பிணைமுறி என்றால் என்ன? | தினகரன் வாரமஞ்சரி

பிணைமுறி என்றால் என்ன?

கலாநிதி எம். கணேசமூர்த்தி  பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்.

இலங்கை அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டத்திற்கும் ஏனைய தேவைகளுக்கும் பணம் தேவைப்படும்போது அப்பணத் தேவைகளை நிதிப்படுத்துவதற்காக கடன் உபகரணங்களை பயன்படுத்துகிறது. இத்துடன் உபகரணங்களை சாதாரணமாக கடன் பத்திரங்கள் என்று கூறுவதும் தவறாகாது. இவற்றில் மூன்று வகையுண்டு.

1. திறைசேரி உண்டியல்கள் : இப்பத்திரங்களுக்கு முதிர்வுக் காலமொன்று உண்டு. பொதுவாக 91 நாட்கள், 182 நாட்கள் அல்லது 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்டவையாகும்.

2. திறைசேரி முறிகள் : இவை நடுத்தர அல்லது நீண்டகால முதிர்வை கொண்டவை. பொதுவாக இவற்றின் முதிர்வுக்காலம் இரண்டு வருடங்கள் தொடக்கம் இருபது வருடங்கள் வரையில் இருக்கலாம்.

3. ரூபாய் கடன்கள் : இவையும் நடுத்தர அல்லது நீண்டகாலக் கடன் கருவிகளாகும். இவற்றின் முதிர்வுக்காலம் மூன்று வருடம் தொடக்கம் 30 வருடங்களாகும். இவற்றை அரச பிணையங்கள் (Government Securities) என்பர். இவை மூன்றிலும் பொதுவான பண்பு - இவற்றைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு தேவையான கடன் நிதி திரட்டப்படுவதும் அதன் மூலம் உள்ளுர் நிதியியல் முறைமையின் சீரான இயக்கம் உறுதிப்படுத்தப்படுவதுமாகும்.

இம்மூன்று கடன் உபகரணங்களில் அண்மையில் இலங்கையில் அதிக விமர்சனங்களுக்கு உள்ளான கடன் கருவி திறைசேரி முறிகளாகும். எனவே இக்கட்டுரையில் இக்கருவியின் செயற்பாட்டு முறைகள் பற்றி கூடுதல் அவதானம் செலுத்தப்படுகின்றது. மத்திய வங்கியானது அரச கடன் பிணையங்களை வெளியீடு செய்யும். அதனை முகாமை செய்யும் மற்றும் நிர்வகிக்கும் அதிகாரமிக்க நிறுவனமாகும். எனவே மத்திய வங்கியே அரச பிணையங்கள் தொடர்பான சகல நடவடிக்கைகளுக்கும் பொறுப்புக்கூறவேண்டிய நிறுவனமாகும்.

மத்திய வங்கியானது அரச கடன் பிணையங்களை வெளியீடு செய்ய முதனிலை வணிகர்கள் (Primary Dealers) என்னும் முறைமையினைக் கையாள்கிறது. 2000 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்முறைமையின் கீழ் 15 முதனிலை வணிகர்கள் பிணையங்களின் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

முதனிலை வணிகர் என்போர் அரச பிணையங்களை விற்பனை செய்ய மத்திய வங்கி நியமித்துள்ள நிறுவனங்களாகும். வங்கிகளும் வங்கியில்லா நிதி நிறுவனங்களும் இதில் உள்ளடங்கும்.

அரச பிணையங்கள் மத்திய வங்கியினால் முதன்முதலில் ஏல விற்பனை மூலம் முதனிலை வணிகர்களுக்கே விற்கப்படும். இந்த ஏல விற்பனைகள் மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் விலை மனுக்கோரல் (bidding) வசதி முறைமையூடாக விலைமனுக் கோரல்களை மேற்கொள்வதன் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். முதனிலை வணிகர்கள் மட்டுமே இத்தகைய விலை மனுக்களை சமர்ப்பிக்க முடியும்.

எனவே இந்நடவடிக்கை இடம்பெறும் சந்தை முதனிலைச் சந்தை (Primary Market) என அழைக்கப்படும்.

திறைசேரி முறிகளைப் பொறுத்தவரை இவை நடுத்தர மற்றும் நீண்டகால கடன் உபகரணமாகும். மத்திய வங்கியானது இவற்றை விநியோகிக்கும் திகதியையும் விநியோகிக்க எதிர்பார்க்கும் தொகைகளையும் முன்கூட்டியே ஊடகங்கள் வாயிலாகவும் நேரடியாகவும் அறிவிக்கும். முதனிலை வணிகர்கள் தாம் கொள்வனவு செய்ய விரும்பும் தொகைகளையும் செலுத்த விரும்பும் வட்டிவீதங்களையும் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பான இலத்திரனியல் விலைமனுக் கோரல் முறையினூடாக சமர்ப்பிப்பர். ஏல விற்பனை நாளில் தளத்தில் இவை பரிசீலிக்கப்பட்டு விற்பனை நடைபெறும்.

முதனிலை வணிகர்களால் கொள்வனவு செய்யப்படும் முறிகள் பொதுமக்களாலும் ஏனைய நிறுவன ரீதியான முதலீட்டாளர்களாலும் கொள்வனவு செய்யப்படும். இவ்வாறு முதனிலை வணிகர்களையும் ஏலவே முறிகளைக் கொள்வனவு செய்து விற்பனை செய்பவர்களையும் உள்ளடங்கிய சந்தை அரச பிணையங்களின் இரண்டாம் நிலை (Secondary market) சந்தையாகும்.

திறைசேரி முறிகள் குறிப்பிட்ட (2 - _ 20 வருடங்கள்) முதிர்வுக்காலத்தைக் கொண்டவையாகும். முதிர்வின்போது எவர் முறிகளை வைத்திருக்கிறாரோ அவர் அதனை மத்திய வங்கியிடம் சமர்ப்பிப்பதன் மூலம் முதல் தொகையினை மீளப்பெற்றுக்கொள்ளலாம். இதற்கு மேலதிகமாக இப்பிணையங்கள் மீதான வட்டிச் செலுத்தல்களையும் அதனைக் கொள்வனவு செய்து வைத்திருப்பவர் மத்திய வங்கியிடம் பெற்றுக்கொள்ளலாம்.

இம்முறைகளில் முதலீடு செய்யப்படும் நிதியையும் அதன் மீதான வட்டி மற்றும் முதல் மீதான விளைவுகளையும் வைப்பிலிட “பிணையங்கள் முதலீட்டுக் கணக்கு” என்ற பெயரில் ரூபாய் கணக்கொன்றை வர்த்தக வங்கியொன்றில் திறக்கமுடியும்.

ஏலவே விநியோகிக்கப்பட்டுள்ள திறைசேரி முறிகள் கையிருப்பின் 10 சதவீதத்தை வெளிநாட்டவர்கள் கொள்வனவு செய்ய, விற்பனை செய்ய, கைமாற்ற அனுமதியுண்டு.

திறைசேரி முறிகளில் முதலீடு செய்வதன் அனுகூலங்கள் பின்வருமாறு:

(அ) இது இடர்கள் அற்ற பூரண பாதுகாப்பைக் கொண்ட ஒரு முதலீட்டுச் சாதனமாகும். காரணம் அரசாங்கம் எக்காரணங் கொண்டும் இவற்றின் மீதான செலுத்தல்களை மேற்கொள்ள மறுக்காது. எனவே, இவை தங்க விளிம்பு பிணையங்கள் (Gold Edged Securities) என அழைக்கப்படுகின்றன. இது முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமானதாகும். அத்துடன் இவற்றின் மீதான வட்டி வீதங்களும் சார்பளவில் உயர்வானதாகும்.

(ஆ) இதன் முதிர்வுக்காலம் 2 -- 20 வருடங்களாக இருப்பதனால் நீண்டகால முதலீடுகளை மேற்கொள்ளப் பொருத்தமானது. அரசாங்கத்திற்கு கடன் மீளச்செலுத்தலுக்கு நீண்டகால அவகாசத்தையும் வழங்குகிறது.

(இ) இவற்றின் விற்பனையின்போது முறியின் முகப்பெறுமதியிலிருந்து கழிவீடு செய்யப்பட்ட விலைக்கே விற்பனை செய்யப்பட்டு முழுத்தொகையும் மீளச் செலுத்தப்படுவதால் முதலீட்டாளர் ஆரம்பத்திலேயே நன்மை பெறமுடியும்.

(ஈ) இவற்றின் வட்டிவீதங்கள் சந்தையினால் தீர்மானிக்கப்படுவதனால் போட்டித்தன்மை கொண்ட விலையில் கடன் நிதிகளை அரசாங்கம் பெறலாம்.

(உ) இவை இரண்டாம் தரச்சந்தையில் விற்பனை செய்யக்கூடிய சாதனங்களானபடியினால் அவசியமான விடத்து அவற்றை உடனடியாக விற்றுப் பணமாக்கலாம். அதுமட்டுமன்றி இவற்றின் மூலம் முதலீட்டாளர் உயர் வட்டி வீதங்களையும் உழைக்கலாம்.

(ஊ) இவை விற்பனையின்போது 10 வீதத்தை பிடித்து வைத்தல் வரிக்கு உட்படுவதால் (with holding tax) ஏனைய வரிகள் முத்திரைக் கட்டணங்கள் ஏதுமில்லை.

(எ) இலங்கை மத்திய வங்கியானது இம்முதலீடுகளை மிக நவீனமான பத்திரங்கள் ஏதுமற்ற (Scriptless) தீர்ப்பனவு முறையிலும் தன்னியக்கப்படுத்தப்பட்ட மத்திய வைப்பக முறையிலும் பேணிச் செல்கிறது.

(ஏ) வெளிநாட்டவர்கள் தமது முதலீட்டு மீதான விளைவுகளையும் முதலையும் தடைகளின்றி தமது நாட்டிற்கு கொண்டு செல்லலாம்.

இவ்வாறு அரச பொதுப்படுகடன் நோக்கத்திற்காக நடைமுறைப்படுத்தப்படும் இச்சந்தை முறைமையினாலும் அதன் சீரான இயக்கத்தையும் உறுதி செய்ய வேண்டியது மத்திய வங்கியேயாகும். மத்திய வங்கியே இது தொடர்பில் பூரண அதிகாரம் கொண்ட மேற்பார்வை செய்யும் நிறுவனமாகும்.

அண்மையில் மத்திய வங்கியின் சில அதிகாரங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டதாகும்.

மத்திய வங்கி நடத்திய ஏலமொன்றின்போது முதல்நிலை வணிகராகத் தொழிற்பட்ட ஒரு நிறுவனத்திற்கு முறிவிநியோகம் பற்றிய உள்ளகத் தகவல்கள் கசிந்ததன் காரணமாக முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

வர்த்தக உலகில் இத்தகைய நடவடிக்கைகள் மன்னிக்கப்படக்கூடியவையல்ல. நீண்டகால சிறைத்தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

Comments