ஹவாய் வீடு தேடிவந்த எரிமலை | தினகரன் வாரமஞ்சரி

ஹவாய் வீடு தேடிவந்த எரிமலை

அனி...

மெல்ல நகர்ந்து வரும் எரிமலைக் குழம்பும், அதன் வெப்பம் தாளாமல் பற்றியெரியும் வீடுகளும் என முழு உலகையுமே கதிகலங்கச் செய்திருக்கிறது ஹவாயின் எரிமலைக் குமுறல். உல்லாசப் பயணிகளின் சொர்க்கபுரியாகத் திகழும் இத்தீவுகள் எங்கணும் இப்போது ஒரே புகை மூட்டம்.

சில காலங்களுக்கு முன்னர் ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் அப்பகுதியில் பல நாட்களுக்கு விமானபோக்குவரத்து தடைப்பட்டமை பலருக்கு நினைவிருக்கலாம். பூமி வினோதங்கள் நிறைந்தது. எங்கும் பனிபடர்ந்துள்ள ஐஸ்லாந்தில் பூமிக்கடியில் கொதித்துக் கொண்டிருந்த எரிமலைகள் வெடித்து வானில் 20 கிலோ மீற்றர் வரை அப்போது புகை மண்டலம் எழுந்தது.

1975 ஆம் ஆண்டு முதல், ஹவாயில் எரிமலைகள் எந்நேரமும் வெடிக்கலாம் என்கிற அபாய நிலை காணப்படுகின்றது. அவற்றில் முக்கியமானது கடந்த வாரம் வெடித்துச் சிதறிய கிலாயூ எனும் எரிமலை. ஹவாய் தீவில் மிகவும் தீவிரமான நிலையில் வெடிக்கக்கூடிய வகையில் பல எரிமலைகள் உள்ளன. கிலாயூ எரிமலை கடந்த வாரம் வெடித்து, எரிமலைக் குழம்புகளை கக்கி வருகின்றது. இந்த எரிமலையில் இருந்து வரும் அக்கினிக் குழம்புகள் 1,093 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக கடந்த ஒரு வாரமாக குடியிருப்பு பகுதியை நோக்கி நகர்ந்து வரும் இவ்வெரிமலைக்குழம்புகளால், ஹவாயின் ஒட்டுமாத்த இயற்கை வனப்புமே மாறிவிட்டது. எரிமலை வெடிப்பு காரணமாகவே நிலநடுக்கமும் ஏற்பட்டிருக்கின்றது. ஹவாயின் முக்கால்வாசி கட்டடங்கள் இதனால் சேதமடைந்துள்ளன. 100 க்கும் அதிகமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை சுமார் 2500 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் சிலர் இறந்தும் உள்ளனர். ஆனால் மீட்புப்பணி செய்ய முடியாததால், இறந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக வெளியிட முடியவில்லை என்று தெரியவருகின்றது.

எரிமலை வெடித்ததையடுத்து ஹவாயில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாவது நிலநடுக்கம் 5.6 ரிச்டர் அளவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எரிமலை அபாயத்தால் வீடுகளை விட்டு வெ ளியேறிய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இரண்டாவது நிலநடுக்கம் சரியாக 7.4 ரிச்டர் அளவில் பதிவானது. ஹவாயில் கடந்த 40 வருடங்களில் ஏற்படாத அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கமாக இது கருதப்படுகின்றது.

ஹவாய் தீவுகள் எரிமலைகளால் ஆனவை. ஹவாய் தீவின் ஒவ்வொரு தீவும் குறைந்தது ஒரு ஆரம்ப எரிமலையைக் கொண்டிருக்கும். இத்தீவுகளில்பெரிய தீவானது 5 பாரிய எரிமலைகளால் ஆனது, கிலாவு, மௌனா லோவா, மௌனா கியா, ஹுவாலாலி, மற்றும் கோஹாலா போன்ற பாரிய எரிமலைகளை இத் தீவு கொண்டிருக்கின்றது. உலகிலேயே மிகப் பெரிய எரிமலை மௌனா கியா என்பது குறிப்பிடத்தக்கது.

ஹவாய் ​ெபாலினேசியத் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்தது. ஆசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பசுபிக் பெருங்கடலின் நடுவில் இருக்கின்றது. 1700 களில் இங்கிலாந்தில் இருந்து கெப்டன் குக் என்ற கடலோடி இந்த வழியாகக் கடல் பயணம் மேற்கொண்டு இங்கே வந்தார். அப்போது இங்கே வசித்த பழங்குடி மக்களுடன் நடந்த மோதலில் அவர் குத்திக் கொல்லப்பட்டார்.

அதன்பிறகு, பசுபிக் கடல் பகுதியில் ஒரு இராணுவத் தளத்தை அமைப்பதற்காக அமெரிக்கர்கள் அங்கே வந்தார்கள்.

இங்கே கரும்பு, அன்னாசிப் பழ விளைச்சல் அமோகமாக இருப்பதைக் கண்டும், இத்தீவுகளில் இருக்கக் கூடிய சுற்றுலா கவர்ச்சியை அவதானித்தவர்கள் ஹவாய் தீவுக் கூட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி அமெரிக்காவின் ஐம்பதாவது மாநிலமாகவும் அறிவித்து விட்டார்கள்.

ஆனால் அந்தத் தீவுக்குச் சொந்தக்காரர்கள் பொலினேசியப் பழங்குடிகளே. இப்போதும்கூட இங்கே ஜப்பானியர்கள், சீனர்கள், பிலிப்பைன்ஸ்காரர்கள்தான் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். அமெரிக்கர்களின் எண்ணிக்கை பத்து சதவீதத்திலும் குறைவுதான். ஹவாய் என்பது ஐந்து பெரிய தீவுகளின் தொகுப்பு ஆகும். ஹவாய் தீவுதான் அவற்றுள் பெரியது. ஒரு சுற்றுச் சுற்றி வந்தால் ஒரு இடத்தில் நல்ல மழை பெய்து கொண்டு இருக்கும். மற்றொரு இடத்தில் வெயில் காயும். இப்படி மாறுபட்ட பருவநிலையை இங்கே பார்க்கலாம்.

ஹவாய் தீவுகள் ஒரு வளர்ந்து கொண்டிருக்கும் தீவுக்கூட்டமாகவே அறியப்படுகிறது. காரணம், அந்தத் தீவுகளில் உள்ள எரிமலைகளில் இருந்து லாவா எனப்படும் எரிமலைக் குழம்புகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பூமியின் உள்ளிருந்து வெளியே வந்து கடலில் வீழ்ந்து வருகின்றது. இவ்வாறு கடலில் விழும் குழம்புகள் குளிர்ந்து புதிய நிலப்பரப்பாகிறது. பூமியின் நிலப்பரப்பில் பெரும் பகுதி இவ்வாறு எரிமலைகளால் உண்டானவை தானாம்.

நாம் வாழும் பூமி மூன்று பகுதிகளால் ஆனது. நாம் வாழ்வது பூமியின் மேல் தட்டுப் பகுதியில். இந்த மேல் தட்டு, பூமியில் ' மேண்டில் ' ( mantle) என அழைக்கப்படும் பாகு நிலையிலுள்ள (உருகிய) பாறைகளின் மேல் இருக்கின்றது. அதற்கு கீழே, புவியின் மத்திய பகுதி இருக்கின்றது. புவியின் மத்திய பகுதி இரும்பு -நிக்கல் கலவையினால் ஆனது. இந்தப் பகுதியின் வெப்பம், சூரியனின் வெளிப்புற வெப்பமான சுமார் 540000 பாகை செல்வசியசுக்குச் சமனானது.

பூமி உருவானபோது உண்டான

ஆரம்பகால வெப்பமும், கதிரியக்கத்தினால் உண்டாகும் வெப்பமும் சேர்ந்ததே புவியின் மத்திய பகுதியின் வெப்பமாகும். பூமியின் மத்தியில் இருந்து அந்த வெப்பம் வெளியே வரும்போது 'மாண்டில்' எனப்படும் பகுதியிலுள்ள பாறைகளை உருக வைக்கின்றது.

உருகிய பாறைகள் அடர்த்தி குறைவானதால் மேலே எழும்புகின்றன. மேலே உள்ள குளிர்ந்த பாறைகள் அடர்த்தி அதிகம் உள்ளதால் கீழே (பூமியின் மத்திய பகுதிக்கு) இறங்குகின்றன. வெப்பமடைந்த பாறைகள் கீழிருந்து மேலாகவும், மேலே உள்ள குளிர்ந்த பாறை மேலிருந்து கீழே நகர்வதுமான மிக மெதுவான ஒரு சுழற்சி மாண்டில் எனப்படும் பகுதியில் நடந்து கொண்டிருக்கின்றது. எமக்குத் தெரியாமலேயே பூமியின் கீழ்ப்பகுதியில் இவையெல்லாம் நடைபெறுகின்றன.

மண்டில் பகுதியில் நடக்கும் அவ்வாறான சுழற்சியினால், அதன் மேல் அமர்ந்திருக்கும் நாம் வாழும் மேல்தட்டு மெல்ல நகர்ந்துகொண்டே இருக்கின்றது. நம் நகம் வளரும் வேகத்தில்தான் தட்டுக்களும் கோடிக்கணக்கான வருடங்களாக நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இதனை நாம் உணர்வதில்லை. ஆபத்து என்னவென்றால், நாம் வாழும் பூமியின் மேல்தட்டு, ஆங்காங்கே பிளவு பட்டுள்ளது. பிளவுபட்டுள்ள தட்டுக்கள், அதற்கு கீழே உள்ள மேற்கூறிய உருகிய பாறைகளின் நகர்வினால்,ஒன்றன் மீது ஒன்று மோதுவதும், பக்கவாட்டில் உரசிக்கொள்வதும், ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து செல்வதுமாக இருக்கின்றன. மேல் தட்டின் இந்த அசைவுகளால் அதன் கீழேயுள்ள உருகிய பாறைகள், மேல்தட்டின் பிளவுகளுக்கிடையேயும், மேல்தட்டை பிளந்துகொண்டும் பூமிக்கு வெளியாக லாவா எனப்படும் அக்கினி குழம்பாக வெளிவருகின்றது.

எரிமலைக் குழம்பான மாக்மாவில் 'சிலிக்கா' என்ற இரசாயனப் பொருளே அதிகம் உள்ளது. மாக்மாவில் உள்ள சிலிகாவின் சதவீதத்தை பொறுத்து அதனை பிரிக்கின்றனர். மாக்மா 45- தொடக்கம் 52 வீதம் வரை சிலிகாவை கொண்டிருந்தால் அதை 'மாபிக்' என்கின்றனர். இதில் அதிக அளவு மக்னீசியம் காணப்படுகிறது. இரும்பும் இதில் உண்டு. ஹவாய் தீவில் உள்ள மானா லோவா, கிலாயூ இந்த வகையைச் சேர்ந்த எரிமலைகள்தான்.

 

 

எரிமலைகள் ஆபத்தானவை. ஆனால் எரிமலைகள் இல்லாவிட்டால் இப்புவியில் உயிரினங்களே தோன்றியிருக்காதென்கின்றனர் அறிவியலாளர்கள. பூமியில் உயிர்கள் உண்டாவதற்கு, புவியைத் தாக்கிய வால் நட்சத்திரங்களும்,விண்வெளிப் பாறைகள் மட்டுமல்லாமல், இந்த எரிமலைகளும் காரணமாயிருந்திருக்கின்றன ஓர் உயிர் உண்டாவதற்குத் தேவையான ரசாயன மூலக்கூறுகள், வெப்பம், மற்றும் நீர் போன்றவற்றை எரிமலைகள் கொடுத்தன.   
 
பூமிக்கு அடியில் உள்ள, உயிர் உருவாக தேவையான ரசாயனப் பொருட்கள், எரிமலையினால்தான் பூமியின் மேல் பரப்பிற்கு வந்தன. எரிமலைகள் தான் பூமிக்கு அடியில் உள்ள நீராவியையும் வெளியே கொண்டு வந்தன. இந்த நீராவி மழையாகப் பொழிந்து புவிக்கு தண்ணீர் கொடுத்தது.   
 
பூமியில் தண்ணீர் இருப்பதற்கு, பூமியின் மேல் மோதிய சில வால் நட்சச்திரங்களும், எரிமலைகள் வெளிக்கொணர்ந்த நீராவியும் தான் காரணம் என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.   
பூமியை சில ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை பனியுகம் ஆட்கொள்ளும். பூமியின் பெரும் பகுதி பனியினால் மூடி மறைக்கப்படும். இப்போது புவியின் வட துருவமும், தென் துருவமும் பனியினால் மூடப்பட்டிருப்பதுபோல, புவி முற்றிலும் பனி படர்ந்திருக்கும். இப்போது நம் காணும் வட-தென் துருவ பனி பிரதேசங்கள், கடந்த பனியுகத்தின் தொடர்ச்சியே.   
பனியுகத்தின் போது கடுங்குளிரினால் பயிர் வளர்ச்சி தடைப்படும். அதனால் உயிர்கள் வாழ்வதற்கும், பரிணாம வளர்ச்சி அடைவதற்கும் மிகப்பெரிய தடங்கல் ஏற்படும். இம்மாதிரியான ஒரு பனியுகத்தில் பூமி சிக்கி, உயிர்கள் எல்லாம் அழியும் நிலை வந்தபோது, எரிமலைகள் தான் அந்த சிக்கலை முடிவுக்கு கொண்டு வந்து பூமியை காப்பாற்றியிருக்கின்றன. எரிமலைகள் குமுறும்போது, காபனீரொட்சைட்டு வாயு வெளிவரும். இந்த வாயுவிற்கு சூரியனின் வெப்பத்தை பிடித்து வைக்கக் கூடியது. புவி மீண்டும் வெப்பமடைவதற்கு, இந்த வாயுவே காரணம். எரிமலைகள் இந்த வாயுவை அதிகமாக வெளியிட்டதனால் புவி அந்த கடுமையான பனி யுகத்திலிருந்து மீண்டதாக ஒரு கோட்பாடு சொல்கின்றது.   
 
 
 
 

மனித வாழ்வுக்கு புவியை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் போதாது, இதற்கு ஆபத்து எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று மனித இனத்திற்கு வேறொரு இடத்தை தேடிக் கொண்டிருக்கும் அறிவியலாளர்கள், வேறொரு கோளை கண்டால் அதில் எரிமலைகள் இருக்கின்றனவா என்றுதான் முதலில் தேடுகின்றனர். எரிமலைகள் இல்லையென்றால் அந்தக் கோளை ஒரு இறந்த கோளாகவே கருதுகின்றனர்.

செவ்வாயில் எரிமலைகளை முதலில் கண்டவுடன் மகிழ்ச்சியடைந்த அறிவியலாளர்கள், பின்னர் அது வெகு நாட்களாக செயலிழந்திருப்பதை கண்டவுடன், அங்கு உயிர்கள் பரிணாம வளர்ச்சி அடைய வாய்ப்புக்கள் குறைவு என்று முடிவுக்கு வந்தனர். உயிர்களின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் எரிமலைகள் இன்றியமையாதவை தான் ஆனாலும் உலகத்திலேயே தூய்மையான காற்று, உயரமான சிகரம் தெளிவான வான்வெளி என்பனவற்றை கொண்ட ஹவாயை புரட்டிப்போட்டிருக்கின்றது.

உலகிலேயே மிகத் தௌிவான வானத்தைக் கொண்ட நாடு ஹவாய் என்பதால்தான் உலகில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கு தொலைநோக்கிகளை வைத்து வானியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுளளன.

 

 

 
 
 
ஹவாய்  தீவுகளில் பாம்புகள் இல்லை என்பது மற்றொரு சிறப்பு.  எரிமலைக் குழம்புகளால் உருவான ஹவாய் மண் உலகின் ஏனைய பகுதிகளில் இருந்து  மாறுபட்டது. ஆராய்ச்சிக்காக இந்தத் தீவுகளில் இருந்து ஒரு பிடி மண்ணைக் கூட  வெளியே எடுத்துச் செல்ல விட மாட்டார்கள். இங்கே உள்ள உயிர் இனங்களையும்  வெளியே கொண்டு போக முடியாது. அதேபோல வெளியில் இருந்து வேறு ஏதேனும் புதிய  உயிர் இனங்களை இங்கே கொண்டு வந்து இறக்கிவிடக்கூடாது என்பதற்காக, விமான  நிலையம், துறைமுகங்களில் மிகக் கடுமையான பாதுகாப்பு சோதனைகள் உண்டு.  இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் தாக்குதல் நடத்திய  முத்துத் துறைமுகம் (Pearl Harbour) ஹவாய் தீவுகளில்தான் இருக்கின்றது.  இந்தத் தாக்குதலுக்குப் பிறகுதான், அதுவரை பார்வையாளராக இருந்து வந்த  அமெரிக்காவும், இரண்டாம் உலகப் போரில் குதித்தது ஜப்பான் மீது அணுகுண்டைப்  போட்டது.  இவ்வாறு பல பெருமைகளை தன்னகத்தே கொண்ட ஹவாய் இன்று சோபையழந்து அதன் தௌிந்த வானம் புகை மூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.  

 

Comments