பிஃபா உலகக் கிண்ணம் | தினகரன் வாரமஞ்சரி

பிஃபா உலகக் கிண்ணம்

(கடந்தவார தொடர்)

1974 – மேற்கு ஜெர்மனி

1966 உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து 1974 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறவில்லை.

புதிய உலகக் கிண்ணம் உருவக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் நெதர்லாந்துடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த போட்டியை நடத்தும் மேற்கு ஜெர்மனி தகுதி பெற்றது. போட்டியின் ஆரம்பத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பின் உதவியோடு ப்ரன்ஸ் பெகன்பேர்க் தலைமையிலான மேற்கு ஜெர்மனி 2- - 1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

1978 – ஆர்ஜன்டீனா

ஆர்ஜன்டீனா இராணுவ ஆட்சியின் கீழ் இருந்தபோது நடைபெற்ற இந்த உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற மீண்டும் இங்கிலாந்து தவறிவிட்டது. இதில் முதல்முறை பங்கேற்ற துனீசிய அணி மெக்சிகோவுக்கு எதிரான போட்டியில் 3- - 1 என வென்று உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை பெற்ற ஆபிரிக்க அணியாக பதிவானது.

நெதர்லாந்துடனான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஆர்ஜன்டீனா 3- - 1 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று முதல் முறை உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. நெதர்லாந்து தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் இறுதிப் போட்டியில் தோற்றது.

1982 – ஸ்பெயின்

1982 உலகக் கிண்ணத்தில் அணிகளின் எண்ணிக்கை 16 இல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் ஆபிரிக்க மற்றும் அசிய அணிகளுக்கு அதிக வாய்ப்பு கடைத்தன.

குழுநிலை போட்டியில் ஈக்குவடோரை 10- -1 என ஹங்கேரி வீழ்த்தியது அதிக கோல் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக உள்ளது. இதில், மெட்ரிட்டின் பெர்னபு அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் இத்தாலி அணி மேற்கு ஜெர்மனியை 3--1 என வீழ்த்தி மூன்றாவது முறை உலகக் கிண்ணத்தை வென்றது.

1986 – மெக்சிக்கோ

கொலம்பிய அணியே உலகக் கிண்ணத்தை நடத்த வேண்டி இருந்தபோதும் பொருளாதார நெருக்கடி காரணமாக அது மெக்சிகோவுக்கு கிடைத்தது. ஏற்கனவே 1970 உலகக் கிண்ணத்தையும் நடத்திய மெக்சிகோ இரண்டு முறை உலகக் கிண்ணத்தை நடத்திய முதல் நாடாக இருந்தது.

அரங்கில் உள்ள ரசிகர்கள் அலை அலையாக காட்டும் ‘மெக்சிகோ வெள்’ கொண்டாட்டம் இந்த உலகக் கிண்ணத்தில் அறிமுகமாகி இன்றுவரை தொடரும் ஒன்றாக உள்ளது.

இறுதிப் போட்டியில் டியாகோ மரடோனாவின் ஆர்ஜன்டீனா 3--2 என்ற கோல் வித்தியாசத்தில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது. இந்த தொடரில் இங்கிலாந்துடனான காலிறுதியில் மரடோனா தனது கையால் போட்ட கோல் இன்று வரை அவருக்கு கறையை ஏற்படுத்தி இருப்பதோடு அதே போட்டியில் அவர் போட்ட மற்ற கோல் நூற்றாண்டின் சிறந்த கோலாக பதிவானது.

1990 – இத்தாலி

இரண்டாவது தடவையாக இத்தாலி நடத்திய உலகக் கிண்ணத்தில் கெமரூன் அணி அதிர்ச்சி கொடுத்து காலிறுதி வரை முன்னேறியது. ஆபிரிக்க அணி ஒன்று காலிறுதிக்கு வந்தது இதுவே முதல்முறை.

முந்தைய இரண்டு உலகக் கிண்ணங்களிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோற்ற மேற்கு ஜெர்மனி, மூன்றாவது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஆர்ஜன்டீனாவை எதிர்கொண்டது. இம்முறை சந்தர்ப்பத்தை கைவிடாத மேற்க ஜெர்மணி 1--0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறை உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

1994 – அமெரிக்கா

அமெரிக்காவில் நடைபெற்ற இந்த உலகக் கிண்ணம் அதுவரை அதிகம் பேர் பார்வையிட்ட உலகக் கிண்ணமாக மாறியது.

ஆர்ஜன்டீனாவின் நட்சத்திர வீரர் டியாகோ மரடோனா ஊக்கமருந்து சோதனையில் சிக்கி வெளியேற்றப்பட்டார். அன்ட்ரஸ் எஸ்கோபர் போட்ட ஓன் கோல் கொலம்பிய அணியின் தோல்விக்கு காரணமாக, பத்து நாட்கள் கழித்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரோஸ்போலில் பிரேசில் மற்றும் இத்தாலி அணிகள் மோதிய இறுதிப் போட்டி மேலதிக நேரத்திலும் கோலின்றி முடிந்ததால் முதல் முறை பெனால்டி உதைகள் மூலம் வெற்றி அணி தீர்மானிக்கப்பட்டது. இத்தாலியின் ரொபர்டோ பக்கியோ உதைத்த பந்து கோல் கம்பத்துக்கு வெளியே பறந்து செல்ல, பிரேசில் கிண்ணத்தை வென்றது.

1998 – பிரான்ஸ்

இம்முறை உலகக் கிண்ண அணிகள் 24 இல் இருந்து 32 ஆக அதிகரிக்கப்பட்டன. இதனால் குரோசியா, ஜமைக்கா, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தனது முதல் உலகக் கிண்ணத்தில் ஆட வரம் பெற்றுக்கொண்டன.

பிரான்ஸ் மற்றும் பிரேசில் அணிகள் மோதிய இறுதிப் போட்டிக்கான பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஆரம்பத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. அவருக்கு சிறிதாக வலிப்பு வந்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டபோதும் கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டார்.

எனினும் சினேடின் சிடேனின் இரண்டு கோல்கள் மற்றும் எம்மானுவேல் பெடிடின் கோல் என்பவற்றால் 3--0 என வெற்றி பெற்ற பிரான்ஸ் முதல் முறை உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது.

2002 – ஜப்பான் மற்றும் தென் கொரியா

ஜப்பான் மற்றும் தென் கொரியா ஒன்றிணைந்து நடத்திய இந்த உலகக் கிண்ணம் ஆசியாவில் நடத்தப்பட்ட முதல் உலகக் கிண்ணமாக இருந்தது.

முந்தைய உலகக் கிண்ணங்களை வென்ற ஏழு அணிகளும் இந்த உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றபோதும் முதல் போட்டியில் கத்துக்குட்டி செனகலிடம் பிரான்ஸ் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. பின்னர் உருகுவே மற்றும் டென்மார்க்கிடம் தோற்ற நடப்புச் சம்பியன் கோலின்றி வெளியேறியது.

பிரேசில் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் திறமையின் உச்சத்தில் இருந்த ரொனால்டோ இரண்டு கோல்களை புகுத்த பிரேசில் அதிகபட்சமாக ஐந்தாவது முறை உலகக் கிண்ணத்தை வென்றது.

2006 – ஜெர்மனி

ஒன்றுபட்ட ஜெர்மனிக்கு உலகக் கிண்ணத்தை நடத்த வரம் கிடைத்தது. உலகக் கிண்ணத்தில் அதிகபட்சமாக 15 கோல்களை போட்டவராக பிரேசில் முன்கள வீரர் ரொனால்டோ பதிவானார்.

இத்தாலி மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதிய இறுதிப் போட்டி 1-1 என சமநிலையாக, பெனால்டி முறையில் இத்தாலி கிண்ணத்தை வென்றது. இதில் தனது கடைசி போட்டியில் ஆடிய பிரான்சின் சினேடின் சிடேன் இத்தாலி வீரர் மார்கோ மடரெசியின் நெஞ்சில் தலையால் முட்டி சிவப்பு அட்டை பெற்று வெளியேறியது மறக்க முடியாத நிகழ்வாக மாறிவிட்டது.

2010 – தென்னாபிரிக்கா

ஆபிரிக்காவுக்கு உலகக் கிண்ணத்தை நடத்த முதல் தடவை வாய்ப்பு கிடைத்தது. அரங்கில் கூடிய ரசிகர்கள் நீண்ட ஊதுகுழல் மூலம் ஒலி எழுப்பி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது இந்த உலகக் கிண்ணத்தின் சிறப்பம்சமாகும்.

ஸ்பெயின் – நெதர்லாந்துக்கு இடையிலான இறுதிப் போட்டியில் 1--0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்பெயின் 1974 மேற்கு ஜெர்மனிக்கு பின் உலகக் கிண்ணம் மற்றும் ஐரோப்பிய கிண்ணத்தை வென்ற முதல் நாடாக இடம்பெற்றது.

2014 – பிரேசில்

அதிகபட்சமாக 207 நாடுகள் தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்ற இந்த உலகக் கிண்ணத்தை நடத்த பிரேசில் வாய்ப்பு பெற்றது.

நடப்பு சம்பியன் ஸ்பெயின் முதல் சுற்றிலேயே எதிர்பாராமல் வெளியேறியது. மேலும் அதிர்ச்சி தரும் வகையில் பலம்மிக்க பிரேசில் அணி அரையிறுதியில் ஜெர்மனியிடம் 7--1 என்ற கோல் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் ஜெர்மனியின் மிரொஸ்லோ க்ளோஸ் போட்ட கோல் மூலம் உலகக் கிண்ணத்தில் அதிகபட்சம் 16 கோல்களை பெற்றவராக ரொனால்டோ சாதனையை முறியடித்தார்.

ஆர்ஜன்டீனாவுக்கு எதிரான இறுதிப் போட்டியை 1--0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்ற ஜெர்மனி நான்காவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்றது.

இவ்வாறான சாதனைகள் மற்றும் சோதனைகளுடன் இடம்பெற்ற பிஃபா உலகக் கிண்ணத் தொடரின் அடுத்த கட்டமாக இம்முறை இடம்பெறும் தொடரில் கிண்ணத்தை வெல்லும் அணி எது?

Comments