அபாயத்தை எதிர்கொள்ளும் இலங்கைப் பொருளாதாரம் | தினகரன் வாரமஞ்சரி

அபாயத்தை எதிர்கொள்ளும் இலங்கைப் பொருளாதாரம்

பன். பாலா

'இலங்கைத் தேயிலைக்கென்று ஒரு வரலாற்றுப் பாரம்பரியம் இருக்கின்றது. இவ்வளவு காலமும் அதைப் பக்குவமாக பாதுகாத்து வந்ததை மறந்துவிடக்கூடாது. வணிக நோக்கிலான ஏற்றுமதி, வருமானம் தேடும் நோக்கமாக மாத்திரமே அமையக்கூடாது. நாணயமான வர்த்தகமே நாட்டுக்கு நற்பெயரைத் தரும். இது குறித்து அரசாங்கம் உரிய அக்கறை செலுத்தியாக வேண்டும்.'

 

 

இலங்கைத் தேயிலையின் தரம் குறித்ததான சந்தேகங்கள் சர்வதேச ரீதியில் இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு வர ஆரம்பித்துள்ளன. காரணம் இயற்கை சுவைமிகுந்த இலங்கைத் தேயிலைக்குப் பதிலாக செயற்கை இரசாயன கலவைகள் கொண்ட தேயிலைத்தூள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆகும். இதனிடையே பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை இன்று பின்னடைவை கண்டு வருவதாக பல்வேறு தரப்புகளிடம் இருந்து கவலை தெரிவிக்கப்படுகின்றது. தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கூட இதை ஏற்றுக் கொள்ளவே செய்கின்றது. ஆனால் இதற்கான காரணம் கூறல்களில் தான் பரஸ்பரம் முரண்பாடுகள் காணப்படுகின்றன. முறையான பராமரிப்பின்மை, பராமரிப்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டமை, மீள் பயிர்ச் செய்கையில் ஆர்வம் கொள்ளாமை, தொழிலாளர் நலன்சார் ஏற்பாடுகள் மறுக்கப்படுகின்றமை, தொழில்கொள்வோருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு கணக்கிலெடுக்கப்படாமை, நிர்வாகக் கட்டமைப்பில் நிலவும் சீர்கேடுகள் என பயிர்ச் செய்கை பாதிப்படைந்து வருகின்றமைக்கு பல காரணங்களாக கூறலாம்.

ஆதாய மார்க்கமே அவசியம் என்ற போக்கில் கம்பனித்தரப்பு மாற்றுப்பயிர்ச் செய்கையைத் தேடுவதிலேயே அக்கறை காட்டுகின்றன. சில இடங்களில் தேயிலைக்குப் பதிலாக இறப்பர் பயிர்ச் செய்கை இடம்பெறுகின்றது. பல இடங்களில் முள்ளுத்தேங்காய் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. தென் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இது முதன்மைப்படுத்தப்படுகின்றது. பெருந்தோட்ட மக்களின் வாழ்விடங்களை ஒட்டியே முள்ளுத் தேங்காய் உற்பத்தி இடம்பெறுவதால் நிலத்தடி நீர்வற்றிப் போகலாம். இதனால் குடிநீர் பாவனைக்கு குந்தகம் ஏற்படலாம் என முன்னாய்வுத் தகவல்கள் எச்சரித்தாலும் கூட இதுபற்றி யாரும் கவலைப்படுவதாயில்லை. பெருந்தோட்டப் பகுதிகளில் இன்று ஆளணிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தேயிலை பயிர்ச் செய்கையைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு கம்பனி தரப்பு கையாளாகாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஓய்வுபெற்ற தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவதுடன் வெளியிடங்களில் இருந்தும் தொழிலாளர்களை தருவித்து தொழிலில் ஈடுபடுத்துகின்றன. இவர்கள் இன்று கூட்டு ஒப்பந்த நிர்ணயப்படி பெறும் வேதனத்துக்கே வேலையில் அமர்த்தப்படுகின்றார்கள். இதன்படி நாளொன்றுக்கு 720 ரூபாய் என்ற அடிப்படையில் கூலி பெறுகின்றனர். இதேநேரம் சிறுதோட்ட தேயிலை உற்பத்தியாளர்களிடம் வேலைக்குச் செல்லும் தொழிலாளியொருவர் தினசரி வேதனமாக 1000 ரூபாவிலிருந்து 1500 ரூபா வரை பெறுகிறார். இவ்வாறான சம்பள முரண்பாடு தோட்டங்களில் ஆளணி பற்றாக்குறை ஏற்பட அடிப்படையாகின்றது. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் பலர் தோட்ட வேலையைக் கைவிட்டு பிற தொழில்களில் பிரவேசிக்கத் தலைப்படுகின்றார்கள். வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணுக்கேற்ப இவர்களின் சம்பள உயர்வு அமையவில்லை. இது பற்றி கம்பனி தரப்பு கடுகளவேனும் கவனம் செலுத்துவதாயில்லை.

ஆனால் மலையகத்தில் வாழ்வுரிமை கொண்டுள்ள மலையக மக்கள் அப்படி அலட்சியமாக இருந்து விட முடியாது. இவர்களைப் பொறுத்தவரை பெருந்தோட்ட பயிர்ச்செய்கையை விட்டு விலகி வர முடியாது. இதற்கான மாற்று ஏற்பாட்டு திட்டங்கள் எதுவுமே இத்துறையோடு சம்பந்தப்பட்ட எந்தத் தரப்பிடமும் இல்லை. வேறு தொழிலில் ஈடுபடக்கூடிய பின்புலம் பெருந்தோட்டப் பகுதிக்குள் இல்லை. எனவேதான் இவர்களின் வாழ்வாதாரம் குறித்துப் பேசும் போது தேயிலைப் பயிர்ச்செய்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அலசிப்பார்க்க வேண்டியுள்ளது. தற்போதைய சூழ்நிலை திருப்திகரமாக இல்லை. இந்நிலை தொடரும் பட்சத்தில் கூடிய விரைவிலேயே ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் வேலை இழக்க வேண்டி வரும். இதனால் வறுமை மேலும் பெருகும். இது சமூக பிரச்சினைகளுக்கு வித்திடும். புலம் பெயர்வு காரணமாக இம்மக்களின் வாழ்வுரிமை சான்றுகள் அழிபட்டுப் போகும். சமூக அங்கீகாரத்துக்கான அடையாளங்கள் மறைக்கப்பட்டு விடும்.

ஆனால் இன்று நடப்பது என்ன? தேயிலை உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி, விற்பனை யில் விரும்பத்தகாத தேக்கம் என சவால்கள் மலிந்து வருகின்றன. சர்வதேச தேயிலை விற்பனை சந்தையில் போட்டி போடக்கூடிய வகையில் இலங்கைத் தேயிலையின் தரம் இல்லையெனும் நிலை தோன்றியுள்ளது. இந்தியா, கென்யா, புரூண்டி போன்ற நாடுகளோடு போட்டியிடும் கட்டாயம் எழுந்துள்ளது. ஆனால் இதற்கான ஈடுகொடுப்புகளோடு இலங்கைத் தேயிலையைச் சந்தைப்படுத்தக் கூடியநிலையில் நாடு இருக்கிறதா என்றால் யோசிக்க வேண்டியுள்ளது.

அண்மையில் இலங்கைத் தேயிலையின் சர்வதேச தர நிர்ணயம் தொடர்பான பின்னடைவுகள் ஏற்பட்டன. இதற்குக் காரணம் செயற்கை சுவையூட்டிகளுடன் கூடிய தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டமையே ஆகும். இது இலங்கைத் தேயிலையின் ஏற்றுமதி தரம் குறித்து சர்வதேச ரீதியிலான முகம்சுழிப்புக்கு வழிவகுத்துள்ளது.

தேயிலைக்கு செயற்கையான சுவையூட்டல், நிறமூட்டல் என்பனவற்றால் அதன் இயல்பான சுவை பாதிப்படைவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வணிக ரீதியிலான தந்திரத்தால் (மோசடியால்) உலகின் பல நாடுகள் இலங்கைத் தேயிலைமீது வைத்திருந்த அபிமானத்தை விலக்கிக் கொண்டு வருவதாக பிந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளின் குற்றச்சாட்டை இலங்கை சட்டென ஏற்காவிட்டாலும் பின்னால் அது நியாயமானது என நிறுவ வேண்டி வந்தது.

சப்ரகமுவ மாகணத்தில் இயங்கும் சில தேயிலைத் தொழிற்சாலைகளில் செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அத்துடன் தேயிலையுடன் சீனியும் கலப்படம் செய்யப்படுவதும் தெரிய வந்தது. இது சம்பந்தமான அதிகாரிகளின் ஆய்வறிக்கை சர்வதேச ரீதியிலான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவது போலவே அமைந்தது. இவ்வாறான கலவைச் சுவை வெளிநாட்டவர்க ளுக்கு வெறுப்பளிப்பதாக இருக்கிறது. அதனால் இலங்கைத் தேயிலையின் இயற்கை சுவை சம்பந்தமான சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளன. இது சர்வதேச ரீதியிலான தேயிலை ஏற்றுமதியில் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்துகின்றன. விற்பனையில் வீழ்ச்சி உண்டாகின்றது.

தேயிலை விளைவிக்கும் பிற நாடுகளோடு போட்டிப் போட வாய்ப்பில்லாமல் போகின்றது. இவ்வாறான பாதிப்பு இலங்கை பொருளாதாரத்தில் தேக்கத்தை உண்டு பன்னவே செய்யும். இவ்வாறான கலப்பட தேயிலை ஏற்றுமதி திட்டமிடப்பட்ட முறையில் நடந்தேறியுள்ளமை உறுதியாகியுள்ளது. தேயிலையுடன் கலந்து ஏற்றுமதி செய்வதற்காக பெருந்தொகையான ஒரு வகை இரசாயனப் பொருள் களஞ்சியப்படுத்தப்பட்டு வந்த நிலையமொன்றை அண்மையில் கண்டிப் பிரதேசத்தை அண்டிய ஓரிடத்தில் கண்டறிந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தன. தகவல்களின்படி சீ-ஸ்பீட் லிக்ட் குளுகோசு 01155 என்ற பெயர் கொண்ட ஒரு இரசாயனமே இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதனை பாவிப்பதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்பட்டிருக்கவில்லை. இது தடைசெய்யப்பட்ட இரசாயனம்.

ஆதாயம் பெறும் நோக்கில் இவ்வாறு மேற்கொள்ளப்படும் கலப்பட நடவடிக்கைகள் சர்வதேச ரீதியில் தேயிலை ஏற்றுமதி சம்பந்தமாக இது வரை காலமும் இருந்து வந்த நற்பெயருக்குக் கலங்கம் ஏற்படுத்துவது தவிர்க்கவியலாதது. அண்மையில் தேயிலைத் தூளில் வண்டினம் ஒன்று இருந்ததைக் கண்டு ரஷ்யா அதிருப்தி வெளியிட்டதோடு இலங்கைத் தேயிலை இறக்குமதியை முற்றிலும் தடை செய்யப்போவதாகவும் அறிவித்திருந்தது. இலங்கையில் உற்பத்தியாகும் தேயிலையில் கால்வாசிப் பகுதியை இறக்குமதி செய்யும் நாடாக ரஷ்யா விளங்குகின்றது. இதனால் இலங்கைக்கு ஒரு வருடத்தில் வந்து சேரும் வருமானம் சுமார் 520 மில்லியன் அமெரிக்க டொலராகும். குறிப்பாக இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச ரீதியில் நல்ல மதிப்பிருக்கின்றது. எனினும் அதை தக்கவைத்துக் கொள்ளும் திறமை தோட்ட கம்பனிகளிடம் இல்லை.

அரசாங்கத்திடமும் இல்லை. ஒரு காலகட்டத்தில் இலங்கையின் பொருளாதாரத்தில் முதலாம் இடத்தைப் பெற்றிருந்த பெருமை இலங்கைத் தேயிலைக்கு இருக்கின்றது. இன்று அது நான்காம் இடத்துக்கு நகர்த்தப்பட்டிருக்கின்றது. இதற்கிடையில் இத்துறையில் ஏகப்பட்டக் குளறுபடிகள், கலப்பட மோசடிகள், கலப்படம் செய்யப்பட்ட தேயிலை,

 

கழிவுத் தேயிலை, பாவனைக்கு உதவாத தேயிலைகளை எல்லாம் சிறந்த ரகம் என்று சர்வதேச ரீதியில் பரந்த அளவில் சந்தைப்டுத்த நினைப்பது இலங்கையின் நற்பெயருக்கும் மதிப்புக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் செயலாகவே அமையும். உள்நாட்டில் தேயிலை பயிர்ச்செய்கை வீழ்ச்சி கண்டிருக்கும் நிலையில் பெறக்கூடிய விளைச்சலை சர்வதேச சந்தையில் விற்க முடியாத சூழ்நிலை ஏற்படுமாயின். அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இலங்கைத் தேயிலைக்கென்று ஒரு வரலாற்றுப் பாரம்பரியம் இருக்கின்றது. இவ்வளவு காலமும் அதைப் பக்குவமாக பாதுகாத்து வந்ததை மறந்து விடக்கூடாது. வணிக நோக்கிலான ஏற்றுமதி வருமானம் தேடும் வழியாக மாத்திரமே அமையக்கூடாது. நாணயமான வர்த்தகமே நாட்டுக்கு நற்பெயரைத் தரும்.

இது குறித்து அரசாங்கம் உரிய அக்கறை செலுத்தியாக வேண்டும். ஏனெனில் தேயிலைப் பயிர்ச் செய்கை ஒரு சமூகத்துக்கு வாழ்வாதாரமாகவும் நாட்டுக்கு அந்நிய செலாவணி ஈட்டித் தரும் நான்காவது மார்க்கமாகவும் இருக்கின்றது.அதை இழப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பாகும். இத்துறையோடு சம்பந்தப்பட்ட சகல தரப்பும் இது பற்றி தொலைநோக்குடன் செயல்படுவதே உசிதமானது.

Comments