தோட்ட கட்டமைப்பில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் பெருந்தோட்ட சுகாதார சேவை | தினகரன் வாரமஞ்சரி

தோட்ட கட்டமைப்பில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் பெருந்தோட்ட சுகாதார சேவை

 பன். பாலா

 

'அரசுடைமையாக்கப்பட்ட சில மருத்துவமனைகள் கூட இன்னும் தோட்ட நிர்வாகங்களின் கண்காணிப்பிலேயே இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் குறைந்த ஆயுளைக் கொண்ட ஒரு சமூகமாக மலையக சமூகம் மாறிவரும் அச்சுறுத்தல் தோன்றியுள்ளது'.

பெருந்தோட்டப் பகுதி மருத்துவமனைகள் அனைத்தையும் அரசுடமையாக்கப் போவதாக அமைச்சர் ராஜித அடிக்கடி சொல்லி வருகிறார். ஆனால் இதுவரை அதற்கான முன்னெடுப்புகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. தவிர தோட்ட மருத்துவமனைகளில் நிலவும் அடிப்படைக் குறைபாடுகளைக் கூட நிவர்த்திசெய்ய முயற்சியேதும் மேற்கொள்ளப்படாமலே உள்ளது. தோட்ட மருத்துவமனைகள் அனைத்தும் அரசு பொறுப்பில் கொண்டுவரப்படவேண்டியது அவசியம்தான். ஆனால் அதனால் மட்டும் மலையக மருத்துவ சேவைகள் மேம்பட்டுவிடப்போவதில்லை.

இன்று தோட்டப்புற மருத்துவமனைகளுக்கு அம்பியூலன்ஸ் வசதி கிடைத்து விட்டால் போதும் என்ற மனோபாவத்திலேயே பெருந்தோட்ட மக்கள் இருக்கின்றனர். தோட்டங்களில் நிகழும் திடீர் மரணங்களுக்கு அடிப்படை இந்த அம்பியூலன்ஸ் இல்லாமையே என்ற கருதுகோள் உருவாக்கம் பெற்றுள்ளது. இதனால் அம்பியூலன்ஸ் சேவை கிடைக்கப் பெற்றுள்ள தோட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் அபிவிருத்தியடைந்து விட்டது போன்று ஒரு மாயை தோற்றுவிக்கப் பட்டுள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

இதே வேளை நோயாளர்களை நகர்ப்புற வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து சீர்கேடடைந்தே காணப்படுகின்றமை உண்மை. அம்பியூலன்ஸ் வசதிகள் உள்ள தோட்டங்களில் அதன் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியாத சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பாக தோட்டப் பாதைகளின் நிலை படுமோசமாக உள்ளது. புனரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகவும் பாதுகாப்பற்ற தன்மையிலும் காணப்படுகின்றன. வாகனங்கள் ஆபத்தான சூழலில் பயணிக்க வேண்டியுள்ளது. வயோதிபர்கள், மாணவர்கள், நோயாளர்கள் நடந்து செல்லவேண்டிய பரிதாபம். இதனாலேயே தோட்ட சுகாதார சேவை மேம்பாட்டுக்கு அம்பியூலன்ஸ் வசதியொன்று மட்டுமே அடையாளமாகிவிடாது என கூறவேண்டியுள்ளது.

பெருந்தோட்டத்துறை சுகாதாரம் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. இதே நேரம் தேசிய ரீதியிலான சுகாதார சேவைகள் திருப்திபடும்படியிலான அபிவிருத்தியை அடைந்துள்ளது. பெருந்தோட்டத்துறையைத் தவிர்த்து நாட்டின் பிற பிரதேசங்களில் வளர்ச்சிப் போக்கினைக் காட்டும் சுகாதார நிலைமைகள் மலையகத்தைப் பொறுத்தவரை ஆரம்பக்கட்டத்திலேயே காணப்படுகின்றமை கவலைக்குரியதே. நாட்டின் பிரஜைகளாக கணிக்கப்படும் ஒரு சமூகம் ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் சுகாதார வசதிகளைப் பெறுவதில் காணப்படும் குறைபாடுகள் கவனத்துக்குரியவை.

தேசிய ரீதியிலான சுகாதார சேவைகளுக்காக திட்டவட்டமான கொள்கை அரசிடம் இருக்கின்றது. ஐ.நா சுகாதார அமைப்பின் ஏற்பாட்டுக்கமைய தென்கிழக்காசியாவிலேயே சிறந்த சுகாதார நிலைமைகளை தன்னகத்தே கெண்டுள்ள நாடாக இலங்கை விளங்குகின்றது. எனினும் பெருந்தோட்டத்துறையைப் பொறுத்தவரையில் இச்சுகாதார சேவைகள் சென்றடைவதில் பல்வேறு முட்டுக்கட்டைகள் காணப்படுகின்றன. காலத்துக்குக் காலம் இம்மக்களது சுகாதார நலன் சம்பந்தப்பட்ட சட்டங்கள் இயற்றப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, 1865 இல் ஆங்கிலேயர் நிர்வாகத்தின் கீழ் சேவை ஒப்பந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1884 இல் 14 ஆம் இலக்க மருத்துவ உதவிச் சட்டம், 1880 இல் 17ஆம் இலக்க மருத்துவ சட்டம், 1921 இல் 9ஆம் இலக்க 10 ஆம் இலக்க மருத்துவ உதவிச் சட்டங்கள், 1941 இல் பிரசவ நன்மைகள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவை தொழிலாளர்களது சுகாதார நலன் பேணும் சட்டங்கள் எனும் தோற்றப்பாட்டைக் கொண்டிருப்பினும் அதன் உள்நோக்கம் வேறாக இருக்கின்றது.

எனவே, இவ்வாறான சட்டங்கள் எவையும் பெருந்தோட்ட மக்களைப் பாதுகாப்பதாக இருக்கவில்லை. இதற்கு நிர்வாக முறைமைகளிலான தடைகளும் ஒரு காரணம். 1972ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டன. அதுவரை தோட்ட சுகாதார சேவைகள் யாவும் பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் இருந்தன. 1912ஆம் 1913ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட மருத்துவ சேவைகள் சட்டம் வியாதிகள் (தொழிலாளர்) சட்டம் என்பவற்றின் மூலம் தோட்ட மக்களின் சுகாதார சேவைகள் தோட்ட நிர்வாகங்களின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தன. இச்சட்டங்களில் தாய் சேய் நலன், குழந்தைப் போஷாக்கு போன்ற அம்சங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான ஏற்பாடுகள் நடைமுறையில் இருந்த சூழ்நிலையிலேயே 1972இல் தோட்டங்கள் அனைத்தும் அரச முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. ஆனால் தேசிய ரீதியிலான சுகாதார சேவை வழங்கல் முறைமையோடு ஒப்பிடும்போது சிறிதளவேனும் மாற்றத்தைக் காணமுடியவில்லை. முக்கிய விடயமாக சிறுவர் மந்தபோசன நிலவரப்படி கிராமப்புற குழந்தைகளை விட தோட்டப்புற குழந்தைகளே போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருந்ததாக முன்னைய தரவுகள் கூறுகின்றன. அரசாங்கம் வெளியிட்டிருந்த சுகாதார பெறுபேற்று அறிக்கைகளின்படி தாய்மார் பாதுகாப்பு, சிசு ஆரோக்கியம், மந்தபோசனம், போஷாக்கு குறைபாடு, தொற்று நோய்கள், சுவாச நோய்கள், இதய அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக நோய்கள், புற்று நோய்கள், மதுபாவனை போன்றவற்றில் பெருந்தோட்டப்பகுதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தோட்ட முகாமைத்துவ முறைகளிலான கட்டமைப்பே இதற்குக் காரணம்.

நாட்டில் ஏனைய தொழிற்றுறையை விட பெருந்தோட்டத் தொழிற்றுறையே அதிகூடிய ஆளணியைக் கொண்டிருக்கின்றது. நீண்டநேர உழைப்பு, சொற்ப வருமானம் இடநெருக்கடி, பொறுப்புக் கூறலற்ற மருத்துவ கட்டமைப்பு என இங்கு ஒட்டுமொத்தமாக மக்களுக்குப் பாதகமான அம்சங்களே காணப்படுகின்றன. லயக்குடியிருப்பு என்பது மிகமிக மோசமான கட்டமைப்பாக விளங்குகின்றது. ஐ.நா. சுகாதாரப் பிரிவு கூட இதனை அகற்ற வேண்டுமென்று பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர் குடியிருப்புக்களில் இடவசதி கிடையாது. சுத்தமான காற்றோட்டத்துக்கு வாய்ப்பே இல்லை. கழிவுநீர் வழிந்தோடுவதற்கு பாதுகாப்பான வடிகால் இல்லை. அசுத்த நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதாலும் ஒழுங்கு முறையின்றி சிதறி கசிவதாலும் தொற்று நோய்கள் சுலபமாகவே பற்றிக்கொள்ள ஏதுவாகின்றது. இதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளுமளவுக்கு இம்மக்களிடம் சுகாதார வழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. பெருந்தோட்டத்துறையில் மொத்தமாக 50 மருத்துவமனைகளே உள்ளன. வடிவேல் சுரேஷ் பிரதி சுகாதார அமைச்சராக இருந்தபோது இவற்றுள் 23 மருத்துவமனைகள் அரசுடமையாக்கப்பட்டன. 27 மருத்துவமனைகள் இன்னும் அதே நிலையில் காணப்படுகின்றன. இத்துடன் 179 குழந்தைப்பேறு விடுதிகளும் 266 மருந்தகங்களும் இருக்கின்றன.

ஆனால் இவைகளுக்கூடாக முறையான சுகாதார சேவையை வழங்கக் கூடிய மருத்துவர்களோ தாதிகளோ மருந்துகளோ வைத்திய உபகரணங்களோ அம்பியூலன்ஸ் வசதிகளோ கிடையாது. அநேகமான மருத்துவமனைகளில் பொறுப்பான மருத்துவர்கள் இல்லை. இம் மருத்துவமனைகள் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிலையத்தினால் நிர்வகிக்கப்படுகின்றன. இவற்றுக்கு வெளிநாடுகளின் நிதியுதவிகள் கிடைக்கின்றன. மருத்துவர்களுக்கு அரசாங்கமே வேதனம் வழங்குகின்றது.

இவர்களில் அனேகர் போதிய பயிற்சி பெற்றவர்கள் அல்ல என்கிறது ஓர் ஆய்வறிக்கை. இருக்கும் சில இடங்களில் அவர்கள் இரவு வேளைகளில் தங்குவதில்லை. அதற்கான விடுதி வசதிகளும் கிடையாது. சிலர் நோயாளர்களோடு சுமுகமாக நடந்து கொள்வது இல்லை. நோயாளிகள் மீது பாராமுகமாக இருப்பதாக குற்றச்சாட்டுக்களும் உண்டு. மருத்துவர்கள் தமது பணியை இதயபூர்வமாக ஆற்றுவதற்கான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அரசுடைமையாக்கப்பட்ட சில மருத்துவமனைகள் கூட இன்னும் தோட்ட நிர்வாகங்களின் கண்காணிப்பிலேயே இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் குறைந்த ஆயுளைக் கொண்ட ஒரு சமூகமாக மலையக சமூகம் மாறிவரும் அச்சுறுத்தல் தோன்றியுள்ளது, பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொது சுகாதார வசதிகள் சட்டவாக்கத்தில் காணப்படவே செய்கின்றன, இவை பிற சமூகங்களுக்கு எவ்விதத் தடையுமின்றி கிடைத்தும் வருகின்றன, இதனடிப்படையில் சுகாதார மேம்பாட்டு நிலைமைகளில் எமது நாடு சிறப்பிடம் வகிப்பதாக பெருமைப்படவும் முடிகின்றது, ஆனால் இவையாவும் மலையக மக்களையும் உள்ளடக்கிய கணிப்பாக இல்லையென்பது தான் வேதனையான உண்மை.

அநேகமான தோட்டங்களில் தோட்ட சேமநல அதிகாரிகளாக இருப்போர் தமிழ் மொழியில் பரிச்சயம் இல்லாமல் இருப்பது ஒரு பின்னடைவான விஷயம். எனவே தோட்ட மக்களுக்கு அவர்களின் அறிவுரைகளையோ ஆலோசனைகளையே புரிந்துக் கொள்வதில் சிரமம் நிலவுகின்றது. தவிர ஓய்வின்றி உழைப்பதாலும் சுற்றுப்புற சூழ்நிலைகளாலும் அவர்களால் சுகாதார நலன் கருதிய ஆலோசனைகளை பின்பற்ற முடிவதில்லை. இது சம்பந்தமான பிரசுரங்களையோ விபரங்களையோ பெறுவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.

வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்படுவதாலோ அரசுடமையாக்கப்படுவதாலோ மலையக சுகாதார சேவைகள் மேம்பாடு அடைந்து விட்டது என்று அர்த்தமாகாது. இந்திய அரசின் உதவியோடு நவீனமயப்படுத்தப்பட்டுள்ள டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் கூட மருத்துவ சேவையை பூரணமாக வழங்கக்கூடிய வகையில் வசதிகள் இல்லை. பல குறைபாடுகள் இருக்கின்றன. இதனால் தோட்ட மருத்துவமனைகள் சகல அடிப்படைத் தேவைகளையும் வழங்கக்கூடிய விதத்தில் புனரமைக்கப்பட வேண்டியது அவசியம். ஒரு சமூகத்தின் சுகாதார நலன் என்பது பல்வேறு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய ஓரலகு. அதை அனுபவிப்பது அச்சமூகத்தின் உரிமை. வழங்கவேண்டியது அரசாங்கமொன்றின் கடப்பாடு. எனவே பெருந்தோட்டத்துறை சுகாதார சேவை தோட்ட கட்டமைப்புக்குள் இருந்து விடுவிக்கப்படுவது நல்லது. அது தேசிய சுகாதார சேவையோடு ஒன்றிணைக்கப்படுவது உசிதமானது. ஏனெனில் இந்த நாட்டுக்காக தலைமுறை தலைமுறையாக தமது முழு சக்தியையும் பயன்படுத்தி நலிவுற்றுப் போயிருக்கும் பெருந்தோட்ட மக்கள் ஆரோக்கிய சமூகமாக வாழ வழிவகுப்பது மிகமிக அவசியமானது என்பதை மறுக்கமுடியாது.

Comments