நிலம் மீட்ட போராளிகளாக இரணைதீவு மக்கள் | தினகரன் வாரமஞ்சரி

நிலம் மீட்ட போராளிகளாக இரணைதீவு மக்கள்

 மு.தமிழ்ச்செல்வன்

இலங்கையின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தீவுகளில் ஒன்றே இரணைதீவு. யாழ்ப்பாணம் பூநகரி மன்னார் வீதியான ஏ 32 பிரதான வீதியில் முழங்காவில் பகுதியிலிருந்து மேற்கு பக்கமாக சென்று அங்கிருந்து படகுகளில் இரணைதீவுக்குச் செல்ல வேண்டும்.

1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது இரணைதீவில் வாழ்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்த தீவிலிருந்து வெளியேறி பூநகரி பெரும் நிலப்பரப்பில் வந்து குடியேறினார்கள். இவர்களை அப்போது இரணை மாதாநகர் எனும் கிராமத்தை உருவாக்கி அங்கு குடியேற்றப்பட்டனர். அன்று முதல் கடந்த 15 ஆம் திகதி வரை இந்த மக்கள் இரணைமாதாநகரிலேயே வாழ்ந்து வந்தனர்.

இரணைதீவு எனும் அந்தக் சிறிய தீவு 1992 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்ற தீவு. 2009க்கு முன் யுத்தகாலத்தில் இந்த தீவுக்கு அருகில் சென்று கடற்றொழில் செய்ய முடியாத சூழ்நிலையே நிலவி வந்தது. யுத்ததிற்கு பின்னர் வருடத்தில் ஒரு நாள் அங்குள்ள தேவாலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொள்ள மட்டும் கடற்படையினர் அனுமதித்திருந்தனர்.

இதனால் இவர்களின் பொருளாதாரம் மேம்பாட்டையவில்லை. தங்களின் சொந்த நிலமான இரணைதீவு கடற்றொழிலுக்கு சிறப்பான இடமாக விளங்கியமையினால் அங்கு 1992 முற்பட்ட காலத்தில் தன்னிறைவான பொருளாதாரத்தை கொண்ட மக்கள் செழிப்பாக வாழ்ந்தனர். ஆனால் இரணைமாதாநகரில் இவர்களுக்கு அந்த செழிப்பான பொருளாதார நிலைமை இல்லாத காரணத்தினாலும் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் நாட்டின் பாதுகாப்பில் பிரச்சினையில்லை என்ற காரணத்தினாலும் இரணைதீவு மக்கள் தங்களின் சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் நிலைப்பாட்டிற்கு வருகின்றனர்.

இதன் விளைவாக கடந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி இரணை மாதாநகர் தேவாலயம் முன்றலில் இரணைமாதாநகர் மக்கள் தங்களின் பூர்வீக நிலமான இரணைத்தீவுக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

போராட்டம் நூறு இருநூறு நாட்களை கடந்து சென்றுக்கொண்டிருந்தது. தீர்வுகள் எவையும் எட்டப்படவில்லை, அரசியல்வாதிகள் சென்று பார்வையிட்டனர் வாக்குறுதிகளை வழங்கினார்கள் அமைச்சர்கள் சென்றார்கள் பார்த்தார்கள் அவர்களும் வாக்குறுதிகள் வழங்கினார் ஆனால் எதுவும் நடக்கவில்லை நாட்கள் மட்டும் முந்நூறை கடந்தது. தங்களின் பூர்வீக நிலத்திற்குச் செல்ல வேண்டும் என்று போராட்டத்தை ஆரம்பித்த மக்கள் பொறுமையிழந்தனர். தங்களின் சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் அங்கு 1992 க்கு முன் வாழ்ந்த செழிப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நோக்கம் வலிமைபெறத்தொடங்கியது. இரணைமாதா நகரில் வாழ்வாதாரத்தை இழந்து பெருமளவுக்கு வறுமையில் காலத்தை கழித்த மக்களுக்கு இரணைதீவுக்கு சென்று குடியேற வேண்டும் அவா அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி தங்களது போராட்டத்தின் 359 வது நாளில் இரணைமாதாநகரில் தாங்கள் போராட்டத்தை மேற்கொண்டிருந்த தேவாலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டுவிட்டு இரணைத்தீவு நோக்கி அருட்தந்தையர்களுடன் மீன்பிடி படகுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் இரணைதீவு நோக்கிச் சென்று அங்கு தங்கிவிட்டனர்.

இதன் பின்னர் இரணைதீவு மக்களின் சொந்த நிலத்திற்கு செல்வதற்கான போராட்டத்தில் திருப்புமுனை ஏற்படுகிறது. தங்களின் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள், நல்லாட்சி அரசில் நம்பிக்கையிழந்து, தாங்களாகவே தங்களின் சொந்த நிலத்தில் சென்று குடியேறிய செய்தி ஊடகங்கள் மூலம் காட்டுத்தீ போன்று பரவுகிறது.

எனவே மீண்டும் முன்னாள் இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள வடக்கு மாகாண முதலமைச்சர் என அரசியல்வாதிகள் மீன்பிடி படகுகளில் சுமார் ஒரு மணித்தியாலயம் பயணம் செய்து இரணைதீவில் குடியேறிய மக்களை சந்திக்கின்றனர். இதன் பின்னரே கடந்த 15 ஆம் திகதி இரணைதீவுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ராஜபக்ஸ இலங்கை கடற்படை தளபதி ரியர்அட்மிரல் எஸ்எஸ்.

ரணசிங்க கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்று குடியேறிய மக்களை சந்தித்து உத்தியோகபூர்வமாக இரணைதீவில் குடியேறலாம் என அறிவிக்கின்றனர். எட்டு ஏக்கர் நிலத்தில் தொடர்ந்தும் கடற்படையினர் நாட்டின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் இருப்பார்கள் என்றும் அது அரச காணி என்றும் ஏனைய பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்ட 190 குடும்பங்களுக்கு அவர்களின் காணிகள் வழங்கப்படவுள்ளது என கிளிநொச்சி மாவட்டச் செயலகமும் அறிவித்துள்ளது.

தற்போது இரணைதீவு மக்களின் மிக முக்கிய தேவையாக பூர்த்தி செய்ய வேண்டியது அவர்களுக்கான நிரந்தர போக்குவரத்துக்கான படக்கு சேவை, தற்போது தனியாருக்குச் சொந்தமான படகுகளிலேயே பயணம் செய்கின்றனர். எனவே போக்குவரத்து மிக முக்கியமானது. இதனைத்தவிர ஆரம்ப சுகாதார நிலையம் மிக மிக அவசியமானது, குடிநீர் வசதி, மின்சார வசதி என்பன மிக அவசியத் தேவைகளாக காணப்படுகின்றன.

1992 இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு 2018 ஆம் ஆண்டு, அதாவது 26 வருடங்களுக்கு பின்னர் குடியேறும் அனுமதி கிடைக்கிறது. இது இரணைதீவு மக்களின் தன்னெழுச்சியான போரட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அந்த மக்கள் இன்று நிலம் மீட்ட போராளிகளாக காணப்படுகின்றனர்.

நிலம் விடுவிக்கப்பட்ட செய்தி கிடைத்த மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர். தாங்கள் தங்களின் சொந்த நிலத்தில் இறப்பதற்கு முன் சென்று குடியேறவேண்டும் என்ற ஆசை நிறைவேறியுள்ளதாக இரணைத்தீவின் மூத்த குடிகள் கண்ணீருடன் சொன்னார்கள்.

1992க்கு முன் வாழ்ந்த வளமான வாழ்க்கையை மீண்டும் வாழும் நிலைமை ஏற்படுமா என்று காத்திருந்த எங்களுக்கு அதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன . கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என யேசு கிறிஸ்து கூறியது போன்று தட்டினோம் கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன என்று சொன்னார் மற்றொரு இரணைதீவின் கடற்றொழிலாளி ஒருவர்.

இரணைத்தீவு மக்களின் வாழ்வில் மீண்டும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. இனி நாங்கள் எங்களது சொந்த காலில் நிற்போம், நம்பிக்கையுடன் சொன்னார் யுத்தத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர்.

எனவே இப்போது இரணைமாதாநகர் மக்கள் மீண்டும் இரணைதீவு மக்களாகிவிட்டனர்.

Comments