ரயில்வே | தினகரன் வாரமஞ்சரி

ரயில்வே

விசு கருணாநிதி

வேலை நிறுத்தமானது உழைப்பாளர்களின் இறுதிய ஆயுதம் என்பதை ரயில்வே ஊழியர்கள் நிரூபித்திருக்கிறார்கள். கடந்த ஒன்பதாந்திகதி அவர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தப்போராட்டம் 40 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது!

எட்டாந்திகதி நள்ளிரவில் ஆரம்பிக்கப்படவிருந்த போராட்டம் புதன்கிழமை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனிடையே அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, ரயில்வே தொழிற்சங்கத் தலைவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, "ரயில்வே பிரச்சினை அமைச்சரவையில் கலந்துரையாடப்படுகிறது; வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டாம்" என்று கேட்டுக்ெகாண்டதற்கிணங்க, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது.

எப்போதும் நள்ளிரவில் ஆரம்பித்து பொழுது புலர்வதற்குள் பணிப்பகிஷ்கரிப்பை முடிவுறுத்தும் ரயில்வே ஊழியர்கள், கடந்தாண்டு மாத்திரம் ஆறு நாட்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அவர்களின் முக்கியமான கோரிக்ைக, சம்பள முரண்பாட்டைத் தீர்க்க வேண்டும் என்பது. ஆனால், ரயில்வே ஊழியர்களுக்குத்தான் கூடுதலான சம்பளம் வழங்கப்படுகிறது; சாரதிகளின் மாதாந்தச் சம்பளம் இரண்டு இலட்சத்தையும் தாண்டுகிறது என்கிறார்கள் விடயம் அறிந்தவர்கள்.

​பொதுப் போக்குவரத்துத்துறைக்கு முக்கிய பங்காற்றி வரும் ரயில் சேவையை மேம்படுத்துவதற்கு இன்னும் பல்வேறு விடயங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அதன் பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம.

நாடு முழுவதிலும் உள்ள 320 ரயில் நிலையங்களுக்கிடையில் நாளாந்தம் 340 ரயில்கள் ​சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் சுமார் மூன்று இலட்சம் பயணிகள் நாளாந்தம் பயணம் செய்கின்றனர். அலுவலகப் பணியாளர்கள், பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் எனப் பலதரப்பட்டோரும் ரயில் பயணத்தையே பொதுப்போக்குவரத்திற்காகப் பயன்படுத்துகின்றனர். எனினும், ரயிலில் பயணிகளுக்குப் போதுமான வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மின்விளக்குகள் ஒளிராமை, தூய்மையற்ற கழிப்பறைகள், உணவைப் பெற்றுக்ெகாள்வதற்கான வசியின்மை, பயணிகளுக்குப் பாதுகாப்பின்மை எனப் பல முறைப்பாடுகள் நிவர்த்திக்கப்பட வேண்டியுள்ளன. இந்த நிலையில், ரயில் சாரதிகள் தமக்குப் போதிய சம்பளம் இல்லை என்று குறைபடுகிறார்கள்.

வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் ரயில் சாரதிகளுக்குப் போதிய சம்பளம் இல்லை என்பதை ஏற்றுக்ெகாள்ளத்தான் வேண்டும். அவர்களின் ஒரு மணித்தியால சம்பளம் 25.49 டொலர். ஆனால், அங்கு சாரதிகளின் கல்வித்தகுதியும் பயிற்சியும் இலங்கை ரயில் சாரதிகளிடம் இல்லை. இங்கு கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரம் சித்தியடைந்தவர்களே இத்துறையில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். அதனால், அதற்கான தகுதியாக இந்தத்துறையில் குறைந்தபட்சம் டிப்ளோமா கற்கை நெறியையாவது பூர்த்திசெய்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ரயில்வே பொறியியலாளர் சங்கத்தினர் என்று சொல்லிக் ெகாண்டாலும், அவர்கள் பொறியியலாளர் வரையறைக்குள் வரமாட்டார்கள் என்று துறைசார்ந்த நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். வெளித்தோற்றத்திற்குப் பட்டதாரிகள் என்று தவறான பிரசாரத்தை முன்னெடுப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும், ரயில்வே சாரதிகளுக்கு அரசு பல வழிகளிலும் சலுகைகளை வழங்கி வருகிறது என்பதை மறுக்க முடியாது. அண்மையில் ஒரு ரயில் நிலையத்தில் மதுபோதையில் ரயிலைச் செலுத்திய சாரதிகளைக் கையுமெய்யுமாகப் பிடித்துக்ெகாண்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், அவர்களைப் பொலிஸில் ஒப்படைக்க முனைந்துள்ளனர். உடனே, அவர்களுக்கு ஆதரவாக ஏனைய சாரதிகளும் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளப்போவதாக அச்சுறுத்தினர். இதனைத் தொடர்ந்து மதுபோதையிலேயே ரயிலைச் செலுத்துவதற்கு அனுமதியளித்தது மட்டுமல்லாமல், பொலிஸ் முறைப்பாட்டையும் அவர்கள் வாபஸ்பெற்றுக்ெகாண்டிருக்கிறார்கள். இதனைச் செய்தது ரயில் சாரதிகளுக்காகவன்றிப் பொதுமக்களின் நலன் கருதியே என்றாலும், அந்தச் சாரதிகளினால், பொதுமக்களுக்கு விபரீதம் ஏற்பட்டால்; எற்பட்டிருந்தால் அதற்கான பொறுப்பைச் சாரதிகள் ஏற்றிருப்பார்களா?

பொது முகாமையாளர் தெரிவிக்கின்ற தகவலின்படி, ரயில்வே இன்னும் எவ்வளவோ தூரத்திற்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டியிருக்கிறது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ரயில் பாதைகள் புனரமைப்புச்செய்யப்பட வேண்டியதுடன், மேலதிகத் தடங்களையும் உருவாக்க வேண்டும். ரயில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் வீண் காலதாமதத்தைத் தவிர்ப்பதற்காகவும் குருணாகல், பொல்காவலை போன்று சிக்கலான இடங்களைத் தெரிவு செய்து மேலதிகத் தண்டவாளத் தடங்களை ஏற்படுத்த நடவடிக்ைக எடுக்கவிருப்பதாகப் பொது முகாமையாளர் கூறுகிறார்.

அது மாத்திரமன்றி, இந்தியாவிலும் சீனாவிலும் இருந்து புதிதாகப் 15 ரயில்கள் தருவிக்கப்படவுள்ளன. இந்தியாவிலிருந்து ஆறும் சீனாவிலிருந்து ஒன்பது ரயில்களும் தருவிக்கப்படவுள்ளன. தவிரவும், 160 ரயில் பெட்டிகளும் 22 இயந்திரங்களும் கொள்வனவு செய்யப்படவிருப்பதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

தண்டவாளங்கள் மறுசீரமைக்கப்படாமையினாலும் போதிய தண்டவாளத்தடங்கள் இல்லாமையாலும் ரயில் சேவையில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாதாகிவிடுகிறது. அந்தச்சமயத்தில், மாற்று ரயிலை இயக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் முகாமையாளர் கூறுகிறார். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பயணிகளுக்கு நட்டஈடு வழங்கும் நடைமுறையையும் இலங்கை ரயில்வே அமுல்படுத்தி வருகிறது. இது ரயில் பயணக்கட்டணத்தையும் செல்லுமிடத்தின் தூரத்தையும் அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. ஆனால், குறுந்தூரத்திற்குப் பயணிக்கும் பயணிகள் நட்டஈட்டைப்பற்றிப் பொருட்படுத்தாமல் சென்றுவிடுகிறார்கள். அதேநேரம், ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதால் ரயில் சேவை இடம்பெறாவிட்டாலும் நட்டஈட்டை வழங்குகிறது ரயில்வே. அது மாத்திரமன்றி இலவச பஸ் பயணத்தையும் ஏற்படுத்திக் ெகாடுக்கிறது. அந்த வசதிகளையெல்லாம் சரிவரப் பயன்படுத்திக்ெகாண்டால், வேலை நிறுத்தக்காரர்களின் காரத்தைக் குறைக்க முடியும் என்பது அவரின் அபிப்பிராயம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தேசிய சொத்துகளைப் பாதுகாக்கும் தாரமீகப் பொறுப்பு பொதுமக்களுக்கு இருக்கிறது என்பதை பயணிகள் மறந்து செயற்படுவதும் விசனத்திற்குரியது. மின் குமிழ்களைத் திருடிச்செல்வது, மின்விசிறிகளையும் சாளரங்களின் கண்ணாடிகளையும் உடைப்பது போன்ற செயல்களில் பயணிகள் ஈடுபடுகிறார்கள் என்றும் ரயில்வே குற்றஞ்சாட்டுகிறது.

ஆனால், ரயில்வே மீது பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அதனைவிடப் பாரதூரமானவை. குறித்த ஓர் இடத்திற்குச் செல்வதாக இருந்தால், பஸ்களில் செல்லும் நேரத்தைவிடவும் இரட்டிப்பு நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கிறது. அதனால், அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவது தவிர்ந்த பயணங்களுக்கு ரயில் என்றால் ஓர் அருவருப்பு. இதில், ரயிலில் மின்சாரம் இருக்கிறதா, கழிப்பறை இருக்கிறதா? என்பதைவிட நேரத்தை வீணாக்குகிறது என்பதே முக்கியமான குற்றச்சாட்டு. இதற்குக் காரணம், பிரிட்டாஷாரின் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாடு இன்னமும் மறுசீரமைக்கப்படாமல் இருப்பதுதான் என்கிறார் பொது முகாமையாளர்.

எனவே, ரயில் சாரதிகள், பணியாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அதேநேரத்தில் ரயில் பயணிகளின் மனக்குறைகளையும் நிவர்த்தி செய்து, மக்களுக்குக் காத்திரமான சேவையை வழங்க ரயில்வே முன்வரவேண்டும்.

Comments