11வது ஐ. பி. எல் தொடர்: முதற்சுற்று ஆட்டங்கள் இன்று நிறைவு | தினகரன் வாரமஞ்சரி

11வது ஐ. பி. எல் தொடர்: முதற்சுற்று ஆட்டங்கள் இன்று நிறைவு

கடந்த ஏப்ரல் 05ம் திகதி ஆரம்பமான 11வது ஐ. பி. எல். தொடர் இன்று இரவு 8 மணிக்கு மொஹாலியில் நடைபெறும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியுடன் முதற் சுற்று ஆட்டங்கள் நிறைவுக்கு வருகின்றன. இரண்டாம் கட்டமான பிளே ஓப் போட்டிகள் எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

இறுக்கமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் 11வது ஐ. பி. எல். போட்டியில் இம்முறை பிளே ஓப் சுற்றுக்குள் கேன் வில்லியம்ஸின் தலைமயிலான சன் ரைசஸ் ஹைதராபாத் முதல் அணியாக நுழைந்தது. அவ்வணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 18 புள்ளிகளுடன் முதலிடத்திலும் அடுத்த இரண்டாவது இடத்தில் டோனியின் தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 16 புள்ளிகளுடன் இரண்டாவது அணியாக பிளே ஓப் சுற்றுக்கான தனது இடத்தை உறுதி செய்துள்ளது. சென்னை அணி தான் பங்குபற்றிய 9 தொடர்களிலும் பிளே ஓப் சுற்றுக்குள் நுழைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்த சுற்றுக்குள் நுழையும் ஏனைய இரு அணிகளைத் தீர்மானிப்பதற்காக இன்று 8 மணிக்கு நடைபெறும் முதற் சுற்றின் இறுதிப் ஆட்டம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வழமைபோலவே இம்முறையும் டெல்லி அணி முதலாவதாகவே முதற்சுற்றுடன் வெளியேறியது. பிளேஓப் சுற்றுக்குள் நுழையும் ஏனைய இரு அணிகளுக்கான போட்டியில் கொல்கத்தா, ராஜஸ்தான், மும்மை, பெங்களூர் அணிகள் கடுமையாக போராடி வருகின்றது. இத்தொடரில் 51வது போட்டி முடிவில் கொல்கொத்தா அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்திலிருந்தாலும் அவ்வணி பிளே ஓப் சுற்றுக்குள் நுழைய கடைசியாக ஹைதராபாத்துடன் நடைபெறும் போட்டியில் கட்டாயமாக வெல்ல வேண்டிய நிலையிலுள்ளது. பஞ்சாப் அணி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி முன்னிலை வகித்திருந்தாலும் கடைசியாக நடைபெற்ற போட்டிகளில் படுதோல்வியடைந்ததால் 12 புள்ளிகளுடன் தற்போது 6வது இடத்திலேயே உள்ளது. பஞ்சாப் அணிக்கு இன்னும் ஒரு போட்டியே மீதமுள்ளது. சென்னையுடனான அப்போட்டியில் வென்றாலும் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பு மிகவும் குறைவாகவேயுள்ளது. அடுத்துள்ள அணிகளில் மும்மை இந்தியன் அணிக்கு 13 போட்டிகளில் 12 புள்ளிகளுடன 4வது இடத்திலிருந்திலுள்ள அவ்வணி மீதமுள்ள டெல்லி அணியுடனான போட்டியில் வெற்றி பெற்றால் நான்காவது அணியாக அடுத்து சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பு பிரகாசமாகவேயுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் 10 புள்ளிகளுடன் 7வது இடத்திலுள்ள பெங்ளூர் அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பைப் பெற மீதமுள்ள ஹைதராபாத், ராஜஸ்தான் அணி களுட னான போட்டியில் கட்டாயமாக வென்றாக வேண்டும். இதே வேளை 12 புள்ளிகளுடன் 5 இடத்திலுள்ள ராஜஸ்தான் ரோயல் அணி பெங்களூருடனுடன் நடைபெறவுள்ள ஒரே போட்டியில் வென்றால் மாத்திரமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பைப் பெறலாம்.

தற்போதைய நிலையில் இவ் ஐந்து அணிகளில் நான்கு அணிகள் 14 புள்ளிகள் பெற வாய்ப்புள்ளது. ராஜஸ்தான் ரோயல்- பெங்ளூர் அணிகள் மோதும் போட்டியில் தோல்வியுறும் அணி வெளியேறும். மேலும் கொல்கத்தா அணியும் ஹைதராபாத்துடனான தனது கடைசிப்போட்டியில் தோல்வியுற்றால் அவ்வணியும் 14 புள்ளிகளையே பெறும். அப்படி நடந்தால் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு நிகர ஓட்ட வேகத்தில் முன்னணியிலுள்ள அணிகளுக்கே வாய்ப்புக் கிட்டும். அந்த வகையில் கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளை விட நிகர ஓட்ட வேகத்தில் மும்பை இந்தியன் அணியும், பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியும் முன்னிலையில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எம். எஸ். எம். ஹில்மி

Comments