என்றும் வாழும் எழுத்துச்சித்தர் | தினகரன் வாரமஞ்சரி

என்றும் வாழும் எழுத்துச்சித்தர்

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் சென்னைக் காவேரி மருத்துமனையில் தன் இருப்பை நிறுத்திக் கொண்டார். கலைஞர்கள், எழுத்தாளர்கள் இம்மண்ணைவிட்டுப் பிரியும் போது, அது அவர்களின் குடும்பத்துக்கு மட்டுமான இழப்பாக இருப்பதில்லை. தங்களது படைப்புகளின் மூலம் அவர்கள் சேர்த்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு அது பேரிழப்பாக அமைந்து விடுகிறது. எழுத்தாளர் பாலகுமாரன் தனது நாவல்களின் வழியாகவும், தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதிய தொடர்கள் மூலமும் மக்கள் மனதில் என்றும் வாழ்வார். அவரது கதைகளில் இழையோடும் மனித மனம் சார்ந்த குறுக்கு விசாரணைகள் வாசகர்களை கட்டிப்போட்டது. 'மெர்க்குரி பூக்கள்’, 'இரும்புக் குதிரை’, 'உடையார்’ போன்ற நாவல்கள் அவரது சீரிய எழுத்துப்பணியைத் தாங்கி நிற்கும் சில இரத்தினங்கள்.

'ஆசைப்பட்ட பொருள், ஆசைப்பட்ட நேரத்தில், ஆசைப்பட்ட விதத்தில் கிடைக்காமல் போவதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்!’’ - மனித மனம் வாழ்வு குறித்து என்ன அசைபோடுகிறதோ, அதை தன் எழுத்தில் கொடுத்து ஆசுவாசப்படுத்தியவர் பாலகுமாரன்.

பாலகுமாரன் திரைத்துறையிலும் தன் எழுத்தின் வழியே பல திரைப்படங்களுக்குப் பக்கபலமாய் இருந்துள்ளார். தமிழில் வெளிவந்த மிக முக்கியமான படைப்பாகக் கருதப்படும் 'நாயகன்’ திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் பாலகுமாரன். வணிக ரீதியாக பெரிய அளவில் சாதனைகள் செய்த ரஜினிகாந்தின் 'பாட்ஷா’ படத்தின் வசனம் அவர் எழுதியது. 'ஜென்டில்மேன்’, 'காதலன்’, 'ஜீன்ஸ்’, 'முகவரி’, 'சிட்டிசன்’, 'புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவரின் பங்களிப்பு உள்ளது.

பாலகுமாரனின் மாபெரும் பலம் அவருடைய சிறுகதைகள். ஒவ்வொன்றும் நறுக்குத் தெறித்தாற்போல் இருக்கும். வார்த்தைகளில் உளி விழுந்து செதுக்கியிருக்கும். காதலை அதன் சாகசத்தை, அவரைப் போல் தித்திக்கத் தித்திக்க, வலிக்காமல் தோலுரித்துக் காட்ட எல்லோருக்கும் சாத்தியப் படாது. அவருடைய எழுத்தில் பெண்களின் மனதை ஆழப் படித்த ஒரு சாகசம் இருக்கும். பெண்களிடம் பொதுவாக ஆண்கள் கவனிக்கத் தவறும் சில அம்சங்களை, குணாதிசயங்களை அவர் கவனித்திருப்பார். ஒரு பெண் மனம் திறந்து எழுதினால், இப்படித்தான் எழுதுவாள் என்று அடித்துச் சொல்லக்கூடிய விதமாக அவர் எழுத்து பரிமளிக்கும். உறவுகள், மனித உணர்வுகள், சிறு அத்துமீறல்கள், அவற்றின் நியாயங்கள் எல்லாவற்றையும் பாலகுமாரன் அலசும் விதமே தனி.

பேசுகையில் நா நுனியிலும், எழுதுகையில் நகக் கண்களிலும் வைத்திருந்து தமிழைக் கசிய விடுபவர் பாலகுமாரன். அழுத்தமான, ஆழமான, வெகுஜன எழுத்துக்குச் சொந்தக்காரர். ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மிகத்தின் ருசியையும் காணும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அவ்வாய்ப்பை நல்கிய தன் குருவான யோகிராம் சுரத் குமாரின் மீது மாறா பக்திகொண்டவர் அவர் .

இறக்கும்போது அவருக்கு வயது 71.அவர் 150 நாவல்கள், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

எழுத்துச்சித்தர் என்று வாசகர்களால் கொண்டாடப்பட்டு வரும் எழுத்தாளர் பாலகுமாரன் 1946ம் ஆண்டு ஜூலை 5ம் திகதி தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி வட்டத்தில் உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் தமிழாசிரியர் சுலோசனா என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர். தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

அவரது கவிதைகளில் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் TAFE டிராக்டர் கம்பெனியில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். அப்போது நிறைய கவிதைகள் எழுதினார்.

அவரது விட்டில்பூச்சிகள் கவிதைத்தொகுப்பு வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

36 வருடங்கள் தமிழ் ஆசிரியராக இருந்த தாயின் துணையே, பாலகுமாரன் சிறந்த எழு‌த்தாளராக திகழ்வதற்கு பேருதவி புரிந்தது.

திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியில் இருந்து விடுபட்டார்.

இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும், சில கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதி உள்ளார். சின்னசின்ன வட்டங்கள் என்ற முதல் சிறுகதை தொகுப்பை 1980களில் வெளியிட்டார் பாலகுமாரன்

1981ம் ஆண்டு சாவி இதழில் பாலகுமாரனின் முதல் தொடர்கதையான மெர்க்‍குரிப்பூக்‍கள் வெளியானது. இந்த க‌தை தொழிற்சங்க ஊழியனைப் பற்றியது.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் குழுவில் இணைந்து சிந்துபைரவி, புன்னகைமன்னன், சுந்தரசொப்பனங்களு என்ற கன்னட படத்திற்கும், இயக்குநர் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

இயக்குநர் மணிரத்தினத்தின் நாயகன், அதைத்தொடர்ந்து, குணா, ஜென்டில்மேன், காதலன், பாட்ஷா, சிவசக்தி, உல்லாசம், வேலை, ஜீன்ஸ், முகவரி, சிட்டிசன், மஜ்னு, காதல்சடுகுடு, அது, ஜனனம், மன்மதன், வல்லவன், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் எழுத்தாளர் பாலகுமாரன்.

இதில் 1994ம் ஆண்டு இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் திரைப்படத்திற்கு சிறந்த வசனம் ​எழுதியதற்காக தமிழக அரசின் விருதை முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பெற்றார் எழுத்தாளர் பாலகுமாரன்.

இதுதவிர 1980ம் ஆண்டு 'மெர்க்குரிப் பூக்கள்' படைப்புக்காக இலக்கிய சிந்தனை விருது, 1985ம் ஆண்டு இரும்புக்குதிரைகள் படைப்புக்காக ராஜா ​ேசர் அண்ணாமலை செட்டியார் விருது, 1989ம் ஆண்டு, 'கடற்பாலம்' சிறுகதைத் தொகுப்பு, 1990ம் ஆண்டு சுக ஜீவனம் சிறுகதைத் தொகுப்புகளுக்காக தமிழக அரசின் விருதுகளை இரண்டு முறை பெற்றுள்ளார் பாலகுமாரன்.

Comments