குடி உயரக் கோன் உயர்வான் | தினகரன் வாரமஞ்சரி

குடி உயரக் கோன் உயர்வான்

கருணாகரன்...
 

“வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்”

- ஔவையார்

 

ஒரு நாட்டின் சிறப்பு எப்படி அமையும் என்பதை ஔவையார் விளக்கியுள்ளார்.

நாட்டின் படிமுறை வளர்ச்சி பற்றிய தத்துவம் அது. இந்த ஐந்து அடி கொண்ட சிறிய பாடலில், சமூக ஒழுங்கும் ஆட்சிச் சிறப்பும் மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பொருளாதார வளர்ச்சியும் அதற்கான திட்டமிடலும் அதைச் செயற்படுத்தும் ஒழுங்கும்.

அது ஒரு காலம்.

இது ஒரு காலம்.

“விலை உயரப் பசி உயரும்

பசி உயரப் பிணி உயரும்

பிணி உயர துயர் உயரும்

துயர் உயர துன்பமுயரும்”

- விசுவர்

 

அரசாங்கம் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. முதலில் எரிவாயுவின் விலை உயர்ந்தது. பிறகு பால்மா. அதற்கடுத்து இப்பொழுது எரிபொருள். இன்னும் என்னவெல்லாவற்றுக்கும் உயர்வு ஏற்படும் என்று தெரியாது.

இப்படி அடுத்தடுத்து அரசாங்கம் செய்திருக்கும் விலையேற்றத்தைப் பற்றி, அதனால் உண்டாகப் போகும் விளைவுகளைப் பற்றி எங்கள் தெருவில் இருக்கிற “விசுவர்” என்ற விசுவநாதன், இப்படிப் பாடினார். விசுவருடைய பாடல் இந்தக் காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி.

இதொன்றும் பகடியான சங்கதியல்ல. அல்லது விசுவர் என்ற சாதாரண மனிதர், ஏதோ பொழுதுபோக்காகப் பாடி விட்டுப் போயிருக்கிறார் என்று எளிதாகக் கடந்து செல்லக்கூடிய பாட்டும் அல்ல.

நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத்தரம், சமூகப் பாதுகாப்பு, ஆட்சிச் சிறப்பு, ஐக்கியம், நல்லெண்ணம் போன்றவற்றில் உயர்வை ஏற்படுத்த வேண்டிய அரசு, விலையேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றது என்பதே விசிவரின் ஆதங்கம் .

ஆகவே இது ஒரு சமகால ஆய்வு. சமகால விமர்சனம். மட்டுமல்ல, எக்காலத்துக்கும் பொருத்தமான கவனக்குறிப்பு.

சாதாரண மனிதர்களின் அனுபவங்களும் அவதானிப்பும் சாதாரணமாக இருப்பதில்லை. அவை பெறுமதி உடையவை. ஆனால் அதிகாரத்திலிருப்போர் அவற்றைப் பொருட்படுத்துவது குறைவு. அல்லது இல்லை எனலாம். இது எவ்வளவு பெரிய தவறு?

ஒவ்வொரு பொதுமக்களும் நாட்டுக்குச் சொந்தக்காரர்கள். அவர்கள் நாட்டுக்காக உழைக்கிறார்கள். தாங்கள் சார்ந்த துறையின் வழியே நாட்டின் வளர்ச்சிக்காக, உயர்வுக்காகப் பங்களிப்புச் செய்கிறார்கள். அதிகாரத்திலிருப்போரை விடவும் கண்ணிமாக நடக்கிறார்கள். ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகம், பொறுப்பின்னை போன்றவற்றையெல்லாம் ஈடுபடுவதில்லை.

ஆகவே அவர்களுக்கே நாடு உரித்துடையது. அதன்வழியான அதிகாரம் அவர்களுக்குண்டு.

ஆனால், இதை அரசோ (ஆட்சித்தரப்பினரோ) ஏனைய படி நிலைகளில் அதிகாரத்திலிருப்போரோ புரிந்து கொண்டு நடப்பதில்லை. இதனால் விசுவர் போன்ற சமானியர்களின் மெய்க்குரல்கள் (திட்டமிட்டு) வலுவிழக்கம் செய்யப்படுகிறது.

உண்மையில் நாட்டை வலுவாக்கம் செய்யக் கூடிய குரல்கள் வலுவிழக்கம் செய்யப்படுகின்றன. தேசத்தை வலுவிழக்கம் செய்யும் குரல்கள் வலுவாக்கம் செய்யப்படுகின்றன.

அதிகாரத்திலிருப்போர் (அது ஆட்சி செய்வோர் மட்டுமல்ல, ஆட்சியாளருக்கு அனுசரணையாக இருக்கும் நிர்வாக அதிகாரிகள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தோர் – புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், நீதித்துறையினர் உள்ளடங்கலாக) நாட்டை வலுவாக்கம் செய்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அந்தப் பொறுப்பு அவர்களுக்குண்டு.

இதற்காகத்தான் இவர்கள் அனைவருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான செலவை நாடே செய்கிறது. அதாவது நாடு பொறுப்பேற்கிறது. நாடு பொறுப்பேற்றுள்ளது என்றால், மக்கள் அதைச் செய்கிறார்கள் என்றே அர்த்தம். மக்களே அதைப் பொறுப்பேற்கிறார்கள். அல்லது மக்கள் பொறுப்பேற்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் நலனுக்காக என்ற அடிப்படையில் இவ்வாறு நடக்கிறது.

அவ்வாறு மக்களின் அதிகாரத்தையும் வசதி, வாய்ப்புகளையும் அனுபவிப்போர், நாட்டுக்கு மிகக் கூடுதலான பங்களிப்புகளை அல்லவா செய்ய வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் மாண்புக்கும் – சிறப்புக்குமாக உழைக்க வேண்டுமே.

அப்படி இல்லையென்றால் நாட்டிலே ஏற்படுகின்ற பஞ்சம், பசி, பட்டினி, நோய், பிணி, துன்பம், துயரம், பிரச்சினை, சண்டை, சச்சரவு, கலவரம், வன்முறை, அழிவு அனைத்துக்கும் இவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

இப்பொழுது நாட்டிலே ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் விலைவாசி உயர்வுக்கும் அதனால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் சுமை அதிகரிப்புக்கும் இவர்களே பொறுப்பாளிகள். இனி விளையப்போகின்ற பஞ்சத்துக்கும் பசி, பட்டினிக்கும் இவர்களே காரணம்.

இதற்கு எத்தகைய சாட்டுப் போக்குகளையும் சொல்லித் தப்பி விட முடியாது.

முறையான திட்டமிடல்களைச் செய்து, அந்தத் திட்டங்களைச் செயற்படுத்தி வெற்றி காண்பதே அதிகாரத்தில் இருப்போரின் பணியாகும். இதற்காகவே துறைசார் அறிவுடையோரும் நிபுணர்களும் அந்தந்தத் துறைகளில் பதவி நிலை அதிகாரம் வழங்கி, அமர்த்தப்படுகின்றனர். அப்படி அமர்த்தப்படுவோருக்கான நிறைவேற்று அதிகாரங்களும் (திட்டமிடல் – செயற்படுத்துதல்) நிதி மற்றும் பிற வளங்களும் வசதிகளும் வழங்கப்படுகின்றன.

இவற்றைக் கொண்டு தங்கள் துறைகளின் வழியாக நாட்டுக்குத் தேவையான விடயங்களை நிறைவேற்ற வேண்டும். இதைப் பெரும்பாலான பொறுப்பு நிலை அதிகாரிகள் செய்வதில்லை. செயற்படுத்துவதில்லை.

இதைப் பற்றி இந்த உயர் பீடத்தினரிடம் கேட்டால், “அரசதரப்பின் அங்கீகாரம் அல்லது ஒத்துழைப்புச் சரியாகக் கிடைக்கவில்லை. அரசியல் தலையீடுகளால் எதையும் செய்ய முடியவில்லை” என்று மிகச் சாதாரணமாகப் பதில் சொல்கிறார்கள்.

“அப்படியென்றால், நாட்டின் வீழ்ச்சிக்கு நீங்கள் பொறுப்பாளிகளாகிறீர்கள். உங்கள் பதவியின் வழியே அதைச் செய்கிறீர்கள்.

இந்தக் குறைபாடுகளை எதிர்த்து நீங்கள் ஏன் வெளியே குரல் கொடுக்கவில்லை. போராடவில்லை. அல்லது அரசாங்கத்தின் குறைபாட்டைச் சுட்டிக்காட்டவில்லை?” என்று கேட்டால், “நாங்கள் என்ன செய்ய முடியும்? எதிர்த்துப் பேசினால், இடமாற்றம் செய்வார்கள்.

வேறு பல அழுத்தங்களைத் தருவார்கள். தனிமைப்படுத்துவார்கள். நெருக்கடிகளை உண்டாக்குவார்கள்” என்று பதிலளிக்கப்படுகிறது.

இத்தகைய நிலை தொடர்ந்து நீடிக்கிறது. அதிகாரத்தின் குணநிலையில் – பண்பு நிலையில் மாற்றமில்லை.

இப்போது பாருங்கள். “நல்லாட்சி” என்ற பேரில் தன்னைப் பிரகடனப்படுத்திய இந்த அரசாங்கம், தான் பிரமாண்டமாக அறிவித்த அரசியல் தீர்வு, ஊழல் ஒழிப்பு, நல்லிணக்கம், ஜனநாயக மேம்பாடு, பொருளாதார உயர்வு, மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு, வறுமை நீக்கம் போன்றவற்றைச் சீராகச் செய்யவில்லை.

அரசியலமைப்புத் திருத்தம் பாதி வழியைக் கூடக்கடக்கவில்லை. அதற்குள் ஆயிரத்துக்கு மேலான சாட்டுப்போக்குகள். இதற்குள் ஆட்சிக்காலத்தில் பாதிக்கும் மேல் கடந்து விட்டது.

பொருளாதார வளர்ச்சிக்கான எந்தப் புதிய திட்டங்களையும் உருவாக்கியதாக அறிய முடியவில்லை. இந்தந்தத் திட்டங்களை நாம் உருவாக்கியுள்ளோம். இவற்றின் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தில் இத்தகைய வளர்ச்சிகள் ஏற்படும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு யாரிடம் பதிலுண்டு?

அப்படி உருவாக்கியிருந்தால் இலங்கையின் பணப்பெறுமதி இப்படி சடுதியாக வீழ்ச்சியடைந்திருக்குமா? பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்குமா? இறக்குமதியிலேயே நாடு தங்கியிருக்குமா?

உண்மையில் நாட்டின் உற்பத்தியில் ஏற்படும் வீழ்ச்சியே – பற்றாக்குறையே நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது. இறக்குமதியில் ஒரு நாடு முற்றுமுழுதாகவே தங்கியிருக்குமானால் அது வரிச்சுமை, கடன்சுமை போன்றவற்றினால் மூழ்கி விடும்.

இன்றைய இலங்கை கடலால் சூழப்பட்டிருக்கிறது என்பதை விட கடன் சுமையினால் சூழப்பட்டிருக்கிறது என்பதே சரியானது.

நம் தாயார்களும் தந்தையர்களும் கடனோடு வாழ்ந்ததில்லை. அப்படிக் கடன் பட்டிருந்தாலும் சிறிய அளவிலான கடனையே பட்டிருந்தார்கள். திருப்பிச் செலுத்தக் கூடிய அளவுக்கான கடன் அது. அதனால் அவர்கள் வாழ்ந்தது பெரு வாழ்க்கை.

நாமோ திருப்பிச் செலுத்தக் கடினமான கடனோடு, முடியாத கடனோடு, தொடர்கடன், பெருங்கடன் எல்லாம் வாங்கிச் சிறுவாழ்க்கை வாழ்கிறோம்.

இதற்குக் காரணம், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டமிடல்களில் நிகழ்ந்திருக்கும் குறைபாடுகளேயாகும். நமது அறிவுத்துறை வீழ்ச்சியடைந்து விட்டது. ஆட்சி தோற்றுப் போயிருக்கிறது.

இதை எப்படிச் சீர்ப்படுத்துவது? என்பதே இன்றுள்ள முக்கியமான கேள்வியாகும்.

நாட்டிலே பிரச்சினைகள் தாராளமாகப் பெருகிக்கொண்டிருக்கின்றன. எண்ணற்ற வகையில் ஏராளம் போராட்டங்கள் தினமும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. போராட்டங்கள் அதிகரித்தால், அந்த நாடு பிரச்சினைகளின் பெருக்கிடமாகி உள்ளது என்றே அர்த்தமாகும். பிரச்சினைகள் அதிகரித்தால் நாட்டில் முன்னேற்றம் ஏற்படாது.

போராட்டங்களுக்காக மக்களின் உழைப்புச் சக்தியும் மூளை வளமும் வீணடிக்கப்படும். பிரச்சினைகளால் உண்டாகும் நெருக்கடி, மூளையை – சிந்திக்கும் திறனை இல்லாமலாக்கி விடுகிறது.

ஆகவேதான் முடிந்தளவுக்கு பிரச்சினைகள் உருவாகாத அளவுக்கு ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதுண்டு. நெருக்கடிகளைத் தீர்ப்பதிலேயே ஆட்சியின் கவனம் இருக்க வேண்டும். புதியனவற்றை உருவாக்க வேண்டும். உற்பத்தித்திறனைப் பெருக்க வேண்டும். பொருளுற்பத்தியே நாட்டை வளமாக்கும்.

ஆனால், அதற்கு தற்போதைய வழிமுறைகள் தோதானவையல்ல

இதிலிருந்து நாம் மீள வேண்டும்.

அதாவது, மக்கள் அரசுக்கு – அரசாங்கத்துக்கு – அரசியல் தரப்புகளுக்குச் சேவகம் செய்யும் நிலை மாற்றப்பட்டு, மக்களுக்கு அரசும் அரசியலும் சேவை செய்யக்கூடியதாக அமைய வேண்டும்.

Comments