வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மீட்பு | தினகரன் வாரமஞ்சரி

வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மீட்பு

கோவில்குளம் குறூப் நிருபர்

வவுனியாவில் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தையை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர். குழந்தையை வைத்திருந்த இரு பெண்களையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குழந்தை மீட்கப்பட்டதைத் தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாரால் வவுனியா பொலிஸ் நிலையம் ஊடாக குழந்தையின் தாய்க்கு தகவல் வழங்கினர்.

இதேவேளை குழந்தை பாதுகாப்பாக உள்ளதாக வவுனியா பொலிசாருக்கு குழந்தையின் தந்தை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாக குழந்தையின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றுக் காலை குழந்தையின் பெற்றோரை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிசாரால் அழைக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டிலுள்ள குழந்தையின் தந்தை வவுனியா பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தை பாதுகாப்பாகவுள்ளதாகவும். அதனை ஒப்படைப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்றுக் காலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற கைக்குழந்தையின் தாயார் மற்றும் உறவினர்கள் கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தையின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தனர். எனினும் குழந்தையின் தாயாரையும் அழைத்துக்கொண்டு வவுனியா பொலிஸார் முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கு விரைந்து சென்று குழந்தையை தாயிடம் ஒப்படைத்து அழைத்து வந்தனர்.

வவுனியாவில் கடந்த வியாழனன்று தாயாருடன் குழந்தை உறங்கிக் கொண்டிருந்த போது வான் ஒன்றில் வந்த சுமார் 8 பேர் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தையை கடத்திச் சென்றனர்.

குழந்தை கடத்தப்பட்டு சிறிது நேரத்தில் லண்டனிலுள்ள கணவன் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியிருந்தார். இதனால் இந்தக் கடத்தல் தனது கணவனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக மனைவி குற்றம் சாட்டியிருந்தார். இக் கடத்தல் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே குழந்தை நேற்று மீட்கப்பட்டுள்ளது.

 

Comments