எமது கலாசாரம் அழிக்கப்படுகிறது | தினகரன் வாரமஞ்சரி

எமது கலாசாரம் அழிக்கப்படுகிறது

மனம் திறக்கிறார் சாந்தி ஸ்கந்தராஜா எம்.பி.
கே. வசந்தரூபன்
வவுனியா விசேட நிருபர்

இறுதி யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் நிறைவ

டைந்த நிலையில் வன்னியின் பல பகுதிகளிலும் மக்கள் நிலமீட்பு போராட்டங்களிலும், காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என நீதி கோரிய போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். வன்னியின் சில பகுதிகள் இன்றும் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. மக்கள் வாழ்வாதாரத்திற்காக நாளாந்தம் போராடும் நிலை தொடர்கிறது. இந்நிலையில் வன்னி மண்ணின் தற்போதைய நிலமைகள் தொடர்பாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரேயொரு பெண் பாராளுமன்ற உறுப்பினருமான சாந்தி சிறிஸ்கந்தராஜா தினகரன் வார இதழுடன் இவ்வாறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

கேள்வி: யுத்தம் முடிவடைந்து 10 ஆவது ஆண்டை நோக்கி பயணிக்கும் நிலையில் வன்னியின் தற்போதைய நிலை எப்படி உள்ளது?

பதில்: யுத்தம் முடிவடைந்து 10 வருடத்தை நோக்கி செல்கின்ற நிலையிலும் வன்னியில் மக்களினுடைய அடிப்படைப் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. தீர்க்கக் கூடிய பிரச்சனைகளைக் கூட இந்த அரசு தீர்க்காத ஒரு நிலை தான் காணப்படுகின்றது. அந்த வகையில் பூர்வீகமாக மக்கள் வாழ்ந்த நிலங்கள் விடுவிக்கப்படாமை அடிப்படை பிரச்சனை தீர்க்கப்படாமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இதில் மக்கள் பூர்வீகமாக அந்நிலங்களில் வாழ்ந்தார்கள் என்பதற்கான பல ஆதாரங்கள், ஆவணங்கள் இருக்கின்றன.

கொக்கிளாய், வட்டுவாகல், செம்மலை, அளம்பில், புதுக்குடியிருப்பு என முல்லைத்தீவு மாவட்டம் மட்டுமன்றி மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் பல காணிகள் விடுவிக்கப்படவில்லை. மக்களிடம் காணிக்கான ஆவணங்கள் இருந்தும் அவை விடுவிக்கப்படாது இராணுவம், கடற்படை, விமானப்படை என்பன ஆக்கிரமித்து வைத்துள்ளன. இந்தக் காணிகள் விடுவிக்கப்படும் என கடந்த 9 வருடங்களாக மக்கள் காத்திருந்தார்கள்.

ஆனால் அவ்வாறு நடைபெறாமையால் தற்போது அந்தக் காணிகளை விடுவிப்பதற்காக மக்கள் சாத்வீக ரீதியாக வலிந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளுக்கு முன்பக்கமாக கொட்டகைகள் அமைந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக காணிகளை விடுவிக்குமாறு போராடி வருகிறார்கள். இதேபோன்று வன்னிக்கு வெளியே கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்து வருகிறார்கள். இந்த அரசானது மக்களினுடைய நிலத்தில் நிரந்தர இராணுவ முகாம்களை அமைத்து அதனை விடுவிக்க முடியாது என தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. இதனைவிட இந்த முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரை மீன்பிடித் தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இது தொடர்பிலும் அரசாங்கத்திற்கு நாம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றோம். வாழ்வாதார ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் தொடர்ந்தும் இந்த அரசாங்கம் ஒரு பாராமுகமாக அல்லது தமிழரை மூன்றாம் தரப்பாக கருதி செயற்பட்டு வருகின்றது என்று தான் நான் கருதுகின்றேன்.

கேள்வி: முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்கள் கடற்படையின் ஆதரவுடன் வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: நிச்சயமாக கடற்படை மட்டுமல்ல பொலிஸ் நிர்வாகமும் தென்பகுதி மீனவர்களுக்கு ஒத்துப் போவதை பல இடங்களில் நாம் சுட்டிகாட்டியிருக்கின்றோம். நிரூபித்தும் இருக்கின்றோம். பொலிஸ் நிர்வாகம், இராணுவம் ஆகியவற்றின் ஒத்தாசையோடு சிங்கள மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுகின்றனர். இவ்வாறான நிலை தான் தொடர்கிறது. இதனால் எமது மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கேள்வி: நிலமீட்பு தொடர்பில் மக்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் போராட்டங்களை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

பதில்: மக்களுடைய அடிப்படை உரிமைகளை மதிக்காத நிலையாக அல்லது மனிதாபிமானமற்ற ஒரு செயற்பாடாகத்தான் அரசாங்கத்தின் செயற்பாட்டைப் பார்க்கின்றேன். ஏன் என்று சொன்னால் இறுதி யுத்தத்தில் இந்த அரசால் அள்ளிச் செல்லப்பட்ட நகைகளையோ, வாகனங்களையோ அல்லது தங்களது பெறுமதியான சொத்துக்களையோ கேட்டு இந்த மக்கள் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அசையாத சொத்தாகவும், தமது வாழிடமாகவும் உள்ள தங்களது காணிக்காகத் தான் போராடுகிறார்கள். அவர்களிடம் ஆவணம் உள்ள காணியைத் தான் கேட்கிறார்கள். தமிழனையும் இந்த நாட்டவன், தன்னுடைய நாட்டைச் சேர்ந்தவன் எனக் கருதாது இந்த அரசு செயற்பட்டு வருகிறது. இது நல்லிணக்கத்திற்கு ஏற்புடையது அல்ல. தென்பகுதியில் குப்பைமேடு சரிந்தவுடன் இந்த அரசு விரைந்து செயற்பட்டு அதற்குரிய பரிகாரங்களை தேடிக் கொண்டது. தென்பகுதி என்றதும் நிவாரணம் கொடுப்பது முதல் விசேட பாராளுமன்ற அமர்வை நடத்துவது என சகல நடவடிக்கைகளையும் எடுத்தது. ஆனால் இதைவிட மோசமாக 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களை பாராமுகமாக இருப்பது மிகவும் வேதனையான விடயம்.

கேள்வி: இலங்கையில் மிகவும் வறுமையான மாவட்டமாக முல்லைத்தீவு பதிவாகியிருக்கின்றது. இந்த நிலைக்கு என்ன காரணம்?

பதில்: யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம் முல்லைத்தீவு. இன்று சர்வதேசமே முள்ளியவாய்கால், மாத்தளன், அம்பலவன்பொக்கனை என்பவற்றை வைத்து தான் தமிழர்களை திரும்பிப் பார்க்கின்றது. அந்தவகையில் யுத்தத்தின் பின் இந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் பல கோடி ரூபாய்கள் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியாக கொட்டப்பட்டது உண்மை. ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் ஒரு திட்டமிடல் பணிப்பாளராக 25 வருடமாக சேவையாற்றியவள் என்ற எனது அனுபவத்தில் இந்த நிதிகளை பயன்படுத்துவதற்கு ஒரு சரியான பொறிமுறை இல்லை. அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சரியான பொறிமுறை வகுக்கப்படாமை தான் இந்த வறுமை நிலைக்கு காரணம் என நான் கருதுவேன்.

அந்தவகையில் இந்த வாழ்வாதாரத்தைப் பொறுத்த வரையில் எவர் ஒருவர் இல்லை என்று கூறுகின்றாரோ அவருக்கு உதவி கொடுக்கின்ற நிலை காணப்படுகின்றது. அந்த நிலை முதலில் மாற்றப்பட வேண்டும். முயற்சியாளருக்கு உதவிகளை வழங்குகின்ற பொழுது அவர்கள் தமது வாழ்க்கைத் தரத்தில் இருந்து உயரக் கூடிய நிலை ஏற்படும். ஆனால் அதற்கு மாறாக கோழியைக் கொடுக்க பிடித்து சமைப்பவனுக்கும், மாட்டைக் கொடுக்க அதனை விற்பவர்களுக்கும் மீண்டும் மீண்டும் உதவிகள் கொடுப்பதனால் தான் வருமானம் கூடாமல், வாழ்வாதாரம் உயராமல் ஏழ்மை நிலை காணப்படுகின்றது. இது தவிர, யுத்தத்தில் கைவிடப்பட்ட கைத்தொழிற்சாலைகள் திறக்கப்படாமையும், மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க சரியான பொறிமுறை ஏற்படுத்தாமையும் இந்த நிலைக்கு ஒரு காரணம். இதனைவிட இங்கு உள்ள மூலப்பொருட்களை முடிவுப் பொருளாக மாற்றக் கூடிய கைத்தொழிற்சாலைகள் அமைக்கப்படாமையும் ஒரு காரணம். உதாரணமாக இங்கு பால் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால் அதனை பாலாகவே தென்பகுதிக்கு கொண்டு செல்கிறார்கள். இங்கு ஒரு லீற்றர் பாலை 75 ரூபாய்க்கு விற்றுவிட்டு 150 மில்லி லீற்றர் மைலோ மில்க்கை 50 ரூபாய்க்கு வாங்கிக் குடிக்கும் நிலமை மாற வேண்டும். இங்கு மூலவளம், மனிதவளம், போக்குவரத்து, மண்வளம் இருக்கின்றது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம் இந்த நிலையை மாற்றலாம் எனக் கருதுகின்றேன்.

கேள்வி: இந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் வறுமையை ஒழிக்க நீங்கள் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

பதில்: நான் அரசியலுக்கு காலடி எடுத்து வைத்ததே நானும் யுத்தத்தில் பாதிப்படைந்தவள் என்ற நிலையில் தான். அந்த வகையில் இந்த ஏழ்மை நிலையை போக்க வேண்டிய யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அடையாளம் காணப்பட்ட பல பகுதியினர் உள்ளனர். கணவனை இழந்தவர்கள், காயமுற்றவர்கள், கணவனை காணாமல் ஆக்கியவர்கள், நீண்ட காலமாக சிறையில் வாழுபவர்களின் குடும்பங்கள், தாய் தந்தையரை இழந்தவர்கள் என இரட்டை சுமையை சுமக்கின்ற பல குடும்பங்கள் உள்ளன. இவர்களின் சுமையை குறைக்கும் வகையில் நான் முக்கியமாக புலம்பெயர் உறவுகளின் உதவிகள் ஊடாக பல திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். பால்மாடுகளை வழங்குதல், கல்வியை மேம்படுத்தல், பல்கலைக்கழக பிள்ளைகளுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றேன்.

கேள்வி: யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை தற்போது எவ்வாறு உள்ளது?

பதில்: யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுதல் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் என்பன தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக முயற்சியாளராக உள்ள பெண்ணுக்கு உதவி வழங்குவதையே நான் வரவேற்கின்றேன். இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண் தமது குடும்ப நிலையை மேலும் முன்னேற்றுவதற்கும், தமது பிள்ளைகளுக்கு உதவுவதற்கும் முடியும். குழுவாக சேர்ந்து பெண்கள் செய்கின்ற முயற்சிகளையும் ஊக்கிவிக்க வேண்டும். உதாரணமாக பதிவு செய்யப்பட்ட அமைப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தின் கண்காணிப்பில் கணக்கு காட்டக் கூடிய, வெளிப்படை தன்மையுடைய பெண்கள் அமைப்புக்கள் ஊடாக சிறு கைத்தொழில் முயற்சிகளை மேற்கொள்கின்ற போது வருமானத்தை அதிகரிப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். இவ்வாறான பெண்களை இனங்கண்டு உதவி செய்வதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

கேள்வி: வன்னியின் காலாசார பண்பாடுகள், அடையாளங்கள் சிதைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகிறது. இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள். இதை தடுக்க மாகாணசபை மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நடவடிக்கையை எடுத்துள்ளது?

பதில்: இதனை தடுக்க வேண்டிய கட்டாய நிலையில் நாங்கள் இருக்கின்றோம். திட்டமிட்டு மாற்றான் எங்களுடைய பிள்ளைகளை, எங்களுடைய கலை கலாசாரத்தை அழிக்கின்றான். அந்த வகையில் தான் கிராமம் தோறும் சாராய பார்கள் திறக்கப்பட்டுள்ளதுடன், கசிப்பு காய்ச்சுபவர்களை ஊக்குவிப்பதும் ஆகும். கசிப்பு காய்ச்சுபவர்களுக்கு பொலிஸ் நிர்வாகம் ஒத்துப் போகிறது. இதுமட்டுமல்ல எங்களது இளைஞர்கள், எங்களது பிள்ளைகளிடம் தமிழன் என்ற உணர்வு இருக்க் கூடாது என்பதும் மீண்டெழுக்கக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள். இந்த நிலையில் போர் முடிந்து 9 வருட நிறைவிலும் எமது கலாசாரம் அழிக்கப்பட்டு வருகிறது. யுத்த காலத்தில் பெண்கள் நிம்மதியாக இருந்தார்கள். ஆனால் இப்போது பச்சைக் குழந்தைக்கும் படு கிழவிக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதனை தடுப்பதற்கு கிராமங்கள் தோறும் அறநெறிப் பாடசாலைகள் தோற்றுவிப்பது ஆரம்ப நிலையாக கருதுகின்றேன். அத்துடன் பிள்ளைகளை பெற்றோர் விழிப்பாக வளர்க்க வேண்டும். அதன் மூலமும் இதனை கட்டுப்படுத்து முடியும் எனக் கருதுகின்றேன்.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின்னரும் மக்களுடைய பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதும் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. கூட்டமைப்பு மீதும் அதிருப்தி நிலை ஏற்பட்டிருக்கிறது. கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: என்னைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது விமர்சனம் என்பது மக்கள் விமர்சிக்கின்றார்களா அல்லது மக்களை விமர்சிக்க வைக்கின்றார்களா என்ற ஒரு கேள்வியை நான் இங்கு முன்வைக்கின்றேன். ஏனென்றால் இந்தக் கூட்டமைப்பு மீது மக்கள் நம்பிக்கை வைத்தமையால் தான் தமிழ்ம் தேசியக் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் கூட்டமைப்பு அதில் இருந்து நழுவிப் போகவில்லை. தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது.

அத்துடன் துரோகம் செய்யவில்லை என்பதும் உண்மை. எங்கள் மக்கள் ஏற்றுக் கொள்ளாத, எங்களுடைய மக்களுக்கு திருப்தியளிக்காத எந்தவொரு தீர்மானத்தையும் கூட்டமைப்பு ஏற்றுப் கொள்ளாது என எங்களுடைய சம்மந்தன் ஐயா அடிக்கடி கூறுவார். இந்த ஆட்சி மாற்றத்தின் பின்பு தான் தமிழர்களைப் பொறுத்தவரையில் இரண்டு காரியம் கைகூடியிருக்கின்றது.

இலங்கையின் இரண்டு பெரும்பான்மை பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பது. இரண்டாவது சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஐக்கியநாடுகள் சபையின் மனிதவுரிமை பேரவை ஊடாக நடவடிக்கைகளை எடுத்தது. இதனை மக்கள் நன்றாக விளங்கிக் கொண்டு சரியாக கையாள வேண்டும். இதைக் குழப்புகின்ற வகையில் சில அரசியல்வாதிகளே செயற்படுகின்றனர்.

Comments