இணக்கப்பாட்டு அரசுக்கான பலப்பரீட்சையாக பிரதி சபாநாயகர் தெரிவு | தினகரன் வாரமஞ்சரி

இணக்கப்பாட்டு அரசுக்கான பலப்பரீட்சையாக பிரதி சபாநாயகர் தெரிவு

மகேஸ்வரன் பிரசாத்

இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்து ஏற்படுத்திய இணக்கப்பாட்டு அரசாங்கத்துக்கு இன்னமும் பதினெட்டு மாதங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் ஏட்டிக்குப் போட்டியான அரசியல் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பிரதி சபாநாயகர் தெரிவுக்கான போட்டி மற்றுெமாரு வெளிப்பாடாகும். ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தனித்தனியான வேட்பாளர்களைக் களமிறக்கியதால் ஏற்பட்ட போட்டி இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் எஞ்சியிருக்கும் காலம் ஆரோக்கியமானதாக இருக்குமா எனபதையே கேள்விக்குறியாக்கியுள்ளது

பிரதி சபாநாயகராகவிருந்த திலங்க சுமதிபால தனது பதவியை இராஜினாமாச் செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே போட்டி நடைபெற்றது. பிரதி சபாநாயகர் தெரிவு தொடர்பில் முற்கூட்டியே கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது சுதந்திரக் கட்சியின் சார்பில் அங்கஜன் இராமநாதனின் பெயர் ஜனாதிபதியின் சார்பில் முன்மொழியப்பட்டது. அது மாத்திரமன்றி வேறு கட்சிகளின் பெயர்களும் முன்வைக்கப்பட்டன. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பில் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேயின் பெயரும் முன்மொழியப்பட்டது. ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட பெயரை ஏற்றுக் கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருந்தது, எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அங்கஜனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கூட்டமைப்பின் எதிர்ப்பு மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பில் சு.கவைச் சேர்ந்த சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேயின் பெயர் பிரேரிக்கப்பட்டமை போன்ற காரணங்களால் சு.க அங்கஜனின் பெயரை வாபஸ் பெற்றது. இவ்வாறான அரசியல் காய்நகர்த்தல்களின் மத்தியிலேயே கடந்த செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் தெரிவு நடைபெற்றது. அன்று செவ்வாய்க்கிழமை 1 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. வெற்றிடமாகியிருக்கும் பிரதி சபாநாயகர் பதவிக்குப் புதியவரைத் தெரிவுசெய்ய வேண்டும் என சபாநாயகர் அறிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, ஆனந்த குமாரசிறி எம்பியின் பெயரை பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்மொழிய, நளின் பண்டார ஜயமகா எம்பி அதனை வழிமொழிந்தார். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதைப் போன்று ஐ.ம.சு.முவின் சார்பில் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயின் பெயர் முன்மொழியப்பட்டது. எஸ்.பி.திசாநாயக்க எம்பி இந்தப் பெயரை முன்மெழிந்தார். இதன் பின்னர் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பதவிவிலகிய திலங்க சுமதிபால சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய பதவி மற்றுமொரு சுதந்திரக் கட்சி உறுப்பினருக்கே வழங்கப்பட வேண்டும் என்றார். எனவே சகலரின் நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டு சுதந்திரக் கட்சியின் வேட்பாளரைத் தெரிவுசெய்வோம், வாக்கெடுப்புக்குச் செல்லத் தேவையில்லை என்றார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுதந்திரக் கட்சியின் சார்பில் பிரேரிக்கப்பட்ட உறுப்பினரின் பெயர் வாபஸ் பெறப்பட்டதாலேயே ஆளும் கட்சி சார்பில் பின்வரிசை உறுப்பினர் ஒருவரின் பெயரை பிரேரித்திருப்பதாகக் கூறினார்.

இருந்தபோதும், சு.க வேட்பாளரை போட்டியின்றித் தெரிவுசெய்வோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் என்னுடன் தொலைபேசியில் பேசினார். தனது மனதிலுள்ள நபரின் பெயரை கூறினார். ஆனால் சுதந்திரக் கட்சி பிரேரிக்கும் பெயரை தெரிவு செய்வதே உகந்தது என்றேன். அதனாலே நாம் இன்று சு.க வேட்பாளரை அங்கீகரிக்கிறோம் என்றார்.

மீண்டும் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.தே.க தரப்பிற்கு சபாநாயகர் பதவியும் சுதந்திரக் கட்சிக்கு பிரதி சபாநாயகர் பதவியும் குழுக்களின் பிரதித் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கும் வழங்கவே உடன்பாடு காணப்பட்டது. பிரதி சபாநாயகர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அரச தரப்பில் அங்கஜன் ராமநாதன் பெயர் முன்வைக்கப்பட்டது. சில கட்சிகள் அதனை எதிர்த்தன. நீங்கள் அதனை எதிர்த்தாலேயே ஆளும்தரப்பின் பின்வரிசை உறுப்பினர் ஒருவருக்கு வழங்க இணக்கம் கண்டோம். சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே எதிர்த்தரப்பில் உள்ளவர். ஏற்கனவே குழுக்களின்பிரதித் தலைவர் பதவி எதிர்த்தரப்புக்குச் சென்றிருப்பதால் பிரதி சபாநாயகர் பதவி ஆளும் தரப்புக்கே உரியது. சுதந்திரக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களில் அனுபவம் வாய்ந்தவர்கள் குறைவு என்பதாலும், பிரதி அமைச்சர்கள் எவரும் தமது பதவியை இராஜினாமா செய்துவிட்டு பிரதி சபாநாயகர் பதவியை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத நிலையிலேயே எமது தரப்பிலிருந்து ஒருவரின் பெயரை முன்மொழிந்தோம் என்றார்.

இதனைத் தொடர்ந்து கோரம் மணி ஒலிக்கப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது சபை நடுவில் இரண்டு மேசைகள் வைக்கப்பட்டு ஒன்றில் வாக்குப் பெட்டியும், மற்றைய மேசையைச் சுற்றி மறைப்பும் போடப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு வாக்கெடுப்பு ஆரம்பமானது. வாக்கெடுப்புக்கான ஆயத்தங்கள் நடைபெற்றபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும், ஜே.வி.பியின் உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறிச் சென்றனர். ஒவ்வொருவரின் பெயரை அழைக்க உறுப்பினர்கள் வந்து தமது வாக்குகளை அளித்தனர். முதலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாக்கினைச் செலுத்தினார். அதன் பின்னர் ஒவ்வொரு எம்பிக்களும் தமது பெயர்களை அழைக்கும் போது சபை நடுவில் வந்து தமது வாக்குகளைச் செலுத்திச் சென்றனர்.

ஆளும் தரப்பு எம்பிக்களின் பெயர்கள் அழைக்கும் போது எதிர்த்தரப்பிலிருந்த ஒன்றிணைந்த எதிரக்கட்சியினர் மற்றும் சு.கவின் 16 பேர் கொண்ட குழுவின் உறுப்பினர்கள் கிண்டலடித்து கேலிசெய்துகொண்டிருந்தனர். பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான வாக்கெடுப்பு பிற்பகல் 4.20 வரை நடைபெற்றது. வாக்கெடுப்பு முடியும் முன்னரே ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆனந்த குமாரசிறி எம்பியைத் தேடிச் சென்று தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் ஜே.வி.பி உட்பட 73 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதில் சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைச்சர்களான நிமல் சிறிபால டி.சில்வா, துமிந்த திசாநாயக்க உள்ளிட்டவர்களும் அடங்குவதுடன், எதிர்க்கட்சிக்குச் சென்ற சுசில் பிரேமஜயந்த போன்றவர்களும் உள்ளனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் வாக்கெடுப்புக்கு முன்னர் சபையில் இருந்தபோதும் வாக்கெடுப்பின்போது சிலர் கலந்துகொள்ளவில்லை. பிரசன்ன ரணதுங்க, ரோஹித்த அபேகுணவர்த்தன உள்ளிட்டவர்கள் வாக்கெடுப்பின்போது சபைக்கு வரவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற வளாகத்துக்கு வந்தபோதும் சபைக்குள் வரவில்லை. ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவரும் வாக்கெடுப்புக்கு சமூகமளிக்கவில்லை. வாக்கெடுப்புக்கான பெயர் அழைக்கப்பட்டபோது சபையில் இல்லாத சந்திரசிறி கஜதீர எம்பி இறுதியில் வந்து தனது வாக்கை அளித்தார். வாக்களிப்பைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டன. பிரதி சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆனந்த குமாரசிறி எம்பிக்கு 97 வாக்குகளும், சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே எம்பிக்கு 53 வாக்குகளும் அளிக்கப்பட்டிருப்பதுடன், ஒரு வாக்கு செல்லுபடியற்றவாக்காகவும் பதிவாகியிருப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

சபாநாயகர் முடிவை அறிவித்ததும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேசையில் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனந்த குமாரசிறி எம்பியை தேடிச் சென்று கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர். இரகசிய வாக்கெடுப்பின் மூலம் ஆனந்த குமாரசிறி எம்பி பிரதி சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டதாக சபைக்கு உத்தியோகபூர்வமாக சபாநாயகர் அறிவித்தார்.

2004ஆம் ஆண்டு சபாநாயகர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமையே பிரதி சபாநாயகர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பு நான் முன்னர் குறிப்பிட்டதைப் போன்று இரு பிரதான கட்சிகளுக்கிடையிலான போட்டியை வெளிப்படையாகவே காண்பித்துள்ளது. ஆளும் தரப்பிலிருந்த 16 சு.க உறுப்பினர்கள் எதிர்க்கட்சி பக்கம் சென்றிருப்பதால் அரசாங்கத்தில் உள்ள சு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் ஐ.தே.கவின் பலம் சற்று அதிகரித்தது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு சகல கட்சிகளும் தம்மைத் தயார்ப்படுத்தத் தொடங்கியிருக்கும் சூழலில், பிரதி சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் தனது தயார்ப்படுத்தலை இதன்வழியாக காண்பித்திருப்பதாகவே தெரிகிறது.

மறுபக்கத்தில், அரசாங்கத்திற்கு பல்வேறு வகையில் ஆதரவாக இருந்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிசபாநாயகர் தெரிவு விடயத்தில் எடுத்த முடிவுசற்று சிந்திக்க வைத்துள்ளது. சு.கவுக்கு ஆதரவு தெரிவிப்பதைப்போன்று காண்பித்துவிட்டு, வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது தவிர்த்தமை ஐ.தே.கவுக்கான மறைமுக ஆதரவைக் காண்பித்திருப்பதாகவே அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கப் போவதாக அரசியலில் பரபரக்கப்படும் சூழலில் கூட்டமைப்பு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நிறுத்தப்பட்ட பிரதிசாபாநாயர் பதவிக்குப் போட்டியிட்ட உறுப்பினருக்கு ஆதரவைத் தெரிவித்திருப்பது சந்தேகத்தை எழுப்புவதாக அரசியல் ஆய்வாளர்கள் பலர் கேள்வியெழுப்புகின்றனர்.

இது இவ்விதமிருக்க எதிர்த்தரப்பிலுள்ள 16 சு.க உறுப்பினர்களும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரும் இணைந்தே சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயின் பெயரை முன்மொழிந்திருந்தனர். இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் வாக்களிக்கவில்லை. குறிப்பாக பிரசன்ன ரணதுங்க, ரோகித்த அபயகுணவர்த்தன போன்ற பலர் வாக்கெடுப்புக்கு முன்னர் சபையில் இருந்தபோதும் வாக்களிக்க சபைக்குள் வந்திருக்கவில்லை. அவர்களின் இந்த செயற்பாடும் சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்றன. ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறுப்படும் கருத்துக்களையும் இது உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

எதுவாக இருந்தாலும் இணக்கப்பாட்டு அரசாங்கத்துக்கு இன்னமும் 18 மாதங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியான இந்தப் பலப்பரீட்சைகள் எந்தளவுக்கு ஆரோக்கியமானது?

Comments