கறுப்பின மக்களின் அமெரிக்கக் கனவை வெளிப்படுத்திய மார்ட்டின் லூத்தர் கிங் | தினகரன் வாரமஞ்சரி

கறுப்பின மக்களின் அமெரிக்கக் கனவை வெளிப்படுத்திய மார்ட்டின் லூத்தர் கிங்

நீண்ட பயணக் களைப்புடன் தூங்கிய நான் ‘எலார்ம்’ அடிக்க எழும்பினேன். நேரம் காலை 7 மணி, ஆனால் வெளியே சாதுவான இருட்டு. எம்முடன் வந்தவர்களுக்கு வட்சப்பில் அழைப்பை ஏற்படுத்தி காலை உணவுக்கான ஏற்பாடுகளைக் கேட்டுக்கொண்டேன். அவசரமாக ஆடைகளை அணிந்துகொண்டு காலை உணவைத் தேடிச் சென்றோம். அமெரிக்காவில் உணவு தேடும் படலம் பற்றி தனியாகச் சொல்லியே ஆக வேண்டும். மற்றொரு முறை அதனைப் பகிர்ந்துகொள்கிறேன். ஹோட்டலுக்கு வெளியே வந்தால் காலநிலை ஒரு பாகை செல்சிஸஸ், செமக்குளிர். ஜக்கட்டுக்களுடன் வீதியில் நடக்கத் தொடங்கினோம். சிறிதொரு சந்தியில் பழங்கள் அடுக்கிவைக்கப்பட்ட சிறிய கூடாரங்களைக் கண்டோம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் தற்காலிகமான சந்தையொன்று முளைத்துக் கொண்டிருந்தது. உணவுகள், பழங்கள் எனப் பல்வேறு பொருட்கள் விற்பனைக்குத் தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. எமக்குப் பொருத்தமான எதுவும் இருக்கவில்லையென்பதால் இடத்தைக் காலிபண்ணிவிட்டு அருகிலிருந்த சுப்பர் மார்க்கட்டில் ஏதாவது கடிப்பதற்கு வாங்கிக் கொண்டு விறுவிறு என ஹோட்டலுக்கு நடந்தோம்.

காலை 10 மணிக்கு ஹோட்டல் வரவேற்பு மண்டபத்தில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். எம்மைக் கண்டதும் ஏதோ விளங்கிவிட்டதுபோல “ஸ்ரீலங்கன் ஜேர்னலிஸ்ட் ரீம்” எனக் கேட்டார். நாமும் ஆம் எனக் கூறவே, வொஷிங்டன் நகரை சுற்றிக்காட்டுவதற்கு வந்துள்ள வழிகாட்டி என்றும் தனது பெயர் லொய்ஸ் கூன்ட்ஸ் என்றும் தன்னை அறிமுகப்படுத்தினார். நாம் அவருடன் கதைத்துக்கொண்டிருக்க மார்க்கிரட்டும் எம்முடன் இணைய சகலரும் வாகனத்தில் ஏறி இடத்தைச் சுற்றிப்பார்க்க புறப்பட்டோம்.

அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை முதலில் காட்டப் போவதாகக் கூறிய அவர், செல்லும் வழிகளில் உள்ள இடங்களைப் பற்றி விளக்கிக்கொண்டே வந்தார். பூங்கா போன்றதொரு இடத்துக்கு முன்னால் பெரியதொரு சிலையை அண்மித்ததும் எமது வான் சாரதியான லொரி வாகனத்தை நிறுத்தினார். வாகனத்திலிருந்து இறங்கியதும் வெள்ளை மாளிகை கட்டடம் தெரிந்தது. ஏற்கனவே பல புகைப்படங்களில் பார்த்த கட்டடம் என்பதால் இலகுவில் அடையாளம் கண்டு விட்டோம். வெள்ளை மாளிகைக்கு முன்னால் சிலர் பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களை யாரும் தடுக்கவில்லை, பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இலங்கையாகவிருந்தால் நிச்சயம் இரும்பு தடுப்புக்களும், நீர்த்தாரை பவுசர்களுமே நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். ஆனால் அங்கு அப்படி எதனையும் காணவில்லை.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் எம்மைப்போன்று சுற்றுலாப் பயணிகள் பலரும் வெள்ளை மாளிகைக்கு வெளியே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். நாமும் எமது பங்கிற்கு கமராவில் கிளிக்கித் தள்ளினோம். வெள்ளை மாளிகைக்கு வடக்குப் பக்கத்தில் நீண்டதொரு கட்டடத் தொகுதியிருந்தது. அதில்தான் அரசாங்கத்தின் பல்வேறு திணைக்களங்களும் இயங்கி வருகின்றன என்றார். தூரத்தில் தெரிந்த கட்டடமொன்றைக் காண்பித்து அதில்தான் அமெரிக்காவுக்கு வரும் உலகத் தலைவர்கள் தங்கவைக்கப்படுவதாகவும், யார் அங்கு தங்கியிருக்கின்றார்களோ அந்த நாட்டுக்குரிய கொடி பறக்கவிடப்படும் என்றும் விளக்கமளித்தார் லொய்ஸ். வெள்ளை மாளிகைக்கு அருகில் அமெரிக்க திறைசேரிக் கட்டடம். அசப்பில் எமது பழைய பாராளுமன்றக் கட்டடம் மற்றும் இலங்கையின் நிதி அமைச்சைப் போன்றதொரு பாரிய கட்டடம். வட்டமான பல தூண்களைக் கொண்டதாக இது அமையப்பெற்றிருந்தது. 1800ஆம் ஆண்டு இந்தக் கட்டடம் திறைசேரிக்கு வழங்கப்பட்டதாம்.

அங்கிருந்து புறப்பட்டு கப்பிட்டல் ஹில்லுக்குச் சென்றோம். அதாவது அமெரிக்க காங்கிரஸ் சபை மற்றும் செனட் சபை அமைந்திருக்கும் பகுதி. இதன் அமைவிடம் நகரத்திலிருந்து உயரமான பகுதியொன்றில் அமைந்திருப்பதால் அந்தப் பெயரை, அதாவது தலைநகர் குன்று என வைத்துள்ளனர். கொழும்பு மாநகரசபையின் கட்டடத்தைப் போன்ற கோபுரத்தைக் கொண்டதான பாரியதொரு கட்டடம். இதன் ஒரு பக்கத்தில் செனட் சபை மறுபக்கத்தில் காங்கிஸ். ஆரம்பத்தில் சிறிய கட்டடமாக இருந்த கப்பிட்டல் பின்னர் பெரியதாக விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. கப்பிட்டல் கட்டடத்துக்கு தெற்குப் பகுதியில் உச்சநீதிமன்றக் கட்டடம்.

நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றுக்குமான கட்டடங்கள் கிட்டத்தட்ட ஒன்றையொன்று பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கப்பிட்டல் ஹில்லில் இருந்து பார்த்தால் வெள்ளை மாளிகை மற்றும் உச்சநீதிமன்ற கட்டடம் என்பன தெளிவாகத் தெரியும். அதாவது நாட்டின் செயற்பாடுகளை கப்பிட்டல் ஹில் அல்லது செனட் மற்றும் காங்கிரஸ் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்று இந்த அமைப்பை உருவகப்படுத்துகிறார்கள். காங்கிரஸ் சபைக் கட்டடத்துக்குள் செல்ல பிறிதொரு தினம் ஒதுக்கப்பட்டிருந்ததால் வெளியே நின்றபடி அக்கட்டடத்தைப் பார்த்துவிட்டு புறப்படத் தயாரானோம். தூரத்திலேயே வொஷிங்டன் நினைவுச்சின்னம் வானுயரத் தெரிந்தது.

அடுத்து நாம் லிங்கன் மெமோரியலுக்கு செல்லப்போவதாகக் கூறினார் லொயிஸ். மனதுக்குள் ஏதோவொரு உற்சாகம். அமெரிக்கா சென்று திரும்பிய எனது நண்பர்கள் தாம் சென்றதற்கு அடையாளமாக முகப்புத்தகத்தில் பகிர்ந்த படங்களில் ஒன்று ஆபிரகாம் லிங்கனின் பாரிய உருவத்துக்கு முன்னால் எடுத்துக் கொண்ட படம். எப்படியாவது படத்தை எடுத்து பேஸ்புக்கில் பதிவிடவேண்டும் என்ற எண்ணத்துடனேயே வானில் சென்றேன். போகும் வழியில் சற்றுத் தொலைவில் தெரிந்த கட்டடமொன்றைக் காண்பித்து அதுதான் 'பென்டகன்' என்றார். அதாவது அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டடம்.

இறுதியாக எமது வாகனம் லிங்கன் மெமோரியலுக்கு அருகில் வந்து நின்றது. இப்பகுதி ‘நெஷனல் மோல்’ என அழைக்கப்படுகிறது. லிங்கன் நினைவு இடத்துக்கு அருகில் கொரிய போர் நினைவிடம் மற்றும் வியட்னாம் போர் நினைவிடம் என்பனவும் இருந்தன. நம்மைக் கவர்ந்தது என்னவோ லிங்கன் நினைவிடம்தான்.

பல தூண்கள் நிறைந்த பாரிய கட்டடத்தின் முன்னால் பெரிய படிகள். பல நாடுகளையும் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். நாமும் படியேறி உள்ளே சென்றோம். உள்ளே அமெரிக்காவின் சிற்பியாக வர்ணிக்கப்படும் ஆபிரகாம் லிங்கன் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் பெரியதொரு சிலை. சிலையைச் சுற்றி ஆபிரகாம் லிங்கனின் பிரபலமான வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. 1920ஆம் ஆண்டு லிங்கனின் நினைவாக இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆபிரகாம் லிங்கன் கப்பிட்டல் ஹில்லை பார்த்துக்கொண்டிருப்பதைப் போன்று அவருடைய சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நடுவே வொஷிங்டன் நினைவுப் படிகம் உயர்ந்து நிற்கின்றது.

லிங்கன் நினைவிடத்தின் ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒவ்வொருவரின் பிரபலமான வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஓரிடத்தில் மாத்திரம் பலர் நிலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். நானும் சென்று எட்டிப்பார்த்தேன். “I have a dream” என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. அதன் கீழ் மார்ட்டின் லூத்தர் என எழுதப்பட்டிருந்தது. மார்ட்டின் லூத்தரின் பிரபலமான வாசகம் அது. லிங்கன் நினைவிடமானது 1930ஆம் ஆண்டின் பின்னர் கறுப்பின அமெரிக்கர்களின் விடுதலைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் முக்கிய இடமாக மாறியது. மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் 1963ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐ ஹேவ் ஏ ட்ரீம் உரையை நிகழ்த்தினார். இனவெறியை முடிவுக்குக் கொண்டுவருமாறு அவர் அந்த உரையில் கோரிக்கை விடுத்திருந்தார். அன்றைய தினம் நெஷனல் மோலில் கூடியிருந்த 250000 பேர் முன்னிலையில் மார்ட்டின் லூதர் ஜுனியர் இந்த உரையை நிகழ்த்தியிருந்தார். இதனை குறிப்பிடும் முகமாக அவருடைய அந்த வாசகம் இங்கு பொறிக்கப்பட்டுள்ளது.

அவர் அந்த உரையை நிகழ்த்திய போது, அமெரிக்காவில் கறுப்பர்களை ஒதுக்கும் இனவெறிப் பார்வை வெள்ளை அமெரிக்கர்களிடம் இருந்தது. உணவகத்தில் கறுப்பர் நுழைய முடியாது. ஒரு கறுப்பர் அமர்ந்து பயணிக்கும்போது அந்த பஸ்சில் ஒரு வெள்ளையர் ஏறினால் அந்தக் கறுப்பர் எழுந்து அவருக்கு இடம்கொடுக்க வேண்டும். இதை எதிர்த்தே மார்டின் லூத்தர் கிங், சிவில் உரிமை இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தினார். பின்னர் ஜோன் கென்னடி, கறுப்பர்களுக்கு சம உரிமை அளிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். இது நடந்து இரண்டு மாதங்களில் லிங்கன் நினைவாக படிக்கட்டுகளில் ஒரு பெரும் கூட்டத்தை நடத்தினார் மார்டின் லூத்தர்.

இக் கூட்டத்தில், இரண்டரை இலட்சம் பேர் கலந்து கொண்டனர். இங்கே 16 நிமிடங்களுக்கு அவர் நிகழ்த்திய உரை, மிகச்சிறந்த உரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. முதல் பத்து நிமிடங்கள் தான் தயாரித்து வந்த உரையை ஆற்றிய அவர், பின்னர் குறிப்புகளை ஒரு பக்கமாக வைத்துவிட்டு, சுயமாக பேச ஆரம்பித்தபோதுதான், I have dream என்ற அப்புகழ்பெற்ற வார்த்தையை உதிர்த்து அது எத்தகைய கனவு என்பதை விவரித்தார். 1963ஓகஸ்ட் 28ஆம் திகதி இந்த உரையை அவர் நிகழ்த்தியபோது அவருக்கு வயது 36. ஐந்து வருடங்களின் பின்னர், 1968ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி டென்னஸி, மெம்பிஸ் நகரில் ஒரு விடுதியின் மேல் மாடியில் நின்று கொண்டிருந்தபோது மார்டின் லூத்தர் கிங் சுடப்பட்டு மரணமடைந்தார். 1963 ஓகஸ்டில் இந்த உரையை அவர் நிகழ்த்த, அதே வருடம் நவம்பரில் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார்!

இந்த நினைவிடத்தில் உள்ள ஒவ்வொரு தூண்களும் ஐக்கிய அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலங்களைக் குறிப்பிடுபவையாகவும் அமைந்துள்ளன. நினைவிடத்திலிருந்து பார்க்கும் போது முன்னால் பாரியதொரு நீர்த்தடாகம் உள்ளது. காலை வேளையில் அந்தத் தடாகத்தில் லிங்கன் நினைவிடத்தின் நிழலும், மாலை வேளையில் வொஷிங்டன் நினைவுத் தூபியின் நிழலும் தெரியுமாம்.

இது வொஷிங்டன் நினைவுத் தூபி பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அமெரிக்காவின் ஜனாதிபதியாகவிருந்த ஜோர்ஜ் வாஷிங்டனால் கட்டப்பட்டது. இது நாற்பக்கங்களைக் கொண்ட மண்நிறக் கோபுரமாகும். இது பளிங்குக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. இதில் முக்கியமான விடயம் இது இரண்டு நிறங்களைக் கொண்டதாக இருக்கும். நினைவுத் தூபியின் அரைப்பகுதி ஒரு நிறத்திலும், மேல் அரைப்பகுதி மற்றொரு நிறத்திலும் காணப்படுகிறது.

இதற்கு ஒரு பின்னணியும் உண்டு. அதாவது இந்த நினைவுத் தூபி அமைக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது உலகப்போர் இடம்பெற்றதால் அதனை கட்டுவதற்கான நிதியை காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. எனவே இதன் கட்டுமாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. யுத்தம் முடிந்த பின்னர் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதும், முன்னர் பெறப்பட்ட இடத்திலிருந்து கற்களைப் பெறமுடியாமல் போக, எஞ்சிய பகுதி வேறிடத்திலிருந்து பெற்ற கற்களால் கட்டப்பட்டது. இதனால் தான் இத்தூபி இரண்டு நிறங்களைக் கொண்டுள்ளது. இந்த சகல தகவல்களையும் லொயிசே எமக்கு விளக்கினார். ஒவ்வொரு கட்டடங்களும் ஒவ்வொரு வரலாறுகளைக் கொண்டிருப்பதை அவருடைய விளக்கங்களின் ஊடாக அறிய முடிந்தது. அமெரிக்கர்கள் தமது வரலாறுகளை சரியான முறையில் மற்றவர்களுக்கு வழங்குவதில் வல்லவர்கள் என்பதையும் உணர முடிந்தது.

லிங்கன் நினைவிடத்திலிருந்து நாம் கொரிய யுத்த வீரர்கள் நினைவிடத்துக்குச் சென்றோம். அந்தக் காலத்தில் அமெரிக்க வீரர்கள் எவ்வாறு யுத்தத்துக்குச் சென்றார்களோ அதேபோன்ற சிலைகள் அங்கு அமைக்கப்பட்டிருந்ததுடன், இதில் உயிரிழந்தவர்களின் நீண்ட பெயர் பட்டியலும் அங்கு பொறிக்கப்பட்டிருக்கிறது. அன்றைய பொழுது நண்பகலையும் தாண்டி விட்டதால் வயிறும் கிள்ளத் தொடங்கியது. நாமும் புறப்படத் தாயாரானோம்.

(நினைவுகள் தொடரும்)

 

Comments