பணவீக்கம் என்றால் என்ன? | தினகரன் வாரமஞ்சரி

பணவீக்கம் என்றால் என்ன?

ஸ்ரீமான் பொதுஜனம் அதிகரிக்கப் போகும் வாழ்க்கைச் செலவுக்கு தயாராகவே இருக்க வேண்டும்.

ஒரு நாட்டில் பொருள் சேவைகளில் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் நிலையை பணவீக்கம் எனலாம். எல்லாப் பொருட்களின் விலைகளும் ஏககாலத்தில் அதிகரித்துச் செல்லும் எனக் கூறமுடியாது. எனவே சராசரி குடும்பமொன்றின் நுகர்வுக் கூடையிலுள்ள பொதுவான பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகளின் போக்குகளை அடிப்படையாக வைத்து பொதுவிலை மட்டம் என்னும் ஒரு கணிப்பீட்டு முறை மேற்கொள்ளப்படுகிறது. இப்பொது விலை மட்டம் அதன் ஆரம்பத்தில் 100 எனும் பெறுமதியைக் கொண்டிருக்கும். பொருட்கள், சேவைகளின் விலைகளின் சராசரி அதிகரிப்பு வேகத்திற்கமைய இம்மட்டம் அதிகரிக்கும். இப்பொழுது விலை மட்டத்தில் ஏற்படும் அதிகரிப்பு வீதம் பணவீக்க வீதமாகும்.

இப்பணவீக்க வீதமானது அதிகரிக்கும் தன்மைக்கேற்ப ஊர்ந்து செல்லும் பண வீக்கம் (1_-2%)

நடக்கும் பணவீக்கம் (3-_9%)

ஓடும் பணவீக்கம் (10-_100%)

பாயும் பணவீக்கம் (100 மேல்)

மீயுயர் பணவீக்கம் (மிகப்பெரிய சதவீதம்) என பல்வேறு பெயர்களால் இது அழைக்கப்படுகிறது.

உலகிலேயே மிக மோசமான பணவீக்கம் 1923ஆம் ஆண்டு ஜேர்மனியில் ஏற்பட்டது. முதலாம் உலக மகா யுத்தத்தில் அச்சு நாடாக செயற்பட்ட ஜேர்மனி யுத்த இழப்பு கொடுப்பனவுகளை செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் அதன் விலை மட்டங்கள் 1918- _ 1923 காலப்பகுதியில் சடுதியாக அதிகரித்தன. பணவீக்க வீதமானது (1,000, 000, 000, 000%) ஆகக் காணப்பட்டது. பொருள்கள் சேவைகளை வாங்க பணத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. விறகு வாங்குவதற்குப் பதிலாக ஜேர்மன் மார்க்குகளை (பணத்தை) அடுப்பில் போட்டு எரித்து சமைப்பது இலாபகரமானதாக இருந்தது. சிறுவர்கள் பணக்கட்டுக்களை தெருவில் வைத்து விளையாடினர். சாதாரண காகிதக் குப்பைகளாக ஜேர்மன் நாணயங்கள் வீதியெங்கும் சிதறிக்கிடந்தன. இவ்வாறானதொரு நிலைமை எந்தவொரு நாட்டிற்கும் ஏற்பட்டதில்லை. அண்மைக்காலத்தில் சிம்பாவ்வே நாட்டில் ஏற்பட்ட 2000% பணவீக்கமே சமகாலத்தில் ஏற்பட்ட மோசமான பணவீக்கமாக பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பணவீக்கமானது 27.6% என்ற உயர் மட்டத்தையே கடந்த காலங்களில் பதிவு செய்திருந்தது. இதனடிப்படையில் இலங்கையில் பணவீக்கமானது மோசமான நிலையில் இல்லை என்பதை புரிந்து கொள்வது சிரமமன்று.

பணவீக்கமானது எப்போதுமே தீய விளைவுகளை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுவது இயல்பானதே. சாதாரண பொதுமக்கள் பணவீக்கத்தை விரும்புவதில்லை. விலைகள் அதிகரிக்கும்போது கையிலுள்ள பணத்தின் வாங்கும் திறன் குறைவடையும். பணச் சேமிப்புகளின் பெறுமதி குறையும். சம்பளங்கள் மாறாத நிலையில் முன்னர் கொள்வனவு செய்த பொருட்கள் சேவைகளின் கூடையை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடையும். மறுபுறம் உற்பத்தியாளருக்கும் வியாபாரிகளுக்கும் விலை அதிகரிப்பு ஆரம்பத்தில் உற்சாகம் தருவதாக இருப்பதால் உற்பத்தியை அதிகரிக்கத் தூண்டும். ஆனால் அதிகரித்த உற்பத்தியை சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்படும். அத்துடன் உற்பத்தி அதிகரிப்பு விலை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதால் அவர்களும் நீண்டகால ரீதியில் நன்மையடைய முடியாது.

பணவீக்கமானது நிலையான வருமானம் பெறுவோருக்கும் சேமிப்பாளருக்கும் கடன் கொடுப்போருக்கும் நன்மை தராது. மாறாக நாளாந்த வருமானம் உழைப்போருக்கும், கடன் வாங்குபவருக்கும் நன்மை தரும். பணவீக்கம் நிலவும்போது நிலையான சொத்துக்களை சொந்தமாக வைத்திருப்பவர்கள் (வீடு, காணி, வாகனம் மற்றும் தங்கள் இரத்தினங்கள் வைரம் போன்றன) தமது சொத்துக்களின் பெறுமதி பலமடங்கு அதிகரிப்பதாக எண்ணி ஆனந்தமடைவார்கள். உண்மையில் அவர்களின் சொத்துக்களின் பெறுமதியில் எதுவித அதிகரிப்பும் ஏற்படவில்லை. மாறாக விலை அதிகரிப்பு அவ்வாறான போலியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலை “பண மாயை” என அழைக்கப்படும்.

பணத்தின் பெறுமதியானது விலைகள் அதிகரிப்பதன் காரணமாக வீழ்ச்சியடைவதால் வணிகத் தீர்மானங்களை மேற்கொள்வதும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சிரமமானதாக மாறும். நம்பகத்தன்மையும் குறையும். இது பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எவ்வாறாயினும் எல்லாப் பணவீக்கமும் ஒரு நாட்டிற்குப் பாதகமானதல்ல. விலை மட்டங்கள் மாறாமல் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது புத்திசாலித்தனமன்று. அவ்வாறான நிலையில் உற்பத்தி அதிகரிப்புக்கோ, வணிக விரிவாக்கத்திற்கோ ஊக்குவிப்புகள் இருக்காது. எனவே அபிவிருத்தியடைந்த (வளர்ச்சியடைந்த கைத்தொழில்) நாடுகளைப் பொறுத்தமட்டில் 1_-2% வருடாந்த பணவீக்கம் நன்மை தருவதாகவே நோக்கப்படுகிறது. வளர்முக நாடுகளைப் பொறுத்தமட்டில் 3 _ -4% வருடாந்த பணவீக்க வீதம் பாதகமற்றதாகவே கருதப்படுகிறது. சிலர் ஒற்ன்றை இலக்கப் பணவீக்கம் ஒரு வளர்முக நாட்டுக்கு பாதகமல்ல எனக் கூறுகின்றனர்.

சுருங்கக் கூறின் மிகக்குறைந்த பணவீக்கம் அத்தியாவசியமானதும் நன்மை தருவதாகவும் அமையும் எனலாம். இரட்டை இலக்கப் பணவீக்கமும் அதற்கு மேற்பட்ட பணவீக்கமும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் நீண்டகால பாதிப்புக்களை ஏற்படுத்தும். அண்மைய வருடங்களில் இலங்கையின் பணவீக்க வீதங்கள் ஒற்றை இலக்கங்களிலேயே உள்ளதையும் கருத்திற்கொள்ள வேண்டும்.

பணவீக்கம் ஏன் ஏற்படுகிறது என்று ஆராயுமிடத்து பல்வேறு காரணிகளை நாம் இனங்காணலாம். அக்காரணிகள் எல்லாவற்றையும் நாம் இரண்டு பிரதான பகுதிகளில் உள்ளடக்கலாம்.

01. பொருளாதாரத்தின் கேள்விப் பக்கத்தில் இருந்து எழும் பணவீக்கம் (கேள்வித்தூண்டல் பணவீக்கம்)

02. பொருளாதாரத்தின் நிரம்பல் (உற்பத்தி) பக்கத்தில் இருந்து எழும் பணவீக்கம் (செலவுத் தள்ளுகைப் பணவீக்கம்)

சாதாரணமாக சந்தைகளில் பொருள்கள் சேவைகளின் நிரம்பலை விட அவற்றின் கேள்வி அதிகமாக இருந்தால் விலைகள் அதிகரிக்கும். அதேபோல் முழுப்பொருளாதாரத்திலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் சேவைகளின் பெறுமதியை விட அவற்றுக்கான கேள்வி, (அதாவது நாட்டின் மொத்த செலவீடுகள்) அதிகமாக இருந்தால் விலைமட்டங்கள் உயரும். இதற்கு பிரதான காரணமாக இருப்பது அரசாங்கத்தின் வருமானத்தை விட அதன் செலவீனங்கள் உயர்வாக இருப்பதாகும். (அதாவது குறை நிலை வரவு செலவுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது) இலங்கையில் பணவீக்கத்திற்கு பங்களித்த பிரதான காரணியாக வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையும் அதனை நிதியீட்டம் செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுமாகும்.

எனவே, கேள்வித்தூண்டல் பணவீக்கம் என்பது “குறைந்தளவு பொருள்களை கூடியளவு பணம் துரத்திச் செல்லும் நிலை” எனப்படுகிறது. இந்நிலையில் விலைமட்ட அதிகரிப்பு நாட்டின் பொருட்கள் சேவைகளின் உற்பத்தி மட்டமும் அதிகரிக்கும். இந்நிலையில் விலைமட்ட அதிகரிப்பு வேகமும் (பணவீக்கம்) உற்பத்தி மட்ட அதிகரிப்பு வேகமும் (பொருளாதார வளர்ச்சி வீதம்) ஒன்றுக் கொண்டு சமன்படுமாயின் மெய் ரீதியில் பொருளாதாரத்தில் பாதிப்புகள் இல்லை எனலாம். ஆனால் அவ்வாறானதொரு நிலை ஏற்படுவது அரிதாகும்.

கேள்வி அதிகரிப்பு காரணமாக பணவீக்கம் ஏற்படும்போது தமது சம்பளங்களின் கொள்வனவு சக்தி பாதிக்கப்படுவதால் தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.

(தொடர் 20ஆம் பக்கம்)

Comments