தனிமனித பொருளாதார விடுதலைக்கான கிராமசக்தி மக்கள் செயற்திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

தனிமனித பொருளாதார விடுதலைக்கான கிராமசக்தி மக்கள் செயற்திட்டம்

 ரவி ரத்னவேல்

வறுமை ஒழிப்பு என்பது அபிவிருத்தி அடைந்துவரும் அனைத்து நாடுகளிலும் முதன்மை இலக்காக இருந்து வருகின்றது. இதனாலேயே 2015 ஆம் ஆண்டில் உலகளவில் பிரகடனப்படுத்தப்பட்ட 17 பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில் வறுமை ஒழிப்பு முதன்மை இலக்காக உள்ளது.

ஒரு சமூகத்தின் தனிமனித செயற்பாடே ஒட்டுமொத்த சமூகத்தின் ஏற்றத் தாழ்வுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது. அந்தவகையில் தனிமனின் அடைகின்ற சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாட்டையே அந்தந்த சமூகத்திலும் காணக்கூடியதாக இருக்கின்றது.

அந்தவகையில் ஒரு சமூகமும் அச்சமூகம் சார்ந்த நாடும் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடையவேண்டுமாயின் அச்சமூகத்தினதும் நாட்டினதும் அடித்தளமாக விளங்கும் தனிமனிதனை முதலில் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடையச் செய்யவேண்டும்.

இத்தேவையினை மிகத் தெளிவாக உணர்ந்த ஒரு செயற்திட்டமாகவே நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடிக் கண்காணிப்பில் கிராமசக்தி வறுமை ஒழிப்பு செயற்திட்டம் செயற்பட்டு வருகிறது.

வறுமையை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்படும் மிகவும் பின்தங்கிய கிராம சேவகர் பிரிவுகளில் உற்பத்திக்கான வாய்ப்புக்களை இனங்கண்டு அக்கிராம மக்களின் திறமைகள் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியில் அதனை சந்தைப்படுத்தக் கூடிய விதத்தில் வெளிக்கொண்டு வருவதற்கு தேவையான முதலீடு, ஆலோசனை வழிகாட்டல் மற்றும் வர்த்தக வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் பக்கபலமாக இருப்பதுடன் தேவைக்கேற்ப தனியார் துறையினரின் பங்களிப்பினையும் பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டிருக்கின்றது.

இதன் ஆரம்ப கட்டமாக ஐயாயிரம் கிராம சேவகர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டு அவற்றுள் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலிருந்தும் தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்களைக் கொண்ட நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும் அந்த நிறுவனத்தை கொண்டு நடத்தவதற்காக ஒரு உறுப்பினருக்கு தலா 8000 ரூபா என்ற அடிப்படையில் அக்கிராமப் பிரிவின் அங்கத்தவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் பணமே அந்நிறுவனத்தின் முதலீடாக கொள்ளப்படும்.

அம்முதலீட்டைக் கொண்டு அந்தந்த கிராம சேவகர் பிரிவுகளின் தனிச்சிறப்பு மிக்க பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்ற அடிப்படையில் நிறுவனம் உருவாக்கப்படும். அந்நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பும் அக்கிராம அங்கத்தவர்களிடமே கையளிக்கப்படுவதுடன் அந்நிறுவனத்தை வெற்றிகரமாக இயங்கவைக்கும் பொறுப்பும் அக்குழுவினரிடமே விடப்படும். இந்த அடிப்படையில் 2030 ஆம் ஆண்டளவில் சுமார் 15 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகளிலும் கிராமசக்தி மக்கள் செயற்திட்டத்தினால் நிர்வகிக்கப்படும் சுமார் 15 ஆயிரம் நிறுவனங்களை நிறுவுவதே இவ்வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இது புதியதோர் அனுபவம் என்பதால் இத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான அறிவு, தொழில்நுட்பம், உபகரணங்கள் ஆகியன கிராமசக்தி செயற்திட்டத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கப்படுவதுடன் இத்திட்டத்தின் கீழ் ஒன்றிணையும் அங்கத்தவர் மத்தியில் அர்ப்பணிப்பு, விசுவாசம், மக்கள் நேய பண்பு ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான பிரத்தியேக வழிகாட்டல்களும் பெற்றுக் கொடுக்கப்படும். அத்தோடு ஒவ்வொரு பிரதேச செயலாளர் மட்டத்திலும் ஏற்படுத்தப்படும் தொழில்முயற்சி வாய்ப்புகளை சிறந்தமுறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான பயிற்சி மற்றும் தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கிக் கொடுக்கப்படும்.

முற்று முழுதாக அரச பலத்தை பின்புலமாகக் கொண்டு செயற்படும் ஒரு செயற்திட்டமாக இத்திட்டம் இருந்த போதிலும் கிராமசக்தி மக்கள் செயற்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு தேவையான பங்காளியாக நம்நாட்டின் முன்னணி தனியார் நிறுவனங்கள் பல இச்செயற்திட்டத்துடன் இணைத்துக் கொள்ளப்படும்.

அவ்வாறு இணைந்து செயற்படும் தனியார் நிறுவனங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதிப்பாடு அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படும் அதேநேரம் குறிப்பாக கிராமசக்தி திட்டத்தின் உற்பத்திப் பொருட்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தைப்படுத்துவதற்காக இவ்வாறு இத்திட்டத்துடன் இணைந்து செயற்படும் தனியார் நிறுவனங்களின் பூரண ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும். இதன் மூலம் வரப்பிரசாதமற்ற பிரதேசங்களைச் சார்ந்த உற்பத்தியாளர்களும் தமது உற்பத்தியினை உலகறியச் செய்யும் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படும்.

நமது நாட்டில் நீண்ட காலமாகவே வறுமை ஒழிப்பு எனும் செயற்திட்டத்தின் கீழ் இதற்கு முன் செயற்படுத்தப்பட்ட பெரும்பாலான செயற்திட்டங்கள் வறுமையில் வாழும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுக்கும் திட்டங்களாகவே அமைந்தன.

இதன்மூலம் வறிய மக்கள் மத்தியில் ஏற்படும் தங்கிவாழும் மனோநிலை சமூக அபிவிருத்திக்கு தடையாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையை மாற்றி அம்மக்களையும் சுயமாக உழைத்து வாழும் சுய வருமானத்தை ஈட்டும் உற்பத்தியாளர்களாக மாற்றவேண்டும் என்பது கிராமசக்தி வறுமை ஒழிப்பு திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

இத்திட்டத்தினை சிறந்த முறையில் செயற்படுத்துவதன் மூலம் கிராம உற்பத்தியாளர்களின் சேமிப்பை அதிகரிக்கச் செய்வதும் அதன்மூலம் பிரதேச மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு பக்கபலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுமே இந்த ஒட்டுமொத்த செயற்திட்டத்தின் இறுதி நோக்கமாகும்.

இந்த வறுமை ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தின் பதுளை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நாளை 21 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கின்றது. மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவிருக்கும் இவ் வேலைத்திட்டம் பதுளை மாவட்ட பிரதேசவாசிகளுக்கு பயன்தரக்கூடியதாக இருக்கும். தத்தமது பிரதேசங்களின் ஆற்றலுக்கேற்ப திட்டங்களை வகுத்து நன்மை அடைவதற்கான வாய்ப்பு மக்களை நாடிவரும் ஒரு சந்தர்ப்பமாகவும் இதனைக் குறிப்பிடலாம்.

எனவே இவ்வாறான விசேட அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் பயனடைவதற்கான வழிகளை கண்டறிந்து அதற்கேற்ப செயற்படுவதே மக்கள் பயன் பெறுவதற்கான வழியாகும்.

பொதுவாக முதலீடு, சந்தைவாய்ப்பு, தேவையான வழிகாட்டல் வளங்கள் ஆகியவற்றின் பற்றாக்குறையால் அபிவிருத்தி இடம்பெறவில்லை என்பதற்கு சவாலாக அமையும் வறுமை ஒழிப்பு தேசிய திட்டத்தின் பயனை உரிய முறையில் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் இதனை ஓர் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Comments