தமிழக அரசியலுக்கு ரஜினி பொருத்தமானவர்தானா? | தினகரன் வாரமஞ்சரி

தமிழக அரசியலுக்கு ரஜினி பொருத்தமானவர்தானா?

‘நடிகர்,

அரசியல்வாதி ஆகிய முகங்களை சென்னை விமான நிலையத்தில் துறந்த ரஜினிகாந்த், பெருங் கோடீஸ்வரரும் உலகப் புகழ்பெற்றவரும் மற்றும் செல்வாக்கான வர்த்தகருமான சிவாஜிராவை அங்கே முன்னிருத்தியபோது, அவர் பற்றிய மாயப்பிம்பங்கள் நொறுக்கிப் போயின’ 

இப்போது எழுந்துள்ள கேள்வியெல்லாம், கடந்த புதன்கிழமை ரஜினிகாந்த் தூத்துக்குடிக்குச் சென்று, ஸ்டெர்லைட் போராட்டத்தில் பொலிஸ் தாக்குதலில் காயடைந்தவர்களைப் பார்த்ததும், ஆவேசமாக பேசியதும், எதிர்வரும் ஏழாம் திகதி உலகெங்கும் திரையிடப்படவிருக்கும் காலா திரைப்படத்துக்காக இலவச எதிர்மறை விளம்பரத்துக்காகவா அல்லது அரசியல் அனுபவ குறைபாட்டால் தவறாகக் கையாண்டு, விஷயம் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையா என்பதுதான்.

ஏனெனில் தூத்துக்குடியில் போராட்டத்தை கொச்சைபபடுத்துகின்ற மாதிரி பேசிய ரஜினி, பின்னர் சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுடன் உரையாடும் போது நிதானம் இழந்து சுட்டு விரல் நீட்டி ஒருமையில் விளித்து, தன்னுடைய இன்னொரு பிம்பத்தை வெளிப்படுத்தியதன் மூலம், சர்ச்சையின் நாயகனாகிப் போனார். கடந்த 30ம் திகதி தூத்துக்குடியில் நிகழ்ந்தவை ஏற்கனவே திட்டமிட்டதாக இருக்குமானால் அது அவரது வழமையான விற்பனைத் தந்திரம் தான் என்று நாம் முடிவுகட்டி விடலாம். ஏனெனில் தொடர்ச்சியாக அவர், ஒவ்வொருபடத்தை வெளியிடும் போதும் தனது படம் ஓடி வசூலை வாரிக்குவிக்க வேண்டும் என்பதற்காக மிகவும் பிரயத்தனம் செய்வது வழக்கம். அவரது படங்களும் அப்படித்தான், பார்த்தோம், கை தட்டி குதூகலித்தோம், மறந்து போனோம் என்பதாகவே இருக்கும். எனினும் சில விதிவிலக்குகள் – ஆறில் இருந்து அறுபது வரை, ஸ்ரீ ராகவேந்திரர், முள்ளும் மலரும், 16 வயதினிலே, மூன்று முடிச்சு – உள்ளன என்பது உண்மையானாலும் பிற்காலத்தில் அவர் ஒரு சுப்பர்மேன் பிம்பத்துக்குள ஆட்பட்டு, அதில் இருந்து வெளிவர முடியாத நிலையில் இருந்து வருகிறார். அவருக்கு அரசியலில் நிச்சயமாக ஒரு இடம் இருந்த சமயத்தில், அதாவது தொண்ணூறுகளில் – ரஜினி அதைப் பயன்படுத்தி அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஜெயலலிதாவும், கலைஞரும் அரசியலில் இல்லாத நிலையில் அந்த இடத்தை இப்போது ரஜினியும் கமலும் இட்டு நிரம்ப முயற்சிப்பதுபோலவே, ரஜினிக்கு இருந்த இடத்தை அப்போது விஜயகாந்த் இட்டு நிரப்ப முன்வந்தார்.

பத்து சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கவும் செய்தார். ஆனால் அவரது தனிப்பட்ட பலவீனங்கள் காரணமாகவே அவர் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமற் போனதே தவிர, அவருக்கெண ஒரு இடம் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

அவரது மனைவி பிரேமலதா, நல்லதொரு பிரசார பீரங்கியாக செயற்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்ட ரஜினி, வயதான நிலையில், அடிக்கடி மருத்துவத்துக்காக அமெரிக்கா செல்ல வேண்டிய நிலையில், தமிழகம் போன்ற ஒரு விசாலமான மாநிலத்தில் சுற்றிச் சுழன்று பலவித நெருக்கடிகளைச் சந்தித்து பணியாற்ற வேண்டிய அரசியலில் தாக்குப் பிடிக்கக் கூடியவரா? என்ற கேள்வி பலர் மனதில் எழவே செய்கிறது. அவரது ரசிகர்களில் கணிசமானோர், இது ரஜினிக்குத் தேவையற்ற வேலை என்ற கருத்தையே கொண்டுள்ளனர்.

அரசியலில் வெற்றி பெறுவதற்கு ஒரு மாநிலத்தின் மொழியில் நல்ல அறிவும், உச்சரித்து பேசும் ஆற்றலும் மிக முக்கியம். கன்னடத்தில் ‘மாட்டலாட’ (உரையாடுவதற்கு) முடியாவிட்டால் கன்னடத்தில் அரசியல் செய்ய முடியாது. மலையாளத்தில் ‘பறை’யத் தெரியாவிட்டால் கேரள அரசியலில் இறங்க முடியாது. எம்.ஜி.ஆருக்கு தமிழ் நன்றாகவே கைவந்தது. தமிழ் படங்களில் நடிக்கும் விஷால், அர்ஜூன், பிரகாஷ்ராஜ் போன்ற தமிழர் அல்லாத நடிகர்கள் தெளிவாகத் தமிழ் பேசுபவர்கள். ஆனால் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் படங்களில் நடித்து சுப்பர்ஸ்டாராகத் திகழும், சென்னையிலேயே வாழும் ரஜினி இன்றைக்கும் தமிழில் ‘மாட்டலாட’ சிரமப்படுவது விந்தையானது. நமது எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை தெரியாத சிங்களவர்களுக்கும் மனோ கணேசனைத் தெரிகிறது என்றால் அதற்கான பிரதான காரணம், தமிழில் பேசும் அதே வேகம் மற்றும் உடல் மொழிகளுடன் அவரால் சிங்களத்திலும் ‘கதாகரண்ட் புளுவன்’ என்பதால் தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ரஜினி கடித்துக் குதறி தன் வசனங்களைப் படங்களில் பேசுவதை ரசிகர்கள் ‘ஸ்டைல்’ என்று ஏற்றுக் கொண்டு ஆரவாரிப்பது வேறு, ஒரு மேடையில் ஏறி மக்களுடன், மக்களுக்காக, அவர்களுக்கு புரிகின்ற வகையில் பிரச்சினைகளை எடுத்துப் பேசுவது வேறு. ரஜினிக்கு அந்த மேடைத் தமிழ் வரவில்லை. பொலிஸார் பிடித்துக் கொண்டு போனார்கள் என்பதை ‘பொலிஸ் புச்சிட்டு போனாஸ்’ என்று தூத்துக்குடியில் உச்சரிப்பதைக் கேட்டோம். அவரால் கோர்வையாகத் தமிழில் பேச முடியவில்லை. ஒரு விஷயத்தை புரிய வைக்கும் வகையில் பேசத் தெரியவில்லை. அவர்பேச்சை, தலைவா! என அவரைத் தொழுதுகொண்டிருக்கும் ரசிகர்களுக்கு வேண்டுமானால் கேட்டுக்கொண்டிருக்கலாம். அவர் என்ன சொல்கிறார் என்பதை புரிய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. ஒரு கட்சியின் தலைவர், சட்ட சபை உறுப்பினர், முதலமைச்சர் என்ற வகையில் தமிழைக் கடித்துக் குதறிக் கெண்டிருந்தால், நாட்டு நிர்வாகம் எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்!

அடுத்தது, ரஜினிக்கு தூத்துக்குடியிலும், சென்னை விமான நிலையத்திலும் வந்த கோபம்! இரண்டாவது போராட்ட களத்தில் இருந்தபடி பொலிஸ்காரர்களுக்காக பரிந்துபேசி நியாயம் கற்பிக்கும் அவரது போக்கு! இவை இரண்டுமே அரசியல் சாதூரியமற்ற அணுகுமுறைகள்.

எல்லா அரசியல்வாதிகளும் சாதுவானவர்கள் அல்ல. நேருஜியும், இந்திராவும் முன்கோபக்காரர்கள். மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பெரிய மனிதர்களுக்கு கோபம் சட்டென மூக்கு நுனியில் தொற்றிக் கொள்வது சகஜமே. ஆனால் எந்தவொரு அரசியல்வாதியும், பொதுமக்களிடம், பொது வெளியில் நமது விஜயகாந்தைப்போல கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.

அது மிக மோசமான பிம்பச் சிதைவை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஒரு அரசியல் தலைவரின் நெருக்கமான வலயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தலைவர் எவ்வளவு கடுப்பு காட்டக் கூடியவர், சீறிப்பாயக்கூடியவர் என்பது தெரியும்.

இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாதவராக சென்னைவிமான நிலையத்தில் ரஜினி ஊடகவியலாளர்களுடன் நடந்து கொண்டார். இத்தனைக்கும் ஊடகவியலாளர்கள் ஒன்றும் அவரை ஆத்திரமூட்டும் வகையில் கேள்வி கேட்கவும் இல்லை. பொலிஸ்காரர்களுக்கு ஆதரவாக பேசுகிறீர்களே! என்று கேட்டபோதுதான் அவர் நிதானம் இழந்தார்.

அவரது கோபத்துக்கு காரணம் இருக்கிறது. ஏனெனில் தூத்துக்குடியில் காயமடைந்தவர்களைக் காணச் சென்றிருந்தபோது காயமடைந்த சந்தோஷ்குமார் என்ற இளைஞர் அவரைப் பார்த்து, நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டார். அதிர்ச்சியடைந்த ரஜினி, நான் ரஜினிகாந்த், சென்னையில் இருந்து வருகிறேன் என்று சமாளிக்க, அந்த இளைஞர், சென்னையில் இருந்து வர நூறு நாட்கள் எடுக்குமா? என அப்பாவித்தனமாக திரும்பவும் கேட்க, விஷயம் விபரீதம் என்பதைப் புரிந்து கொண்ட ரஜினி, அசட்டு சிரிப்புடன் அப்பால் நகர்ந்தார். நாங்கள் நூறு நாட்களாக இங்கே அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்க நீங்கள் அப்போதெல்லாம் எங்கே சென்றிருந்தீர்கள்? எங்களுக்கு நேரடி ஆதரவு தந்திருந்தால் இவ்வளவு விபரீதங்களை சந்தித்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது அல்லவா? என்பது தான் சந்தோஷ்குமார் சொல்ல வந்த விடயம். தமிழக முதல்வர் இன்றைக்கும் தன் தூத்துக்குடி விஷயத்தைத் தவிர்த்து வருவதற்கும் இதுதான் காரணம். பிய்த்து எடுத்துவிடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.

அவரது 30 வருட அனுபவத்தில் எவருமே ரஜினியை இப்படி அவமானப்படுத்தியிருக்க மாட்டார்கள். அந்த ஆத்திரத்துடன் சென்னை வந்தபோதுதான், தூத்துக்குடியில் நடந்தவற்றை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் அவை தொடர்பாகக் கேள்வி கேட்கப்போக, நிதானமிழந்தார் ரஜினி. நடிகராகவும் அரசியல்வாதியாக இல்லாமல் உலகப் பிரபலங்களுடன் பழகக்கூடிய, பெருங்கோடீஸ்வரரும் வர்த்தகப்புள்ளியுமான 'சிவாஜிராவ்' சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் முன் வெளிப்பட்டு நின்று, தன் ரஜினி பிம்பத்தை நொறுக்கித் தள்ளியதைப்பார்த்தோம். ரஜினி.

கையை நீட்டியும், சுட்டுவிரல் காட்டிப் பேசுவதும் நாகரிமற்ற பழக்கம். கையை நீட்டி சுட்டிக்காட்டி பேச வேண்டிய தருணங்களில் ஐந்து விரல்களையும் நீட்டிப்பேசுவதே சரியானது. பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள். இது சமூக நாகரிகம். செல்வந்தர்களும் செல்வாக்கானவர்களும் இவ்வாறான விடயங்களிலும் வெகு ஜாக்கிரதையாக இருப்பார்கள். ஆனால் சிவாஜிராவ் என்பவர் அதே பழைய மனிதர்தான் என்பதை ரஜினி வெளிக்காட்டி இருப்பதாகவே பலரும் கருதுகிறார்கள்.

விஷயம் இதுதான். ஒரு சாதாரண விஷயத்துக்கு இப்படி ‘டென்ஷன்’ ஆகக்கூடிய ஒருவர் எப்படி தமிழக அரசியலை கையாளப்போகிறார்? அங்கே அழுகிய முட்டை வீசுவார்கள், செருப்பால் அடிப்பார்கள், மேடையில் ஏறியே அடிக்கிறார்கள்! இவற்றுக்கெல்லாம் எப்படி ரஜினி முகம் கொடுப்பார்?

இந்த சம்பவங்களினால் நொந்து போயிருப்பவர்கள் காலா படக் குழுவினர்தான். இது, காலா படத்துக்கு விளம்பரம் தேடும் உத்தியா என்று பார்த்தால், அப்படியே இருந்தாலும் கூட, இது தவறாக வசனம் எழுதப்பட்டு மோசமாக இயக்கப்பட்டதும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதுமான ஒரு குறும்படமாகவே தெரிகிறது.

அரசியல் ரீதியாகப் பார்த்தால் முதலாவது விதி மீறல், பொலிஸ் தாக்குதலினால் 13 உயிர்களைப் பறி கொடுத்து பலரை காயப்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தினால் தூத்துக்குடி மக்கள் பொலிஸ் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் கடும் கோபத்தில் இருப்பார்கள் என்பதை அறியாமல் அங்கே சென்றது.

இரண்டாவது விதி மீறல், அப்படியே சென்றாலும் பொலிஸாருக்கு சார்பான கருத்துகளை தெரிவிக்காமல் இருப்பது. புனிதமான போராட்டத்தை சமூக விரோதிகளும் விஷக்கிருமிகளும் குழப்பியடித்து விட்டார்கள் என்றால், யார் அந்த சமூக விரோதிகள் என்பதை அவர் சொல்லியிருக்க வேண்டும்.

ரஜினி ஏற்கனவே, ஐ.பி எல்லுக்கு எதிரான சென்னை போராட்டத்தில் வெடித்த வன்முறைகளின்போது ஒருவர் பொலிஸ்காரரைத் தாக்கிய சம்பவத்தை எடுத்துக் கொண்டு, சீருடை அணிந்த பொலிஸ்காரர்களைத் தாக்குவதை கடுமையாகக் கண்டித்திருந்தார். திரும்பவும் தூத்துக்குடியில், பொலிஸார் தாக்கப்பட்டதால்தான் வன்முறையே வெடித்தது என்று சொன்னார். ஸ்டேர்லைட் உருக்காலையால் தூத்துக்குடியில் ஏற்பட்டிருக்கும் சூழல் மாசு பற்றி பேசாமல், எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றிருந்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் என்றும், தமிழகத்தில் ஏராளமான தீவிரவாதிகள் நடமாடுவதாகவும், போராட்டங்களினால் தொழிலகங்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்றுவிட்டால் தொழில்கள் கிடைக்காது என்றும் அவர் கருத்து தெரிவித்தது, அவர் வேறு யார் யாருக்காகவோ ‘வாய்ஸ்’ கொடுக்கிறாரோ என்ற சந்தேகத்தைத்தான் பலரிடமும் எழுப்பி இருக்கிறது.

அவர் ஏற்கனவே அ.தி.மு.க அனுதாபி என்றும், பா.ஜ.கவின் தமிழக ஏஜண்ட் என்றும் இந்துத்துவா நிலைப்பாட்டில் உள்ளவர் என்றும் முத்திரை குத்தப்பட்டிருப்பவர். ஒரு கொள்கையற்ற மனிதர் என்ற பெயரும் உள்ளது. ஜல்லிக்கட்டு பிரச்சினையின் போது அவர் வாயே திறக்கவில்லை.

பொலிஸாரை அடித்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். அவர்களின் படங்களை பேப்பரில் போட்டு மக்களுக்கு சமூக விரோதிகளை உடையாளம் காட்ட வேண்டும் எனத் தூத்துக்குடியில் பேசிய அதே ரஜினிகாந்த், தூத்துக்குடி சம்பவம் நடைபெற்றதும் சென்னையில் விடுத்த அறிக்கையில், தமிழக அரசின் அலட்சியத்தையும் காவல்துறையின் வரம்பு மீறிய செயல்களையும் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தார். இப்படி மாற்றி மாற்றி பேசுவதும், முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவதும், அவர் அரசியலுக்கு பொருத்தமானவர் அல்ல என்பதையே நிரூபித்துள்ளது.

ஐ.பி.எல். விவகாரத்தில் கூட, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினர் கறுப்புப் பட்டி அணிந்து விளையாட வேண்டும் என்றும், ஐ.பி.எல். போட்டி சென்னையில் நடைபெறாமல் இருப்பதே சரியானது என்றும் ஆரம்பத்தில் அறிவுரை சொன்னவர், பின்ன் தன் கருத்தை மாற்றிக் கொண்டு பொலிஸ்காரர்களைத் தாக்கினால் தான் பெறுத்துக் கொள்ளப் போவதில்லை என்றார்.

இதையெல்லாம் ஒருபுறம் வைத்துவிடுவோம்.

இன்னும் நான்கு தினங்களில் காலா வெளிவருகிறது. ரஜினி தான் அரசியலுக்கு வருவது உறுதி எனத் தெரிவித்து அது தொடர்பான பூர்வாங்க பணிகளைச் செய்து வரும் ஒரு சந்தர்ப்பத்தில், அவர் அ.தி.மு.க வின் மற்றும் பா.ஜ.கவின் இந்துத்துவா முகம் எனப் பரவலான விமர்சனம் எழுந்துள்ள நிலையில், ரஜினியின் அரசியல் வருகை என்பது அவரது வழமையான பூச்சாண்டி என்றும், காலா வையும், மிகுந்த பணச் செலவில் உருவாக்கப்பட்டுள்ள 2.0படத்தையும் வெற்றிகரமாக ஒட்டுவதற்காக அவர் எடுத்திருக்கும் புதிய அவதாரமே அரசியல்கட்சி தொடங்குவது என்ற அறிவிப்பு எனப் பலராலும் பரிகசிக்கப்படும் தருணமொன்றில், கதிரா மங்களம், நீட் தேர்வு, நெடுவாசல், நியூட்ரினோ, காவிரி நதிநீர்பங்கீடு, ஸ்டேர்லைட் விவகாரம் எனத் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் எல்லாம் தன் ‘வாய்ஸ்’ கொடுக்காமல் இப்போது திடீரென அரசியல் பேசுவது வெறும் கபட நாடகம் என்றும் பலவாறு அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படும் ஒரு சூழலில் அவரது காலா படம் திரைக்கு வருகிறது.

இது வழமையான – கபாலியைப் போல – ஒரு பொழுதுபோக்கு, அடிதடி படமாகவே இருக்கும் என்பது தெரிந்த விஷயம். ஆனால் அது வெளியிடப்படவிருக்கும் சூழலை எடுத்துக் கொண்டால், இதன் வெற்றி, தோல்வி அல்லது அமோக வெற்றி என்பது அவரது அரசியலையும் தீர்மானிக்கும் என்பதே இங்கே முக்கியம்.

ரஜினியின் சொந்த மாநிலம் கர்நாடகம். காலாவை அங்கே திரையிட அனுமதிக்கமாட்டோம் எனத் தமிழர்களுக்கு எதிரான கன்னட வெறியர் என அடையாளப்படுத்தப்படும் வாட்டல் நாகராஜ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். காவிரி நீர் விவகாரத்தில் ஏற்கனவே ரஜனி எதிர் ‘வாய்ஸ்’ கொடுக்கப்போய், அப்போது வெளியாகவிருந்த புதிய திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என வாட்டல் கொக்கரிக்க, ரஜினி வளைந்து கொடுத்து கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று.

இவ்வாறான ஒரு பின்புலத்தைக் கொண்டிருக்கும் ரஜினியின் படங்களை இவ்வளவு காலமாக ரஜினியின் படமாகப் பார்த்த ரசிகர்கள், காலாவை அதே கண்களுடன் பார்ப்பார்களா என்ற கேள்வி இம்முறை எழுந்துள்ளது. ஏனெனில் அரசியல் பொடி கலந்த வசனங்களும் காட்சிகளும் காலாவில் உள்ளன. இத்தகைய காட்சிகள் அரங்குகளில் பெருத்த ஆரவாரத்தைக் கிளப்பும். ஆனால் ரஜினி அரசியல்வாதியாகத் தன்னை இனம் காட்டி அரசியலின் அரிச்சுவடி பக்கங்களிலேயே சொதப்பிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஜல்லிக்கட்டு, ஐ.பி.எல், தூத்துக்குடி விவகாரங்களில் மக்கள் சாரா முடிவுகளை எடுத்ததோடு, ‘என்னுடைய உண்மை முகம் வேறொன்று’ என்பதையும் வெளிப்படுத்திய நிலையில், காலாவை தமிழ் மக்கள் பழைய மனநிலையிலேயே தான் பார்ப்பார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ரஜினியின் சமீபத்திய நகர்வுகளினால் நொந்து போயிருப்பவர் காலா இயக்குநர் பா. இரஞ்ஜித்தான். அட்டகத்தி, வடசென்னை என சிந்தனைக்குரிய வெற்றிப் படங்களைத் தந்த இரஞ்சித், கபாலியையும் படு வெற்றிப்படமாக்கிக் காட்டினார். அடிப்படையில் அவர் ஒரு தலித். மாற்றுச் சிந்தனையாளர். இடதுசாரி சிந்தனை கொண்ட போராட்டக்காரர்.

ரஜினியின் தூத்துக்குடி பேச்சு அவரை குழப்பி இருக்கிறது என்பது அது பற்றி ஊடகவியலாளர்களிடம் சப்பை கட்டு கட்டிய போது அவர் முகபாவமே சொன்னது. போராட்டம் அவசியம் என்றும், போராட்டத்துக்கு தான் ஆதரவு என்றும் சொல்லி தன்னை சிக்கலில் இருந்து விடுவித்துக் கொள்ள இரஞ்சித் முயற்சித்ததைப் பார்க்க முடிந்தது.

காலாவுக்காக பெருந்தொகை பணத்தை மறுமகன் தனுஷ் முதலீடு செய்து, பன்மடங்கு வருமானத்தை அவரும் ரஜினி குடும்பத்தினரும் எதிர்பார்த்திருக்க, வெற்றிப்பட இயக்குநர் என்று பெயர் பெற்றிருக்கும் இரஞ்சித், இன்னொரு பரிமாணத்துக்காக காலாவை எதிர்பார்த்திருக்க,

இத் தருணத்தில் இவ்வாறான வாய்ப்பற்ற நிகழ்வுகளை ரஜினி உருவாக்கி வைத்திருப்பது, இதுதான் முதல் தடவை.

இன்று பா.ஜ.கவைத் தவிர அனைத்து கட்சிகளும் அவரை எதிர்க்கின்றன. தமிழகத்தின் போராட்டக் குணம் கொண்டவர்கள் ரஜினியை விமர்சிப்பவர்களாக மாறி இருக்கலாம். ரஜினி அரசியலை விரும்பாதவர்கள் இருக்க முடியும். பல ஊடகங்கள் ரஜினி எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன. சமூக இணையத்தளங்கள் ரஜினிக்கு சார்பாக இல்லை.

இத்தனைக்கும் மத்தியில் காலா வெளிவரவுள்ளது.

அதன் வெற்றி பல விஷயங்களைச் சொல்லும். அதன் தோல்வி, பல மூட்டைகளை அவிழ்க்கும்.

அருள் சத்தியநாதன்

[email protected]

 

 

 

 

Comments