யாருக்குத் தெரியும்? | தினகரன் வாரமஞ்சரி

யாருக்குத் தெரியும்?

நிந்தவூர்

எம்.ஐ.உஸனார் ஸலீம்

கடலில் அலைகள் நுரையை எழுப்பிக் கொண்டே உயர எழுந்து வந்து கரையில் மோதுகின்றன. கலகலவென்று வந்து வீசும் கடற்காற்றும் அனைவரது மேனிகளையுமே சுகமாகத் தடவிச் செல்கிறது. கண்ணுக்கும், மனதிற்கும் இதமளிக்கும் இந்த கடற்கரை இயற்கைச் சுகத்திலே அனைவருமே மயங்கிக் கிறங்கிப் போயிருக்கின்றனர்.

ஆனால் இத்தனைக்கும் மத்தியில் ஒரே ஒரு ஜீவன் மட்டும், கடற்கரை ஓரத்தில் அமர்ந்து, கடலை வெறித்துப் பார்த்தபடியே தனது வலியாய் வலிக்கும் நெஞ்சைத் தடவியபடியே வேதனையில் அங்கே அமர்ந்திருக்கிறது.

வாழ்க்கைச் சுழலில் அகப்பட்டுத் தோற்றுப்போன அந்தஜீவன், விரக்தியின் விளிம்பில் இருந்தவாறே கடல் அலைகளின் சுழலை, உற்றுப் பார்த்தபடியே அமர்ந்திருக்கிறது. அவர்தான் றபீக் நானா. அவர் இன்னு ஒரு இதய நோயாளி. மனைவியை வாலிப வயதிலேயே இழந்து தன் மகளுக்காகவே தன் வாழ்வைத் தியாகம் செய்தவர்.

கூலி வேலைகளில்தான் றபீக் குடும்பத்தை நடாத்தினார். இளம் வயதில் மனைவியை இழந்த அவருக்குப் பெண் கொடுக்க எத்தனையோ பேர் முன்வந்தார்கள். ஆயினும் தன் மகளின் வாழ்க்கையை எண்ணி, அவரோ மறுமணம் புரிகின்ற அனைவரின் கோரிக்கைகளையும் அடியோடு மறுத்தே விட்டார்.

காலம் வேகமாய்க் கரைந்தோடியது. மகள் ரிசானா உயர்தர வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். எப்படியாவது அவளைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி அவளை ஒரு பட்டதாரியாகக் காணவேண்டுமென்று றபீக் அன்றாடம் மனதால் கனவுகண்டு கொண்டிருந்தார்.

இரவு பகலென்று கூடப் பாராமல் தன் மகளின் எதிர்கால வாழ்வை எண்ணி எண்ணியே கூலிவேலைகள் புரிந்து மாடாய் உழைத்தார். நாட்களும் ஓடி மறைந்தன. இரு வருடங்களின் முன்பு வழமைபோல் அன்றும் ரிசானா பாடசாலைக்குப் போனாள். மகளை அனுப்பிவிட்டு றபீக்கும் வேலைக்குச் சென்றார்.

பக்கத்து வீட்டில்தான் றபீக்கின் சகோதரி இருந்தார். றபீக் வேலைக்குப் போனால், மகள் ரிசானா அங்கேதான். தனது தந்தை, வீட்டுக்கு வரும்வரை, பாதுகாப்பாய் இருப்பாள். றபீக்கின் சகோதரியும் தனியாகவே வீட்டிலிருந்தார்.

அவரது கணவர், இவரைத் திருமணம் முடித்த ஓரிரு வருடத்திலேயே அவரைத் ‘தலாக்’ செய்துவிட்டு, வேறு ஒரு பெண்ணை மணம் முடித்து வேறாகிச் சென்றுவிட்டார். ஆம், அதற்கும் காரணமிருந்தது.

இவர் திருமணமாகி இரண்டாண்டு வரையும் ஒரு பிள்ளைக்குப் பாக்கியமில்லாமலிருந்தார். வைத்தியப் பரிசோதனைகளின் பின்புதான் இவரொரு பிள்ளை பெற முடியாத பெண் என்பதே தெரியவந்தது. அதன் பின்னர் கணவரைப் பிரிந்து தனியாகவே அவர் வாழ்ந்து வருகிறார். தையல் தொழில் அவருக்குக் கைகொடுத்தது.

றபீக்கின் சகோதரியின் கண்பார்வை, காலப் போக்கில் மங்கலாகிவிட்டது. உற்றுப் பார்த்துப் பார்த்து, நீண்ட காலம் தையல் தொழிலில் ஈடுபட்டிருந்தால் அவருக்கு அந்த நிலை ஏற்பட்டது. தையல் தொழில் தடையானது. இதன் காரணமாக, அவருடைய அனைத்துத் தேவைகளுக்காகவும் றபீக்கே உழைக்க வேண்டியதாயிற்று.

வேலைக்குப் போயிருந்த றபீக் மாலை நேரம் வீட்டுக்கு வந்தார். வழமையாகத் தனது சகோதரியின் வீட்டுக்கே முதலில் சென்று அங்கிருக்கும் தனது மகள் ரிசானாவையும் அழைத்துக் கொண்டே வீட்டுக்கு வருவது வழக்கம்.

அன்றும் அதுபோல் அங்கே சென்றார். அவருக்குப் பேர் அதிர்ச்சி அங்கே காத்திருந்தது. ஆம், பாடசாலைக்குக் காலையிலே சென்ற ரிசானா, அதுவரை வீடு திரும்பியிருக்கவில்லை. சேதி அறிந்த றபீக் தனது மகள் எங்கே? மகளுக்கு என்ன நடந்ததோ? என அப்படியே துன்பத்தில் துடித்துப் போனார்.

ஊரில் தனக்குத் தெரிந்த எங்கெல்லாமோ ரிசானாவைத் தேடினார். மகளின் பள்ளித் தோழிகளின் வீடுகளுக்கெல்லாம் ஓடியோடிச் சென்று தேடினார். சகதோழிகள் இன்னைக்கு ரிசானா ஸ்கூலுக்கு வரயில்ல அங்கிள் என்ற பதிலையே அவரிடம் கூறினார்கள்.

“காலம் ரொம்பக் கெட்டுக் கெடக்குது... யாஅல்லாஹ் நீதான் என்னோட மகளக் காப்பாத்தணும்” கண்ணீருடன் இறைவனை வேண்டிக் கொண்டே, மகளைத் தேடி அலைந்தார். நள்ளிரவுவதை தேடித்தேடி அலுத்துக் களைத்துப் போனவர் மிகுந்த சோகத்துடன் வீட்டுக்கு வந்தார்.

தன் மனதின் ஆற்றாமையைத் தனது சகோதரியிடம் கூறிக் கண்ணீர்விட்டுக் கோவென அழுதார். இவரின் அழுகைச் சத்தம் அக்கம் பக்கத்தவர்களுக்கும் கேட்டதால் விடையம் ஊருக்கே தெரிந்துவிட்டது. ரிசானாவைப் பற்றிப் பல பேர் வாய்க்கு வந்தது போலெல்லாம் கதைத்தார்கள்.

ஆனாலோ றபீக்கிற்காக அனைவருமே வருத்தப்பட்டனர். “பாவம் மனைவியும் இல்லாம, மகள வளக்க எப்படிக் கஷ்டப்பட்டாரு... இப்ப என்ன நடந்திச்சோ தெரியல்லியே” என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டு றபீக்கைப் பார்த்து அனுதாபப்பட்டனர்.

கவலையில் இரவு மூன்று மணி வரையும் விழித்திருந்த றபீக் இறைவனில் பாரத்தைச் சுமத்தியவராக “யாஅல்லாஹ்... நீதான் எல்லாமே அறிஞ்சவன்... என்னோட மகள எந்தவொரு ஆபத்துமில்லாமப் பாதுகாத்துத் தந்திடு அல்லாஹ்... எனக்கு ஒன்னத்தவிர ஆறுதல் யாருமேயில்ல... என்னக் கைவிட்டுடாத” தனக்குள் அழுதவாறே இறைவனிடம் கெஞ்சி மன்றாடியபடியே தன் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனார்.

போனவர் தன்னைச் சுத்தப்படுத்தி ‘வுழு’ செய்துகொண்டு ‘தஹஜ்ஜத்’ எனும் தொழுகையைத் தொழ ஆரம்பித்தார். அவரின் கண்களிரண்டிலுமிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. தன் மன வேதனைகளையெல்லாம் இறைவனிடம் கூறிக் கதறியழுது தீர்த்தவராக, முன் ஹோலில் வந்து அமர்ந்தார். எதிரே இருந்த மேசையில் வெள்ளைத்தாளிலே கடிதமொன்று இருப்பதுபோல் அவரின் கண்களுக்குத் தெரிந்தது.

ஆவலுடன் எழுந்து சென்று அதனைக் கையிலெடுத்தார். ஆம், அது ஒரு கடிதம்தான். அதனை அவரின் மகள்தான் அவருக்கு எழுதியிருந்தாள். அவசர அவசரமாக வாசித்து முடித்தார்.

தனக்கென ஒரு நல்ல வாழ்க்கைத் துணைவரைத்தான் தேடிக் கொண்டதாகவும், அவருடனேயே தனது எதிர்கால வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதாகவும், தன்னைப் பற்றி எந்தக் கவலையுமேபட வேண்டாமென்றும் சர்வசாதாரணமாக எந்தவிதமான பாசமுமற்றவளாக அந்த மடலை அவள் எழுதியிருந்தாள்.

மடலைப் படித்த றபீக்கின் இதயம் விம்மி விம்மித் துடிக்கத் தொடங்கியது. இந்த உலகே அவருக்குச் சுற்றிச் சுழலுவது போன்ற பாரியதோர் உணர்வு. மறுகணமே “யாஅல்லாஹ்” எனப் பலமாகக் கூறியபடியே தனது சுயநினைவையெல்லாம் அடியோடு இழந்து ஒரு பட்ட மரமாக அருகேயிருந்த கட்டிலில் சோர்ந்து வீழ்ந்தார்.

இரண்டு நாள் மறைந்தது. வைத்தியசாலையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த றபீக், அப்போதுதான் சுயநிலைக்கே வந்தார். சற்றே நேரம் கடந்தபோது தான் இப்போது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார்.

மகளின் நினைவு வந்தது. மறுகணம் நெஞ்சுவலித்தது. றபீக் மீண்டும் மூர்ச்சையானார். இவ்வாறே சுயநினைவு வருவதும் மகளின் நினைவு வந்ததும் மயங்கி வீழ்வதுமாகப் பல நாட்கள் தொடர்ந்தன.

சரியாகப் பதினைந்து நாட்களின் பின்பு, றபீக் ஓரளவு நலமடைந்தார் “ரொம்ப ஹாட் வீக் ஆகியிருக்கு... தயவுபண்ணி எதையும் திங்க பண்ணி, கவலப்படுறத இனிமே விட்டிடுங்க.... ஒலகத்துல, ஒங்க மாதிரி ரொம்பப் பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க... போகப் போக எல்லாமே சரியாயிடும்... எதுவுமே இங்க நிரந்தரமில்ல... பிளீஸ், கவலப்பட்டு ஒங்க ஹாட்ட இனிமேயும் கெடுத்துக்காதீங்க” வைத்தியர் அறிவுரை சொன்னார்.

வைத்தியர் சொல்லிவிட்டு “இன்னிக்கி நீங்க வீட்டுக்குப் போகலாம்... ஆனா ரொம்பவும் கவனமா இருந்துக்கணும்” என்று எச்சரிக்கையும் செய்தார்.

வீட்டுக்கு வந்த றபீக் மகளின் நினைவால், நிம்மதி மறந்தவராகத் திரிந்தார். மகளின் நினைவும், அவளின் முகமும் வந்து வந்து அவரைச் சித்திரவதை செய்துகொண்டிருந்தது. நிம்மதியையெல்லாம் மொத்தமாகவே இழந்து அனலில் விழுந்த புளுவாகித் தவித்தார்.

கால்கள் நடக்கின்ற போக்கில் நடந்து திரிந்தார். அதன் நிமிர்த்தமே அவர் இப்போது அங்கே அந்தக் கடற்கரையோரத்தில்; கொளுத்தும் வெயிலின் அகோரம் தாங்கமுடியாமல், தென்னைமர நிழலில் அமர்ந்திருக்கிறார்.

கடற்கரைக்குக் காற்று வாங்கவென்று வந்தவர்கள், ஆங்காங்கே நிழல்களில் அமர்ந்திருக்கிறார்கள். இப்போது திடீரென எழுந்து கடலை நோக்கிப் பாய்ந்து செல்கிறார், கரையில் அமர்ந்திருந்த றபீக்.

கண்ணிமைக்கும் நேரத்தில் கடலுக்குள் வீழ்ந்த மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தையொன்றைக் காப்பாற்றியவராகக் கரைக்கு வருகிறார். அப்போதுதான் குழந்தையின் பெற்றோர் அதனைக் கண்டு; அங்கே அலறித் துடித்துக்கொண்டு ஓடிவந்து; குழந்தையைக் கைகளில் வாங்கிக்கொண்டு கரையை நோக்கி ஓடுகின்றனர்.

றபீக் திடீரென “யாஅல்லாஹ்” என மார்பைப் பொத்திப் பிடித்தவராகக் கீழே சரிகிறார். திடீரென எழுந்துவந்த பாரிய அலை அவரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டே மீண்டும் கடலை அடைகிறது. இதனைப் பார்த்துக் கொண்டு நின்றவர்கள், அப்படியே மின்சாரம் தாக்கிய திடீர் அதிர்ச்சியில் தம்மையே மறந்துபோய் நிற்கின்றார்கள்.

யாருக்கு எந்த நேரத்தில் எது நடக்குமென்பது விதியை வரைந்த இறைவன் ஒருவனுக்கன்றி வேறு யாருக்குத் தெரியும்?

Comments