும் இடத்தில் பிளாஸா சினிமா இயங்கி வந்தது. கொழும்பு கோட்டையில் பழைய Rocket Court ஸ்தலத்தில் கடந்த 1916 இல் ‘London Bias cope’ என அழைக்கப்படும் திரையரங்கொன்றை வெற்றிகரமாக கட்டுவித்ததைத் தொடர்ந்து ஏ. ஜீ. நூர்பாய் எனும் செல்வந்தர் கடந்த 1920 இல் இதனைக் கட்டுவித்தார். இது காலப் பகுதியில் Easters Theaters Ltd க்குச் சொந்தமாகியது. தென்னிந்தியாவில் இருந்து தருவித்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பிரதானமாக திரையிடப்பட்டன. 1959 இல் திரையிடப்பட்ட ஜெமினிகணேசன் மற்றும் சரோஜாதேவி இணைந்து நடித்த கல்யாணப் பரிசு எனும் காதல் திரைப்படம் அந்தக் காலப் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்றதாக விளங்கியது.

பிக்காடில்லி கபே

லண்டன் வெஸ்ட் எண்ட் (London West End) இல் புகழ்பெற்று விளங்கிய பிக்காடில்லி கபேயின் பெயரைத் தாங்கிய இந்த ஐஸ்கிரீம் கூடம் ரோஹினி வீதிக்கு சமீபமாக காலி வீதியில் இல. 45 இல் அமைந்திருந்தது. அலெரிக் டி சில்வா என்பவரே இதனை ஆரம்பித்தார். ஐஸ் கிரீம் 25 சதத்திற்கும் பால் கட்டிகள் 50 சதத்திற்கும் விற்கப்பட்டன. முஸ்லிம் மணமக்கள் ஒருவரையொருவர் பக்க கண்ணாடிகள் மூலம் காணும் வாய்ப்பை இந்த உணவகம் வழங்கியதன் மூலம் இது முஸ்லிம் சமுகத்தினரின் அபிமானத்தைப் பெற்றிருந்தது.

றோயல் வெதுப்பகம்

நகரில் நெல்சன் பிளேஸுக்கும் பொஸ்வெல் பிளேஸுக்குமிடையில் காலி வீதியின் கடல் பக்கமாக இது அமைந்திருந்தது. இது பொடி சின்னோ பெரேரா என்பவரால் கடந்த 1900 களில் தாபிக்கப்பட்டது. இது இன்னமும் குடும்ப நிறுவனமாகவே இயங்கி வருகின்றது. வெள்ளவத்தையில் பாண் விற்பனையில் ஈடுபட்டுவந்த மூன்றே மூன்று வெதுப்பகங்களுள் இதுவும் ஒன்றாகும். கனால் வியூ ஸ்ரோர்ஸ், மற்றும் எலியன்ட் ஹவுஸ் ஆகியவையே ஏனைய இரண்டுமாகும்.

எம்.பி. கோமஸ் & கம்பனி

தூத்துக்குடியைச் சேர்ந்த எம்.பி. கோமஸ் என்பவரின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வந்த சிறிய திணைக்களம் சார்ந்த களஞ்சியமே இதுவாகும். பிரான்சிஸ் வீதியிலிருந்து காலி வீதிக்குத் திரும்பும் இடத்திலேயே இயங்கிவந்தது. கடந்த 50 மற்றும் 60 களில் இது பறங்கியின மக்களின் அபிமானம் பெற்ற நிறுவனமாக விளங்கியது. தென்னாபிரிக்காவில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்ட தகரத்தில் அடைக்கப்பட்ட எடாம் பாற்கட்டிகள், IXL பீச் பழ வகைகள் என்பன அதிகளவில் விற்பனையாகின.

மொய்ரா சிகையலங்கார நிலையம்

மொய்ரா சலொன் திங்கர் முத்துக்கிருஷ்ணாவை மணமுடித்த பறங்கியினப் பெண்மணியான மொய்ரா வான் கைலென்பேர்க் என்பவரால் 1950 களில் சார்லிமொன்ட் வீதியில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்டு வந்தது.

பெண்கள் தமது தலைமுடிகளைச் சாதாரண சிகையலங்கார நிலையங்களில் சீரமைத்து வந்த காலப் பகுதியில், ஆக்கத்திறன்மிக்க புத்தாக்க பாணிகளை முதன் முதலாக இந்த நிலையம் அறிமுகப்படுத்தியது. இது கொள்ளுப்பிட்டிக்குத் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிடெக்னிக் கல்வி நிறுவனம்

பொலி (Poly) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பொலிடெக்னிக் நிறுவனம், கொழும்பு செட்டியார்களான லோரி முத்துக்கிருஷ்ணா மற்றும் அவரது சகோதரிகளான வயலட் மற்றும் ஓலிவ் ஆகியோரால் கடந்த 1901 இல் தாபிக்கப்பட்டது.

புறக்கோட்டை சென். செபஸ்தியன் மேட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனம் இரண்டாம் உலகப் போரின் போது வெள்ளவத்தையில் உள்ள காலி வீதிக்கு மாற்றப்படமுன்னர் பம்பலப்பிட்டிக்கு மாற்றப்பட்டிருந்தது.

இது நாட்டின் முதலாவது தனியார் வியாபாரக் கல்லூரியாகும். தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து பயிற்சிநெறிகளுக்கு பெயர் பெற்ற கல்வி நிறுவனமான இது, பல்கலைக்கழகத்திற்கு மாற்றீடான ஒன்றாகவும் விளங்கியது. இதன் புகழ்பூத்த விரிவுரையாளர்கள் குழாமில் முன்னாள் சபாநாயகர் ஸ்டான்லி திலகரத்ன, பிரபல பத்திரிகையாளர் ரெஜி மைக்கேல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

கின்றொஸ் உணவகம்

இது 1941 இல், பிரபல ஸ்கொட்லாந்தின் பட்டணத்தின் பெயரில் பம்பலப்பிட்டியில் உள்ள கின்றொஸ் அவெனியூவுக்கு எதிரேயுள்ள கடற்கரையில் மைக் ஸ்ரீஜெயமானே என்பவரால் 1941 இல் தாபிக்கப்பட்டது. கடற்கரையில் அமைந்த இந்த உணவகம் 1950 களின் நடுப் பகுதியில் இன்று வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரை முன்னரங்கில் அமைந்துள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது.

முன்னர் இது ஓலையால் வேயப்பட்ட கூரையுடன் காணப்பட்டது, இளைஞர்களுக்கு நீச்சல் மற்றும் உயிர் காப்புத் திறன்கள் பற்றி பயிற்றுவித்து வருகின்றது.

மேற்படி உணவகம் கல்கிசை வரையிலான கடற் பிரதேசத்தில் நீச்சல் வீரர்களை நீச்சலடிக்க வைத்து ‘6 Mile Swim’ எனும் வருடாந்த நிகழ்வை நடத்துவதில் இது பிரபல்யம் பெற்று விளங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரா.இராஜேஸ்வரன்

Comments