நாட்கூலி நானூறு | தினகரன் வாரமஞ்சரி

நாட்கூலி நானூறு

அருள் அரசன்

நான் அதிகாலை நான்கு மணிக்குப் படுக்கையிலிருந்து எழுந்து விட்டேன்.

முதலில் முகத்தைக் கழுவி காலைக் கடன்களை முடிக்கின்றேன். எனது எசமானின் முற்றம் விசாலமானது. அதனைக் கூட்டி முடிப்பதற்கு அரைமணி நேரம் தேவை. அதனை முடித்துவிட்டு அடுக்கைச் சாமான்களை அள்ளிப் பைப்படியில் வைக்கின்றேன். விம் சோப்பால் வெள்ளித் தட்டுகளையும், அலுமினியப் பாத்திரங்களையும் பளபளக்கும்வரை பூசி முடிக்கின்றேன்.

தொட்டியிலுள்ள நீரைப் பூஞ்செடிக்கும், ஏனைய பயிர்களுக்கும் அள்ளி அள்ளி ஊற்றுகின்றேன். அதன் பின் குளித்து விட்டு சுவாமிக்குப் பூச்சாத்திக் கும்பிடுகின்றேன்.

எனது எசமானின் குடும்பம் மிகப்பெரியது. அதன் உறுப்பினர்களின் தொகை ஏழு. என்னோடு சேர்த்து எட்டு.

காலையில் நீரைக் கொதிக்க வைத்து, மாவைக் குழைத்து இடியப்ப உரலில் செலுத்தி, தட்டுகளில் அவற்றைப் பிழிந்து ஸ்ரிமரில் வைத்து அவிக்க வேண்டும். குறைந்தது அறுபது, எழுவது இடியப்பங்களை அவிக்க வேண்டும்.

இடியப்பம் அவித்து முடிந்ததும் மீண்டு நீரைக் கொதிக்க வைத்து தேனீர் சாயத்துடன் பால் தேனீர் தயாரிக்க வேண்டும். அதனை எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். அவர்கள் குடித்து முடித்ததும் அவற்றைக் கழுவி பக்குவமாக சமையல் கட்டில் அடுக்க வேண்டும்.

அடுத்து, பாற்சொதியும், சம்பலும் தயாரிப்பதற்காக முழு மூச்சுடன் செயற்படுகின்றேன். தேங்காய் ஒன்றைத் துருவி அதில் சிறு பகுதியைச் சம்பலுக்காகப் பாத்திரம் ஒன்றில் வைக்கின்றேன். மிகுதிப் பூவைப் பிழிந்து, பாலை ஒரு சட்டியில் எடுத்து காஸ் அடுப்பில் வைக்கின்றேன். ஏற்கனவே கொதிநீரில் பத்து முட்டைகளை அவித்து உடைத்து வைத்திருந்தேன். அதனைச் சட்டியிலிட்டு, மஞ்சள், பச்சை மிளகாய்த் துண்டு, அரிந்த வெங்காயம், உப்பு என்பவற்றை அளவோடு சேர்த்து கொதித்த பின் தலைப்பாலுடன் மசாலை தூவி, புளிவிட்டபின் இறக்கி வைக்கின்றேன். பின் சம்பலுக்காக உரலில் பச்சை மிளகாய், வெங்காயம், மாசி என்பவற்றுடன் தேங்காய்த் துருவளையும் சேர்த்து துவைக்கின்றேன். தேவையான அளவு உப்பும், புளியும் சேர்த்து மீண்டும் துவைக்கின்றேன்.

இதனிடையே நேரம் கடகடவென ஓடுகின்றது. நானும் அதற்குச் சளைத்தவளல்ல என்பதைப் போல் வீட்டிலுள்ள அனைவருக்கும் உணவையும் ஏனைய பொருட்களையும் மேசையில் வைக்கின்றேன். குடிநீரைப் பளிங்கிக் கிளாசுகளில் ஊற்றி மூடி வைக்கின்றேன். அத்துடன் உணவுண்ணும் தட்டுகளையும் ஒழுங்காக வைக்கின்றேன்.

அடுத்து! “அம்மா சாப்பாடு ரெடி! சாப்பிடவாங்க?” என அழைத்தபடி, பிள்ளைகளின் சப்பாத்துகளைத் துடைத்து கால்மேசுகளையும் எடுத்து வைக்கின்றேன்.

“வள்ளி, தொட்டியில தண்ணியில்ல; மோட்டரைப் போடு! அம்மாவின் குரல் கணீரென ஒலிக்கிறது.

நான் ஓடிச்சென்று மோட்டார் சூச்சை அழுத்துகின்றேன். நீர் விறுவிறு எனத் தொட்டியை நிரப்பிக் கொண்டிருக்கின்றது.

நான் மோட்டார் வாகனத்தைக் கழுவி சுத்தம் செய்வதற்காக நீரைக் காரில் பாய்ச்சுகின்றேன்.

“வள்ளி! தண்ணி வழியிது. மோட்டரை ஓப்பண்ணு”

ஓடிச் சென்று மோட்டார் சூச்சை அழுத்துக்கின்றேன்.

மீண்டும், மோட்டார் வாகனத்திற்கு நீரைப் பாய்ச்சு அதில் படிந்திருந்த புழுதிகளைச் சீலைத் துணியினால் துடைத்துச் சுத்தம் செய்கின்றேன்.

“வள்ளி! பிள்ளைகளுக்கு உடுப்பை மாத்தி சூவை போடு” மீண்டும் அம்மாவின் குரல்கேட்டு ஓடுகின்றேன்.

ஒன்றா? இரண்டா? மூன்று குழந்தைகளுக்கும் ஒன்றன்பின் ஒன்றாக உடுப்பை மாற்றி சூவைப் போட்டு அவர்களின் பள்ளிக்கூடப் பைகளையும் பரிசீலித்து அவர்களுக்கு கொடுத்து முடித்து விட்டேன்.

அடுத்து, அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உணவருந்தினார்கள். அவர்களுக்குத் தேவையான இடியப்பங்களையும் கறிகளையும் அவ்வப்போது வழங்குகின்றேன்.

“வள்ளி! சாப்பாடு முடிஞ்சிது, மேசையைச் சுத்தம் செய்” எனக் கூறியபடி அவ்விடத்தை விட்டகன்றாள் எசமானி.

சாப்பாட்டு மேசையிலுள்ள கோப்பைகளையும், ஏனைய பாத்திரங்களையும் குசினிக்குள் வைக்கின்றேன். மேசையில் சிதறிக்கிடந்த உணவுப் பண்டங்களை அள்ளிச் சுத்தம் செய்கின்றேன். அதன்பின் மேசைமீது நீரைத் தெளித்து சீலை துணியால் துடைத்துக் கண்ணாடி மேசையை பளபளபாக்குகின்றேன்.

“வள்ளி! பிள்ளைகள கூட்டிவந்து காரில் ஏத்து” அம்மாவின் குரல் ஒலித்ததும் அக் கடமையையும் உடனடியாக நிறைவேற்றுகின்றேன்.

இவர்கள் அனைவரும் வீட்டை விட்டுப் பறந்து சென்றாலும் இன்னொரு கடமையும் எனக்கிருக்கிறது. எழும்பி நடக்க முடியாத நிலையிலுள்ள எசமானியின் அம்மாவின் கடமைகளை அடுத்து நான் செய்து முடிக்க வேண்டும்.

அவளது அறையை நோக்கி அவசர அவசரமாக ஓடுகின்றேன்.

“இப்பதானா உனக்கு நேரம் கிடச்சது. நான் ஒருத்தி இருக்கெனண்டு உனக்கு தெரியாதா?” என என் மீது எரிந்து விழுந்தாள் மூதாட்டி.

பாவம் எழும்பிக் கூட நடக்க முடியாத நிலையில் அவள் படுத்தபடுக்கையாகக் கிடக்கிறாள். அவளை நேரத்திற்குக் கவனிக்கவில்லை என்ற அவளது ஆதங்கத்தை நானும் அப்பொழுதுதான் உணர்ந்து கொண்டேன்.

அடுத்து, அவளது காலைக் கடன்களை முடித்துவிட்டுக் குளிப்பாட்டி உடைகளையும் மாற்றுகின்றேன். பின் இடியப்பத்தையும், பாற்சொதியையும், சம்பலையும் ஒன்றாகச் சேர்த்து ஊட்டுகின்றேன். அவள் பொக்கை வாயைத் திறந்து மளமளவெனச் சாப்பிடுகின்றாள். அதன்பின் தண்ணீரைப் பெருக்குகின்றேன். அவளுக்கு அப்பொழுதுதான் என்மீது ஒரு இரக்கம் வந்தது. என் தலையை வருடி “நீர் இல்லாட்டி நான் எப்படி வாழுறது? நீ என்ட மகள்கூடச் செய்யாய வேலகள செய்யிறாய். என்ட உசுரு கிடக்குமட்டும் உன்னை நான் மறக்கமாட்டன். நீ நல்லா இருக்கணும்” எனக் கூறி என் உச்சியைக் குளிரவைத்தாள்.

அதன் பின் ஹோளையும் அறைகளையும் மொப் பண்ணினேன், பளிங்கு மாபிள் பளிச் சென்றது. எனது உருவம் அதிலெங்கும் நிழலாகுவதைக் கண்டு என் உள்ளம் பூரிப்படைந்தது. அதனைத் தொடர்ந்து குசினியையும் மொப்பண்ணி சாப்பிட்ட பாத்திரங்களையும் கழுவி முடித்து விட்டேன். பின் உடைகளை மாற்றி நான் காலை உணவை உண்பதற்குள் நேரம் பத்து மணியைத் தாண்டிவிட்டது.

இனி, மதிய உணவைத் தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபடவேண்டும். அரிசியை களைந்து உலையில் இடுகின்றேன். மரக்கறிகள், பச்சை மிளகாய், வெங்காயம் என்பவற்றைப் பக்குவமாக அரிந்து வைக்கின்றேன். பிறிச்சிலிருந்த பாரை மீன் துண்டுகளை எடுக்கின்றேன். தேங்காயைத் துருவி, தண்ணீரை ஊற்றி தேங்காய்ப் பூவைப் பிழிந்து பாத்திரம் ஒன்றில் பாலை எடுக்கின்றேன்.

அடுத்து, சட்டிகளில் மீன் குளம்பு, மரக்கறிகள், சொதி என்பவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சமைத்து எடுக்கின்றேன்.

அப்பொழுது பாட்டியின் குரல் ஒலிக்கிறது. “வள்ளி! நானொருத்தி கிடக்கன் என்பத நீ மறந்துட்டாயா? நாக்கு வரளுது தண்ணிய கொண்டாடி?” தண்ணீருடன் ஆச்சியின் அறையை நோக்கி ஓடுகின்றேன். கிளாசில தண்ணீரை ஊற்றி அவளுக்கு பருக்குகின்றேன்.

மடமடவென நான்கு, ஐந்து முடர் நீரைப் பருகிய ஆச்சி சந்தோஷத்தால் தனது பொக்கை வாயைத் திறந்து சிரித்தாள்.

மீண்டும் குசினிக்குள் சென்ற எனக்கு ஆச்சியின் மீது ஒரு பரிதாப உணர்வு ஏற்பட்டது. பாவம் அவளுக்கு ஒரு கோப்பை தேனீரைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

நீரைக் கொதிக்க வைத்து, பால் மாவில் இரண்டு கரண்டிையப் போட்டு, சீனியையும் அளவாகப் போட்டு தேயிலைச் சாயத்துடன் கலந்து ஒரு கோப்பையில் எடுத்துக் கொண்டு சென்றேன்.

ஆச்சி ஆழ்ந்த உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள். ஆச்சியை எழுப்புவதா, விடுவதா? என யோசித்துக் கொண்டிருந்தேன். ஆச்சி மறுபுறமாகத் திரும்பும் போது அவள் கண்கள் தானாகத்திறந்தன. “என்னடி வள்ளி? என்ன நித்திர கூடகொள்ள உடமாட்டியா?” என எரிச்சலோடு கேட்டாள் ஆச்சி.

“இல்ல ஆச்சி! நா வரளுது எண்டு நீங்க சொன்னியள்தானே. சாப்பிட்டும் நெடு நேரமாச்சி. அதால பால் தேத்தண்ணிக் கொண்டு வந்திருக்கன்?” என நிதானமாகக் கூறினேன்.

ஆச்சி மிக்க சந்தோஷத்துடன் அதனைப் பருக ஆவலானாள். நான் பால் தேனீரை அவளுக்குப் பருக்கிவிட்டு மீண்டும் குசினிக்குள் ஓடினேன்.

இறுதியாக மீன் துண்டுகள் சிலவற்றைப் பொரித்தெடுத்தேன். அதனோடு மோர்க் கொச்சிக் காய்களையும் பொரித்தேன். வெங்காயத்தையும் உரித்து அதனோடு சேர்ந்து வைத்தேன்.

இதனிடையில் நேரம் பன்னிரெண்டு மணியைத் தாண்டி விட்டது. சமைத்த உணவைப் பாத்திரங்களில் எடுத்து சாப்பாட்டு மேசையில் வைக்கின்றேன். தண்ணீரையும் கிளாஸ்களில் ஊற்றி மூடி வைக்கின்றேன். கை துடைக்கும் துணியையும் அதனுடன் சேர்த்து வைக்கின்றேன்.

அடுத்து, பாடசாலையியிருந்து வந்த பிள்ளைகளின் உடைகளை மாற்றி சப்பாத்து, கால்மேசு என்வற்றையும் கழற்றியபின், கால்,கை, முகங்களைக் கழுவிய பின் துவாயால் துடைக்கின்றேன்.

“வள்ளி! சாப்பாடு ரெடியா?” அம்மாவின் குரல் ஒலிக்கிறது.

“அம்மா! சாப்பாடு ரெடி. சாப்பிட வாங்க.”

எல்லோரும் ஒன்றாக அமர்ந்திருந்து சாப்பிடுகிறார்கள். அவர்களுக்குத் தேவையான சோற்றையும், கறிகளையும் அவ்வப்போது பரிமாறுகின்றேன். இதனிடையில் சிறிய குழந்தைகளுக்கும் மாறி மாறி சாப்பாடு தீர்த்தும் கடமையிலும் ஈடுபடுகின்றேன்.

அவர்கள் பிற்பகல் இரண்டு மணியளவில் உணவு அருந்தி முடித்ததும் பாத்திரங்களையெல்லாம் குசினிக்குள் எடுத்துச் செல்கின்றேன். பின் சாப்பாட்டு மேசையைத் துப்பரவு செய்து சீலையைத் தண்ணீரில் தோய்த்து மேசையைத் துடைக்கின்றேன். அது மீண்டும் பளபளப்பாகப் பிரகாசிக்கின்றது.

“அடியே வள்ளி! நானொருத்தி பசியோட கிடக்கனெண்டு உனக்குத் தெரியாதாடி? இப்ப நேரமென்னடி? எனக்கு பசிக்குதடி. சிறுகுடல பெருங்குடல் தின்னுவதற்கு முன்ன சோத்த கெதியா கொண்டாடி?” ஆச்சியின் குரலில் கோபம் கனலாய்த் தெரிந்தது.

குசினிக்குள் ஓடிச்சென்று ஒரு கோப்பையில் சோற்றையும், கறிகளையும், பொரியலையும் வைத்துக் கொண்டு ஆச்சியின் அறைக்குள் ஓடுகின்றேன். என்னைக் கண்டதும் ஆச்ச முகத்தைத் திருப்பியவாறு மறுபக்கம் புரண்டாள்.

“ஆச்சி! கோபப்படாதேங்க. இப்பதான் சமச்சு முடிச்சு எடுத்து வாறன்?” என நிதானமாகக் கூறினேன்.

ஏண்டி பொய் சொல்லுற? மத்தவங்களுக் கெல்லாம் சோறு குடுத்த புறகுதானே எனக்கு நீ கொண்டு வாறா?” மீண்டும் என்மீது சீறிப் பாய்ந்தாள் ஆச்சி.

“சின்ன புள்ளையல கவனிச்ச புறகுதானே பெரியவங்கள கவனிக்க வேணும். நானும் இன்னம் சாப்பிடல்ல. கோவிக்காம சாப்புடுங்க” நான் மீண்டும் பணிவுடன் கூறினேன்.

“ஆ...! கொடு” எனக் கோபத்துடன் கூறியபடி தனது பொக்கை வாயைத் திறந்தாள் ஆச்சி. நான் மளமளவென ‘உணவைத் தீத்தி முடித்ததும், தண்ணீரையும் பெருக்கி விட்டு, மீண்டும் குசினியை நோக்கி ஓடினேன்.

குசினியில் குவிக்கப்பட்டிருந்த பாத்திரங்களை எல்லாம் சோப்பின் மூலம் கழுவி பளபளப்பாக மினிக்கி உரிய உரிய இடங்களில் அவற்றை வைத்தேன்.

இப்பொழுது நேரம் மூன்று மணியைத் தாண்டிவிட்டது. நான் முகத்தைக் கழுவி சீலைத்துண்டால் துடைத்துக் கொண்டு மதிய உணவை உண்பதற்காக உணவுத் தட்டை எடுக்கின்றேன்.

அப்பொழுது “வள்ளி! வள்ளி!!” என அழைக்கும் அம்மாவின் குரல் கணீரென என் காதில் ஒலிக்கிறது.

ஓடோடிச் சென்று அவளிடம் “என்னம்மா கூப்பிட்டியளா?” எனக் கேட்கின்றேன்.

“தம்பி! கக்கா போகப் போறானாம், அதபாரு?” எனகட்டளையிட்டாள். மூன்று வயது கூட நிரம்பாத பாலகன் அவன். நாள் முழுவதும் என்னுடன்தான் இருப்பான். அவனுக்குரிய எல்லாக் கடமைகளையும் நான்தான் செய்வேன்.

அவனைக் கழுவி சுத்தம் செய்து அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு மீண்டும் குசினிக்குள் நுழைகின்றேன். “வள்ளி! வள்ளி!” என மீண்டும் அழைக்கும் குரல் என் காதைப் பிளக்கிறது. இது ஆச்சியின் குரலேதான். ஓடிச்சென்று ஆச்சியிடம் விசாரிக்கின்றேன்.

“சாப்பாட்டு நெடு நேரமாச்சி. நாவும் வரளுது எனக்கொரு தேத்தண்ணி தரமாட்டியா?” எனக் கேட்டாள் ஆச்சி.

ஆச்சிக்கு வயது எண்பத்து எட்டு. அடிக்கடி ஞாபகமறதி ஏற்படுவது வழக்கம். அவள் சாப்பிட்டு ஒண்டரை மணி நேரம் கூட செல்லவில்லை. இதை அவளிடம் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளமாட்டாள்.

பாவம்! எழுந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் கிடக்கும் ஆச்சியின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்ற அங்கலாய்ப்பு என் மனத்தில் உதித்தது.

நான் எதுவும் பேசாமல் குசினிக்குள் சென்று பால் தேனீரைத் தயாரித்து எடுத்துக் கொண்டு அறையுள் நுழைந்தேன். ஆச்சியும் என்வரவுக்காக ஆவலோடு காத்துக்கிடந்தாள்.

என்னைக் கண்டதும் சந்தோச மிகுதியில் தன் பொக்கை வாயைத் திறந்து சிரித்தாள்.

நான் மெதுமெதுவாக தேனீரைப் பருக்கிவிட்டு, வாயில் ஒட்டியிருந்த தேனீரைத் துணியால் துடைத்து விட்டு மீண்டும் குசினிக்குள் நுழைகின்றேன். நேரம் நான்கு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. மதிய உணவை உண்பதற்காக மீண்டும் ஆயத்தமானேன்.

ஒருவாறு மதிய உணவை முடித்துக் கொண்டு சாப்பிட்ட பாத்திரங்களையும் கழுவி முடித்து விட்டேன்.

அப்பொழுது ஹோலில் பொருத்தப்பட்டிருந்த மணி ஒலித்தது. கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன். யாரோ ஒருவர் வந்திருந்தார். அவரைச் சோபாவில் அமரச் செய்தபின் “அம்மா! அம்மா!! யாரோ உங்களத் தேடி வந்திருக்காரு” எனக்குரல் கொடுத்தேன்.

அரைகுறை நித்திரையில் உறங்கிக் கொண்டிருந்த அம்மா கண்களைக் கசக்கியவாறு ஹோலுக்குள் நுழைந்தாள். “சதாவா? நீண்ட நாளக்கி புறகு இந்த பக்கம். ஏதோ என்ட நெனைப்பும் வந்திட்டுபோல?” எனக் கிண்டலாகக் கேட்டாள்.

“ஓமோம்! நானெண்டாலும் இடக்கிட வந்து போறன். நீங்க எப்பவாவது எண்ட ஊட்டுப்பக்கம் வந்திருக்கியளா?” எனப் பதிலுக்குக் கேட்டான் சதா.

நான் ஓடிச்சென்று தேனீரைத் தயாரித்து அதனோடு சிற்றுண்டிகளையும் வாழைப்பழத்தையும் சோபாவின் அருகிலிருந்து கண்ணாடி மேசையில் வைக்கின்றேன். சதா என்னை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒருமுறை நோட்டமிடுகின்றான்.“இந்த புள்ள எப்ப வந்த? நல்ல உசாரான புள்ளயா இருக்கு. நான் வந்ததும் உபசரிப்பும் பிரமாதமா கிடக்கு” எனக் கூறி எனக்கொரு நட்சாட்சிப் பத்திரத்தையும் வழங்கினான் சதா.

நான் குசினிக்குள் சென்று ஏனையவர்களுக்கும் பால் தேனீரையும், சிற்றுண்டி வகைகளையும் கொடுத்து அவர்கள் பருகியபின் அவற்றை கழுவி வைக்கின்றேன்.

(தொடர் 21ஆம் பக்கம்)

Comments