இஸ்லாமியத் தமிழ் இலக்கியகாரர்கள் மறந்து விட்ட உமறுப்புலவரின் வாரிசு | தினகரன் வாரமஞ்சரி

இஸ்லாமியத் தமிழ் இலக்கியகாரர்கள் மறந்து விட்ட உமறுப்புலவரின் வாரிசு

நபியவர்களின் வரலாற்றில் நடந்ததாக அறியப்பட்ட கிளைக்கதையொன்றினை எடுகோளாகக் கொண்டு 1939 ஆம் ஆண்டு மருதமுனையைச் சேர்ந்த புலவர் யூ.எல்.இஸ்மாயில் அதிபரால் எழுதப்பட்ட “உபாக்கியான அந்தாதி” நூலின் மீள் பிரசுர வெளியீட்டு விழா மருதமுனை (12) நடைபெற்றது

இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் தேவையா? இல்லையா? என்பதற்கப்பால் அதன் வரன்முறைக்குள் நின்று எழுதியவர்களும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு வந்திருக்கின்றனர் என்பதற்கு மருதமுனை யூ.எல்.இஸ்மாயிலும் சான்றாகின்றார்

1966 ஆம் ஆண்டு தொடங்கி 2016 ஆம் ஆண்டுடன் பொன் விழாவான இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் 1939 ஆம் ஆண்டு கல்ஹின்னை அரசினர் தமிழ்ப்பாடசாலையின் தமிழாசிரியராக இருந்து ஆயிரம் பிரதிகளைப் பரப்பிவிட்ட யூ.எல்.இஸ்மாயிலின் “உபாக்கியான அந்தாதி” யைக் கண்டு கொள்ளாமை விசித்திரமானதே

இலக்கியம் தொடர்பான ஆய்வியல் தேடலில் பதிப்பிக்கின்ற முயற்சியும் முக்கியமானது. இது தொடர்பில் எவ்வித முன் ஈடுபாடுமில்லாத நண்பர் பதுறுல் பெளஸ் திடீரென இம்முயற்சிக்குள் தன்னை நுழைத்துக் கொண்ட விபத்து மருதமுனையின் இலக்கிய அடையாளப்படுத்தலின் அல்லது மீள் இழுத்துக் கொடுத்தலின் முக்கிய அம்சம் எனலாம். மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என வரையறுக்கின்றவற்றுள் உயர் முயற்சியென இதனைக் கொள்ளலாம். அதற்காக அவர் மேற்கொண்ட பயணங்களையும் தேடலையும் விடா முயற்சியையும் நாம் அறிவோம். இம் முயற்சிக்குப் பின்னரான அடையாளத்தில் பதுறுல் பெளஸ் தன் பெயரை பதித்திருப்பது அபரிமிதமான முயற்சியே.

உமறுப்புலவர்-வண்ணக் களஞ்சியப் புலவர் -குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் வரிசையில் நின்று இஸ்லாமியத் தமிழ்ப்புலமை மரபு பிசகாமல் பாடிய மருதமுனையின் சின்னாலிமாப்பா-புலவர் மணி சரிபுத்தீன்-ஹஸன் மெளலானா வரிசையில் வைத்து எண்ணத்தக்கவரே யூ.எல்.இஸ்மாயில் ஆவார்.

உமறுப்புலவர் எவ்வாறு நபியவர்கள் மானுக்குப் பிணை நின்றதான படலத்தை அமைத்தாரோ அதற்குச் சமாந்தரமான கற்பனையில் வேடனிடமிருந்து முயல்களை மீட்ட சம்பவம் ஒன்றையும் அதனோடிணைந்த நபியவர்களின் புகழையும் மேலோங்கச் செய்து அவற்றுடன் பல்வேறு பிரசாரக் கருத்துக்களையும் கொண்டு “உபாக்கியான அந்தாதி” யை சமைத்துள்ளார் நூலாசிரியர்

முற்காலத்தில் நிகழ்ந்ததை அறிவிக்கும் கதை அல்லது இதிகாசக்கதை அல்லது கதை சொல்லுதல் முறை முதலியவற்றை உள்ளடக்கிய சொல்லாடலே “உபாக்கியம்” என்பதாகும். ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து- அசை-சீர்- அடி அடுத்துவரும் பாடலின் தொடக்கமாக வருவதே அந்தாதித் தொடை. இவை இரண்டையும் இணைத்து அவற்றின் இலக்கணம் மாறாமல் “உபாக்கியான அந்தாதி” ஆக்கி இருப்பது மெச்சத்தக்க முயற்சியாகும்.

“நின்ற மறைநாய்களினைக் கண்டமுயற்சேய்கள்

நேசபுதரான தினைத்தேடியே நுளைந்து

வென்றிபுரி நாய்களினை யஞ்சியே யொடுங்கி

வேதநபி பாதமெனவேண்டி மறைவாக

மறைவாகநின்ற பெருமா முயலைக்கண்ட

மறைநாய்க ளோடியதன் மார்பிட ரிதீண்ட

இறைபாதமென விதயமுறு நாதமுயலும்

பறைவாக லோரொலியைப் பரவினோடுகாட்ட” தொய்தலின்றி இவ்வாறாகவே அந்தாதி அசைகின்றது

உபாக்கியான அந்தாதியின் ஆசிரியர் யூ.எல்.இஸ்மாயில் முஹிம்மாத்துல் முஸ்லிமீன்- நபி(ஸல்) அவர்களின் பலதார மணத்தின் காரணங்கள் ஆகிய நுால்களின் சொந்தக்காரர். கலித்துறை-ஆசிரிய விருத்தம்-வெண்பா யாப்புக்களில் தமக்கிருந்த அனுபவங்களோடு கருநாடக இசையின் வழித்தோன்றலான கீர்த்தனைக்குரிய மெட்டு- ஓசை- அனுபல்லவி- சரணம் விரவி வர தோத்திரிக் கீர்த்தனாமிர்தத்தையும் இணைத்திருப்பது கவனத்துக்குரியது

முந்தைய காலத்தில் தான் எழுதும் நூலுக்காகப் பெரும் புலவர்களிடம் கேட்டுப்பெறும் கவியான சாற்றுக்கவியினை இந்நூலுக்காக அகவற்பாவில் வழங்கியிருப்பவர் வரகவி அ.சுப்பிரமணிய பாரதியார் (1880-1955) இவரும் மகா கவி சுப்பிரமணிய பாரதியாரும்(1885 -1921) சம காலத்தவர்கள். மகா கவி பாரதி யாப்புக்களில் எவ்வாறு தேர்ச்சி பெற்றிருந்தாரோ அவ்வாறே வரகவி சுப்பிரமணி பாரதியாரும் புலமை பெற்றவர். மாருதி விஜயம்- ஜடா வள்ளல் -பரதன் -நந்தனார் -பகவத் கீதை வசனம்-பட்டினத்துப் பிள்ளையார் சரித்திரம்-பால கோபால லீலை முதலிய நூல்களின் ஆசிரியர். சிறந்த கட்டுரையாளர் 1904 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மகா கவி பாரதியும் இவரும் சுதேச மித்திரனில் பணிபுரிந்துள்ளனர்.

“புழுவும் எறும்பும்” தொடர்பில் 1940 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் மகா கவி பாரதி தன்னுடன் பகிர்ந்து கொண்ட தத்துவார்த்த விடயங்களை வாசகர் மத்தியில் பகிர்ந்ததன் மூலம் மகா கவிக்கும் தனக்கும் இருந்த இலக்கியத் தொடர்பை உலகறியச் செய்தார்.

இத்தகு சிறப்புக்கள் மிக்க வரகவி பாரதியார் இந்நூலுக்கு சாற்றுக்கவி வழங்கியிருப்பது பெருமைக்குரியது. இலங்கையில்- மருதமுனையில் எழுந்த இவ்வாறானதொரு நுாலுக்கு இந்தியாவிலிருந்து ஒரு கவிஞரால் சாற்றுக்கவி பாடப்பட்டதென்பது பெருமைக்குரிய விடயமே

இந்நூலில் பல்வேறு பிரசாரக் கருத்துக்களும் இணைக்கப்பட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. தனியே போற்றுதல் அல்லது சிறப்புக்களை மட்டும் உள்ளடக்கும் அக்கால இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வடிவங்கள் எனக் கூறப்பட்டிருக்கின்றவைகளிலிருந்து சற்று வழுவி புத்திமதி கூறலான பாடல்கள் மீதும் நூலாசிரியர் கவனம் செலுத்தியுள்ளார்.

செய்யுள் தொடங்கி கவிதைகளாய்ப் பல்வேறு உருக்கொண்டு தாண்டவமாடும் இக்காலத்தில் சுமார் எட்டு தசாப்தங்களை முன்னோக்கிய இலக்கிய ரசிப்புக்கு எம்மை இழுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கி எம்மையும் நனையவைத்திருக்கும் இஸ்மாயில் பதுறுல் பெளஸின் இம்முயற்சி பாராட்டத்தக்கது.

இதனோடு நின்று விடாமல் இந்நூலின் செய்யுள்களை சந்திபிரித்து தற்கால உரைப்பொழிப்பொன்றைச் செய்து வெளியிடுகின்ற பணியில் நண்பர் பதுறுள் பெளஸ் இறங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அவரது முன்னெடுப்பினை இலக்கிய உலகு அரவணைக்க உளமார்ந்த பிரார்த்தனைகள்

நூல் வெளியீட்டு விழா தென்கிழக்குப்பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய கற்கைகள் பீட முன்னாள் பீடாதிபதி கலாநிதி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கவிஞர் விஜிலி- போராசிரியர்களான பீ.எம். ஜமாஹிர்- றமீஸ் அப்துல்லா ஆகியோர் நூல் குறித்து உரையாற்றினர்.

இஸ்மாயில் புலவரின் புதல்வர் ஐ.எம்.வதுறுல் பெளஸை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட நூலின் முதற்பிரதியை இலக்கிய செயற்பாட்டாளர் சறோ தாஜூதீனும் நினைவுப் பிரதியை நுாலாசிரியரின் மனைவி உம்மு ஜெஸீமாவும் பெற்றுக் கொண்டனர்.

 ஜெஸ்மி எம்.மூஸா

Comments