ஐக்கிய தேசிய முன்னணியை பலப்படுத்தி புதிய கூட்டணி | தினகரன் வாரமஞ்சரி

ஐக்கிய தேசிய முன்னணியை பலப்படுத்தி புதிய கூட்டணி

விசு கருணாநிதி

 

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஏனைய அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்துப் புதிய கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான பூர்வாங்கப் பேச்சுவார்த்தையைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார்.

யானைச் சின்னத்திற்குப் பதிலாக புதிய சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஐக்கிய தேசிய முன்னணியைப் பலப்படுத்திப் பரந்துபட்ட தேசிய கூட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

பிரதமர் தலைமையில் கடந்த வியாழக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் இதுபற்றி ஆராயப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் இணையக்கூடிய ஏனைய கட்சிகளையும் உள்வாங்கி இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளதுடன் ஜனாதிபதித் தேர்தல்,பொதுத்தேர்தல் ஆகியவற்றில் முகங்கொடுப்பதே இதன் நோக்கமாகும் என்று தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், வேட்பாளர்கள் யார் என்பது தீர்மானிக்கப்படவில்லை என்றும் அதுபற்றி அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்தப் புதிய கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை இணைப்பது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அலரிமாளிகையில் நடந்த இந்தக் கூட்டத்தில். தமிழர் முற்போக்கு முன்னணியின் சார்பில் அமைச்சர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சிகல உறுமயவின் சார்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

Comments