தண்டனை? | தினகரன் வாரமஞ்சரி

தண்டனை?

அன்று தபாலில் வந்த திருமண அழைப்பிதழை எடுத்து மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். கடந்த மூன்று வருடங்களாக என்னை உயிருக்குயிராக காதலித்த கமலாதான் தனது பொற்கரங்களாலேயே எழுதி அனுப்பியிருந்தாள்.

அவளது துணிவை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை அவள் கட்டுக்கட்டாக எனக்கு எழுதிய காதல் கடிதங்கள் என்னும் என்னிடம் பத்திரமாக இருக்கின்றன. கொடுத்த முத்தங்கள் சுற்றி திரிந்த இடங்கள் ஆசையோடு, அள்ளி அணைத்த இடங்கள் இவையெல்லாம் அந்தக் கடிதங்களில் அவள் தெளிவாக உணர்ச்சி பூர்வமாக எழுதியிருந்தாள்.

அவள் தான் என் உலகம் நான் தான் அவள் உலகம் என்றானபோது அவளில்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் அவளில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. இனி என்ன செய்வது எதிர்காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கத்தானே வேண்டும்? பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்பார்கள். ஒருநாள் இதனை அவளிடம் விளக்கிக் கூறினேன்; இப்படியே காலம் கழிக்க முடியாது நாம் திருமணம் முடித்து வாழ வேண்டும். நமது பெற்றோர் இருசாராருமே பணக்காரர்களல்ல அவர்களுக்கு பாரமாக நாம் இருக்கக் கூடாது. நாம் வாழ பணம் வேண்டும். தொழில் வேண்டும் அதனால் தொழிலுக்காக நான் வெளியூர் போகிறேன். எனக்காக இன்னும் இரண்டொரு வருடங்கள் காத்திரு என்று கூறினேன். என்னை ஆரத்தழுவி முத்தம் கொடுத்துதான் விடை கொடுத்தாள்.

அவளைப் பிரிந்த நான் கொழும்பில் கிடைத்த பல விதமான தொழில்களை செய்தேன். அடிக்கடி போனில் பேசி வந்த கமலா காரணமில்லாமலேயே என்னோடு சண்டை பிடித்தாள். நான் ஒன்று சொல்ல அவள் ஒன்று சொன்னாள். இப்படி உன்னோடு வாழ முடியாது என்று மரியாதை குறைவாகப் பேசினாள். அவள் மாறிவிட்டாள் என்பதை உணர்ந்த நான் உடனடியாக ஊருக்கு வந்தேன்.

நகரையடைந்த போது கமலா இன்னுமொரு வாலிபனோடு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தாள். நான் வலது கரத்தை நீட்டி அந்த வாலிபனிடம் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை செய்தேன். இதனை அவதானித்த கமலா, அந்த வாலிபன் மீது சாய்ந்து அமர்ந்து, அவனை இறுகப் பற்றிய அவனது காதில் ஏதோ முணுமுணுத்தாள். இப்போது மோட்டார் சைக்கிள் வேகமாக ஓடியது. கமலா முகத்தை திருப்பி என்னை பார்த்தபடியே சென்று மறைந்தாள்!

என் தலைசுற்றியது கால்கள் நடுங்கின மயக்கம் வரும் போல் இருந்தது. ஊருக்கு வந்தவன் கொழும்பு நோக்கிச் செல்லும் பஸ்ஸில் மீண்டும் ஏறினேன். இப்போது நான் ஒரு வங்கிக் காவலன். எனது சக காவலன் சந்திரன் என்னை முன்நின்று வரவேற்றான். “என்னடா போனதும் திரும்பிட்ட" சந்திரன் ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்துக் கேட்டான்!

இருவருமாக என் அறைக்கு சென்றோம். சந்திரன் என் உற்ற நண்பனும் கூட, அவன் ஒரு நல்ல அனுபவசாலி. நான் அவனிடம் என் முழு கதையையும் கூறினேன். அவனும் கவலைப்பட்டான் “இந்த பெண்களே இப்புடித்தான்டா, பத்துப் பதினைஞ்சு வயசாகிட்டா யாராவது ஒரு ஆம்பள உறவு வேணும் கல்யாண காலம் வந்ததும் பழைய உறவெல்லாம் மறந்துவிட்டு, தனக்கு தகுதியான ஒருத்தன் தேடிக்கிட்டு வாழப் போயிடுவாங்க.

இது பெண்களோடு இயல்பு இத சரியா, புரிஞ்சிக்கிட்டு பழகி இல்லாட்டி நஞ்சு தான் குடிக்கணும் என்றான். அவனது கூற்று எனக்கு சரியென்றேபட்டது. நான் என் மேசைக்கருகில் அமர்ந்து யோசித்தேன். கமலாவோடு வாழ எண்ணி, இந்த இரண்டு வருட காலத்தில் பலதொழில்களையும் செய்து சுமார் மூன்று இலட்ச ரூபா வரை சேர்த்து விட்டேன். இனி என்ன செய்வது என்று என்னால் எந்த ஒரு முடிவிற்குமே வர முடியவில்லை.

நான் அன்போடு ஆதரவோடு ஆதரித்து அணைத்து பாசத்தோடு நேசித்த கமலாவிற்கு விரோதமாக எதையுமே செய்ய என் மனம் இடம் தரவில்லை, அவளை பழிவாங்க அவள் எனக்கு எழுதிய காதல் கடிதங்கள் போதும். எனினும் என்னால் அவளை இந்த ஜென்மத்தில் மறக்க முடியாது என்பது உண்மை.

கமலாவால் சூனியமாக்கப்பட்ட என் எதிர்காலத்தைப் பற்றி எண்ணியபடி எதிரே தெரிந்த தொலைகாட்சிப் பெட்டியை முடுக்கிவிட்டேன். அப்போது சக்தி டி.வி.யில் செய்தி வாசிக்கப்பட்டது. “பண்டாரவளையில் இன்று சுமார் ஒரு மணியளவில் எல்லதொட்ட என்ற இடத்தில் ஒரு மோட்டார் சைக்கில் பள்ளத்தில் பாய்ந்ததில் அதில் பயணித்த கமலா என்ற யுவதி ஸ்தலத்திலேயே மரணமானார். அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற மோகன் என்ற இனைஞன் பலத்த காயங்களுடன், தியத்தலாவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” செய்தி தொடர்ந்தது. நான் செயலிழந்து போனேன். என் இதயத்துடிப்பே நின்றுவிடும் போல் தெரிந்தது. தெய்வமே இது என்ன சோதனை. இது என்ன தண்டனை. என் உயிர்க் காதலியின் பிணத்தையாவது பார்க்க மீண்டும் ஊருக்கு பயணமானேன்.

இரா.மோசஸ்....

Comments