இணக்க ஆட்சிக்கு உதாரணமாக செயற்பட்டவர்கள் நாங்கள் | தினகரன் வாரமஞ்சரி

இணக்க ஆட்சிக்கு உதாரணமாக செயற்பட்டவர்கள் நாங்கள்

கிழக்கில் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அப்போராட்டங்களில் ஈடுபட்டவர்களும், ஏனைய பொது மக்களும் தனித்தனிக் குழுக்களாக இருந்து ஜனநாயக ரீதியில் செயற்பட்டு, பின்னர் அவற்றை அங்கீகாரமிக்க அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொண்டு நிரந்தர ஜனநாயகப் பணியில் ஈடுபட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனப்படும் கட்சி கடந்த 2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு அதன் பின்னர் நடைபெற்ற பல தேர்தல்களைச் சந்தித்து கிழக்கில் முதலமைச்சர் பதவியையும் பெற்று ஆட்சி செய்திருந்தமை வரலாறாகும்.

தற்போது அக்கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் சிறையிலிருக்கின்ற நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும் சிறையிலிருந்து தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி.

 

கேள்வி : கடந்த 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில்தான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் கட்சி உருவாக்கம் பெற்றது. ஏற்கனவே இருந்த எந்தக் கட்சிகளுடனும் உங்களுடைய குழு இணையாமல் ஏன் புதிய கட்சியை உருவாக்கிச் செயற்பட முனைந்ததன் நோக்கம் என்ன?

பதில் : யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த யுத்தத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாது என்கின்ற அடிப்படையில் ஜனநாயக ரீதியில் கிழக்குத் தமிழர்களுக்கு, ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை வலுவாக்கும் நோக்கிலும் அடிப்படையிலும், கிழக்கிலுள்ள தமிழர்களின் நிலையான அரசியல் அபிலாசைகளைப் பெற்றுக் கொள்கின்ற போதுதான், அவர்கள் அனுபவித்து வருகின்ற இன்னல்கள் மற்றும் அவர்களுக்கான அடுத்த தூர நோக்கிய பயணத்திற்கு வழிவகுக்கலாம் எனும் ஒரே நோக்கிலும் ஒரு ஜனநாயகப் பாதையை நாம் தேர்ந்தெடுத்தோம். குறிப்பாக “கருத்தை கருத்தால் வெல்கின்ற சூழலை உருவாக்கினால் மாத்திரமே அந்த சமூகம் வலுவாகும்”. யுத்தத்தில் கிடைத்தவை உயிரிழப்புக்களும், உடமை இழப்புக்களும்தான், இந்நிலையில் இருக்கின்ற அடிப்படை சூழலையும் இழக்கின்ற நிலமையையும் அறிந்துதான் கிழக்குத் தமிழர்களுக்கு நிரந்தரமான ஒரு அரசியில் ரீதியான ஜனநாயகப் பாதையைப் பெற்றுக் கொடுப்பதற்காக எமது கட்சி உருவாக்கப்பட்டது.

கேள்வி : உங்களுடைய கட்சி உருவாக்கப்பட்ட பின்னர் நீங்கள் எத்தனை தேர்தல்களைச் சந்தித்திருந்தீர்கள் மக்களுக்கு உங்களால் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் என்ன?

பதில் : கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எவ்வாறான சேவைகளைச் செய்துள்ளது என்பதை கிழக்கிலுள்ள அனைத்து மக்களும் சொல்வார்கள். இதனை நேரடியாகவும் அவதானிக்க முடியும். சமூகத்தை வலுவாக்கக் கூடிய செயற்பாடுகள் அனைத்தும் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டன.

மூன்று இனங்களும் செறிந்து வாழ்கின்ற இலங்கையில் வித்தியாசமான மாகாணமாக கிழக்கு மாகாணம் உள்ளது. இம்மாகாணத்தில் ஒரு இனம் மற்றைய இனங்கள் மீது சந்தேகக் கண்கொண்டு பார்க்க முடியாத சூழலை உருவாக்கி ஒவ்வொரு சமூகமும் தத்தமது மத, இன, அடிப்படை, விழுமியங்களுடன் ஏனைய சமூகத்தை அடக்கியாளாத, சமத்துவமான ஆட்சியை கிழக்கில் நடாத்தியக் காட்டியதுதான் எமது கட்சி.

கிழக்கு மாகாணத்தில் வீதிகள் தொடக்கம் பொது மயானம் வரைக்குமான சகல உட்கட்டமைப்பு வசதிகளையும், அபிவிருத்தி செய்து கல்வி, கலை, கலாசார பண்பாட்டு, விழுமியங்களை கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்து வழிநடாத்திக் காட்டியிருந்தார். இவை தேர்தல்களுக்கான வாக்குறுதிகளாக மாத்திரமல்லாமல், மக்களுக்கான விடிவினை நோக்கி ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு கட்சி என்கின்ற அடிப்படையில் எவ்வாறு மக்களுக்குச் சேவைகளை வழங்க முடியுமோ அந்த வேலைகளை இருக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி இணக்க ஆட்சியின் மூலம் செய்து காட்டியிருந்தோம்.

கேள்வி : எதிர்வருகின்ற தேர்தல்களில் ஏதாவது பிறிதொரு கட்சியுடன் இணைந்து களத்தில் குதிக்கும் எண்ணம் உண்டா?

பதில் : இது தேர்தல் காலத்தில் பேசும் விடயம், ஆனால் எமது கட்சியைப் பொறுத்தவரையில் எந்தக் காலத்திலும் எந்தக் கட்சியுடனும் சோரம் போகவில்லை. இணக்க அரசியல் மூலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக சோரம் போகாமல் இணக்க ஆட்சி எவ்வாறு மேற்கொள்வது என்பதை செயற்படுத்திக் காட்டியவர்கள்.

எமது கட்சி கடந்த 2008 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல், 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் படகுச் சின்னத்திலே போட்டியிட்டிருந்தது என்பது அனைவருக்கும் தெரியும், அந்த வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எதிர்வரும் தேர்தல்களில் தனித்துவமாக படகுச் சின்னத்திலேதான் போட்டியிடும். என்பது எமது தெளிவான முடிவாகும்.

கேள்வி : ஒரு கட்டத்தில் உங்களுடைய கட்சியின் தலைவரான முன்னாள் கிழக்கு மாகாகண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனும், (அவர் தற்போதும் சிறையிலிருக்கின்றார்) பொதுச் செயலாளராகிய நீங்களும், சிறையிலிருந்தீர்கள். அக்காலப்பகுதியில தங்களுடைய கட்சியின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்தன என்பது தொடர்பில் கூறுங்கள்.?

பதில் : தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அரசியல் ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியல்ல. மக்களுக்காக மடியத்துணிந்த இளைஞர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. எமது கட்சியின் தலை வரால் விதைக்கப்பட்டடிருக்கின்ற துார நோக்கிய சிந்தனையும், மக்களுக்கான அர்ப்பணிப்பான சேவை வழங்குகின்ற செயற்பாடுகளும், எமது கட்சியிலிருக்கின்ற உயர்மட்ட உறுப்பினர் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை நிறைந்திருக்கின்றது. அந்த தியாகத்தின் மத்தியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற கட்சியாகும். எமது கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும், எந்த விதமான அடக்கு முறைகளுக்கு உட்பட்டாலும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் இருக்கும் வரை எமது கட்சியின் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். என்பதை வெளிப்படையாகக் காட்டியது எமது அந்த சிறைவாசக் காலமாகும்.

(தொடர் 22ஆம் பக்கம்)

வ.சக்திவேல்

Comments