ஐ. பி. எல்: கலக்கிவரும் நிரந்தர நாடற்ற ஜோப்ரா ஆச்சர் | தினகரன் வாரமஞ்சரி

ஐ. பி. எல்: கலக்கிவரும் நிரந்தர நாடற்ற ஜோப்ரா ஆச்சர்

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் விளையாடும் வீரர்கள் பலரும் அவர்கள் நாட்டின் தேசிய அணியில் விளையாடியவர்கள். அல்லது தனது நாட்டில் டி/டுவெண்டி அணியில் அதிரடியாக ஆடக் கூடியவர்கள். ஆனால் இன்னும் நிரந்ரமாக தேசிய அணி இல்லாமல், விளையாட ஒரு நாடில்லாமல், எந்தவொரு சர்வதேச போட்டியிலும் களமிறங்காமல் தற்போது உலக டி/டுவெண்டி லீக் போட்டிகளில் கூடிய விலைக்கு ஏலம் போகும் வீரராக மாறியுள்ள ஜோப்ரா ஆச்சர் இம்முறை ராஜஸ்தான் ரோயல் அணிக்காக ஐ. பி. எல. தொடரில் விளையாடி வருகிறார்.

இன்னும் ஒரு தேசிய அணிக்காகவும், ஒரு சர்வதேச போட்டியிலும் களமிறங்காத ஆச்சரை இம்முறை இலங்கை நாணயமதிப்பின்படி சுமார் 17 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுத்துள்ளது ராஜஸ்தான் ரோயல் அணி நிர்வாகம்.

மேற்கிந்தியத் தீவுகளின் பாபடோஸில் 1995ம் ஆண்டு பிறந்த ஆச்சர் சகலதுறை ஆட்டக்காரராக மிளிர்ந்தாலும் அவர் சிறு வயது முதல் வேகப்பந்து வீச்சாளராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

16 வயதிலேயே 130 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக் கூடிய ஆச்சர் 2013ஆம் 19 வயதின் கீழ் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இணைந்து விளையாடினார். காயம் காரணமாக சிறிது காலம் இங்கிலாந்தில் ஓய்வில் இருந்த ஆச்சர். அதன் பின் இங்கிலாந்து பிராந்திய அணியான சசெக்ஸ் அணியுடன் இணைந்து கொண்டு விளையாட ஆரம்பித்தார்.

2016ஆம் ஆண்டு தனது முதல்தரக்கிரிக்கெட் போட்டியில் முதல்தடவையாக இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணிக்கெதிராக களமிறங்கிய ஆச்சர் அப்போட்டியில் சிறப்பாகப் பந்து வீசி நான்கு விக்கெட்களைக் கைப்பற்றினார். அதன் பின் ஸமர்செட் அணிக்கெதிராக போட்டியொன்றில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி திறமைகாட்டிய அவர், அதன்பின் இங்கிலாந்து பிராந்திய அணி துடுப்பாட்ட வீரர்களுககு அச்சுறுத்தலாக பந்து வீசினார். இதன் காரணமாக பங்களாதேஷ், பாகிஸ்தான், அவுஸ்திரேலியாவில் வருடாந்தம் நடைபெறும் பிரிமியர் லீக் போட்டிகளில் இவரை போட்டி போட்டுக்கு கொண்டு வாங்க அணி நிர்வாகங்கள் முன்வந்தன.

கட்நத வருடம் பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் குல்ணா டைட்டன் அணிக்காக கூடிய விலைக்கு வாங்கப்பட்டார். இங்கு அவ்வணியின் முக்கிய பந்துவீச்சாளராக சிறப்பாக விளையாடி பல முறை ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

ஆச்சரின் இந்தத் திறமையின் காரணமாகவே இம்முறை ராஜஸ்தான் றோயல் அணி நிர்வாகம் அவரை கூடிய விலைக்கு வாங்கியது. நிர்வாகத்தின் எதிர்பார்ப்புக்கேற்ற வகையில் ஜோப்ரா ஆச்சரும் அவர் களமிறங்கிய முதல் போட்டியிலே மும்மை அணிக்கு எதிராக சிறப்பாகப் பந்து வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். தற்போது ராஜஸ்தான் ரோயலின் முக்கிய வீரராகவும் ஆச்சர் திகழ்கிறார்.

இம்முறை ஐ. பி. எல். தொடருக்காக எலத்துக்கு தன்னை தெரிவு செய்து ஏலத் தொகையை நிர்ணயிக்கும் போது தான் பிக்பொஸ் தொடரில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும். தான் இன்னும் ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடமல் கூடிய விலைக்கு ஏலம் போனதை அறிந்த போது ஆச்சரியப்பட்டதாகவும் கூறும் அவர் உலகப் புகழ் வாய்ந்த வீரர்களான ரஹானே, ஜோஸ் பட்லர், பென் ஸ்டொக்ஸுடன் இணைந்து ராஜஸ்தான் ரோயல் அணிக்காக விளையாடுகின்றமை தனது திறமையை வளர்த்துக்கொள்ளக் கிடைத்த சிறந்த ஒரு சந்தர்ப்பம் என்றும் அவர் கூறினார்.

தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் மேற்கிந்திய வீ;ரரான ஆச்சர். மேற்கிந்தியத் தீவுகளுக்கு விளையாடுவதைவிட இங்கிலாந்து அணிக்காக விளையாடவே தான் காத்திருப்பதாகக் கூறுகிறார். அவரின் தந்தை இங்கிலாந்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதால் அவர் இங்கிலாந்தில் வாழ்வதையே விரும்புகிறார். என்றாலும் இங்கிலாந்து குடியுரிமைச் சட்டதிட்டங்களுக்கமைய அவர் தனது 18 வயதைக் கடந்து இன்னும் ஏழு ஆண்டுகள் இங்கிலாந்தில் வசிக்க வேண்டும். அதன் பின்னர் இங்கிலாந்து பிரஜையாகிய பின்னர் இங்கிலாந்து அணியில் சேர வாய்ப்புப் பெறலாம். அதற்காக ஜோப்ரா ஆச்சர் 2022 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

எம். எஸ். எம். ஹில்மி

 

Comments