கொழும்பு மாநகர சபை கழிவு அகற்றுவோர் | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு மாநகர சபை கழிவு அகற்றுவோர்

கடந்த வருடம் சித்திரை தினத்தன்று கொழும்பு மீதொட்டுமுல்லை குப்பைமேடு சரிந்து விழுந்தில் நான்கு சிறுவர்கள் உட்பட பதினான்கு பேர் மரணமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து கொலன்னாவ பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அத்துடன், இந்த விபத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் முழுமையாக சேதமடைந்தன.

இதன் பின்னரேயே கொழும்பில் நாளாந்தம் சேகரிக்கப்படும் குப்பை குறித்து பலவிதமான கேள்விகள் எழுந்தன. தொடர்ந்து குப்பை அகற்றும் நடைமுறைகள் கடுமையாகின. அரசாங்கத்திற்கு பலவிதமான தலையிடியைக் கொண்டு வந்து குவித்தது. கிராமங்களை அண்டியப் பகுதிகளில் குப்பையைக் கொட்டும் நடவடிக்ைகக்கு பொதுமக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பும் உருவாகியது. இதனைத் தொடர்ந்து சில நாட்கள் கொழும்பில் குப்பை அகற்றப்படாமல் வீதிகளில் குப்பை நாறிப்போன வரலாற்று உண்மையும் உண்டு.

அரசாங்கம் குப்பைகளை அகற்றும் பணிகளை கடுமையாக்கி, மக்களின் நலன் பாதிக்காத வண்ணம், குப்பையை வகைப்பிரித்து சேகரிக்க முன்வந்தது. அத்துடன், வீதிகளில் குப்பையைக் கொட்டும் நமது பழக்கமும் நீக்கி, வீட்டுக்கு வீடு சென்று குப்பை சேகரிக்கும் முறை நாடளவிய ரீதியில் அமுல் செய்யப்பட்டது. மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகள் இந்த நடைமுறையை முன்னெடுத்து வருகின்றன. அத்துடன் உக்கும் குப்பை, உக்காக்குப்பை என்ற ரீதியில் குப்பை அகற்றும் நடவடிக்ைக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வீட்டுக்கு வீடு வருடத்திற்கு ஒருமுறை தங்களது வருட பிறப்பை கொண்டாடும் போது, தங்களுக்கு உதவி செய்யும் கரங்களுக்கு சிறிய அன்பளிப்பு அல்லது நன்கொடை கொடுப்பது நமது வழக்கம். பொதுப் பாஷையில் 'சந்தோஷம்' என்று சொல்வோம்.

இக்காலத்தில் பேப்பர் பையன்கள், விறகு போடுபவர், வடிகால் திருத்துபவர், குப்பை அகற்றுவோர், கீரை விற்போர் ஆகியோர் வீடுகளுக்குச் சென்று சந்தோஷம் மக்களும் மகிழ்ச்சியுடன் கொடுத்துவர். கேட்பதும் நாமும் சிரித்த முகத்துடன் சம்திங் கொடுப்பதும் வழமை. இதை எவரும் விவாதப் பொருளாக எடுப்பதில்லை. கிராம மட்டத்தில் இலைகுழைகள், ஆடு, மாடுகளின் எருக்கள் முதலியவற்றுக்கு பணம் செலுத்தி வாங்குபவர்கள் உண்டு. ஆனால் கொழும்பு போன்ற நகரங்களில் இவை வெறும் அகற்றப்பட வேண்டிய கழிவுகள் மட்டுமே.

முன்பு அளவுக்கு அதிகமான குப்பையை அகற்றும் தேவை இருந்தால் உள்ளூராட்சி உத்தியோகத்தர்களிடம் அதை எடுத்துச் சொன்னால், அதற்கு ஒரு சிறிய கட்டணத்தை செலுத்தும்படி கேட்பார்கள். பின்னர் குப்பை அகற்றப்பட்டுவிடும். அல்லது நகர சபை உறுப்பினர்களின் உதவியோடு, அவர்களின் சிபார்சின் பேரில் இந்த குப்பை அகற்றப்படும் நடவடிக்ைகயும் இருந்தது. அப்படியான சூழ்நிலையை சிலர் சாதகமாகப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் குப்பை சேகரிக்கும் நடவடிக்ைக மாற்றியமைக்கப்பட்டதின் பின்னர் சில சுத்திகரிப்பு பணியாளர்கள் பணத்தை மையமாக வைத்து செயல்படவும் ஆரம்பித்துள்ளனர். உணவுக் கழிவுகளை அகற்றும் போது, அதில் உக்காப் பொருட்கள் இருந்தால் அப்பொருட்களை திரும்பிக் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனாலும் சிலர் கொடுக்கும் உக்கும் பொருட்கள் அதிகமாக இருந்தால் பணம் தந்தால்தான் அகற்றுவோம் என்று கூறும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் உக்கும் பொருட்களுடன், மரக்கிளைகள், புல்பூண்டு என்பனவற்றை அகற்ற வேண்டியயிருந்தாலும் அதனை ஏற்றுவதற்கு அவர்களுக்கு 'சந்தோஷம்' என்ற போர்வையில் கைலஞ்சம் கொடுக்க வேண்டியது கட்டாயமாகி வருகிறது.

கழிவுகள் கொஞ்சம் அதிகமாக இருந்தால், இதையெல்லாம் கொண்டு போக முடியாது என்று முகத்தில் அறைந்த மாதிரி சொல்லி விடுவார்கள். நாம் பணிந்து வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் திமிர்த்தனமான மறுப்பு. குப்பைகளைத் தாங்களாகவே அகற்ற இவர்களால் முடியாது என்பதைத் தெரிந்து கொண்டுதான் மறுப்பை ஒரே போடாகப் போட, நாமும் எவ்வளவு வேண்டும் என்று கேட்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். நுகேகொடையைச் சேர்ந்த என் நண்பி தன் வீட்டு குப்பையை அகற்ற சுத்திகரிப்பு ஆட்களுக்கு இரண்டாயிரம் ரூபா கொடுத்ததாக என்னிடம் கூறினாள். ஐந்தாயிரம் என்று ஆரம்பமான தொகை இரண்டாயிரத்தில் முடிந்ததாம்!

அதிகமானவர்களிடம் விசாரிக்கும் போது, மாதாந்தம் குப்பைகளை அகற்றுபவர்களுக்கு சுமார் 100 ரூபா முதல் 1000 ரூபா வரை கொடுப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

குப்பை சேகரிப்பாளர்கள் ஆக குறைந்தது 20 ரூபா என்ற ரீதியில் பார்த்தாலும் அவர்கள் குப்பைச் சேகரிக்கும் வீடுகளின் எண்ணிக்ைகயைப் பார்த்தால் பல நூறு ரூபா என்ற ரீதியைக் கடந்துவிடும். அத்துடன் குழு என்ற ரீதியிலேயே நிதி வசூல் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

வீட்டுக்கு வீடு குப்பைச் சேகரிக்க வரும் சுத்திகரிப்பாளர் வீட்டுக்கு அருகில் வரும்பொது வழிமேல் விழிவைத்து குப்பையை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. இல்லாவிடின் கழிவு சேகரிப்பு வாகனம் சென்றுவிடும்.

அதேநேரத்தில் சில ஹோட்டல்களுக்கு முன் கழிவு சேகரிக்கும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, சுத்திகரிப்பாளர்கள் இந்த ஹோட்டல்களுக்குள் சென்று குப்பைகளை தாமே அள்ளி வந்து லொறியில் ஏற்றுகின்றனர்.

இந்த சேவைக்கு பணம் அல்லது உணவு பண்டங்கள் காரணமாக இருக்கலாம். ஆனாலும் சாதாரண வீடுகளுக்கு அருகில் வரும் வாகனங்கள் இவ்வாறு காத்திருப்பதில்லை.

சில பகுதிகளுக்கு குப்பை சேகரிக்கும் லொறி வரும்நாள் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருப்பினும், சில சந்தர்ப்பங்களில் இந்த நடைமுறை மீறப்படுவதாகவும் அதாவது குப்பைச் சேகரிக்கும் லொறி வருவதில்லை என்றும் வீட்டுரிமையாளர்கள் விசனப்படுகின்றனர்.

சில பகுதிகளில் வீட்டு துடைப்பம் தடிகளை சுத்திகரிப்பாளர் எடுப்பதில்லை என்ற முறைப்பாடும் உண்டு. எது எப்படியிருப்பினும் பணம் கொடுக்கப்பட்டால் கொண்டு போகாமல் கைவிடப்பட்ட குப்பையையும் அள்ளிக் கொண்டு லொறிகளில் ஏற்றிவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர் பொதுமக்கள்.

கழிவுக்குப்பையைச் சேகரிக்கும் சுத்திகரிப்பாளர்கள் பணமாக மாற்றக் கூடிய கார்ட்போர்ட், போத்தல், இரும்பு போன்றவற்றை சந்தோஷமாக வாரிகட்டிக் கொண்டு போவதையும் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

எது எப்படியிருப்பினும் கொழும்பு வாழ் மக்கள் கொழும்பு மாநகர சபைக்கு வரி செலுத்துபவர்கள். இம்மக்களுக்கு மாநகர சபை ஆற்றும் அத்தியாவசிய சேவையான குப்பைகளை அப்புறப்படுத்தலை நாறவைக்க வேண்டாம். சிற்றூழியர்களின் சில்லறை தனங்கள் வேதனையை ஏற்படுத்துகின்றன. குப்பை சேகரிப்பாளருடன் ஏன் வம்பு. பிரச்சினைப்பட்டால் முரண்டு பிடிப்பார்களோ என்பதால் பெரும்பாலான கொழும்பு குடியிருப்பாளர்கள் குப்பைக்காரர்களின் சில்லறைத் தானங்களை பொறுத்துக் கொள்கிறார்கள். மாற்றம் ஏற்படுத்துவேன் என்று கூறி பதவியேற்றியிருக்கும் கொழும்பு மாநகரின் ஃபெஸ்ட் லேடி இந்த குப்பை விவகாரத்தை கவனித்தால் நல்லது.

போல் வில்சன்

Comments