‘இன்னும் உயிரோடு’ | தினகரன் வாரமஞ்சரி

‘இன்னும் உயிரோடு’

இளமையில் காதல், காகிதப் பூ மாதிரி....

கொழும்பில் இடம்பெறும் நூல் வெளியீடுகளில் அனேகமான நூல்கள், கவிதை நூல்களாகவும், சிறுகதைத் தொகுப்புகளாகவும், நாவல்களாகவும் தான் உள்ளன. இதற்கான முக்கிய காரணம் அவற்றுக்ேக பரிசில்கள் வழங்கப்படுகின்றன. கட்டுரைக் கோவைகளுக்கோ, திறனாய்வு நூல்களுக்கோ அல்லது கண்டனம் செப்பும் விமர்சன நூல்களுக்கோ பரிசுகள் கிடைப்பதில்லை. அவற்றைக் கருத்தில் கொள்வதுமில்லை.

‘இன்னும் உயிரோடு’ என்ற தலைப்பில் எம்.ஐ.எம். அஷ்ரப் எழுதிய 50 பக்க நூலில், மேலதிகமாக 15 பக்கங்கள், முகவுரை, அணிந்துரை, வாழ்த்துறை என்னுரை என்ற தலைப்பில் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. நவாஸ்ஹாபி அட்டைப்படத்தை அழகுறச் செய்துள்ளார். நூலாசிரியரியன் முகவரி 499, வைத்தியசாலை வீதி, சாய்ந்தமருது, தொலைபேசி இலக்கம் : 0779910393, விலை ரூ 275/=.

வாழ்த்துரை எழுதிய அஷ்.ஷெய்க் என்.எம். அப்துல் முஜிம் தந்திருக்கும் திறனாய்வுத் தகவல்கள் xiii பக்கத்தில் வந்திருக்கின்றன. தமிழ் மாத்திரமே தெரிந்த விமர்சகர்கள் இதனையும் படித்துப் பயன்பெறலாம்.

இனி, கவிஞர் எம்.ஐ.எம். அஷ்ரபின் கூற்று ஒன்றும் நாம் அவதானிக்கத்தக்கது. “கற்பனை, மிகைப்படுத்தல் என்பவற்றைவிட யதார்த்தத்தை சொல்ல வேண்டும் என எதிர்பார்பேன் நான்.”

அந்த விதத்தில், நான் வழக்கமாகச் சேர்த்துக் கொள்வதுபோல, கவிஞரின் கவிதையில் எனக்குப் பிடித்த வரிகளை மாத்திரம் இங்கு எழுதுகிறேன். நீங்கள் முழுப் புத்தகத்தையும் வாங்கிப் படிக்க இது உதவும்.

* காகிதப் பூ அழகாய் இருந்த போதிலும், அப்பூவுக்கு சுகந்தமோ மணமோ தேடியும் கிடைக்காது. இளமையில் காதலும் அப்படியே சுவையும் சந்தோஷமும் சொற்ப நாட்களே.

* நல்லிதயத்தின் விம்பம்தானே சித்தரையற்ற முகமும்.

* கொஞ்சக் காலம் வாழ்ந்திட்டாலும், கொடுத்து வாழ்வதே மேலாரும். நெஞ்சம் என்றும் விரிந்திட்டால் தான் நேரம் கொள்வார் உலகிலுள்ளார்.

* இருட்டின் எல்லைக்கே சென்றுவிட்டாயே, ஆமாம், எனக்கு இன்று தான் புரிகின்றது உனக்கு என்மீது எவ்வளவுதான் அன்பென்று.

* “இளமையின் இயற்கை வனப்பு” என்ற கவிதையில் அவர் எழுதும் சொட்டுச் செட்டான வரிகள் அனைத்தும் சுவைக்கக்கூடியவை.

* எல்லாத் திரைகளும் நீக்கிப் பார்த்தால் எண்ணம் செயல்கள் கனவாகும். இல்லா பாய் ஆகும் வரை இருக்கும் வாழ்க்கையும் கனவாகும்.

* சடலங்கள் தேடும் பணிகள் தொடர, அதிகரித்துச் சென்ற அகதிகள் முகாமுக்கு நாலாபுறமும் நிவாரணத் திரட்டல்கள். இந்த இடத்தில் இனம், மொழி, சாதி, சமயமெல்லாம் மறந்து போனது மனிதம். ஆம் இத்தோடு பிழைத்துக் கொண்டது மனித நேயம். இன்னும் வாழ்கின்றது.

* தண்டவாளம் முடிந்து போக நின்றுவிட்ட இரயில் போலானது.

* அடம் பிடித்து அழுத மழையால் மலிந்து விட்டன குளங்கள். முற்றங்கள் தடாகங்களானதால் மண் முகங்கள் அழையா விருந்தாளிகளாயின சவம் விழித் தெழுந்ததுபோல் நடு வீதிக்கு வந்துவிட்டன.

* உள்ளத்தால் உணர்வால் உறவால் சமூகத்தால், இரக்கம் காணாமல்போக பற்றி எரியும் நாணலுக்கு பயந்த புள்ளினமாய் ஏகாந்த மானது மனிதம்.

* ஒரு நொடியில் அதிரும் பூமி ஆயிரக்கணக்கான உயிர்களைத் தன்னுள் இழுத்துக் கொள்கிறதே! இயற்கையோடு பின்னிப் பிணைந்து மனிதன் அவை திடீரெனக் காட்டிடும் கோரமுகத்தால் அதை நம்பியே ஏமாந்து விடும் நிலை.

* 1994முதல் 2011 வரை நமது கவிஞர் பெற்ற விருதுகளின் விபரமும் பின் அட்டையில் தரப்பட்டுள்ளது.

ஒருவர் தான் வாங்கிய விருதுகளை தானே முன்வந்து பலர் அறியச் செய்யத்தான் வேண்டுமா? இதன் உளவியல் புரியவில்லை.

கே.எஸ். சிவகுமாரன்

Comments