புனரமைப்புப் பணிகளுக்கு ரூ. 20 இலட்சம் திரட்டியுள்ளோம் | தினகரன் வாரமஞ்சரி

புனரமைப்புப் பணிகளுக்கு ரூ. 20 இலட்சம் திரட்டியுள்ளோம்

தெற்காசிய பிராந்தியத்தின் கேந்திர நிலையமான இலங்கை தலைநகர் கொழும்பை நவீனமயப்படுத்தி பிராந்தியத்தின் முன்மாதிரி நகராக மாற்றியமைக்கும் துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த கொழும்பு மாநகர பிரதி முதல்வரும், பதில் முதல்வருமான எம்.ரி.எம். இக்பால், நாட்டின் உயர் நிலையை உலகுக்கு காட்டும் வண்ணம் தலைநகரை மாற்றிய மைப்பதே இத்திட்டத்தின் நோக்கமெனவும் குறிப்பிட்டார். கொழும்பு மாநகர சபையின் பிரதி முதல்வராக பதவியேற்றிருக்கும் எம்.ரி.எம்.இக்பாலை தினகரன் வாரமஞ்சரிக்காக நேர்கண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரதி முதல்வருடனான நேர்காணல் விபரம் வருமாறு:

கேள்வி : கொழும்பு மாநகரசபையில் நீண்டகாலம் உறுப்பினராக இருந்துவரும் நீங்கள் முதற்தடவையாக இம்முறை பிரதிமுதல்வராக தெரிவாகியுள்ளீர்கள். உங்களது இந்த அரசியல் பயணம் தொடர்பாக சற்று விளக்கமாக கூறமுடியுமா?

பதில்: நான் 1980களில் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மத்திய கொழும்பில் தோட்டங்களில் பொதுச் செயற்பாடுகளில் ஈடுபட்டேன். முக்கியமாக மத்திய கொழும்பில் பரந்துபட்டு வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுடன் ஒன்றுபட்டு செயற்படுவதால் அந்த மக்களின் ஆதரவை என்றென்றும் என்னால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.

ஆரம்பத்தில் மத்திய கொழும்பை பிரதிநிதித்துவப்படுத்தி மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். மஹ்ரூபின் ஆதரவாளர்களில் ஒருவராக இயங்கி வந்தேன். அவரும் என்மீது பூரண நம்பிக்கை வைத்து பல பொறுப்புக்களை என்னிடம் ஒப்படைத்தார். அவற்றை நான் வெற்றிகரமாக செய்து முடித்ததன் காரணமாக என்மீது அவருக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. அவரது பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக என்னை நியமித்துக் கொண்டார்.

பின்னர் அவர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவரது இடத்துக்கு என்னை அமைப்பாளராக நியமித்தனர். 1997 மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அன்று முதல் இன்றுவரை 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாக தெரிவாகி வருகின்றேன். ஐந்து மேயர்களுக்குக் கீழ் மாநகர சபை உறுப்பினராக பணிபுரிந்து வருகின்றேன். கருஜயசூரிய, உமர் காமில், பிரசன்ன குணர்வதன, ஏ.கே.எம். முஸம்மில் ஆகியோருடனும் இடையில் மேயராக இருந்த இம்தியாஸ் உவைஸுடனும் செயற்பட்டு வந்தேன். ஆறாவதாக புதிய மேயர் ரோசி சேனநாயக்காவுடன் முதற் தடவையாக பிரதிமேயராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

மக்களுக்காக பணியாற்றுவதே எனது இலட்சியம். அது பாடசாலையிலேயே ஏற்பட்டது. கடந்த காலத்தில் தமது பிரதேச மத்ரஸாக்கள், பாடசாலைகளில் கல்விகற்கும் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக பல வழிகளிலும் உதவிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளேன். இன்றளவும் கூட எமது சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவே உழைத்து வருகின்றேன்.

கேள்வி: இந்தப் பதவிக் காலத்தில் நீங்கள் எதிர்காலத்துக்காக என்ன திட்டங்களை முன்னெடுக்கவுள்ளீர்கள்?

பதில்: எமது கொழும்பு மாநகரில் தோட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும். அதன் பிரகாரம் குறைந்தபட்சம் ஐயாயிரம் வீடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதனைப் படிப்படியாகவே மேற்கொள்ளமுடியும். ஒரே தடவையில் எல்லோருக்கும் வீடு பெற்றுக்கொடுப்பது சாத்தியமற்ற விடயமாகும். இது தொடர்பில் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸவுடனும், பாரிய கொழும்பு அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவுடனும் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இது விடயத்தில் உரிய கரிசனை செலுத்துவதாக அவர்கள் உறுதிவழங்கியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் எமது மேயர் தனியார் நிறுவனங்கள் சிலவற்றுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றார். சேரிக்குடியிருப்புகளை மாற்றியமைத்து சகலருக்கும் வீடு என்ற திட்டத்தின் மூலம் படிப்படியாக வீடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

கேள்வி: மாநகரசபை ஊழியர்களின் நலன்கள் குறித்து எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன?

பதில்: மாநகர சபை ஊழியர்களின் நலன் விடயத்தில் ஏற்கனவே நாம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். கடந்த காலத்தில் அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும் வசதிகள் காலத்துக்குக் காலம் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 2014ஆம் ஆண்டில் மாநகர சபை முஸ்லிம் ஊழியர்களின் நலன் கருதி இஸ்லாமிய சங்கத்தை அமைக்க யோசனை சமர்ப்பித்திருந்தேன். அந்த யோசனை அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும் சங்கத்தை அமைப்பதில் தாமதமேற்பட்டது.

இப்போது அதனை உடனடியாக அங்குரார்ப்பணம் செய்ய நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். வெளிநாடு சென்றிருக்கும் மேயர் நாடு திரும்பியதும் அதனை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: உங்களின் சமூகப்பணிகள் தொடர்பில் கூறுவீர்களா?

பதில்: கடந்த 44 வருடங்களாக மசஸ்கஸ் வீதியில் தொடரான மீலாத் விழாக்களை நடத்தி வருகின்றோம். எமது இந்த முயற்சிக்கு பிரதேச மக்களின் ஆதரவு தாராளமாகக் கிடைத்து வருகின்றது. அத்துடன் கொழும்பு பெரிய பள்ளிவாசல் புனரமைப்புக்காக 20 இலட்சம் ரூபாவை தாம் திரட்டிக் கொடுத்துள்ளோம்.

இன, மத, மொழி, பேதம் கடந்து மாநகரில் வாழும் சகல மக்களையும் அரவணைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரில் வாழும் மக்கள் என்மீது 20 வருடங்களுக்கும் மேலாக வைத்திருக்கும் நம்பிக்கையை உரிய முறையில் பாதுகாத்து அவர்களுக்காக தொடர்ந்து சேவையாற்றுவதே எனது இலட்சியம்.

சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களோடு இணைந்து ஒற்றுமையுடனும், புரிந்துணர்வுடனும் வாழவேண்டும். சின்ன விடயங்களை பெரிதுபடுத்தாமல் பகைமை உணர்வில் முரண்படாமல் ஒன்றுபட்டு நல்லெண்ணம், சமாதான சகவாழ்வு அடிப்படையில் வாழ்வதன் மூலம் சகலராலும் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்ற நம்பிக்கை என்னிடமிருக்கின்றது.

அத்துடன் அறிவுபூர்வமான படித்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் விடயத்தில் நாமனைவரும் ஒன்று படவேண்டியது அவசியமானதாகும்.

நேர்காணல்:

எம்.ஏ.எம். நிலாம்

Comments