ஏழைகளின் கல்விக்கும் மருத்துவத்துக்கும் நிதி உதவி செய்வேன் | தினகரன் வாரமஞ்சரி

ஏழைகளின் கல்விக்கும் மருத்துவத்துக்கும் நிதி உதவி செய்வேன்

பசறைத் தேர்தல் தொகுதியில் உள்ள மூவின மக்களையும் அரவணைத்து  இன, மத, பேதங்களுக்கு அப்பால்     மக்களின்  தேவையறிந்து  சேவையாற்றுவதை இலட்சியமாகக் கொண்டுள்ளேன் என்கிறார்  பசறை பிரதேச சபையின் ஐ.தே.க. உறுப்பினர் கார்த்தீஸ்வரன் (ஈசன்).

 

நேர்கண்டவர் :

பசறை ஜோன்சன்

உங்கள் அரசியல் பிரவேசம் எப்படி ஆரம்பமானது?

யாழ்ப்பாணம் காரை நகரில் வர்த்தக பின்னணியுள்ள குடும்பத்தில் மூன்றாவது மகனாக பிறந்த நான், ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்திலும், உயர் கல்வியை பசறை தமிழ் மகாவித்தியாலயத்திலும் தொடர்ந்தேன். பசறை நகரில் நகைமாளிகையின் உரிமையாளராக இருந்து வருவதுடன், தந்தையின் வியாபார நடவடிக்கைகளையும் ஆரம்ப காலத்தில் கவனித்து வந்தேன். அக்காலகட்டத்தில் என்னால் இயன்ற மக்கள் பணியை பிரதேச சபைக்கு தெரிவாகும் முன்னும் செய்து வந்திருக்கிறேன்.

மலையகத்தில் தற்போதைய அரசியல் நிலைமைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பசறை தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஸுடன் எனக்கு சுமார் 18 வருடகாலமாக நட்பு இருந்து வருகின்றது. அவருடைய அரசியல் தொழிற்சங்க பணிகளில் எனக்கிருந்த ஆர்வம் காரணமாக அரசியலில் இணைந்து கொண்டேன்.

பாடசாலை நாட்களில் நண்பர்களுடன் அவர்கள் வசிக்கும் தோட்டப் பகுதிக்கு செல்வதையும், அங்குள்ள மக்களோடு இணைந்து பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதையும் வழமையாகக் கொண்டிருந்தேன். இச்சந்தர்ப்பத்தில் அங்குள்ள மக்கள் படும் துயரம், அவர்களது பொருளாதார நிலைமை, குடியிருப்பு பிரச்சினை போன்றவற்றை கண்ணுற்று அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என நினைத்து ஆரம்பத்தில் எனது சொந்த நிதியில் உதவிகளைச் செய்துவந்தேன். எனினும் மக்களுக்காக சேவையாற்ற அரசியல் அங்கீகாரம் தேவை என்பதை உணர்ந்து எனது விருப்பத்தை தொகுதி அமைப்பாளர் வடிவேல் சுரேஸுக்கு தெரியப்படுத்தினேன். அவரும் நடந்து முடிந்த பிரதேசசபைத் தேர்தலில் கனவரல்ல வட்டாரத்தில் என்னை போட்டியிட வைத்தார். தேர்தலில் களம் கண்டு நானும் வெற்றி பெற்றேன். இவ்வாறே எனது அரசியல் பயணம் ஆரம்பமாகியது.

மலையக மக்கள் தொழிற்சங்க அரசியலுடன் பின்னிப் பிணைந்தவர்களாகவே உள்ளனர். அன்றுதொட்டு இன்றுவரை மலையக மக்களுக்கான சேவைகள் தொழிற்சங்க ரீதியாகவே இடம்பெற்று வந்திருக்கின்றன.

தொழிற்சங்கத் தலைவர்களும் மக்களின் தேவையறிந்து அவர்களுக்காக சேவையாற்றி வந்துள்ளனர். எனினும் மலையக மக்கள் எதிர்நோக்கும் பல அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.

மலையக மக்களின் பிரதிநிதிகளாக இருப்போரின் அரசியல் முதிர்ச்சியற்ற அரைவேக்காடுகள் புரட்சியாக பேசி விமர்சனங்களை முன்வைத்தாலும், மலையக மக்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வை மலையக தொழிற்சங்க அரசியல் தலைவர்களே பெற்றுக்கொடுக்கின்றனர். அண்மைக்காலமாக மலையகத் தொழிற்சங்க அரசியலில் சாதகமான போக்கு நிலவுகின்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணி தொழிற்சங்க அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து மக்களின் தேவையறிந்து சேவையாற்றி வருகின்றது. இது எமது சமூக மாற்றத்தின் முன்னேற்றகரமான நடவடிக்கை. மலையக அரசியலின் ஒருபுதிய அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும்.

பசறை பிரதேச சபை எந்தெந்த கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கியிருக்கிறது...?

பசறைத் தேர்தல் தொகுதியில் 48 கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளன. இவற்றில் மலையக பெருந்தோட்ட தமிழ் பேசும் மக்களே அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான கிராம சேவைப் பிரிவுகளில் ஒன்றான கனவரல்ல வட்டாரம் 87 டி கனவரல்ல கிழக்கு, 87 கனவரல்ல ஆகிய கிராம சேவை பிரிவுகளில் போட்டியிட்டே நான் வெற்றிகண்டேன்.

பிரதேச சபை ஆற்ற வேண்டிய பணிகள்... அதன் நிர்வாக ரீதியான செயற்பாடுகள்....?

கடந்த 2 வருடகாலமாக பிரதேச சபையின் செயற்பாடுகள் முடங்கிப்போய் இருந்தன என்றே சொல்ல வேண்டும். இப்பிரதேச சபையின் நிர்வாக இயந்திரம் மந்தக் கதியிலேயே செயற்பட்டு வந்தது. தற்போது பிரதேச சபை அமைக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், பசறை நகரை தூய்மைப்படுத்தி அழகுபடுத்த வேண்டியது முதற்கட்ட பணியாகும். பொதுமலசலகூடம், வாகனத் தரிப்பிடம் மற்றும் பசறை நகரிலுள்ள திண்மக் கழிவுகளை அகற்றுவதில் நீண்டகாலமாக பிரச்சினை நிலவி வருகின்றது.

அவற்றை முறைப்படுத்தி பிரதேச சபை எல்லையின் கீழ் வரும் மக்களுக்கு அனைத்துவிதமான உட்கட்டமைப்பு வசதிகளையும், பிரதேச சபையின் சக்திக்குட்பட்ட வகையில் வழங்க வேண்டும் என்பதில் எமது சபை உறுதியாக உள்ளது. நிர்வாக ரீதியாக எமக்கு மட்டுப்படுத்தப்பட்ட வருமானமே உள்ளது. பிரதேச சபையின் ஊடாக அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும்போது தொகுதி அமைப்பாளர்கள், அமைச்சர்கள், மாகாண சபை என்பவற்றின் ஊடாக அபிவிருத்தியை மேற்கொள்ள எண்ணம் கொண்டுள்ளோம்.

பிரதேச சபை ஊடாக அப்பகுதி பெருந்தோட்டப்பகுதிகளுக்கு ஆற்றக்கூடிய சேவைகள் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்ன?

பசறைப் பிரதேச சபை பெருந்தோட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துசெயற்பட வேண்டும் எனக் கருதுகின்றேன். காரணம் பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளில் பாரிய பிரச்சினை நிலவி வருகின்றது. அத்துடன் போக்குவரத்துப் பாதை, குடிநீர், போதைப்பொருள் பாவனையின் தாக்கம், பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகள், சிறுவர் நலன் பேணும் திட்டங்கள், தோட்டங்களில் இயங்கும் முன்பள்ளி மற்றும் அறநெறி பாடசாலை என்பவற்றின் செயற்பாடுகளை அனைத்து தோட்டங்களிலும் உறுதிப்படுத்த வேண்டும்.

கடந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் போட்டியிட்டு தற்போது பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறீர்கள். இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு ஆற்றக்கூடிய சேவைகள் பற்றி கூறுங்கள்?

உண்மையில், கனவரல்ல பகுதி மக்களுக்கு எனது பதவிக் காலத்தில் முழுமையான சேவையை வழங்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். முதற்கட்டமாக கனவரல்ல சீ.வி.ஈ., சீ.வி. 2 ஆகிய தோட்டப் பிரிவுகளுக்கு பொதுவான இடத்தில் முன்பள்ளியொன்றை அமைத்துக்கொடுக்க வேண்டும். அங்குள்ள சிறுவர்கள் முன்பள்ளிக் கல்வியைத் தொடர்வதில் போக்குவரத்துப் பிரச்சினை காரணமாக பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். அத்தோடு நமுனுகுல வீதியின் கனவரல்ல 13ம் கட்டை பகுதியின் பொது பஸ் தரிப்பிடம் ஒன்றை அமைக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, சுயதொழில் பயிற்சி ஊக்குவிப்பு, சனசமூக நிலையத்தின் செயற்பாடுகளை ஊக்குவித்தல், இளைஞர் கழகங்களுக்கான உதவி, தலைமைத்துவப் பயிற்சி, சமூக விழிப்புணர்வு வேலைத்திட்டம் என்பவற்றை திட்டமிட்டு மேற்கொள்ள எண்ணியுள்ளேன்.

உங்கள் பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் குறைபாடுகள், அவற்றுக்கான தீர்வை எப்படி பெற்றுக்கொடுப்பீர்கள்?

இப்பகுதியிலுள்ள மக்கள் பல்வேறு குறைபாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களுக்குரிய முறையான வருமான மார்க்கம் ஒன்றில்லை.

இதனால் குறைந்த வருமானத்தை பெறுவோரே அதிகளவில் உள்ளனர். வருமானத்தை உயர்த்துவதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும். இப்பகுதி கால்நடைவளர்ப்பிற்கு உகந்த பிரதேசமாகும். எனினும் கால்நடை வளர்ப்பாளர்கள் முறையான வசதிகளின்றி சிரமப்படுகின்றனர். இத்திட்டம் முறைப்படுத்தப்பட வேண்டும்.

இங்குள்ள மக்கள் பெரும்பாலும் போஷாக்கு குறைபாட்டுடன் இருப்பதை உணரமுடிகின்றது. சிறுவர்களுக்கான போஷாக்கு மேம்பாட்டு வேலைத்திட்டத்தை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இங்குள்ள மாணவர்கள் கல்வியில் இடை விலகுவது பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு பொருளாதாரமும் ஒரு காரணமாகும்.

அதை நிவர்த்திசெய்ய வழிவகை தேடவேண்டும். இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான பொழுதுப்போக்கு அம்சங்களை விருத்திசெய்து சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்களுடைய செயற்பாடுகளை நல்ல நோக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டும். பெண்கள் கூட்டுறவு சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். சேமிப்பு தோட்டப் புறங்களில் அரிதாகவே உள்ளது.

 

சமூக சேவைகளில் அதிக ஆர்வமுடன் செயற்படுவதாக அறிகிறோம். இந்தச் சிந்தனை வரக்காரணம் என்ன?

நான் உழைக்கும் வருமானத்தில் ஒருபகுதியை நல்ல நோக்கங்களுக்காக செலவிட வேண்டும் என்று எண்ணுபவன். இப் பழக்கம் எனது தந்தையிடமிருந்தே எனக்கேற்பட்டது. இதன் காரணமாக சமூக மேம்பாட்டு கலை, கலாசார வளர்ச்சிக்கு என்னாலான பங்களிப்பை எனது அஷ்டலக்ஷ்மி பவுன்டேசன் அமைப்பினூடாக செய்து வருகின்றேன்.

குறிப்பாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற குறைந்த வருமானம் பெறுவோரின் பிள்ளைகளுக்கு உதவி, வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து தீராத நோய்களினால் பீடிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ செலவு மற்றும் மருத்துவ உபகரணங்கள் பெற்றுக்கொடுத்தல் கலை, கலாசார நிகழ்வுகள் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள், முன்பள்ளி நிகழ்வுகள் என்பவற்றிற்கான உதவி மற்றும் பொதுப் பணிகளுக்கான உதவி என்பவற்றை எனது தனிப்பட்ட நிதியில் இருந்து செய்து வருகின்றேன்.

அத்தோடு எமது பிரதேச சபை மாதாந்த வேதனத்தில் கனவரல்ல வட்டாரத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் முகமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள கல்வியைத் தொடரமுடியாத பிள்ளைகளுக்கு உதவியும், குணப்படுத்தமுடியாத நோய்களால் பீடிக்கப்பட்டு மருத்துவ செலவை ஈடுகட்ட முடியாதவர்களுக்கு மருத்துவ செலவுக்கான உதவியையும் வழங்க முன்வந்துள்ளேன்.

பசறை பிரதேச சபை பல இன மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருவதுடன் தமிழ் மக்கள் பரந்தும் செறிந்தும் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தப் பிரதேச அபிவிருத்தியில் உங்களின் பங்களிப்பு பற்றி.....

பசறைத் தேர்தல் தொகுதியில் உள்ள மூவின மக்களையும் அரவணைத்துக் கொண்டு இன, மத, பேதமற்றவகையில் அரசியல் ரீதியாக அங்கீகாரத்துடன் மக்களின் தேவையறிந்து எமது பதவிக் காலத்தில் சேவையாற்றுவதை இலட்சியமாகக் கொண்டுள்ளேன்.

உங்களுடைய அரசியல் பணிகளுக்கு பதுளை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேசின் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது?

சிறப்பாக இருக்கிறது! என்னுடைய எண்ணங்கள், செயற்திட்டங்கள் என்பவற்றை செயற்படுத்த முழுமையான ஒத்துழைப்பையும், ஆலோசனை வழிகாட்டல்களையும் அவர் வழங்கி வருகிறார். அத்துடன் எனது பணிகளை ஊக்கப்படுத்தும் முகமாக ஐ.தே.க. பசறைதொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இப்பதவியினூடாக இளைஞர் சக்தியை ஒன்றிணைத்துக் கொண்டு அவர்களுடைய தொழில் மற்றும் ஏனைய அடிப்படைய பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு பசறை நகரில் ஒற்றுமைமிக்க நாட்டை நேசிக்கும் இளைஞர் சமூகத்தைக் கட்டியெழுப்ப முழுமூச்சாக பாடுபடுவேன்.

உங்களுடைய மாதாந்த வேதனத்தை பொதுப் பணிகளுக்காக செலவிட உள்ளதாக அறிகிறோம். அதுகுறித்து கூறுங்கள் ?

எனது பிரதேச சபை மாதாந்த வேதனத்தில் கனவரல்ல வட்டாரத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் முகமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலுள்ள கல்வியைத் தொடரமுடியாத பிள்ளைகளுக்கு நிதியுதவியும், குணப்படுத்தமுடியாத நோய்களினால் பீடிக்கப்பட்டு மருத்துவ செலவை ஈடுகட்ட முடியாதவர்களுக்கு மருத்துவ செலவுக்கான உதவியையும் வழங்க முன்வந்துள்ளேன்.

Comments