கோழி கொடாப்பு | தினகரன் வாரமஞ்சரி

கோழி கொடாப்பு

‘இருளான்டி’ 70 வயது முதிர்ந்தவர். அவர் மனைவி ‘இருளாயி’ 68 வயது முதிர்ந்தவள். இருவருக்கும் மூன்று பெண் பிள்ளைகள். மூன்று பெண் பிள்ளைகளும் திருமணம் முடித்து வேறு குடித்தனம் போய்விட்டார்கள்.

இருளாண்டி, இருளாய் இருவரின் ஓய்வூதிய பணத்தை எடுத்து மூன்று பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டார்கள். தாயையும் தகப்பனையும் பிள்ளைகள் க​ைடசி வரை கண் கலங்காமல் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தான் இருளான்டி.

பிள்ளைகள் மூவரும் பணத்தை கைக்கு வாங்கும்வரை, அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தார்கள். பணம் கிடைத்ததும் பாசமெல்லாம் மோசமாகி, இருளான்டியும் இருளாயும் தனியானார்கள்.

நாளடைவில் இவர்களின் அன்றாட சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையாகியது. இருளான்டி மனம் தளராமல் பத்து, பதினைந்து கோழிகளை வாங்கி வளர்க்க தொடங்கினான். இருளாயி மற்ற பெண்களோடு கிழமைக்கு 3 நாள் கூலி வேலை செய்து, அதில் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தார்கள்.

நாளடைவில் கோழிகள் முட்டையிட தொடங்கியதால் இருளான்டி மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டு அக்கறையோடு கோழிகளை வளர்க்க முற்பட்டான். இயலாத வயதில் கோழி வளர்ப்பை தவிர வேறு எதையும் இருளாண்டியால் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இருளான்டியின் வாழ்க்கை வளமாக இருந்த காலத்தில் சொந்தங்கள் அடிக்கடி வந்து குசலம் விசாரித்து இரண்டு மூன்றுநாள் தங்கி நல்லா வயிறார சாப்பிட்டு போவார்கள். தீபாவளி பண்டிகை நாளில் ஒரே விருந்தாய் தான் இருக்கும். இருளான்டி வீட்டில் சொந்தங்களை நம்பி தன் பணத்தை வீண் விரயமாக்கிவிட்டு, இயலாத வயதில் கோழிகளை நம்பி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான்.

இருளான்டியும், இருளாயும் நாளுக்கு நாள் தொய்வு நிலையை அடைந்து கொண்டிருந்தார்கள். சொந்தங்கள் தூர விலகிக் கொண்டிருந்தார்கள்.

அன்றொருநாள் இருளாயி எங்கோ கூலி வேலை செய்துவிட்டு, வீட்டுக்கு வந்து கிணற்றடிக்கு சென்று குளித்துவிட்டு, வீட்டு வாசல்படி ஏறும் நேரம் படங்கு கட்டிலில் கூனிக் குறுகி எலும்பும் தோலுமாக இருந்த இருளான்டி. 'ஏம்புள்ள இருளாயி அந்த கோழி கொடாப்ப சாத்திவிட்டு வாயேன்' என்றான்.

'அட ஒனக்கு வேற வேலயே இல்ல. எந்த நேரம் பாத்தாலும், கோழி கொடாப்பு, கோழி கொடாப்பு. நான் ஒலச்சிட்டு வந்து, கொஞ்சம் மேல நனைச்சிகிட்டு, வீட்டு வாசல் ஏறும்போதே வேல வக்கிரியே, நீ சும்மா தானே படுத்திருக்க, நீ போய் கொடாப்ப சாத்தினா என்னா?' என்று உடல் களைப்பால் இருந்த இருளாயி. சற்று கடுமையாகவே சத்தம் போட்டாள்.

'அட எனக்கு ஏன்டா, ஒனக்கு ஏன் சொல்லுறேன்' என்றான் இருளான்டி சற்று விரக்தியுடன்.

'அட ஒன்னோட பெரிய கரச்சலா போச்சி' என்று சொல்லிக் கொண்டே போய் கோழி கொடாப்பை சாத்திவிட்டு வந்தாள்.

'ஏம் புள்ள, இன்னிக்கி எவ்வளவு சம்பாரிச்ச' என்று படங்கு கட்டிலிலே படுத்தவாறு கேட்டான்.

'நூற்றி ஐம்பது ரூபா தான் கொடுத்தாங்க'. என்று சொல்லிக் கொண்டே இருளாயி வீட்டுக்குள் நுழைந்தாள். இருளான்டி தட்டு தடுமாறி, படங்கு கட்டில விட்டு எழும்பி இருலாயை பின் தொடர்ந்து சென்று, 'ஏம் புள்ள, எனக்கு பசிக்குது பழய சோறு இருந்தா, போட்டு தாரியா' என்று பணிவுடன் கேட்க, சரி, சரி. கொஞ்சம் பொருத்துக்க என்று கூறிக் கொண்டே கும்பாவை எடுத்து சோத்தை போட்டு கொடுக்க அதை இரண்டு கையாலும் வாங்கி சாப்பிட்டு விட்டு மெல்ல வெளியிலே வந்து பழையபடி படங்கு கட்டிலிலே சங்கமமானான். அடுத்த வீட்டு ஏகாம்பரம் வீட்டில் தென்றல் fmஇல் மாலை ஆறரை மணிக்கு ஒலிபரப்பாகும் 'ஆராதனா' நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தது. அதில் முதல் பாடலாக,

'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா 'என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்தப் பாடல் இருளான்டியின் காதில் விழுந்து. இருளான்டியின் கண்களில் கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தது. அந்த பாடலை கேட்டுக் கொண்டே தூங்கி விட்டான்.

இருளாயும் இருக்கும் மிச்ச சோத்தை சாப்பிட்டு விட்டு ஒன்டியா பாயை போட்டு படுத்துக் கொண்டே ப​ைழய பாடலை கேட்ட வண்ணம் நித்திரைக்குள்ளானாள்.

இருளரசன் அரசோச்ச துவங்கினான். கதிரவன் வருகைக்காக காகம் கரையத் தொடங்கியது. பொழுதுவிடிந்து கொண்டிருக்கும் நேரம் இருளாயி எழும்ப முடியாமல், எழும்பி பாயை சுருட்டி கதவு மூலையில வைத்துவிட்டு, கொட்டாவி விட்டுக் கொண்டே அடுப்படிக்குப் போய் இருளான்டிக்கு வழக்கம் போல் கொடுக்கும் தேதண்ணி காட்டையை ஊத்தி எடுத்துக் கொண்டு போய் இருளான்டியை உசுப்ப தொடங்கினாள்.

'ஓய், ஓய், இந்தாங்க தேத்தண்ணி' என்று கூப்பிட்டாள்.

ஒரு வித சலனமும் இல்லாததால் தேனீரை தரையில் வைத்துவிட்டு, இருளான்டியை தட்டத் தொடங்கினாள். பட்ட மரம் போல் விரைத்து இருப்பதை உணர்ந்த இருளாயி 'ஐயையோ... ஏகாபரம், இங்கு வந்து பாரேங், இவரு கல்லு மாதிரி வெரச்சி போயி இருக்காரு. சுருக்கா ஓடி வாவே' என்று உரத்த குரலில் கத்தி, அடுத்த வீட்டு ஏகாம்பரம் மட்டும் அல்ல, அந்த சயிட்டு ஆலுங்க எல்லாம் இருளான்டி வீட்டில் குவிந்து விட்டார்கள்.

அடுத்த வீட்டு ஏகாம்பரம் இருளான்டி உடம்பில் கையை வைத்து பாத்ததும், 'வேல முடிஞ்சிரிச்சி' என்று கூடியிருந்த அனைவருக்கும் விளங்கும்படி கூறினான். எல்லோரும் 'கோ...' என்று அழத் தொடங்கி விட்டார்கள்.

இருளாயி இந்த நிைலயை சற்றும் எதிர்பாக்கவில்லை. கணவர் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் மயக்கம் போட்டு விழுந்து விட்டாள். பக்கத்தில் உள்ளவர்கள் தூக்கி நிறுத்தி. முகத்திற்கு தண்ணி தெளித்து 'ஏய் இருளாயி.... இருளாயி' என்றாலும் எந்தவித சத்தம் வரவில்லை. இருளாயும் இறுதியில் பிணமாகி இருந்தாள்.

அக்கம் பக்கம் இருந்தவர்கள் எல்லாம் குய்யோ மொரயோ என்று கத்த தொடங்கி விட்டார்கள்.

ஏகாம்பரம் இன்னும் சிலரோடு இருளான்டியின் உயிரற்ற உடம்பை தூக்கி, திரையில் பாயை விரித்து அதில் கிடத்தினான். படங்கு கட்டிலை மடக்கும் பொழுது அதிலிருந்து பழைய வெள்ளை காகிதம் ஒன்று கீழே விழுந்தது.

ஏகாம்பரம் அதை எடுத்து நாலா மடித்திருந்த காகிதத்தை பிரித்தான். அதன் உள்​ேள;

அன்பு பிள்ளைகளே, உங்களை பெற்று பாலூட்டி, சீராட்டி வளர்த்து என்னால் இயன்ற அளவில் உங்களை கரைச்சேர்த்து விட்டேன். ஆனால் நீங்கள் என்னையும் உங்கள் அம்மாவையும் கவனிக்காமல் உங்கள் வாழ்வை வளம்படுத்திக் கொண்டீர்கள். அம்மா, அப்பா சாப்பிட்டார்களா. எப்படி இருக்கிறார்கள் என்றுகூட உங்களால் பாக்க முடியவில்லை. இதை இட்டு நானோ, அம்மாவோ மனம் தளரவில்லை.

நானும் அம்மாவும் இறக்கும் நேரம் உங்களுக்கு செலவு வைக்க விரும்பாததால், என்னால் இயன்ற அளவு பணம் கொஞ்சம் கோழி கொடாப்பில் வைத்துள்ளேன். அந்த பணத்தை எடுத்து என் மரண சடங்கு செலவை செய்யவும். மிகுதி பணத்தை அம்மாவின் மரண சடங்கு செலவுக்கு வைக்கவும்.

பாசமுள்ள

அப்பா.

ஏகாம்பரம் கடிதத்தை சுருட்டிக் கொண்டே, கோழி கொடாப்புக்கு போய் உள்ளே நாலாபக்கமும் தேடுகையில், முகட்டில் ஒரு டின் கண்ணில் பட்டு அதை கையில் எடுத்து திறந்து பார்த்தான் அதனுள்ளே பணம் நிறைந்து இருந்தது.

எம். மெய்வீரன் வரக்காகொட

Comments