சாலினி கதவைத் தட்டிய போது... | தினகரன் வாரமஞ்சரி

சாலினி கதவைத் தட்டிய போது...

வசந்தா அருள்ரட்ணம்

சா லியின் காதல் நினைவுக்கு வரும் போதெல்லாம் சிறையிலிருந்து தப்பிச் செல்லவே மனம் துடிக்கின்றது. ஆனால் நான் தப்பித்து சென்று எப்படி அவளை மீண்டும் எனக்கு சொந்தமாக்கிக் கொள்வது? சாலினி இறந்து பல வருடங்கள் ஆகின்றன. எனக்கு புத்தி சொல்லி திருத்த, எத்தனையோ முறை முயற்சி செய்தாள். ஆனால் அது நடக்கவில்லை. கடைசியில் இப்படிப்பட்ட புத்தியற்றவர்கள் தாமதமாகத் திருத்தவேண்டும் இவனை எல்லாம் என்னால் திருத்த முடியாது என்று அவள் சென்றுவிட்டாள்.

இது சிறைக்கைதி கபிஷனின் உள்ளக்குமுறல். அன்று இதை கூறிய போது அவனுடைய கண்கள் கலங்கின. நான் அவனிடம் ‘சாலினிக்கு என்ன நடந்தது?’ என்று கேட்க அவன், முழுகதையையும் சொல்லத் தொடங்கினான்.

“நானும் சாலினியும் காதலித்தோம். எனினும் துரதிர்ஷ்டவசமாக எங்களுடைய காதல் கைகூடவில்லை. சாலினி என்னுடன் ஒன்றாக வேலைசெய்யும் கமலை பெற்றோரின் விருப்பத்துக்கு இணங்கி திருமணம் செய்துக்கொண்டாள். நானும் மனதை மாற்றிக்கொண்டு தொழிலில் கவனத்தை செலுத்தினேன். அலுவலகத்தில் நானும் கமலும் நல்ல நண்பர்கள். அதனால் இருவரும் தொழிலை செய்துக் கொண்டே பகுதிநேர தொழிலாக ஆடைத்தொழிலகம் ஒன்றை ஆரம்பித்து பெண் பிள்ளைகளை வேலைக்கு அமர்த்தினோம்.

காலப்போக்கில் கமல் அங்கு வேலைசெய்யும் பெண்ணொருவரை காதலிக்க ஆரம்பித்தான். அவளுக்காக பணத்தை வாரி இறைத்தான்.

என்னால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதைக்கேள்விப்பட்ட நாளிலிருந்து சாலினி அவளுடைய எல்லா வேதனைகளையும் என்னிடம் சொல்லி ஆறுதல் தேட ஆரம்பித்தாள். நான் கமலை விவகாரத்து செய்யுமாறு அவளுக்கு அறிவுரை வழங்கினேன். எனினும் அவள் அதற்கு சம்மதிக்கவில்லை.

இது இவ்வாறிருக்க தொழிலகத்தில் என்னுடைய பங்குகள் அதிகமாக இருந்தமையால் நான் வேலையிலிருந்து விலகி முழுநேரமாக கார்மன்ட் வேலைகளில் இறங்கினேன். அதுமட்டுமின்றி இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு செல்ல ஆரம்பித்தேன். அங்கு பல பெண்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி, குடு அடிக்க பழகினேன். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கமல் என்னுடைய பங்குகளை கொள்ளையடிக்க திட்டமிட்டான். இதை எப்படியோ அறிந்துக்கொண்ட சாலினி இதுதொடர்பில் முன்கூட்டியே எனக்கு தெரியப்படுத்தினாள். அதுமட்டுமின்றி, என்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளுமாறும் அவள் எனக்கு பலமுறை அறிவுரை வழங்கினாள். எனினும் நான் என்னை மாற்றிக்கொள்ளவில்லை. கடைசியாக ‘உன்னை எல்லாம் என்னால் திருத்த முடியாது என்று சொல்லிவிட்டு சென்றவளை மறுநாள் காலை பிணமாகத் தான் பார்த்தேன். என்ன காரணமென்று சரியாக தெரியவில்லை. சாலினி நஞ்சருந்தி தற்கொலை செய்துக்கொண்டாள். சாலினி இறந்து ஓரிரு மாதங்களில் கமல் அந்தப் பெண்னை கல்யாணம் செய்துக்கொண்டான்.

அதுமட்டுமின்றி, நான் போதையில் இருக்கும் சமயம் பார்த்து கமலும், அந்த பெண்ணும் திட்டம் போட்டு நயவஞ்சகமாக என்னுடைய பங்குகளை எழுதிக்கொண்டார்கள். நான் எல்லாவற்றையும் இழந்து வீதிக்கு வந்தேன். குடு அடிக்க பணமின்றி ஆசை ஆசையாய் வாங்கிய காரையும் விற்றேன். கடைசியில் அவனால் ஏற்பட்ட ஏமாற்றத்தினால் அவனை பழிவாங்க வேண்டும் என்ற நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.

சாலினியின் வாழ்க்கையை நாசமாக்கி என்னை நடுதெருவுக்கு கொண்டுவந்தவனை பழிவாங்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தேன்.

அதன்படி ஒருநாள் கத்தியொன்றை எடுத்துக்கொண்டு கமலின் வீட்டுக்கு சென்றேன். அவனிடம் என்னுடைய பங்குகளை தருமாறு கேட்டேன். அவன் என்னை சமாதானப்படுத்த முயன்றான். எனினும் அவனுடைய புது மனைவி இடையில் புகுந்து, ‘நீ ஒரு குடுக்காரன், உன்னுடைய பங்குகள் எங்களிடம் இல்லை’ என்றுக்கூறி என்னுடைய கன்னத்தில் அறைந்தாள். அதன்பின் எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. காற்சட்டையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவளை தாக்கினேன். கமல் என்னை பிடித்து சுவரில் தள்ளினான். நான் அவனையும் தாக்கினேன். கமல் பலத்த குரலில் கத்த ஆரம்பிக்க வீட்டை சுற்றி அயலவர்கள் திரண்டார்கள். அவர்கள் இருவரையும் உடடினயாக வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றதுடன், இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தனர். பொலிஸார் உடனடியாக அங்கு வந்து என்னை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள், நான் சிறைக்கு வந்துவிட்டேன்.

நான் மட்டும் சாலினி சொன்னதை கேட்டு நடந்திருந்தால், அவள் மனதிலிருப்பதையும் என்னிடம் சொல்லியிருப்பாள், எனக்கும் இந்த நிலை வந்திருக்காது. என்று சொல்லி தலையில் கை வைத்துக்கொண்டு வெறித்துப் பார்க்க ஆரம்பித்தான் கபிஷன். இதைத்தான், கதவு தட்டப்படும்போது திறக்க வேண்டும் என்பார்கள். கதவை திறந்திருந்தால் சாலினி அவனுக்குக் கிடைத்துமிருப்பாள், அவன் சிறைக்கும் வந்திருக்கவும் மாட்டான்.

Comments