யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 25 குடும்பங்களுக்கு டோக்கியோ சீமெந்தினால் வீடுகள் அன்பளிப்பு | தினகரன் வாரமஞ்சரி

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 25 குடும்பங்களுக்கு டோக்கியோ சீமெந்தினால் வீடுகள் அன்பளிப்பு

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வசித்துவந்த 25 குடும்பங்களுக்கு நிலாவெளி, அடம்போடை பகுதியில் அமைந்துள்ள தனது சொந்தக்காணியில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க டோக்கியோ சீமெந்து நிறுவனம் முன்வந்துள்ளது. திருகோணமலை பிரதேசத்தில் யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்த மக்களை மீள தமது சொந்த வீடுகளில் குடியமர்த்துவதற்காக டோக்கியோ சீமெந்து நிறுவனம் முன்னெடுக்கத் தீர்மானித்திருந்த மாபெரும் செயற்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக இந்தத் திட்டம் அமைந்திருந்தது.

இந்த வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2017 மே மாதம் 5 ஆம் திகதி இடம்பெற்றது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் ஸ்தாபக தலைவரான மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ். ஞானம் நினைவாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் 2009 ஆம் ஆண்டில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட டோக்கியோ சீமெந்து சுனாமி வீடமைப்புத் தொகுதியை அண்மித்ததாக இந்த வீடமைப்பு திட்டமும் அமைந்துள்ளது. இதன் போது சுனாமியால் பாதிகப்பட்ட 25 குடும்பங்களுக்கு வீடுகள் உறுதிகளுடன் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து வந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகளை கையளிக்கும் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஷ்பகுமார, டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஹர்ஷ கப்ரால் மற்றும் டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டோபர் பெர்னான்டோ ஆகியோருடன் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

25 குடும்பங்களில் சில குடும்பங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் சாவிகளை கையளித்திருந்தார். 1984ஆம் ஆண்டு இந்தப் பிராந்தியத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அவர்களால் டோக்கியோ சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட போது, இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஞானம் அவர்களிடம் தாம் கோரிக்கை விடுத்திருந்ததை நினைவுகூர்ந்தார். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நிறுவனம் செயலாற்றி வருகின்றமைக்காக நன்றி தெரிவித்தார்.

Comments