ஐரோப்பா, தென் அமெரிக்காவின் ஆதிக்கம் இம்முறையும் தொடருமா? | தினகரன் வாரமஞ்சரி

ஐரோப்பா, தென் அமெரிக்காவின் ஆதிக்கம் இம்முறையும் தொடருமா?

21வது கால் பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 15ம் திகதி ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் போட்டியை நடாத்தும் ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா மோதும் முதல் போட்டியுடன் ஆரம்பமாகின்றன.

உலக விளையாட்டு விழாக்களில் ஒலிம்பிக் விழாவுக்கு அடுத்த பெரு விழாவாகக் கருதப்படும் இந்த கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகள் நான்கு வருடங்களுககொரு முறை நடைபெற்று வருகின்றன. 1930ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இத்தொடர் இரண்டாவது உலக மகா யுத்தத்தின் காரணமாக 1942ம் 1946ஆம் ஆண்டுகளில் நடைபெறவில்லை.

ஐரோப்பிய (14), வட அமெரிக்கா (3), தென் அமெரிக்கா (5), ஆபிரிக்கா (5), ஆசியா (5) ஆகிய ஐந்து பிராந்தியங்களில் கடந்த 3 வருடங்காளத் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று தெரிவு செய்யப்பட்ட 32 நாடுகளும் ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு முதல் சுற்றில் இவ்வுலகக் கிண்ணச் சுற்றில் மோதவுள்ளன.

உலகக் கிண்ண வரலாற்றில் முதன் முதலில் 1930ஆம் ஆண்டில் உருகுவேயில் நடைபெற்ற முதலாவது உலகக் கிண்ணத் தொடருக்கு 13 நாடுகளே பங்குபற்றின. ஆனால் அதற்கடுத்த 1934ஆம் ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற 2வது தொடர் முதல் 16 நாடுகள் உலகக் கிண்ண மோதலில் களமிறங்கின.

அதன் பின் 1982ம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற 12வது உலகக் கிண்ணத் தொடரிலிருந்து 24 நாடுகளின் அணிகள் பங்குபற்றின. 1990 களின் இறுதியில் கால் பந்தாட்டத்தின் பிரபலம், கூடி வரும் ரசிகர்களின் எண்ணிக்கை, மேலும் பல நாடுகளில் கால்பந்தாட்டம் வளர்ச்சியடைந்தமை காரணமாக 1998ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற 16வது உலகக் கிண்ணத் தொடரில் தற்போதைய நடைமுறையில் உள்ள 32 நாடுகள் முதல் சுற்றுக்குத் தெரிவாகின.

1930ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கிண்ணத்தை போட்டியை நடத்திய நாடான உருகுவே கைப்பற்றியதுடன் கடைசியாக 2014ம் ஆண்டு பிரபல ஜெர்மனி அணி கிண்ணத்தை வென்றது. இதுவரை நடைபெற்றுள்ள 20 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் பிரேஸில் அணி 1958, 1962, 1970, 1984, 2002 ஆகிய ஐந்து தடவைகள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்படாத பிரபல இத்தாலி அணி 1934, 1938, 1982, 2006 ஆண்டுகளிலும், ஜெர்மனி 1954, 1974, 1990, 2014 ஆண்டுகளில் இரு நாடுகளும் தலா நான்கு முறை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன. இதில் ஜெர்மனி கிழக்கு, மேற்கு என்று பிரிந்திருந்தால் 1954, 1974ஆம் ஆண்டுகளில் மேற்கு ஜேர்மனி என்ற பெயரிலேயே உலகக் கிண்ணம் வென்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

உருகுவே 1930, 1950ஆம் ஆண்டுகளிலும், ஆஜென்டீனா 1978, 1986 ஆகிய ஆண்டுகளிலும் இரு முறை கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன. இங்கிலாந்து, பிரான்ஸ். ஸ்பெயின் ஒவ்வொரு முறை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.

இத்தாலி, பிரான்ஸ், மெக்சிகோ, பிரேஸில், ஜெர்மனி ஆகிய நாடுகள் இருமுறை தங்கள் நாடுகளில் உலகக் கிண்ணத்தை நடத்தியுள்ளது. இதில் பிரபல பிரேஸில் அணி மட்டுமே தங்களது நாட்டில் நடைபெற்ற தொடரில் கிண்ணத்தை கைப்பற்றாத நாடாகும். இந்நாடு கிண்ணம் வென்ற ஐந்து முறையும் வெளிநாடுகளில் நடைபெற்ற தொடர்களில் என்பது அவர்களின் திறமைக்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாகும். நடைபெற்று முடிந்துள்ள 20 உலகக் கிண்ணத் தொடர்களிலும் 1930இல் உருகுவே, 1934 இத்தாலி, 1966 இங்கிலாந்து, 1974 மேற்கு ஜெர்மனி, 1978 ஆர்ஜென்டீனா, 1998 பிரான்ஸ் ஆகிய ஆறு தடவைகளே போட்டியை நடத்திய நாடு கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ண வரலாற்றில் கூடுதலான முறை 2வது இடத்தைக் கைப்பற்றிய நாடாக ஜேர்மனி பதிவாகியுள்ளது. அவ்வணி நான்கு முறை இச்சாதனையைப் புரிந்துள்ளது. நெதர்லாந்து, ஆஜென்டீனா நாடுகள் 3 முறை இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளன.

ஜெர்மனி அணி 8 முறை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளதுடன் அடுத்த கூடிய தடவை இறுதிப் போட்டிக்குத் தெரிவான அணி பிரேசில் அணியாகும் அவ்வணி 7 முறை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி தனது ரசிகர்கள் மத்தியில் பிரேஸில் அணி 1950 ஆம் ஆண்டு உருகுவேயிடமும், சுவீடன் அணி 1958ஆம் ஆண்டு பிரேஸிலிடமும் தோல்வியடைந்துள்ளது.

இதுவரை நடைபெற்றுள்ள 20 உலகக் கிண்ணத் தொடர்களில் 11 தடவைகள் ஐரோப்பிய நாடுகளும், 9 தடவைகள் தென் அமெரிக்க நாடுகளும் கைப்பற்றியுள்ளன. இந்த 20 தடவைகளும் இரண்டாவது இடத்தையும் இப்பிராந்திய நாடுகளே பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் எல்லா இறுதிச் சுற்றுப் போட்டிகளுக்கும் தகுதி பெற்ற ஒரே நாடு பிரேசிலாகும். அவ்வணி இந்தத் தடவை 21வது முறையாகவும் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது. ஜெர்மனி 18 தடவைகளும், ஆர்ஜென்டீனா 16 தடவைகளும் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ள நாடுகளாகும்.

உலகக் கிண்ண வரலாற்றில் இதுவரை கூடுதலாக கோல் அடித்த வீரராக ஜெர்மனியின் மரோஸ்லாவ் க்லோஸ் 16 கோல் அடித்து முதலிடத்திலுள்ளார். பிரேஸிலின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 15 கோல்கள் அடித்து இரண்டாவது இடத்திலும், ஜெர்மனியின் முல்லர் 14 கோல் அடித்து மூன்றாமிடத்திலுமுள்ளனர்.

எம். எஸ். எம். ஹில்மி

Comments