தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலையும் வெள்ளப் பெருக்குகளும் | தினகரன் வாரமஞ்சரி

தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலையும் வெள்ளப் பெருக்குகளும்

தற்போது நாட்டின் தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று கால நிலை நிலவுகிறது. அதாவது நாட்டின் தென்மேல் பிரதேசங்களினுடாக தென்மேல் பருவப் பெயர்ச்சி காற்று ஊடுருவிச்செல்லும்போது இப்பிரதேசங்களில் மழை பெய்கிறது.

கடல் எப்போதும் உயரமுக்க பிரதேசமாகவும் நிலம் தாழமுக்க பிரதசமாகவும் காணப்படுவதனால் அமுக்கம் கூடுதலாக காணப்படும் சமுத்திரப் பிரதேசங்களில் இருந்து தாழமுக்கம் கொண்ட தரைப்பகுதியை நோக்கி காற்றோட்டம் நிகழ்கிறது. இக்காற்று இலங்கையின் தென்மேற்கு பிரேதேசங்களினுடக பெயர்வதால் தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று என பெயர்பெறுகிறது.

இந்து சமுத்திரத்தில் இருந்து மிகப்பெரிய அளவிலான நீராவியை சுமந்து இலங்கையின் தென்மேல் பிரதேசங்களினூடாக பயணம் செய்யும் இக்காற்று மத்திய மலை பிரதேசங்களில் மேலெழுந்து மழையைத் தருகிறது, அதுமட்டுமன்றி மத்திய மலை நாட்டை சந்திக்கும் முன்னரே கரையோர பிரதேசங்களுக்கும் அதிக மழையை தருகிறது, காரணம் ஏற்கனவே கூறப்பட்டது போல கரையோர பிரதேசங்களை அண்மிக்கும் போது நீராவி நிரம்பிய வளி மிகவேகமாக ஒடுங்கி மழைவீழ்ச்சியை தருவதாகும்.

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு மார்ச்−ஏப்ரல் மாதங்களில் நிகழ்வதனால் இச்சந்தர்ப்பத்தில் விசேடமாக இந்திய துணைக்கண்டத்தின் மேற்குப்பகுதியில் உள்ள தார்ப்பாலைவனம் அதிகப்படியாக வெப்பமடைகின்றது. இதனால் இப்பகுதியின் வளி மண்டலப்பகுதி வெப்பமடைந்து விரிவடைந்து வடக்கு நோக்கி நகர்வதனால் அப்பிரதேசம் பாரிய தாழமுக்க வலயமாக மாறுகிறது. இக்காலப்பகுதியில் தென்னரைக்கோளத்தின் விசேடமாக இந்து சமுத்திரப்பகுதியில் வீசிக்கொண்டிருந்த தென்கீழ் காற்று இந்திய துணைக் கண்டத்தில் தாழமுக்கத்தை நிரப்புவதற்காக ஈர்க்கப்படுகின்றது. இது மத்திய கோட்டை கடந்து வீசும் போது புவிச்சுழற்சியின் விளைவாக திசை திருப்பப்பட்டு தென்மேல் பருவக் காற்றாக வீசுகின்றது.

இலங்கையில் இக்காற்றானது மத்திய மலைப் பிரதேசங்களில் மோதிய பின்னர் மலை ஒதுக்கு பிரதேசங்களான அம்பாறை மட்டக்களப்பு, பதுளை, மொனராகலை போன்ற மாவட்டங்களுக்கு வறண்ட காற்றாக வீசுவதோடு இக்காலத்தில் இப்பிரதேசங்கள் வறட்சியானதாகவும் காணப்படுகின்றது.

இது சில சமயங்களில் தாழ்வான பிரதேசங்களில் அதிக மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. 1942,1951 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இது ஒரு பாரிய இயற்கை அனர்தத்தையும் உருவாக்கியதை கூறலாம். அதே போன்று அண்மையில் உருவாகியுள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சியால் இலங்கையில் அதிகமான இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் 126,000 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்டம்பரின் மத்திய பகுதியில் மழையானது குறைந்து செல்லும். அக்டோபர் மாதங்களில் வானம் தெளிவாகவும் வெப்பநிலையில் சிறிது அதிகரிப்பையும் காட்டும். செப்டம்பரில் நடுப்பகுதியில் இருந்து டிசம்பர் வரை பருவப்பெயர்ச்சி பின்வாங்கும் காலமாகும். இந்து சமுத்திரத்தின் மேலாக காணப்படும் வளிமண்டல அமுக்க மாற்றத்தின் காரணமாக இப்பின்வாங்கல் ஏற்படுகின்றது. அதன் பின் படிப்படியாக காற்றானது உபகண்டத்தில் இருந்து மத்திய கோட்டு அமுக்க வலயத்தை நோக்கி வீசுகிறது. இதன் பின் வடகீழ் பருவப்பெயர்ச்சி ஆரம்பமாகிறது. எவ்வாறாயினும் வறட்சியான பகுதிகளில் சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இது ஆவியாதல் மற்றும் ஆவியீர்ப்பு மூலம் நடைபெறுகிறது. அதாவது நீர்நிலைகளினூடாக ஆவியாதல் நடைபெறுகிறது. மற்றும் மரம் செடி கொடிகளினூடக ஆவியீர்ப்பு நடைபெறுகிறது. இவ்வாறு ஆவியாகின்ற நீர்த்துளிகள் மேலே சென்று ஒடுங்கி மழையாகப் பொழிகிறது. இது மேற்காவுகை மழை எனக் கூறப்படுகிறது. இது நீரியல் வட்ட செயற்பாட்டின் மூலம் நடை பெறுகிறது.

− மொஹம்மட் இன்சாப்

Comments