வரலாற்றியல் புனைவுப்பிரதிகள் ஏ.எஸ். உபைத்துல்லாவின் 'நிழலைத் தேடி' | தினகரன் வாரமஞ்சரி

வரலாற்றியல் புனைவுப்பிரதிகள் ஏ.எஸ். உபைத்துல்லாவின் 'நிழலைத் தேடி'

(கடந்த வாரத் தொடர்)

இனி இத்தொகுப்பில் அமைந்துள்ள பிரதிகளில் நான்கு பிரதிகள் முக்கியத்துவமிக்க பிரதிகளாக என் வாசிப்புக்கு உட்பட்டன. அந்த நான்கு பிரதிகளை பின்வரும் பார்வையில் நோக்கலாம்.

80 களுக்கு பின்னால் ஈழத்தில் சமூக அரசியல் நிலவரங்களால் ஏற்பட்ட மாற்றங்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளைப் பேசுகின்ற பிரதிகள். அப்பிரதிகளின் ஊடாக அகதி இடப்பெயர்வு, புலப்பெயர்வு, பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களிலிருந்து விரட்டப்படுதல் அதன் விளைவாகத் தாம் வாழ்ந்த மண்ணை மீட்டெடுக்கும் போராட்டம் அதாவது மண்ணை இழந்தவர்களின் குரல் என்பவற்றை பதிவுசெய்கின்ற பிரதிகளாக ஊர் துறந்து, நிழலைத்தேடி ஆகிய பிரதிகள் அமைகின்றன.

மேற்குறித்த நிலவரங்களுக்குக் காரணம் அரச, ஆயுத அதிகாரத்துடன் தன்னோடு சமநிலையில் இருந்த இனங்களை அழிக்க முனைந்தமையும், அந்த அழித்தல் என்பது அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மனித உயிர்களை அழித்ததோடு நில்லாமல் இனத்துவ அடையாள அரசியல் போராட்டத்தின் எதிரான அம்சமாகச் சிறுபான்மை சமூகங்கள்; பாராம்பரியமாக வாழ்ந்த மண்ணை விட்டு விரட்டப்படுவதும், நிலவியல் ரீதியான அச்சமூகங்களின் அடையாளங்களை அவை தம் வரலாற்றை அழிக்க முனையும் பொழுது அச்சமூகங்களுக்கு வரலாற்றை, மற்றும் நிலவியல் ரீதியான அடையாளங்களை மீட்டெடுக்கும் தேவை ஏற்பட்டது.. அந்தத் தேவை, ஆராய்ச்சிகள் ஆய்வுகள் மூலம் நிறைவு செய்யப்பட்டாலும், அத்தேவையை புனைவுப் பிரதிகள் வழியாகவும் நிறைவேற்றும் வகையிலான பிரதிகளும் தோற்றம் பெற்றன. அப்பிரதிகளில் அழிக்கப்பட்ட கடந்த காலத்திற்குச் சென்று அமர்ந்து எழுதப்பட்ட பிரதிகள் கவன ஈர்ப்பை பெற்றன. ஆனால் இழந்த, தமக்கான வரலாற்றை நினைவு கூர்ந்து எழுதப்பட்ட பிரதிகளே அதிக அளவில் எழுதப்பட்டன.

அந்த வரிசையிலான பிரதிகளாக உபைத்துல்லாவின் இத்தொகுப்பில் அமைந்துள்ள 'கொடி பறக்குது, 'ஊர் துறந்து', 'நிழலைத்தேடி', 'வாழத் துடிப்பவர்கள்' ஆகிய பிரதிகளைக் குறிப்பிடலாம்.இவற்றில் ஊர் துறந்து, நிழலைத்தேடி ஆகிய இரு பிரதிகளும் போர்ச் சூழல் அகதி வாழ்வு இடபெயர்வு போன்றவற்றால் அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைச் சித்திரிக்கின்றன.

அடுத்த இரு பிரதிகளான கொடி பறக்குது, வாழத் துடிப்பவர்கள் ஆகிய பிரதிகளில் கதைசொல்லியின் பிரதேசத்தில் மூவின மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்ததும், போர்க் காலச் சூழல் அவர்களைப் பிரித்து விடுவதும் அந்தந்தச் சமூகங்கள் சார்ந்த சமயக் கலாசார நிலவியல் அடையாளங்களைப் போஷிக்க, காப்பற்ற முனையும் நிலையினைச் சித்திரிக்கின்றன.

வாழத்துடிப்பவர்கள் எனும் பிரதி மூதூர் கொட்டியாப்புரபற்று பகுதியில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து, அவரவர் சமய வணக்கஸ்தலங்களை போஷித்தமை பற்றிப் பேசுகின்றது. வணக்கஸ்தலங்கள் எனக் குறிப்பிடும் பொழுது மூதூர் அருகே இருக்கும் நாவலடி கிராமத்தில் 19ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதியில் வந்து குடியேறிய சேகு முஹம்மது என்ற இஸ்லாமியப் பெரியாரின் அடக்கஸ்தலத்தைச் சீனி முஹம்மது என்ற பெரியவர் போஷித்து வருகிறார். அவருடன் அப்பகுதியில் குடியேறித் தமிழ் பெண்ணை மணம் முடித்த அப்புஹாமி என்ற சிங்களவரும் அவருக்கு உதவுகிறார். அக்கிராமத்தைச் சுற்றிக் கிறிஸ்தவர்களும் தமிழர்களும் தமக்கான வணக்கஸ்தலங்களை அமைத்து முஸ்லிம் மக்களுடன் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.

சீனி முஹம்மது காலமாகி விட இஸ்லாமியப் பெரியாரின் அடக்கஸ்தலத்தைப் பாராமரிக்கும் பணியினை அந்த ஊர் பெரியவர் மீரா சாய்பு பொறுப்பெடுத்தாலும், அந்தக்காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமையின் காரணமாக இவர்கள் எல்லோரும் அகதிகளாகப் பிரிந்து போகிறார்கள். மீண்டும் குடியேற முடியாத நிலையில் சேகு முஹம்மது என்ற இஸ்லாமியப் பெரியாரின் அடக்கஸ்தலத்தைப் பராமரிக்க முடிக்காமல் போகிறது. அப்பகுதி விடுக்கப்படாத பிரதேசமாக மாறுகிறது.

இப்பிரதியில் கதைசொல்லியின் கவலை எல்லாம் மூவினங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து, மற்றவர்களின் சமயங்களை மதித்து வாழ்ந்த அந்தக் காலமும் அந்தப் பிரதேசமும் அவ்வாறான நெருக்கடிக்கு ஆளாகி விட்டதே என்பதுதான்.

ஆனால் இந்த நிலவரங்களைப் பொறுத்த வரை அந்தந்தக் காலகட்டத்திற்குச் சென்று அமர்ந்து எழுத வேண்டிய விடயங்கள் என்ற வகையில் இந்த நான்கு பிரதிகளும் ஒரு நாவலாக விரிவாக எழுத வேண்டிய விடயங்களைப் பேசி இருக்கின்றன. அவ்வாறான ஒரு நாவல் உபைத்துல்லாவினால் எழுதப்பட்டால், 80 களுக்கு பின்னான ஈழத்துத் திருகோணமலை பிரதேசங்களில் வாழும் மக்களின் போர்க் காலத்திற்கு முந்திய, மற்றும் போர்க்காலத்து வாழ்வியலைப் பேசுகின்ற நாவலாக அது அமையும்.

இத்தகைய விடயங்களைப் பேசுகின்ற பிரதிகள் என்ற வகையில் உபைத்துல்லாவின் இத்தொகுப்பில் அமைந்துள்ள பெரும்பாலான பிரதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இத்தொகுப்பில் அமைந்துள்ள சில பிரதிகளில் கதைசொல்லி இடையிலே பிரசங்கப் பாணியில் பேசி இருப்பதைத் தவிர்த்து இருக்கலாம். ஏனெனில் கதை சொல்லி அக்கதை பிரதிகளில் பேசியிருக்கும் பாங்கே அவர் பிரசாரமாகச் சொல்ல வரும் விடயங்களை மனதில் ஆழமாகப் பதித்து விடுகிறது.

மேலும் இத்தொகுப்பில் அமையப் பெற்றுள்ள எல்லாப் பிரதிகளிலும் திருகோணமலையையும் அதனைச் சுற்றிய கிராமங்களையும் அவற்றின் கடல்வளம், நதிகளின் ஓட்டம் என்பனவற்றையெல்லாம் அழகான முறையில் படம் பிடித்துக் காட்டுகின்றன.

அந்த முறையில் அந்தப் பிரதிகளை வாசிக்கும் நாமே அந்த பிரதேசங்களில் நடமாடுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடையில் உபைத்துல்லா இத்தொகுப்பின் பிரதிகளை முன் வைத்திருக்கும் முறை அவரது தனித்துவம் என்றால், ஈழத்தின் ஒரு பகுதி மக்களின் (அதில் மூவின மக்களும் அடங்கும்) பாரம்பரிய நிலவியலையும், வரலாற்றியலையும் புனைவுப் பிரதிகளாகத் தந்திருப்பது என்ற வகையிலும் ஏ.எஸ். உபைத்துல்லாவின் நிழலைத்தேடி எனும் தொகுப்பு சிறப்பு பெறுகிறது.

 -மேமன்கவி

 

Comments