அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் | தினகரன் வாரமஞ்சரி

அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்

பொதுவாக வீதியில் பயணிக்கும் பயணிகளை வலது புறமாகவே நடக்க சொல்வர். அதாவது எமது இடது பக்கமாகவே வீதிகளில் வாகனம் செல்வதால் எமகு எதிர்ப்புறமாக வரும் வாகனங்களை நாம் அவதானித்து நடக்கலாமென்பதே இதன் பொருளாகும். ஆனாலும் சில ஐரோப்பிய நாடுகள் உட்பட சில நாடுகளில் சாரதி ஆசனம் இடதுபுறம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் வீதிகளை கடக்கும் போது வெள்ளைக்கோட்டில் அல்லது கலர் லைட்டில் கடக்கும்படி கூறுவர். நாளாந்த வாழ்க்கையில் இந்த நடமுறைகளை நாம் கைக்கொள்ளுவது மிகவும் குறைவு. வீதி விபத்துக்களுக்கு நாமும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறோம்.

நாட்டில் நாளாந்தம் வீதி விபத்துக்கள் பற்றிய செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளன. சுமார் மூன்று மணித்தியாலத்திற்கு ஒரு வீதி விபத்தினூடாக ஒருவர் மரணமடைவதாகவும், இருவர் படுகாயமடைவதாகவும் குறிப்பிட்டாக வேண்டும். இந்த வீதி விபத்துக்கள் மூலம் நாளாந்தம் ஏதோவொரு வகையில் அகால மரணங்கள் நடக்கின்றன. வீதி விபத்துகளால் இழக்கும் உயிர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. வீதி விபத்துக்களின் மூலம் மரணிப்பவர்களினது எண்ணிக்கையும், படுகாயமடைபவர்களின் எண்ணிக்கையும் அங்கவீனமானவர்களின் எண்ணிக்கையும் வருடாந்தம் அதிகரித்தே வருகிறது.

நாம் வீதியில் இறங்கி வீடு திரும்பும் வரையில் உயிருக்கு உத்தரவாதமில்லாத அளவுக்கு வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. செல்லும் பயணங்களில் கூட ‘சென்று வருகிறேன்’ என்று கூறுவதைவிட ‘செல்கிறேன்’ என்றே கூற வேண்டிய நிலை உள்ளது. இதே நேரத்தில் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே உள்ளது. இன்று வீட்டுக்கு வீடு ஒரு வாகனமாவது காணப்படுகின்றது. ​

​இலங்கையில் நாளாந்தம் இடம்பெறும் விபத்துக்களில் வீதி விபத்துக்களே அதிகமாக காணப்படுவதாக புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வீதி விபத்துக்களின் மூலம் நாளாந்தம் சராசரியாக 8.7 பேர் மரணிக்கின்றனர். 8 பேர் படுகாயமடைகின்றனர். நாட்டில் யுத்தம் நிலவிய காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புக்களைவிட அதிகமானவர்களை பலியெடுப்பது வீதி விபத்து என்றால் மிகையில்லை. அதாவது சுமார் மூன்று மணித்திலாலத்திற்கு ஒரு வீதி விபத்து ஏற்படுகின்றது என்று சுட்டிக்காட்டுகின்றது.

இலங்கை பொலிஸ் திணைக்களம் நாளாளவிய ரீதியில் வீதி போக்குவரத்தை கண்காணித்து, ஒழுங்குகளை செய்துவருகின்றது. அதிகமான வீதிச் சமிக்ஞை விளக்கும், சில முக்கியமான சந்திகளில் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், இவற்றை சில சாரதிகள் கவனத்தில் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுண்டு.

வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் கவலையீனத்தினால்; இவர்களில் சிலர் வேகமாக வானத்தை செலுத்த முற்படுதல், சிலர் இரவு பகல் பாராது கண்ணயராது வாகனத்தைச் செலுத்துவதும், விசேடமாக இளம் வயதில் சாரதி அனுமதி பத்திரம் பெற்ற இளைஞர்கள் மிக துடிப்புடன் வாகனத்தை செலுத்துவதும், வீதி ஒழுங்குகளை பின்பற்றாது வாகனத்தைச் செலுத்துவதினாலுமே அதிகளவான வீதி விபத்துக்கள் நிகழ்கின்றன.

அதிகமான வீதிகளின் இருமருங்கிலும் வாகனங்கள் செல்ல வேண்டிய வேகம் உட்பட பல அறிவிப்புக்கள் காணப்படும். அத்துடன் வீதிகளில் கீறப்பட்டுள்ள கோடுகள் கூட சாரதிகளின் கவனத்திற்குரியவை. ஆனாலும் சில சாரதிகள் இந்த விதிகளைக் கூட கடைப்பிடிப்பதில்லை.

"வாகனம் ஓட்டும் போது தூங்கி வழிவது, பயணத்திற்கு முன்னர் ஓய்வு எடுப்பதில்லை என்பன சமீபகால விபத்துகளுக்கு வழிவகுத்திருக்கிறது’ என்று விபத்துக்கான ஒரு குறிப்பில் கூறப்பட்டுள்ளது

சில வாகனங்கள் வீதிக்கு வருவதற்கு முன் வாகனத்திற்கு எண்ணெய் இருக்கிறதா? பிரேக் உள்ளதா? அல்லது வாகனத்தின் நிலை என்னவென்பதை வாகனத்தை செலுத்தும் சாரதிகள் அறிந்திருக்க வேண்டும்.

அதேநேரத்தில் அதிகளவான வாகன ஓட்டுநர்கள் வீதி ஒழுங்கை பின்பற்றாமலும், சில சாரதிகள் ஏனைய வாகனங்களுக்கு இடம்கொடுக்காமல் விரைந்து செல்ல முயற்சிப்பது, ஓட்டுநர்களின் பார்வை கோளாறு. ஒருசில சாரதிகள் கைபேசியூடாக பேசிக் கொண்டே வாகனத்தைச் செலுத்துவதினாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மதுபோதையில் வாகனம் செலுத்துதல், இடதுபுறமாக முந்திச் செல்லல் போன்றவற்றினாலும் அதிகளவான விபத்துக்கள் இடம்பெறுகின்றன. வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகள், நாய்களும் அதிகளவான விபத்து ஏற்பட காரணமாகின்றன.

ஓட்டுனர்களின் கவனயீனமும், வேகக்கட்டுப்பாட்டை இழப்பதும் வீதி விபத்து ஏற்பட இன்னுமொரு காரணமென்று கூறப்படுகிறது. வாகனத்தை செலுத்தும் போது அதில் சாரதிகள் மட்டுமல்ல அவர்களை நம்பி ஒரு குழுவினரும் பயணிக்கின்றனர் என்பதையும் வீதிகளில் அதிகமான மக்கள் நடமாடுவதையும் சாரதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த வருடங்களில் வீதி விபத்துக்களினால் மரணித்த எண்ணிக்கையும், படுகாயமுற்ற எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும்;

2014 ஆம் ஆண்டு 2404 பேர் மரணித்துள்ளனர், 2015 ஆண்டு 2722 பேர் மரணித்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு 3003 பேர் மரணித்துள்ளனர் 8518 பேர் படுகாயமடைந்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு 3101 பேர் மரணத்துள்ளனர். 8303 பேர் படுகாயமுற்றுள்ளனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் 2018 ஜனவரி முதல் ஏப்ரல் 31 ஆம் திகதி வரை 786 பேர் மரணித்துள்ளனர். இக்காலப் பகுதியில் 732 வீதி விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நாளாந்தம் 8 அல்லது 7 பேர் மரணித்திருப்பதாவும், மூன்று மணித்தியாலத்திற்கு ஒருவர் வீதம் மரணித்திருப்பதாவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகிறது.

அன்றாடம் இடம்பெறும் வீதி விபத்துக்களில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களே அதிகமாக சேதத்துக்குள்ளாகுகின்றன. வீதி ஒழுங்கு விதிகளை மோட்டார் சைக்கிளோட்டிகள், முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் அதிகம் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அதிகமாகவே காணப்படுகிறது.

பாதசாரிகள் கவனயீனமாக வீதியை கடப்பதினால் மற்றும் அலைபேசியில் கவனத்தைச் செலுத்திக் கொண்டு வீதிகளில் செல்வதினாலும் விபத்துக்களுக்கு இன்னுமொரு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீதி விபத்துக்களினால் ஒருவர் மரணமடையும்போது அந்த குடும்பத்தின் நிலை என்னவாகும்? அதேநேரத்தில் ஒருவர் படுகாயமுற்ற வேலையில் குடும்பத்தின் பொருளாதார பிரச்சினையை தாங்குவது யார்? இப்படியான கேள்விகளுக்கு பதில் இல்லாவிடினும், வாகனத்தைச் செலுத்துபவர்கள் குற்றவாளியாக காணப்பட்டு சாரதிக்கு தண்டனை வழங்கும் பட்சத்தில் அக்குடும்பத்தின் நிலை என்ன?

எது எப்படியிருப்பினும் வீதியில் வாகனத்தைச் செலுத்தும் ஒவ்வொரு சாரதியும் நிதானத்துடனும், ஏனைய வாகனங்களுக்கு இடங்கொடுத்தும், வீதி ஒழுங்கை சரிவர கடைப்பிடிக்கும் போதும் எதிர்காலத்தில் இந்த வீதி விபத்துக்களை தவிர்க்கலாம். அதேநேரத்தில் வீதிகளில் பயணிக்கும் பாதசாரிகளும் வீதிகளில் செல்லும் கட்டாக்காலிகளைப் போல் செல்லாது வீதி ஒழுங்குகளை கைக்கொள்ள வேண்டும். நடுவீதிகளில் வாகனங்களுக்கு குறுக்காக வீதிகளை நடக்காமல், வீதி கடவைகளில் வீதிகளை கடந்தால் வீதி விபத்துக்களை தவிர்க்கலாம். ஒவ்வொரு உயிருக்கும் பெறுமதியுண்டு என்பதை தெரிந்துணர வேண்டும்.

போல் வில்சன் ([email protected])

 

Comments