21வது பிபா உலகக் கிண்ணம்: போட்டி நடைபெறும் ரஷ்ய நகரங்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்? | தினகரன் வாரமஞ்சரி

21வது பிபா உலகக் கிண்ணம்: போட்டி நடைபெறும் ரஷ்ய நகரங்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்?

அண்மைக்காலமாக ரஷ்யா பயங்கரவாதத்தோடு இணைந்து பேசப்படும் ஒரு நாடாக மாறியுள்ளது. அதற்குக் காரணம் ஐ. எஸ். ஐ. எஸ். இயக்கத்துக்கு எதிராக சிரிய அரச ஆதரவுப் படையுடன் இணைந்து ரஷ்ய இராணுவமும் தாக்குதல் நடத்துவதாலாகும். அந்நாட்டில் ஏற்படுகின்ற சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு ரஷ்யாவின் விமானத் தாக்குதல்கள் முக்கிய காரணமாகவுள்ளது. பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் ரஷ்ய நகரங்களும் இலக்காகியுள்ளது, இதனால் வலைத்தளங்களில் அந்நாட்டுக்கு எதிராக ஐ. எஸ். ஐ. எஸ். அடிக்கடி அச்சுறுத்தில் விடுத்த வண்ணமுள்ளது. இவ்வச்சுறுத்தலால் இம்முறை அங்கு நடைபெறவுள்ள கால்பந்தாட்ட உலககக் கிண்ணத் தொடர் இரத்தாகலாம் என்று கூட பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன.

அடுத்த மாதம் ரஷ்ய மாஸ்கோ நகரில் 21வது பிபா உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. அதற்கெதிரான பயங்கரத் தாக்குதல் நடத்தப் போவதாக ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்பினர் வலைத்தளங்கள் மூலம் எச்சரித்து வருகின்றனர்.

வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவுகளில் ரஷ்ய நகரிலுள்ள வளையாட்டுமைதனங்களில் நுழைவாயிலில் கத்திகள் தெரியும் விதமாகவும் அதன் கீழ் பிரான்ஸ் மொழியில் ‘அவர்கள் அனைவரையும் கொலை செய்’ என்ற வாசகங்களுடன் வலைத்தளங்களில் ஐ. எஸ். ஐ. எஸ். உடன் தொடர்புடைய பிரான்ஸ் அமைப்பொன்று மேற்படி செய்தி வெளியிட்டு அச்சுறுத்தியுள்ளது.

இதற்கு முன்பும் கடந்த ஏப்ரல் மாதத்தில் வலைத்தளப் பதிவொன்றில் ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புட்டினை எச்சரித்து இதேபோல் ஒரு வாசகத்தை பதிவுசெய்திருந்தனர் ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்பினர். அப்பதிவில் ‘முஸ்லிம்களை கொலை செய்வதற்கான விலையைக் கொடுப்பதற்கு ஆயத்தமாக இரு” என்ற பதிவின் கீழ் தீப்பிடிக்கும் ஒரு கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் செந்நிறத்தால் அடையாளமிட்டு விளாடிமிர் புடின் நிற்கும் காட்சிகளும் அதில் பதிவாகியிருந்தன.

ஐ. எஸ். ஐ. எஸ். இயக்கத்துக்கு எதிராக சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஷாத்தின் அரச படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா வான் தாக்குதல் நடத்துவதற்கு எதிராகவே இவ்வெச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதே போல் கடந்த மார்ச் மாதம் இறுதிப் போட்டி நடைபெற ஏற்பாட்டாகியிருக்கும் மொஸ்கோ நகரின் லுசினிகி மைதானத்தில் ஆர்ஜன்டீன நட்சத்திர வீரர் லயனல் மெசி துப்பாக்கி நபரொரின் முன் முழங்காலிட்டிருப்பதைப் போன்ற ஒரு படத்தையும் வெளியிட்டிருந்தது. இப்படத்தில் ஐ. எஸ். ஐ. எஸ். இயக்கத்தினரால் மரணதண்டனைக் கைதிக்கு அணிவிக்கப்படும் உடையை மெசியின் படத்துக்கு அணிவித்திருந்தனர்.

எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி முதல் ஜுலை 15ம் திகதி வரை மொஸ்கோ உட்பட 11 ரஷ்ய நகரங்களில் நடைபெற உள்ள உலகக் கால்பந்தாட்டப் போட்டிகளைக் காண உலகம் எங்கிலுமிருந்தும் இலட்சக்கணக்கான இரசிகர்கள், ஊடகவியலாளர்கள், உதைபந்தாட்ட விற்பன்னர்கள் ரஷ்யா வரவுள்ள நிலையில் ஐ. எஸ். ஐ. எஸ். இயக்கத்தினரால் அடிக்கடி இப்படியான தகவல்களை வலைத்தளங்களில் உலவ விடுவது ரஷ்யாவில் கூடவுள்ள ரசிகர்களை ஒருமுறை சிந்திக்க வைக்கக் கூடும் என கால்பந்து விமர்சகர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் போட்டிகள் நடைபெறவுள்ள ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரான சென்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஐ. எஸ். ஐ. எஸ். இயக்கத்தினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தமை இங்கு குறிப்பி்டத்தக்கது.

எம். எஸ். எம். ஹில்மி

Comments