தற்கொலையால் உயிரை மாய்ப்போரில் ஆண்களே அதிகம் | தினகரன் வாரமஞ்சரி

தற்கொலையால் உயிரை மாய்ப்போரில் ஆண்களே அதிகம்

லக்ஷ்மி பரசுராமன்.

​பிறந்த நாள், கல்யாண நாள் எதுவாக இருந்தாலும் புகைப்படங்களுடன் குறிப்புகளை முகநூலில் பதியவிடுவது இப்போதைய நவநாகரீகமாகி வருகிறது. அப்படிதான் வெளிநாட்டில் வதியும் ஒரு சகோதரி அண்மையில் தனது ஐந்தாவது வருட திருமண நாளை கொண்டாடுவதாக தெரிவித்து சில புகைப்படங்களை பதிவு செய்திருந்தார். அதனுடன் சேர்த்து அவள் எழுதியிருந்த குறிப்பு கூடவே வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்த்தியது.

'எமது திருமண வாழ்க்கைக்கு இன்றுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. நாம் பார்ப்பதற்கு புகைப்படத்தில் அழகான தம்பதியினராக தெரிந்தாலும் நாம் உண்மையில் எந்நேரமும் அப்படியாக இருப்பதில்லை. இந்த ஐந்து வருடத்துக்குள் நான் அவரை படாத பாடு படுத்தியுள்ளேன். எனக்கு கோபம் வரும்போது வார்த்தைகளை அள்ளி வீசுவேன். கோபித்துக் கொள்வேன். சில நாட்களுக்கு பேச மாட்டேன். சமைக்க மறுப்பேன்.

சில நேரங்களில் சின்ன விடயத்தைக்கூட பெரிதாக்கி அழுது தீர்ப்பேன். அத்தனையையும் மன்னித்து, பொறுத்து என்னை ஆசுவாசப்படுத்தி மீண்டும் இந்த பந்தத்தில் இணைத்துச் செல்லும் என் கணவருக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. அவர் மட்டும் என் உணர்வுகளை அவ்வப்போது புரிந்து கொள்ள மறுத்திருந்தால் எங்களால் இன்று இந்த திருமண நாளை கொண்டாடியிருக்கவே முடியாது.' இவை வெறும் வசனங்கள் மட்டுமல்ல. இது தான் உண்மை. ஒருவரது வெளித்தோற்றம் மற்றும் முகத்தை வைத்து அவருடைய உள் உணர்வுகளையோ சுபாவத்தையோ எம்மால் எடைபோட்டுவிட முடியாது. அவருடன் நெருங்கிப் பழகும் உறவுகளாலேயே அவரது சுயரூபத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.

அவள் கணவர் முழுமையாக அவளை புரிந்துகொண்டுள்ள பொறுமைசாலி. ஆனால் எத்தனை வீடுகளில் அப்படி நடக்கிறது? மாறாக கணவரும் ஆத்திரத்தில் கடிந்து கொண்டால் விளைவு மன உளைச்சல்! அதன் முடிவோ விபரீதம்! சிலர் தொடர்ந்து விரக்தியுடன் வாழ்க்கையை கொண்டு நடத்த சிலரோ வாழ்ந்தது போதுமென இந்த உலகை விட்டே புறப்பட துணிந்துவிடுகிறார்கள்.

பெண்களைப் பொறுத்தரை அழுதோ, நான்கு பேரிடம் புலம்பியோ அல்லது ஒரு வாரத்துக்கு முகத்தை தூக்கியபடியோ ஒருவாறாக பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள். ஆனால் ஆண்கள்? அழவும் முடியாமல் மனம் திறந்து பேசவும் முடியாமல் மரியாதை, கெளரவம் என்ற அனைத்தையும் கட்டிக்காத்தபடி அவஸ்தைபடுகிறார்கள்.

நமது நாட்டைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது ஆய்வுகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி ஒரு பெண், தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் இடத்தில் மூன்று ஆண்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்வதும் புள்ளிவிபரங்களிலிருந்து ஊர்ஜிதமாகியுள்ளது.

உலகின் தற்கொலை இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் 1995 ஆம் ஆண்டளவில் இலங்கை முதலாவது இடத்தில் இருந்தது என்பதனை மனம் ஏற்க மறுத்தாலும் நம்பித்தான் ஆக வேண்டும். அதிகமாக கிராமபுறங்களில் அதுவும் விவசாய குடும்பங்களிலேயே தொட்டதற்கெல்லாம் தப்புவதற்குரிய ஒரே வழியாக இந்த தற்கொலை கையாளப்பட்டுள்ளது. ஆனால், இன்று இந்நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. அப்போது 47.8 சதவீதமாக இருந்த இலங்கையின் தற்கொலை வீதம் தற்போது 14 சதவீதமாக வீழ்ச்சி கண்டிருப்பதாக இலங்கை சுமித்ரயோ அமைப்பு தெரிவிக்கிறது.

உங்கள் மனதிலுள்ள சுமைகளை இலவசமாகவும் நம்பிக்கையுடனும் இறக்கி வைக்கக் கூடிய ஒரே இடம் தான் இந்த சுமித்ரயோ அமைப்பு. இந்த அமைப்பின் தொண்டர்களான ரஜனி பாலகிருஷ்ணன் மற்றும் குமுதினி டி சில்வா ஆகியோரை அண்மையில் சந்தித்து உரையாடுவதற்கு தினகரனுக்கு வாய்ப்பு கிட்டியது.

ரஜனியும் குமுதினியும் நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் தற்கொலை சம்பவங்கள், புள்ளிவிபரங்கள், அதற்கான காரணங்கள்,சுமித்ரயோவின் பங்களிப்பென பல விடயங்களை எம்முடன் மனம் திறந்து பகிர்ந்து கொண்டனர்.

இரகசியம் மற்றும் நம்பிக்கை இந்த இரண்டு விடயங்களிலும் சுமித்ரயோ உறுதியாக இருப்பதனால் பொலிஸ் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களே அங்கும் பின்பற்றப்படுகின்றன. இதனடிப்படையில் இலங்கையில் தற்கொலை வீதம் பெருமளவில் குறைந்துள்ளதே தவிர தற்கொலை முயற்சி செய்வோரின் வீதம் வருடாந்தம் கூடிக்கொண்டே தான் போகிறது என்பதை எம்மால் உணரமுடிந்தது. பத்து தொடக்கம் இருபது பேர் முன்னெடுக்கும் தற்கொலை முயற்சியின் விளைவாகவே ஒரு மரணம் ஏற்படுகிறதாம்.

2016 ஆம் ஆண்டில் மட்டும் 3025 பேர் தற்கொலையால் தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அதிலும் ஆண்களே அதிகம். அடக்கி வைக்கப்படும் மனக்குமுறல்கள் இறுதியில் அவர்களை தவறான முடிவை நோக்கி இழுத்துச் செல்கிறது.

தனிமை, பாதுகாப்பின்றிய உணர்வு,பொருளாதார நெருக்கடி,நோய் ஆகியவை பணம், படிப்பு, குலம்,கோத்திரம், வசதி, பதவி, அந்தஸ்து உள்ளிட்ட அனைத்தும் அந்த ஒரு நொடிப் பொழுதில் மழுங்கி அவனது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சின்னாபின்னமாக்கி அவனை இந்த உலகிலிருந்தே வழியனுப்ப பெரும் உந்துதலை ஏற்படுத்துகிறது. அதற்காக அந்த கணம் அவர்களுக்குள் உருவாகும் தைரியம் அபரிமிதமானது. இவ்வாறானவர்களை அடையாளம்கண்டு அவர்களுக்கு அன்பையும் மன ஆறுதலையும் வழங்குவதே அதிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக எம்மால் செய்யக்கூடிய மிகப் பெரிய உதவியாகும். அந்த உதவியையே சுமித்ரயோ அமைப்பு நீண்டகாலமாக முன்னெடுத்து வருகிறது.

இந்த அமைப்பின் ஸ்தாபகரான லக்ஷ்மி, நாட்டில் தற்கொலை வீதத்தை குறைப்பதற்காக ஆரம்ப காலம் முதல் பாரிய சேவையை முன்னெடுத்து வந்துள்ளார்.

எவரும் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதனை உறுதி செய்யும் முகமாகவே இலங்கை சுமித்ரயோ அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு இலவச சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் அது பற்றி இன்னமும் பலர் அறிந்திராதது கவலைக்குரிய விடயமென குமுதினி தெரிவித்தார்.

கொழும்பு 07 ஹோர்ட்டன் பிளேஸில் இதன் தலைமையகமும் கண்டி, பண்டாரவளை, பாணந்துறை, மாத்தளை, மாவனல்லை, குருணாகலை,நீர்கொழும்பு, பண்டுவஸ்நுவர, கொஹூவல மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அதன் கிளை அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

'சுமித்ரயோ அமைப்பின் தொண்டர்களான நாம் அங்கே வேலை செய்வதனை பிறரிடம் கூறித்திரிவதில்லை. அங்கே வந்திருப்பவர் எமக்கு தெரிந்தவர் என்றால் அவர் இக்கட்டான நிலைக்கு உள்ளாக்கும் வகையில் நாம் அவர் முன்னால் செல்ல மாட்டோம். நம்பிக்கைக்கும் இரகசியத்துக்கும் உயிரிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். கொலை செய்து விட்டு வருபவரைக்கூட அன்புடன் ஏற்றுக் கொள்கின்றோம். அவர்களது கூற்றுக்கள் எந்தவொரு இடத்திலும் பதிவு செய்யப்பட மாட்டாது. போலியான பெயர் மற்றும் விலாசத்தை கொடுத்தால்கூட நாம் அது தொடர்பில் விசாரணை செய்ய மாட்டோம். அவர்கள் பேசும்போது குறுக்கிடாமல் சொல்வது அனைத்தையும் பொறுமையாக நாம் செவி மடுக்கிறோம். இறுதியாக அவர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய பல தீர்வுகளை முன்வைப்போம். வைத்திய மற்றும் சட்ட உதவிகளை வழங்குவோம். தீர்வை பலவந்தமாக திணிக்க மாட்டோம். சம்பந்தப்பட்ட நபரையே தீர்மானம் எடுக்க விட்டுவிடுவோம்.' என அங்கே சேவையாற்றும் தொண்டர்களின் பொறுப்புகளையும் கடமைகளையும் ரஜனியும் குமிதினியும் அடுக்கிக் கொண்டே போனது சுமித்ரயோ பற்றி நம்பிக்கையை ஏற்படுத்தியது.

எமது வாழ்க்கை தடம் பிரண்டுவிட்டது அல்லது நாமே தெரியாமல் வழி தவறிவிட்டோம் என்றால் அதனை யாரிடம் போய் கூறுவது. உயிர் தோழியைகூட நம்ப முடியாத காலம் இது. அவள் அதை அவங்க வீட்டின் நான்கு பேரிடம் சொல்ல அவர்களூடாக விடயம் இன்னும் நாற்பது பேருக்கு தெரியவர என்று பிரச்சினையை கூட்டிக் கொள்வதிலும் பார்க்க முன்பின் அறிமுகமில்லாத ஒரு நம்பிக்கைக்குரிய நண்பன் மூலமாக மனவேதனையை இறக்கி வைப்பதே பெரும் ஆறுதலாக அமையும்.

வயதெல்லையை எடுத்துப் பார்த்தால் 15 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுமே அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்.

'எம்மை நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். பெற்றோர் கூட தமது பிள்ளைகளை இங்கே கூட்டி வருவார்கள். பலர் ஆரம்பத்தில் பேசவே மாட்டார்கள். ஓரிரு தடவைகள் வந்து அவர்களுக்கு எம்மீது நம்பிக்கை ஏற்பட்டதும் அடிக்கடி தேடி வந்து மனதிலுள்ளவற்றை கொட்டிவிட்டு செல்வார்கள். சிலருக்குள் தைரியத்தை ஏற்படுத்த எமக்கு இரண்டு வருடங்கள் கூட தேவைப்பட்டுள்ளது. வார நாட்களில் வேலை, நண்பர்கள் என இருந்தாலும் வார இறுதி நாட்களில் தனிமை பலரை வாட்டி எடுத்து விடுகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை மனதிலுள்ளவற்றை கூறி பாரத்தை இறக்கி வைப்பதற்காக பலர் திங்கட்கிழமையானதும் எம்மைத் தேடி வருகின்றனர். இளம் பராயத்தில் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் வீட்டில் சரியான அன்பும் அரவணைப்பும் கிடைக்காததன் காரணமாகவே அவர்கள் அன்பை தேடி தவறான வழியில் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது.'என்றும் ரஜனி எம்மிடம் தெரிவித்தார்.

தனக்கு எச்.ஐ.வி தொற்று இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் சுமித்ரயோவை தேடி வந்த இளைஞரின் மனதை தேற்றி அனுப்புவதற்கு ஒரு நாள் எட்டு மணித்தியாலங்கள் அவருடன் உரையாடிய சந்தர்ப்பத்தையும் அவர் எம்மிடம் நினைவு கூர்ந்தார். தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்காக பெற்றோர் கொடுக்கும் அழுத்தம்.

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சையில் எதிர்பார்த்த சித்தி கிடைக்காமை, காதல் தோல்வி, எதிர்பாராத கர்ப்பம் போன்ற வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பல உள்ளங்களுக்கு சுமித்ரயோ வழிகாட்டி அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியுள்ளது.

சுமித்ரயோவில் சேவை செய்வதற்கு அன்பு உள்ளமும் பொறுமையும் கொண்ட தொண்டர்கள் வேண்டுமாம்.

குறிப்பாக தமிழ் பேசும் தொண்டர்களின் தேவை அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டிய குமுதினி தாங்கள் பிற இடத்தில் தொழில் பார்க்கின்ற நிலையிலேயே சுமித்ரயோவில் வாரத்துக்கு நான்கு மணித்தியாலங்கள் சேவை செய்வதாகவும் கூறினார்.

தன்னம்பிக்கையை இழந்து விரக்தியின் உச்சத்தில் இருப்பவர்களை தைரியப்படுத்துவதிலும் தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களை அதிலிருந்து மீட்பதிலும் கிடைக்கும் ஆனந்தம் சொல்லி மாளாது.

பிரச்சினையிலிருந்து வெளிவந்த பலர் தாங்கள் இப்போது சந்தோஷமாக வாழ்வதாக எம்மிடம் நேரில் வந்து கூறிவிட்டுச் செல்வார்கள். அதுவே எமக்கு ஆத்ம திருப்தி எனும்போது ரஜனியினதும் குமுதினியினதும் கண்களிலும் நாம் அந்த ஆனந்தத்தை உணர்ந்தோம்.

 

 

Comments