ராஜசிங்கன் கைவண்ணத்தில் கப்பலில் தயாரான விருந்து | தினகரன் வாரமஞ்சரி

ராஜசிங்கன் கைவண்ணத்தில் கப்பலில் தயாரான விருந்து

கொர்ன் வோலிஸ் கப்பலின் மேல்தளத்தில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்த மன்னனின் முகத்தில் சாந்த ரேகைகள் படர்ந்திருந்தன. கப்பல் தலைவன் வில்லியம் கிரென்விலைப் பார்த்து.

“உங்களுக்கு திருமணம் நடந்துவிட்டதா?” எனக் கேள்வி எழுப்பினான்.

“நான் ஆறு குழந்தைகளுக்கு தகப்பன்” என பதிலளித்த கிரென்வில் தனது மனைவி ஒப்ரியன் மற்றும் மூத்த பிள்ளைகள் இருவரின் உருவங்களைக்கொண்ட சித்திரமொன்றை அரசனிடம் தந்தான். அதனை கண்ணுற்ற போதும் விசேடமாக அது பற்றி எவ்வித விமர்சனமும் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனிடமிருந்து வெளிவரவில்லை.

அரசன் தனது உள்ளத்தில் எழுந்துள்ள ஏதோ ஒன்றை மறைப்பதற்கு முயற்சிப்பது போன்று தோன்றினாலும் சிறிய புன்புறுவல் மூலம் விடயத்தை திசைத்திருப்பினான்.

“கப்பல் மதராஸ் துறைமுகத்தை நோக்கிச் செல்வது பற்றி எனக்கு நம்பிக்கை இருக்கின்றது!” என கதையை மாற்றினான்.

கப்பலைச் செலுத்திக் கொண்டிருக்கும் மாலுமி தினசரி அடையாளப்படுத்தி குறிப்பிடும் கப்பல் பாதை பற்றிய வரைவை மன்னனுக்கு காட்டிய கிரென்வில்; மதராஸ் அமைந்துள்ள இடத்தையும், கப்பல் தற்போது சென்று கொண்டிருக்கும் இடத்தையும் மன்னனுக்கு தெளிவுபடுத்தியதோடு, கொழும்பு துறை முகத்திலிருந்து இதுவரை மேற்கொண்ட பயணம் எவ்வாறு அமைந்துள்ளதெனவும் விரிவாக விளக்கம் அளித்தான்.

அவையனைத்தும் தம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறதென குறிப்பிட்ட இராஜசிங்கன்; எவ்வாறாயினும் முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த கப்பல் பிரயாணம் பற்றி தாம் கவலைகொள்வதாக கூறினான். அவ்வேளை மன்னனின் முகத்தில் இனம்புரியாத சோகம் குடிகொண்டிருந்தாக கிரென்வில் குறிப்பிட்டுள்ளான்.

சகலவிதமான வசதிகளையும் அனுபவித்தவாறு அரண்மனை வாழ்க்கையில் திளைத்திருந்த இராஜசிங்கன் மண்ணையிழந்து மகுடமிழந்து அந்நியரின் ஒரு கைதியாக கப்பல்மூலம் நாடு கடத்தப்பட்டுக்கொண்டிருப்பது பற்றிய கவலைகள் அடிக்கடி அவன் மனதை அலைக்கழித்துக் கொண்டிருப்பதை கப்பல் தலைவனால் நன்கு உணரமுடிந்தது.

தமக்கு ஆசி வழங்குவதற்கும் தனது எதிரிகளுக்கு வசை பாடலின் மூலம் வீழ்ச்சியை ஏற்படுத்துவதற்கும் வல்லவர்களான ஆன்மிகவாதிகள் கண்டி இராசதானியில் உள்ளனரெனவும் அவர்களிடம் கூட விடைபெற்று நாட்டை விட்டுச்செல்லும் வாய்ப்பு தமக்கில்லாது போய் விட்டதாகவும் மனவேதனை கொண்டான் மன்னன் இராஜசிங்கன்.

அவ்வாறு ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனின் வாழ்க்கையில் பங்கு கொண்ட ‘குங்குணாவ சுமங்கல தேரர்’ மன்னனின் மனதைக் கவர்ந்த மதகுரவராகும். வண. நாலந்தே விமலவன்ச தேரர் தமது உடரட்ட ஜன ஸ்ருதி’ நூலில் வண. சுமங்கல தேரர் பற்றிய சம்பவமொன்றை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கண்டி மல்வத்தை விகாரையில் பிரதம மதகுருவாக விளங்கிய குங்குணாவை தேரர்; ‘வஸ்கவி’ எனப்படும் வசைபாடலில் தலைச் சிறந்தவராக கீர்த்தி பெற்றிருந்தார்.

நினைத்த மாத்திரத்தில் இலக்கணப் பிழையற கவிபாடும் ஆற்றல் கொண்ட சுமங்கலதேரர் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளினால் வாழ்விழந்தவர்கள், அங்கங்களை இழந்தவர்கள், உயிரிழந்தவர்கள் என பலர் கண்டி இராசதானியில் இருந்தனராம். இம்மதகுரு மன்னன் இராஜசிங்கனின் மீது அன்பு கொண்டிருந்ததைப் போலவே மன்னன் அவர்மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தான்.

சற்று குள்ளமான தோற்றமும், பருமன்கொண்ட உடல் அமைப்பும் கொண்டிருந்த சுமங்கல தேரர், நகைச்சுவையாக உரையாடுபவராகவும் வித்தியாசமான குரல் வளம் கொண்டவராகவும் காணப்பட்டார். அவரது கவித்துவமும் வசைபாடும் ஆற்றலும் கண்டி இராச்சியத்தின் மக்களின் பேச்சு வழக்கில் இன்றும் நிலைத்து நிற்கின்றது.

ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் நகர நிர்மாணப் பணிகளில் ஒன்றான கண்டி வாவி அமைக்கும் பணி சிற்பி தேவேந்திரனால் ஆரம்பிக்கப்பட்டது. தேவேந்திரனின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட பத்திருப்பு (பார்த்து இருப்பு) மண்டபத்திற்கு எதிரே அகழியின் அருகில் கரை மண்மேட்டில் பிரமாண்டமான ஓர் ஆலமரம் கிளைகளை பரப்பி வியாபித்து நின்றது. நூற்றுக்கணக்கான வருட பழைமை வாய்ந்த விருட்சமாக அது விளங்கியது. பத்திருப்பு மண்டத்தை நிர்மாணிக்கும்போதும், அகழியை செப்பனிடும் போதும் அந்த ஆல மரத்தை தறிப்பதற்கோ பிடுங்குவதற்கோ எவரும் முன்வராமைக்கு அம்மரம் அப்பிரதேசத்தில் தந்துதவிய நிழலே காரணமாகும். எனினும் மரத்தின் அருகாமையில் அகழியும் வாவியும் அமைந்திருப்பதன் காரணமாக இம் மரத்தின் முதிர்ந்த கிளைகளால் இடைஞ்சல் ஏற்படலாமெனவும் இப் பாரிய விருட்சத்தின் வேர்கள் காரணமாக அகழிக்கு பங்கமேற்படலாமெனவும் தளதா மாளிகைக்கும், இங்குவரும் பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாமெனவும் அஞ்சப்பட்டது.

எனினும் இம்மரத்தை தரிக்கும் போதும், வேரோடு பறிக்கும்போதும் நிகழப்போகும் பாதிப்புகள் மிகமோசமானவையாக கருதப்பட்டது. மரம் தரிப்பதிலும், மரங்களை பிடுங்குவதிலும் அனுபவம் வாய்ந்தவர்களும் இம்முயற்சியில் ஈடுபட தயங்கினர். எனவே நிகழப்போகும் பாதிப்பு குறித்து தளதாமாளிகையின் தியவதன நிலமேயும் ஏனைய பிரதானிகளும், மன்னன் ஸ்ரீ விக்கி ரம இராஜசிங்கனும் கவலை கொண்டனர். இறுதியில் தியவதன நிலமே குங்குணாவை சுமங்கல தேரரை சந்தித்து இது பற்றி பேசினான்.

தளதா மாளிகையின் தியவதன நிலமே குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக சுமங்கல தேரர் அலட்டிக் கொள்ளவில்லை மிக சாவகாசமாக செவிமடுத்த தேரர் தாம்பூலத்தை வழக்கம் போன்று வாயில் போட்டு சப்பியதோடு தமது காவிப்போர்வையை மேலும் இழுத்து போர்த்திக் கொண்டு அப்பரந்து விரிந்து நிற்கும் ஆலமரத்தினருகில் சென்று நின்றார்.

தியவதனே நிலமேயைப் பார்த்து “நிலமே! எதற்கும் அஞ்சவேண்டாம். ஆலமரத்தை அப்புறப்படுத்தித் தருகின்றேன். சற்று ஒதுங்கி நின்று நிகழப்போவதை அவதானியுங்கள்!” என்றார்.

ஆலமரத்தை உச்சிமுதல் அடிவரையிலும் அமைதியாக உற்று நோக்கி கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் தேரர். திடீரென உச்ச ஸ்தாயியில் வசை கவியொன்றை பாட ஆரம்பித்தார். சில விநாடிகளில் கண்டி அரண்மனைக்கு மேலாக உடவத்த வனப்பிரதேசத்திலிருந்து பேரிரைச்சலுடன் பலத்த காற்று வீச ஆரம்பித்தது. சுழன்று வீசிய அச்சூறாவளியின் ஓசையால் செவிகள் செயலிழந்தன. சில விநாடிகளில் ஆலமரத்தைச் சுற்றி பேயாட்டம் ஆடியது சூறாவளி. காற்றின் திடீர்த் தாக்குதலால் விருட்சத்தின் கிளைகள் தள்ளாடின.

தியவதன நிலமேயும் ஏனையோரும் அவ்விடத்தை விட்டு அகன்றனர். ஆணிவேரோடு ஆலமரம் மேலேழுந்து வானில் விடப்பட்ட பட்டம்போன்று பறந்து சென்று கண்டி வாவிக்குள் விழுந்தது.

ஆழமான வாவிக்குள் ஆல விருட்சத்தின் அடிமுதல் நுனிவரையும் மறைந்து மரம் இருந்த இடமே தெரியவில்லை. அரண்மனையின் முன்னால் நிகழ்ந்த இவ் வதிசயச் சம்பவம் எழுப்பி பேரிரைச்சல் காரணமாக மாளிகையை விட்டு வெளியே வந்த மன்னன் இராஜசிங்கன் உப்பரிகையில் நின்று அவதானிக்கலானான். அங்கு நிகழ்ந்தவையனைத்தையும் மன்னன் அறிந்து ஆச்சரியத்திற்குள்ளானான். ஆலமரம் இருந்த இடத்தில் சிலையாக நின்று கொண்டிருக்கும் சுமங்கல தேரரை மாத்திரமே மன்னனால் பார்க்க முடிந்தது. அரண்மனையிலிருந்து ஓடோடி வந்த மன்னன் இராஜசிங்கன் குங்குணாவ சுமங்கல தேரரின் கால்களில் வீழ்ந்து வணங்கினான். அரசனுக்கு ஆசி வழங்கிய தேரர் எதுவுமே நடைபெறாத தோரணையுடன் மல்வத்தை விகாரையை நோக்கி நடந்தார்.

கப்பல் நகர்ந்து கொண்டிருக்க கதிரவன் மேற்கில் மறைந்துகொண்டிருந்தான். மறுநாள் பெப்ரவரி பதினாறாம் திகதி மலர்ந்தது. கப்பல் தலைவன் வில்லியம் கிரென்வில், கப்பலின் மாலுமி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மதியபோசன விருந்தளிப்பதற்கு தயாரானான் மன்னன் இராஜசிங்கன். கப்பலின் அடித்தளத்தில் ஊழியர்களைக் கொண்டு விசேடமான உணவு வகைகளை தயாரிப்பதற்கு பணிப்புரைகளை வழங்கிய மன்னன் அன்றையதினம் கப்பலின் மேல்தளத்திற்குச் செல்வதைத் தவிர்த்து ஊழியர்களுடனேயே இருந்தான்.

தன்னுடைய கௌரவத்தைப் பற்றி கிஞ்சித்தும் கருத்தில் கொள்ளாத இராஜசிங்கன், ஒவ்வொரு உணவும் எவ்வாறு அமைய வேண்டுமென்பதற்கான ஆலோசனைகளை வழங்கி சற்றே களைப்படைந்த நிலையில் காணப்பட்டான். மிகவும் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் அன்று கப்பலின் சமையலறை காணப்பட்டது. கப்பலின் களஞ்சிய அறையிலிருந்து சர்க்கரை, மிளகு, வினாகிரி, எண்ணெய் முதலிய பொருட்களை பெருமளவில் சமையலுக்காக பெற்றுக்கொண்டனர் சமையல்காரர்கள். மதியபோசன விருந்துபசாரத்திற்காக மன்னனின் அழைப்பை ஏற்று கிரென்வில், மாலுமி ஒப்ரியன், திருமதி செவல் ஆகியோர் மகிழ்ச்சியுடன் உணவு மேசை அமைந்துள்ள தளத்திற்கு வருகை தந்தனர்.

சேவகர்கள் விசேட உணவு பதார்த்தங்களை வரிசையாக கொண்டு வந்து மேசை மீது பணிவாக வைத்தார்கள். “அனைத்தும் முறையாக வேக வைக்கப்பட்டனவா?” என அவர்களைப் பார்த்து வினவினார் மன்னன் இராஜசிங்கன்.

விருந்தினர் உணவு அருந்தி முடியும்போது மேலும் வெவ்வேறு விதமான பதார்த்தங்கள் மேசையை அலங்கரித்தன. கப்பல் பயணத்தின் போது மன்னனுக்கு வழங்கவேண்டிய உணவு வகைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. அப்பட்டியலில் இடம்பெறாத உணவு வகைகளும் இங்கு தயாரிக்கப்பட்டிருந்தமை கப்பல் தலைவனை ஆச்சரியப்பட வைத்தது.

கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்படும்போதே இரகசியமாக எடுத்துவரப்பட்ட உணவுப் பொருட்களாகவும், உணவுக்கான மூலப்பொருட்களாகவும் அவை இருக்கலாமென கருதினான் கிரென்வில். ஆங்கிலேயே குழுவினர் எதிர்பார்த்திராத வகையில் இவ்விருந்துபசாரமும், உணவு வகைகளும் சிறப்பாக அமைந்தன. இதே சமயம் சில ஆங்கிலேயர் ராஜசிங்கனின் நளபாகத்தை ரசிக்கவில்லை என்ற ஒரு கூற்றும் உள்ளது.

அதாவது, தென்னிந்திய உணவு வகைகளுக்குப் பரிச்சயம் கொண்டிருந்த இராஜசிங்கன்; நெய் கலந்த உணவு வகைகளையும் இங்கு ஏற்பாடு செய்திருந்தான். நெய் மணத்துக்கும் ருசிக்கும் பழக்க மற்ற ஆங்கிலேயர்கள் இப் பதார்த்தங்களை பெரிதாக விரும்பவில்லையெனவும் கிரென்வில் தெரிவிக்கின்றான்.

இவ்விருந்துபசாரம் நிறைவுற்றபோது மிகுந்த திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் காணப்பட்ட மன்னன் தாம் கப்பலுக்குள் ஒரு சாதனை நிகழ்த்தியதாக நினைத்து பெருமை கொண்டான்.

(நன்றி : ஸ்ரீவிக்கிரம ராஜசிங்க புவத்த

உடரட்ட ஜன ஸ்ருத்திய)

-சி.கே. முருகேசு

Comments