அணியும் ஆடைகள் மூலம் தமது ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்! | தினகரன் வாரமஞ்சரி

அணியும் ஆடைகள் மூலம் தமது ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்!

* சிம்மராசிப் பெண்களின் ஆளுமை இருவகைப்படும். ஒன்று – அன்னை தெரேசாபோல் கருணையால் உள்ளங்களைக் கட்டிப் போடுகிற ஆளுமை. மற்றொன்று – முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாபோல் அகந்தையால் மற்றவர்களை தன்னடிப்படுத்துகிற ஆளுமை. இந்த இருவருமே சிம்மராசிக் காரர்கள் தான்!

தனுராசிப் பெண்களே உடையணிவதில் புரட்சி செய்தவர்கள். கட்டைக் காற்சட்டைகளுடனும் Try me , Press me, Touch me Dare you என்ற வாசகங்கள் மார்பில் பொறிக்கப்பட்ட பெனியன்களுடனும் ஆண்கள் மத்தியில் உலாவர இவர்களைத் தவிர வேறெந்த ராசிப் பெண்ணுக்கும் துணிச்சல் கிடையாது!

ஆடையணிகள் மீது ஆவல் கொண்ட ஆண்கள் அபூர்வமாகத்தான் காணப்படுகின்றார்கள். அதிலும் தத்தம் அந்தஸ்துக்கும் தொழிலுக்கும் ஏற்றவாறு உடையணி யவேண்டிய நிர்ப்பந்தம்தான் இவ்விதம் நவம்நவமான ஆடையணிகளின் பக்கம் அவர்களது கவனத்தை திரும்ப வைக்கிறது. ஆனால் பெண்கள் விடயம் அப்படியல்ல. விதம் விதமாய், வண்ண வண்ணமாய் சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தக்கவாறு நாளுக்கொன்றாய், அல்லது ஒரே நாளில் பலவிதமாய் ஆடையணிந்து விதம் விதமான அழகோடு அசத்துவதில், அல்லது இவ்விதமான ஆடைகளின் மூலமாக தங்கள் அழகை விதம்விதமாய்க் காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான். ஆடையணியும் விடயத்தில் அடுத்தவரை மிஞ்சவேண்டுமென்றே ஒவ்வொரு பெண்ணும் விரும்புகிறாள்.

இவ்விதம் பெண்கள் அவரவரின் அழகுக்கும் உடலமைப்புக்கும் ஏற்றவாறு ஆடம்பரமாகவோ அல்லது எளிமையாகவோ உடையணிவதை சோதிடக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அவர்களையறியாமலேயே தங்கள் பிறந்த ராசியின் இயல்புக்கேற்பவே அணிகிறார்கள் என்பதை அறியலாம். இதனால் சோதிடத்தின் உண்மைத் தன்மையில் நமது நம்பிக்கை வலுவடைகிறது. இக்கட்டுரையானது ஒவ்வொரு ராசிப்பெண்ணும் எந்த விதத்தில், எப்படிப்பட்ட உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிகிறாள் என்பதை ஆராய்கிறது.

மேடம்

மேடராசியில் பிறந்த பெண்களுக்கு மிடுக்கும் முரட்டுத்தனமும் இயல்பானவை. தங்கள் உணர்வுகள் சீண்டப்படும் அல்லது தங்கள் சுய கௌரவத்திற்கு பங்கம் வரும் தருணங்களில் இந்த இயல்புகள் வெளிப்பட்டு இவர்களது சுயரூபங்களை இனங்காட்டுகின்றன. ஆயினும் அந்தந்தச் சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு நாசூக்காக நடக்கும் சமயோசிதம் மிக்கவர்கள். தங்களது தோற்றம் குறித்து அதிகமாகவே சிரத்தையெடுத்துக் கொள்ளும் இவர்கள், விசேட வைபவங்களுக்கோ, முக்கிய அலுவல்களுக்கோ செல்லும்போது பழசானாலும் விலையுயர்ந்த, அப்போதுதான் சலவை செய்யப்பட்டு வந்ததுபோன்ற மடிப்புக்குலையாத ஆடைகளையே அணிந்து செல்வார்கள். காலத்துக்கு காலம் புழக்கத்துக்குவரும் நவீன நாகரீக உடைகளை மற்றவர்களுக்கு முன் உடுத்தி அறிமுகப்படுத்துவதில் அலாதி விருப்பம் கொண்டவர்கள். எங்கே போனாலும் சுற்றியிருப்பவர்களை ஆடைகளாலும் நகைகளாலும் வசீகரிக்க வேண்டுமென்ற துடிப்புள்ளவர்கள். வாங்கின உடுப்புகளை எவ்வளவு காலம் சென்றாலும் புதுமை குறையாமல் பெட்டியில் பூட்டிவைத்து ஒரு புதையல்போல பாதுகாப்பார்கள். மற்றப்படி தாங்கள் உடுத்துக் கழித்ததை இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்கு வரவேவராது. எங்கே போனாலும் ஆடையணி விடயத்தில் தங்களைப் பார்த்து மற்றப் பெண்கள் பொறாமைப்பட வேண்டுமென்ற ஆசை இவர்களுக்கு நிரந்தரமானது. செந்நிறமும், அதன் பல்வேறு வகைகளும் கொண்ட ஆடைகளையே பிரதானமாக தெரிவு செய்வர். இந்த ராசியில் பிறந்த நாட்டுப்புறப்பெண்கள், கண்களை உறுத்துகிற மிட்டாய்க் கலர்ச்சிவப்பில் சேலையுடுத்துத்திரிவதில் அதிக விருப்பம் காட்டுவர்.

இடபம்

இடபராசிப் பெண்கள் கலைப்பிரியர்கள். விதவிதமான அலங்காரப் பொருட்களை வாங்குவதிலும் வீடு நிறைய அடுக்கிவைத்து அழகு பார்ப்பதிலும் ஆர்வமுள்ளவர்கள். ஆடைகள் மீதுள்ள ஆசையும் அப்படித்தான். அவர்களைப் பொறுத்த வரை ஆடையென்பது ஒருவெற்றிச் சின்னம்! சமூக மதிப்போ, வியாபார வெற்றியோ, தங்கள் திறமையால் மாத்திரமல்ல, அணியும் ஆடைகளிலும்தான் தங்கியுள்ளது என்பதை நம்புகிறவர்கள்.

உலகிலேயே செக்ஸியான உடையலங்காரம் “சாறியும் பிளவுஸும்” தான் என்பதை உலகிற்கு உணர்த்தியவர்கள் இந்த ராசிக்காரப் பெண்கள்தான்! உலகிலேயே திறமையான நவீன ஆடை வடிவமைப்பாளர்களும், அழகு நிலையம் நடத்துபவர்களும் இவர்களில்தான் அதிகமுள்ளனர்.

தங்களை இளமையாகவும் எடுப்பாகவும் காட்டக்கூடிய சல்வார் கம்மீஸ், மக்ஸி, பிஜாமா போன்ற உடைகளில் அதிக பிரியம் காட்டுவர். மங்கலத்தைக் குறிக்கும் குங்குமச் சிவப்பு இவர்களுக்கு மிகவும் பிடித்த நிறம். எந்த உடையணிந்தாலும் அதிலொரு பகுதியாக இந்நிறம் இருந்தே தீரும். பொதுவாக இடபராசி பொருள் சேகரம், பணம், போசனம் போன்றவற்றின் நிறைவைக் குறிப்பதாலும், இதன் அதிபதியான சுக்கிரன் அழகிற்கும் சுகபோகத்திற்கும் காரகனாவதாலும் இவர்களது போக்கு இப்படியிருக்கிறது.

மிதுனம்

எதிலும் பரபரப்புக் காட்டுபவர்கள் மிதுன ராசிப் பெண்கள். தங்கள் வேகத்துடன் ஈடுகொடுக்க அல்லது ஒத்துழைக்க முடியாதவர்களால் தங்கள் முன்னேற்றம் பாதிக்கப்படுவதாக குறை கூறுபவர்கள் ஒரு விடயத்தில் எந்தளவு தீவிரமாகக் கவரப்படுகிறார்களோ, அந்தளவு விரைவாக சலித்தும் விடுவார்கள்.

நல்ல நண்பர்கள் இவர்களுக்கு வாய்க்காமலிருப்பதற்கும், நட்பாக இருந்தவர்கள் நாளடைவில் விரோதிகளாக மாறிப்போவதற்கும் இவர்களது இந்த மனோ நிலைதான் காரணம்.

நட்பே இப்படியென்றால் காதல் விடயம் எப்படியிருக்கும்? இதனால்தான் மிதுனராசிப் பெண்கள் மணவாழ்விலும் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள்.

கூட்டங்களிலும் வைபவங்களிலும் தாமாகவே விரும்பிச் சென்று கலந்து கொள்ளும் சுபாவம் கொண்ட இவர்கள். அங்கே பலரினதும் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்வதற்கு ஒரு பம்பரச் சுழற்சியோடு ஓடியாடிக் காரிய மாற்றும் குணமும், அந்தந்த வேளைக்குத் தக்கவாறு அணியும் ஆடையணிகளுமே காரணமாகும். எந்தச் சந்தர்ப்பத்துக்கும் அணியவேண்டிய எல்லாவிதமான ஆடைகளும் இவர்களிடமிருக்கும். தத்தம் உடலமைப்புக்குப் பந்தமானவையாக, தங்களது ஓட்ட ஆட்டங்களுக்கு இடைஞ்சல் பண்ணாதவையாக இவர்களது ஆடைத்தெரிவு இருக்கும். எந்த ரகத்திலும் இருசோடி ஆடைகள் வைத்திருப்பாரே தவிர, அளவுக்கதிகமாக வாங்கிக் குவிக்கமாட்டார்கள். மஞ்சள் நிறத்தில் தனிப்பிரியம். கடுமையான நிறங்கள் கட்டோடு பிடிக்காது. நகைப்பித்துப்பிடித்த பெண்களை எள்ளிநகையாடுவதுபோல் உடைக்கேற்ற வண்ணங்களில் பிளாஸ்டிக் காதணிகள், போலி முத்துமாலைகள் அணிந்து கலக்குவர். அழகின் எளிமையை கவர்ச்சிகரமாகக் காட்டுவதில் இவர்களுக்கு நிகர்யாருமில்லை எனலாம்.

கடகம்

கடகராசிப் பெண்களுக்கு ஆடையணியும் விடயத்தில் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. பாரம்பரிய கலாசாரப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள், அன்னிய கலாசாரத்தின் வழிவந்த புரட்சிகரமான ஆடைமாற்றங்களை எதிர்ப்பவர்கள். பகட்டு, படாடோபம் பிடிக்காது. எளிமையான சாதாரண உடைகளையே விரும்பாவர்கள். நகைகள் அணியும் விடயத்திலும் எளிமையாக இருப்பார்களே தவிர, கிலோ கணக்கில் நகை சுமந்து கொலுப்பொம்மைகள்போல பிறர் பொறாமைப் படத்திரிவதை விரும்பமாட்டார்கள்.

திருமண வைபவங்களிலோ, கோயில் திருவிழாக்களிலோ, பொது வைபவங்களிலோ, சாஸ்திரத்திற்கு விரோதமாகச் சொல்லப்பட்டவைகளை இவர்கள் அணிவதை நாம்பார்க்க முடியாது. பச்சைப் பசேலென்ற பசும் வண்ணத்தின் பற்பல வகைகள் இவர்களுக்குப் பிடிக்கும். வெள்ளையில் பச்சைக்கரை வைத்த, அல்லது பச்சையில் வெள்ளைப் பூக்கள் வைத்த உடைகளில் தனிவிருப்பம் காட்டுவர்.

சிம்மம்

சிம்ம ராசிப் பெண்களை சர்வாலங்கார பூஜிதைகளாக, சிங்காரப் பதுமைகளாக விழாக்களிலும் வைபவங்களிலும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் அழகைப் பார்த்துவிட்டு, பின்னால் அவர்களது காரியாலயங்களிலோ, அன்றி வீடுகளிலோ அவர்களைக் காணநேர்ந்தால் அதிசயப்பட்டுத்தான் போவீர்கள்! ஆமாம். அங்கெல்லாம் ஆடம்பரத்தின் உச்சத்தில் இருந்தவர்கள். இங்கே சாதாரணத்தின் அடிமட்டத்தில் மிக எளிமையாகக் காட்சி தருவார்கள்.

வீட்டிலென்றால் பெண்கள் எல்லோரும் சாதாரணமாகத் தானே இருப்பார்கள் என்று கேள்வி எழுப்ப வேண்டாம்!

வீட்டிலே கூட பட்டுப்புடவையைக் கழற்றாமல் பகட்டோடு அர்த்தராத்திரியிலும் குடைபிடித்து உலாவுகிற எத்தனையோ பெண்களைத்தான் நாம் பார்க்கிறோமே?

ஆடையலங்காரம் ஆடம்பரம் என்பதெல்லாம் அவ்வப்போது நாம் போடுகிற வேஷங்கள் என்று சொல்வது போலிருக்கும் இந்த சிம்மராசிப் பெண்களின் நடவடிக்கைகள், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்றவாறு கம்பீரமாக, படாடோபமாக, நளினமாக, அந்தஸ்தை எடுத்துக்காட்டும்படியான ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்து கொண்டு கூட்டத்தையே ஒரு கலக்குக் கலக்கிவிட்டு வெளியேறுவார்கள். தாம் கலந்து கொண்டு விட்டு வெளியேற நேர்ந்தால், அக்கூட்டத்தில் தங்களது வெறுமையை உணரவைக்கிற தன்மை மற்ற ராசிப் பெண்கள் மத்தியில் சிம்மராசிப் பெண்களுக்கு மட்டுமேயுண்டு. அப்படிப்பட்டதொரு ஆளுமைக் கொண்டவர்கள் அவர்கள்!

இந்த ஆளுமை இருவகைப்படும். ஒன்று – எல்லையற்ற கருணையால் உள்ளங்களைக் கட்டிப்போடுகிற ஆளுமை; அதாவது அன்னை தெரேசா போல் அவரும் சிம்மராசி! மற்றது, அகந்தையால் மற்றவர்களை தன்னடிப்படுத்துகிற ஆளுமை; அதாவது, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா போல! இவரும் சிம்மராசி! ஆடையணிகளால் இவர்களுக்குக் கிடைக்கும் மதிப்பும் பெருமையும் மற்றவர்களது மனங்களில் பொறாமையைத் தூண்டுவதாக இருக்கும்.

ஆடைகள் மாத்திரமல்ல, அவற்றிற்குப் பொருத்தமான ஒளி வீசும் வைரங்கள், இரத்தினங்கள் பதித்த ஆபரணங்களை அணிந்து கொள்வதிலும் பெருவிருப்பம் காட்டுவர். ஆடம்பரமான பாதணிகளையும் விதம்விதமாக வைத்திருப்பர்.

இவர்கள் தேர்ந்தெடுக்கும் அல்லது வடிவமைக்கும் டிசைன்களில் இவர்களது தனித்தன்மை, சுயத்தன்மை வெளிப்படும். பளபளக்கும் பொன்நிறம், ஒரேஞ்ச், சிவப்பு நிறச்சாறிகள், சட்டைகள் மீது தனிப்பிரியம் காட்டுவர்.

கன்னி

கன்னிராசிப் பெண்கள் நிறத்தையும் பகட்டையும் பொருட்படுத்தாமல் துணியின் தரத்தைப் பார்த்தே ஆடையைத் தேர்ந்தெடுப்பர். தேவைப்பட்டால்தான் வாங்குவார்கள். தேவைக்கு மேல் ஆடைகளை வாங்கி அடுக்கும் ஆசையெல்லாம் கிடையாது. டாம்பீகச் செலவுகளுக்கும் இடம் வைப்பதில்லை. கடன் வாங்கி உடுக்கும் பழக்கமுமிராது. தையல் விடயத்தில் அதிக கவனம் செலுத்துவர். காலத்துக்கேற்ற பாஷன்கள், விதம் விதமான பூவேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களில் பெரும்பாலோர் திறமையான தையல்காரிகளே! அந்தந்த வைபவங்கள், விசேடங்களுக்கு ஏற்ற ஆடையணிகள் கைவசமில்லாவிட்டால் அவற்றில் கலந்து கொள்வதைத் தவிர்ப்பார்கள். ஆடையை விட கூந்தலை விதம்விதமாய் அலங்கரித்துக் கொள்வதில் அலாதிவிருப்பமிருக்கும். பச்சையும் அதன் பல்வேறு நிறங்களுமே பிடித்தமானவை. ஒரு துணிக்காக ஒன்பது கடைகள் ஏறியிறங்குவர். ஆடைகளை பேரம்பேசி பாதிவிலைக்கே வாங்கிவிடும் சாமர்த்தியத்தை இவர்களிடம் தான் மற்றவர்கள் கற்க வேண்டும். கூடியவரை தங்களுடையதை தாங்களே தைத்தும் கொள்வார்கள்.

துலாம்

துலாராசியில் பிறந்த பெண்களுக்கு ஆடைகள் தெரிவு செய்யும் விடயத்தில் நிறமும் பொருத்தமும்தான் (Matching) பிரதானம். இயற்கையிலேயே கலையுள்ளம் படைத்தவர்கள். சங்கீதம், நடனம், நடிப்பு என்று இவ்வுலகில் பிரபல்யம் பெற்ற பெண்மணிகள் பெரும்பாலும் துலாராசிக்காரர்களாகவே இருப்பர். அழகுணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களுக்கு, அந்தந்த கால கட்டத்திற்கேற்ற பாஷன், ஸ்டைல் என்பன இரண்டாம் பட்சமானவை. சீராக, அழகாக, ஒழுங்காக, அதுவும் Match ஆக அணிவதே இவர்களுக்கு திருப்தியளிக்கக் கூடியது. (தொடரும்...)

ஏனென்றால் பிறவியிலேயே அழகு இவர்களுடன் ஒட்டிப்பிறந்தது. அழகுக்கு உதாரணமாக கும்பராசிப் பெண்களையே கூறுவார்கள். பெரும்பாலும் அவர்கள் மாதிரியே இவர்களும் கட்டுடலும் காந்தப்பார்வையும் கொண்டிருப்பர், அழகே வடிவமாக இருக்கையில், அதனை கவர்ச்சிகரமாக வெளிக்காட்டும் ஆடையில் அலட்சியம் காட்டலாமா? இவர்களில் ‘நீக்ரோ’ போன்ற தனிக்கறுப்பிகள் கூட கருங்காலிக் கட்டையில் கடைந்தெடுத்த சிற்பங்கள் மாதிரிதனிக் கவர்ச்சியோடு விளங்குவார்கள்.

ஒரு சமயம் உடுத்த ஆடையை மறுபடியும் உடுத்த மாட்டார்கள். உடம்பிலும் உடையிலும் அடிக்கடி சுத்தம் பேணுவர். ஆடைகள் சிறிது கசங்கியோ கறைபடிந்தோ இருக்கக் கூடாது. ஆபரணங்களைக் கூட அடையலங்காரத்திற்குப் பொருத்தமாக எளிமையாக அணிவர். இவர்ளது ஒப்பனைகள் கூட இயற்கை எழுதுவித்த சித்திரம்போல அழகாக, இயல்பாக இருக்கும். சிவப்பும் பச்சையுமே பிடித்த நிறங்கள். இவற்றினிடையே ஒருமாறுதலுக்காக இவர்கள் விரும்பும் நிறம் கறுப்பு. ஏனென்றால் கறுப்பு நிறம் கொண்டசனி, துலாராசிக்கு அதிபதியான சுக்கிரனுக்கு நெருங்கிய நட்புக்கிரகமாகி துலாவில் உச்சமும் பெறுகிறதல்லவா? அது தான் காரணம்!

விருச்சிகம்

விருச்சிகராசிப் பெண்கள் அணியும் ஆடையணிகளில் அவர்களது தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் காண முடியும்.

ஒரு காலத்தில் மொழுமொழுவென்று ஒரு சாணுக்குமேல் தொடைகள் தெரிய அணியும் ‘மினிஸ்கேட்’ என்ற ஆடைய உலகிற்கு அறிமுகப்படுத்திய துணிச்சல்காரிகள் இந்த ராசிப் பெண்களாகவே இருக்க வேண்டும்! அந்தளவுக்கு வீட்டினுள்ளே பெண்னைப் பூட்டிவைக்கும் விந்தை மனிதர்களை தலைகுனியவைக்கும் புரட்சிகர சிந்தனையுடையவர்களே! கலாசார பண்பாடுகள் பற்றிய மற்றவர்களின் ஏச்சுப் பேச்சுக்கும் பயப்படாமல், பகட்டான, வாசனைத் திரவியங்கள் கமகமக்க, குதியுயர்ந்த செருப்புகள் குதிரையின் குளம்பொலிபோல் சப்திக்க, ஒரு துச்சமான பார்வையுடன் மிடுக்காக வலம் வருவார்கள். ஆடைகளைவிட ஒரு சுயமான காந்த சக்தியாலே ஆண்களை ஈர்க்கும் தன்மை படைத்தவர்கள். உதாரணம் – முன்னாள் உலக அழகு ராணி ஐஸ்வர்யாராய், நடிகைகள் ஸ்ரேயா ரெட்டி, தமன்னா போன்றோர். இவர்களெல்லாம் விருச்சிகராசியினர். இவர்கள் அணிந்து திரியும் விதவித வடிவமைப்பிலான ஆடைகளைக் கவனித்தால், அவற்றைத் தைக்க தையல்காரர்களை எவ்வளவு பாடுபடுத்தி வேலை வாங்கியிருப்பார்களோவென்று மலைக்கத்தோன்றும்! கூட்டங்களில், வைபவங்களில் கலந்து கொள்ளும்போது யாரிடமும் ஒட்டாமல் தனித்திருப்பதை தங்களது தனித்த ஆளுமையாக கருதுவர். யாரையோ குறிப்பாக தேடுவதுபோல் சுழலும் அவர்களது விழிகளில் ஒரு புத்திசாலித்தனம் தெரியும். சிவப்பு, மரூன், கறுப்பு நிற ஆடைகளையே அதிகமாக விரும்பி அணிவர். போலிமுத்துக்கள், பிளாஸ்டிக் நகைகள் என்பன தாம் பிறவியெடுத்த பயனை எய்துவது இவர்கள் அணிவதால்தான் மற்றப்படி தங்க, வைரநகைகளில் ஆர்வம் குறைவு.

தனுசு

தனுராசிப் பெண்களுக்கு ஆடைகள் பற்றிய எல்லாவிடயங்களுமே அத்துபடி. அவர்களது பீரோக்களில் சேலைகளும் ரவிக்கைகளும், பாவாடை தாவணிகளும் தான் நிறைந்திருக்குமென எதிர்பார்த்தால் ஏமாந்துதான் போவீர்கள்! அவைகளும் இருக்கும்; அவற்றுக்குச் சமமாக நிறைய ரீசேர்ட்டுக்களும் காற்சட்டைகளும் கவுண்களுமே காணப்படும். விதம் விதமான பாதணிகளும் வைத்திருப்பர். அவைகளெல்லாம் விளையாட்டு வீரர்களுக்குரியமை. இவர்களும் அப்படித்தான். இந்த உடையலங்காரங்களுடன்தான் அன்றாடக் கடமைகளோ, கல்வியோ, தொழிலோ நடக்கும். பின்னரேமானால் பாடசாலையிலோ, வீதியிலோ, மைதானத்திலோ ஓட்டம் பழகிக் கொண்டிருப்பர். டென்னிஸ், கூடைப்பந்தாட்டமென்று பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.

பெண்பிள்ளைகளுக்குரிய அடிக்கவொடுக்கமின்றி வீதியிலும் வெளியிலும் கவடிப்பாய்ந்து திரிவதால்தான் இவர்களுக்கு ‘ஆண்மாரிகள்’ என்ற செல்லப்பெயர் ஊருக்குள் இருக்கும். சுதந்திர உணர்வு மிகுந்தவர்கள். துணிச்சல் கூடப் பிறந்தது, ஓட்டம், நீச்சல், உயரப்பாய்தல் போன்ற விளையாட்டுக்களில் முன்னணி வகிப்பவர்களும் ஜூடோ, கராட்டி பயிற்சிகளில் ஈடுபடுபவர்ளும் பெரும்பாலும் தனுராசிப் பெண்களாகவே இருப்பர். (இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா. விண்கலம் வெடித்து உயிரிழந்த அமெரிக்க விஞ்ஞானி கல்பனா சாவ்லா, இலங்கையின் ஓட்ட வீராங்கனை சுசந்திக்கா ஆகியோரெல்லாம் தனுராசிக்காரர்கள்) இவர்களது உறுதியான உடலமைப்பையும் கம்பீரத்தையும் அவதானித்தால் இது விளங்கிவிடும்

அது மாத்திரமல்ல, Try me , Press me, Touch me Dare you (துணிவிருந்தால் என்னைத் தொடு) என்ற வாசகங்கள் மார்பில் பொறிக்கப்பட்ட பனியன்கள் அணிந்து, நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையும் யாருக்கும் அஞ்சாத துணிச்சலும் கொண்டவர்களாக இளைஞர்கள் மத்தியில் உலாவரும் தைரியம் இவர்களுக்குத்தான் உண்டு. இது விடயத்தில் பெரியவர்களின் புத்திமதி, கண்டிப்பு இவர்களுக்குத் துச்சம்!

சேலை, பாவாடை தாவணியெல்லாம் இவர்களுக்கு கோயிலுக்கும் கல்யாணத்துக்கும் போவதற்கு மட்டும்தான். வீட்டிலிருக்கப் பிரியப்படாமல் சைக்கிளில் ஊர் சுற்றுவதும் பிக்னிக், சுற்றுலா என்று ஊருக்கு ஊர் அலைந்து திரிவதும் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். விதம் விதமான பிரயாணப்பைகள், பிரீவ் கேசுகள் சேகரிப்பதிலும் ஆர்வம் காட்டுவர். நீலநிறத்தின் பலவிதங்கள், ஊதா (Purple) நிறம் ஆகியவற்றில் பிரதானமாக இவர்களது ஆடைத்தெரிவு இருக்கும்!

மகரம்

இயல்பாகவே தங்களில் ஏதோவொரு திறமையை வைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் அசத்துபவர்கள் மகரராசிப் பெண்கள், சமையலோ, எழுத்தோ, நடனமோ, நடிப்போ, அரசியலோ, எதில் ஈடுபட்டாலும் இவர்களுக்கென்று தனி முத்திரையிருக்கும் அன்றைய இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, இந்திய பின்னணிப் பாடகி லதா மங்கேஸ்வர், பானுமதி, முதற் கொண்டு இன்றைய சின்னக்குயில் சித்ரா, நடிகைகள் ஜோதிகா, சினேகா, அனுஷ்கா, அமலாபோல் ஆகியோரெல்லாம் மகர ராசியினரே. இவர்களெல்லாம் தங்கள் துறைகளில் எப்படியெல்லாம் அசத்தினார்கள், அசத்துகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்! கர்வம் இவர்கள் கூடப்பிறந்தது. எதிர்ப்புகள், பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் இவர்களது திறமையும் தைரியமும் பிரகாசித்து இவர்களை இனம் காட்டும்.

ஆடை விடயத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இவர்களுக்குக் கிடையாது. அந்தந்த வேளைகளில் எது தயாராக உள்ளதோ, எது வசதியாகப் படுகிறதோ, அதையே அணிந்து தயாராகிவிடுவார்கள். இவர்களில் பிரபலமான ஒருவர் சாதாரணமாக அணிந்து தோன்றும் ஆடையணியே அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மத்தியில் பாஷன் (Fashion) ஆகிவிடுவதுதான் வேடிக்கை!

இவர்களில் நடுத்தரவர்க்க அல்லது அடித்தட்டுவர்க்கப் பெண்களுக்கு மற்றவர்கள் முன் தங்களை அந்தஸ்தில் உயர்ந்தவர்களென்று காட்ட வேண்டுமென்று ஆசையுண்டு. அதற்காக அன்றாட வருவாயில் மிச்சம் பிடித்து சிறுகச் சிறுகச் சேமித்து உயர்ரக ஆடைகளை வாங்கிவிடுவார்கள். கடனுக்கு ஆடைவாங்கி, பின்னர் தவனை முறையில் அதற்குப்பணம் கட்டும் வழக்கத்தை ஆரம்பித்தவர்கள் இந்த ராசிக்காரப் பெண்களென்றே கூறவேண்டும்.

அணியும் ஆடை அமைப்புகளில் இவர்களது புத்திசாலித்தனம் தெரியும்! எதிலும் எளிமையாக விளங்குவது இவர்களிடமிருந்து இதர பெண்கள் படிக்க வேண்டிய விடயம். ஆடையணியும் விடயத்தில் பிறர் தமக்கு புத்திமதி கூறுவது பிடிக்காது. இவர்களது புத்தி சொல்லப்போக மாட்டார்கள். ஆபரணங்கள் அணிவதில் அக்கறை காட்டுவதில்லை. சிதோஷ்ண நிலைக்கேற்ப கம்பளி, சுவெட்டர் அணியும் வழக்கம் இதர ராசிக்காரர்களில் இவர்களிடம் மட்டுமேயுண்டு. அரக்குப் பச்சை, வெள்ளை, கறுப்பு நிற ஆடைகளே இவர்களிடம் அதிகமிருக்கும். அவைகளிலே அலாதிப் பிரியம் காட்டுவர்.

கும்பம்

கும்பராசிப் பெண்கள் பிறவியிலேயே வசீகரமான முகமும், உடலழகும் அமையப்பெற்றவர்கள், அதனால் இவர்கள் ஆடைகளைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை. ஓர் ஆடையோ, சேலையோ அழகுபெறுவதும், தமது பிறவிப் பயனை அடைவதும் தாங்கள் அணிவதால்தான் என்ற இறுமாப்பு இவர்களிடமுண்டு. கூடுமானவரை தங்களுடையதை தாங்களே தைத்துக் கொள்வார்கள்.

ஸ்வெட்டர் பின்னுவது, ஆடைகள், தலையணை உறைகள், கைக்குட்டைகள், நாற்காலி உறைகள் போன்றவற்றில் பூவேலைப்பாடுகள் செய்வது என்று வீட்டிலிருக்கும் பொழுதெல்லாம் சதா ஊசிநூலும் கையுமாகவே இவர்களைக் காணலாம். இவர்களது வீடுகளில் உள்ளக அலங்காரங்கள். கலைப்பொருட்கள், மற்றும் பூச்சாடி அலங்காரங்கள் பிரமாதமாகவிருக்கும். விருந்தினர்களின் பாராட்டுக் களைப்பெறும்.

நைச்சியமாகப் பேசி ஆடைகளை விலை குறைத்து வாங்குவதல் இவர்கள் சமர்த்தர்கள். அதற்காக எத்தனை கடைகளும் ஏறியிறங்குவார்கள். ஒரு துணியைத் தெரிவு செய்வதற்காக ஒரு கடையையே தடம் புரட்டுவார்கள். அதிகவிலை கொடுத்து சேலை சட்டைகளை வாங்கி அனுமாரியில் அடுக்கிவைப்பார்களே தவிர, அவற்றை அணிவது எப்போதாவது ஒரு தடவைதான். புடவைகள் நகைகளை பல நாட்கள் வரை புதையல் போல் பூட்டி வைத்து அழகு பார்ப்பதில் இவர்களத் மேடராசிப் பெண்களையும் மிஞ்சிவிடுவார்கள்.

தங்கள் அழகு குறித்து அகந்தையுடையவர்களே தவிர, இவர்கள் ஆடையணியும் விதம் மற்றப்பெண்களால் விமர்சிக்கப்படும். என்ன இருந்தாலும் ஓர் இளம் பெண் அணியும் ஆடை ஒரு வயதான பெண்ணுக்குப் பொருந்துமா? அதுபோலதான் இவர்களும் சந்தர்ப்ப சூழ்நிலை தெரியாமல் தங்கள் வயதுக்கோ, உடலமைப்புக்கோ பொருத்தமற்ற உடைகளை அணிந்து கேலிக்கு உள்ளாகின்றனர். இன்ன சாறிக்கு இன்ன பிளவுஸ்தான் பொருத்தமென்று அணியும் ஒருவரை முறையும் இவர்களிடமில்லை. அத்துடன் நகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அணியும் பழக்கமும் கிடையாது. கடும் நீலத்திலிருந்து Sky blue, Royal Blue வண்ணங்களும், நரை நிங்களும் (GREY) ஆடைத் தெரிவுக்களில் இவர்களுக்கு விருப்பமான நிறங்களாக இருக்கம். பரவிலாக இந்நிறங்கள் யாவும் கலந்த ஆடைகளில் பெருவிருப்பம் காட்டுவர்.

மீனம்

மீனராசிப் பெண்களுக்கு எதிலும் கொஞ்சம் ஆழமாக யோசித்து நிலைமைகளை புரிந்து கொள்ளும் தன்னை குறைவு. எதிலும் உணர்ச்சிக்கே முதலிடம். அறிவு இரண்டாம் பட்சமே. அதனாற்றான் சண்டைக்காரிகள் என்றும் பேரெடுக்கிறார்கள். எதிர் கொள்ளும் எந்தப் பிரச்சினையிலும் அடுத்தவர் மேல் பழியைப் போட்டு தாங்கள் தப்பிக்க முயற்சிக்கிறார்கள்.

மீனத்துக்கு அதிபதி ஆண்கிரகமான வியாழன்; பூரண சுபக் கிரகம். இணைந்து நின்றும், பார்வையாலும் பாவக்கிரங்களின் தோஷங்களைப் போக்குகிறவர். வியாழன் நல்லாசிரியனாகவும், மீனம் பெண்ராசியாகவும் இருப்பதால், இந்த ராசிப்பெண்கள் இயல்பிலேயே பெண்மையின் அகை, நளினம், எளிமை, பணிவு போன்றவைகளை வெளிப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.

என்னதான் வீராப்பும் கதைத்தாலும் அடுத்தவரின் துன்ப துயரங்களில் உருகிப்போகிற மனம் இவர்களுடையது. உதவியென்று இவர்களது காலடிக்குப்போய் விட்டால், அவர் எத்தகைய வேண்டாதவராக இருப்பினும் குற்றங்களை மறந்து ஓடியோடி உதவுவார்கள்.

ஆடையணிகளில் விசேடமான ஆர்வமெல்லாம் இவர்களுக்குக் கிடையாது. மற்றவர்கள் மத்தியில் மதிப்போடு நடமாட என்னென்ன ஆடையணிகள் தேவையோ, அவைகளை மாத்திரம் சேகரித்து வைத்திருப்பர். குடும்பத்தலைவிகளாயின் கலாசார சின்னங்களான கூறை, தாலி, மோதிரம், வளையல்கள், கொலுசு, மெட்டி என்பன இவர்களுக்கு முக்கியம்.

பளபளக்கும் சரிகை வேலைப்பாடுகள்ள BATIK ஆடைகள் அணிவதில் வெகு பிரியம் காட்டுவர். வான வில்லின் வர்ணங்கள் கலந்த ஆடைகளிலும், தனிமஞ்சள், சிவப்பு, ஊதாநிற உடைகளிலும் ஆர்வம் காட்டுவர். மற்றப்படி இன்ன நிறம் மட்டும்தான் முக்கியம் என்ற நிலைப்பாடெல்லாம் இவர்களுக்குக் கிடையாது. விதம் விதமான காலணிகளிலும் பலகோடிகள் வைத்திருப்பர்.

திருவோணம்

Comments