நன்றி சொல்வோம்... | தினகரன் வாரமஞ்சரி

நன்றி சொல்வோம்...

இனிய குரலில் கூவியவாறே

கூட்டை விட்டு

பறக்கும் வரை

கட்டிக் காத்த

காக்கை இனத்தை

குயில் பாட்டு பாடிய

பாரதி கூட

தொட்டுச் செல்ல

மறந்ததேனோ

வசந்தத்திற்கு எதிர்வு கூற

குயில் கூவும் போதெல்லாம்

வஞ்சமிலா காகங்களுக்கு

நெஞ்சார நன்றி சொல்வோம்

காற்றிலும் மழையிலும்

கடுங் குளிரிலும்

சுடும் வெப்பத்திலும்

தாக்கத்திலும் ஏக்கத்திலும்

சோடை போகாது

படும் பாட்டை

நினைத்துப் பார்த்து

இலை மறை காய்கள்

கனியும் போதெல்லாம்

காம்புக்கு நன்றி சொல்வோம்

தங்கத் திங்கள் பௌர்ணமியாய்

மங்கா அழகுடன் வானில்

தங்கிப் போகும்

நேரமெல்லாம்

கட்டணமில்லா

இரவல் ஒளியை

பரவலாகக் கொடுக்கும்

பகலனுக்கு நன்றி சொல்வதை

விடுமுறையில் இருப்போரெல்லாம்

விதிமுறையாகக் கொள்வோம்

Comments