கூட்டமைப்பு தலைமையின் அணுகுமுறை அங்கத்தவர்களுக்ேக தெரியாது! | தினகரன் வாரமஞ்சரி

கூட்டமைப்பு தலைமையின் அணுகுமுறை அங்கத்தவர்களுக்ேக தெரியாது!

ஜி.ரி.லிங்கநாதன்
நேர்காணல்   
கி.வசந்தரூபன் 
 
 

தீர்வுத்திட்டம் குறித்து கூட்டமைப்பு தலைமை என்ன அணுகு முறைகளை கையாள்கிறது என்பது குறித்து மாகாணசபை உறுப்பினர்களுக்கோ, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ தெரியாது. மக்களை போல் தாமும் சங்கடமான நிலையில் தான் இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 
 
 

கேள்வி: வடக்கு மாகாண சபையின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில் அதன் செயற்பாடுகள் தொடர்பில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்...?

பதில்: முன்னர் ஆளுனரின் அதிகாரத்தால் வடக்கு மாகாணசபை எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்த நிலை மாற்றமடைந்து பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருந்தது. வடக்கு மாகாண சபையின் கீழ் இருந்த 33 அமைச்சுக்களின் ஊடாக பல அபிவிருத்திகளை செய்திருக்கின்றது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் வைத்தியசாலையே இருந்திராத கிராமத்தில் வடக்கு மாகாண சபை வைத்தியசாலையை நிறுவியது. அதேபோல் முதலமைச்சரின் கீழ் சுற்றுலா மையங்கள், சமூக அபிவிருத்தி என பல்வேறு அமைச்சுக்களும் பல வேலைகளை செய்திருக்கின்றன. மத்திய அரசின் நிதி காணாது, சட்டம் இல்லை, என முதலமைச்சர் சொன்னாலும் கூட, இன்னும் பல விடயங்களை செய்திருக்கலாம் என்ற கவலையுடன் தான் நாம் இந்த மாகாண சபைக் காலத்தை நிறைவு செய்கின்றோம்.

கேள்வி: வடக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள் உங்களுக்கு திருப்திகரமானதாகவுள்ளதா..?

பதில்: ஒரு இனம் சார்ந்த வரிசையில் முதலமைச்சர் தென்னிலங்கையில் நீண்டகாலம் வாழ்ந்திருந்தாலும், தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்களுடன் உறவு முறையாகவும், அவர்களை சுற்றி வாழ்ந்திருந்தாலும், தற்போது தமிழ் மக்களின் விடயங்களை ஆணித்தரமாக கூறி வருகின்றார். அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் ஒரு மாகாணசபை நிர்வாகத்தை பொறுத்தவரை இன்றும் எனக்கு அவருடைய நடவடிக்கையில் திருப்தியில்லை.

கேள்வி: வடமாகாண முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்படப் போவதாக பேசப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன..?

பதில்: அரசியல் ரீதியாக அது முதலமைச்சருடைய விருப்பத்தை பொறுத்தது. அது அவருடைய தனி மனித உரிமை. அல்லது சமூகம் சார்ந்த அக்கறை எனச் சொல்லலாம். ஆனால் திரும்பவும் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வர வேண்டும் என சொல்லுவாராகவிருந்தால், அவர் இரண்டு விடயத்தை மிகத் தெளிவாக சொல்ல வேண்டும். ஜனாதிபதி கூட இரண்டு தடவைகள் பதவி வகிக்க முடியும் என்று இலங்கை சட்டத்தில் உள்ளது. ஆனால் பலர் இங்கு வாழ்நாள் முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து சாதனை படைக்கிறார்கள். அந்தவகையில் முதலமைச்சர் இரண்டாவது தடவை முதலமைச்சராக வருவதாகவிருந்தால் அவர் என்ன நோக்கத்திற்கு வருகிறார். அவர் தனது முதலாவது காலப்பகுதியில் செய்ய ஆரம்பித்து செய்ய முடியாது போன விடயம் என்ன...? அதை தொடர்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கேட்டால் மக்கள் உண்மையில் அவருக்கு அந்த ஆதரவை வழங்க வேண்டும். இல்லை இனப்பிரச்சனையைத் தான் தீர்க்க வேண்டும் என்றால் மீண்டும் ஒரு முறை மாகாணசபை மூலம் 5 வருடத்தை முதலமைச்சர் வீணாக்கக் கூடாது. அவர் அரசியல் ரீதியாக செயற்படலாமே தவிர முதலமைச்சர் பதவிக்கு வரக் கூடாது. இது என்னுடைய கருத்து.

கேள்வி: வடமாகாண முதலமைச்சருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படக் காரணம் என்ன?

பதில்: தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற ஒரு கட்சியில் அதிலும் இருக்கின்ற ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை. இன்று அவரை ஒட்டுமொத்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிராக திசை திருப்பியிருக்கிறது. முதலமைச்சரும் அந்தக் கட்சியும் தான் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். அவர்கள் இரு தரப்பும் இந்தப் பிரச்சினைகளை பகிரங்கமாக பேசி மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் செயற்படவேண்டும். பிரிந்தவர்களை ஒன்றாக்க வேண்டியதே தற்போது தமிழ் மக்களுடைய தேவையே தவிர இருக்கிறவர்களையும் பிரிப்பது ஆரோக்கியமானது அல்ல. புலிகள் இல்லாத காலத்தில் மக்களின் ஒரே ஒரு பாதுகாப்பு அரணாக கட்சிகளும், அரசியல்வாதிகளும் தான் இருக்கிறார்கள். அவர்கள் பிரிந்து சென்றால் மக்களும் பிரிந்து செல்வார்கள். புலிகள் இருந்திருந்திருந்தால் இன்று நாம் கதைக்கத்தேவையில்லை. அவர்கள் சொன்னதைக் கேட்டிருப்பார்கள். ஆனால் இப்ப பலரும் புதிது புதிதாக கதைக்கிறார்கள்.

கேள்வி: நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சவால் அளிக்கும் வகையில் தென்னிலங்கை தேசிய கட்சிகளும் வாக்கினைப் பெற்றுள்ளன. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: 1976 இற்கு முற்பட்ட காலத்தில் வடக்கு, கிழக்கு பகுதியில் ஜனநாயக ரீதியாக தமிழ் கட்சிகளுக்கு இடையில் போட்டி நிலவியது. ஒரு தடவை தமிழரசுக்கட்சி என்றால் அடுத்த முறை தமிழ் காங்கிரஸ் தான் வென்றது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டனி உருவாகிய பின் அதற்கு போட்டியாக வேறு தமிழ் கட்சிகள் இருந்திருக்கவில்லை. அதற்கு போட்டியாக தேசிய கட்சிகளே இருந்தன. அதனாலேயே ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தொடர்ந்தும் யாழில் வென்று வருகின்றன. தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சமனான மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தமிழ் கட்சி ஒன்று இல்லாத நிலை இருக்கிறது.

அதனாலேயே கூட்டமைப்பு மேல் வெறுப்பு ஏற்படும்போது தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிக்கின்றனர். குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி சபைகள் இருக்கின்றன. அதில் ஒரு சிங்கள உள்ளூராட்சி சபை இருக்கிறது. அங்கு ஒரு தமிழ் வேட்பாளர் போட்டியிடவில்லை. ஆனால் மற்றைய நான்கு சபைகளிலும் தென்னிலங்கை தேசிய கட்சிகளில் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதற்கு காரணம் பணம். தேசியக் கட்சிகள் பணத்தை தண்ணியாக இறைத்தன. பண ஆசையும், பதவி ஆசையும் தான் தேசிய கட்சிகளில் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடக் காரணம். அடுத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சீற் கிடைக்கவில்லை என்ற கோபம் காரணமாக பலர் தேசிய கட்சிகளிடம் சென்றார்கள்.

கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கூட திட்டமிட்ட குடியேற்றங்கள் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நீங்கள் பிரதிநிதித்துவப்படும் வவுனியா வடக்கில் கூட குடியேற்றங்கள் தோற்றம் பெற்றுள்ளன. இதனை தடுக்க கூட்டமைப்பும், வடக்கு மாகாண சபையும் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளன?

பதில்: வவுனியா வடக்கு பிரதேசத்தின் நிலம் பறிபோகும் விடயம் நேற்று இன்று நடந்த விடயம் அல்ல. 1970 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 1000 ஏக்கர் திட்டம் ஒன்றை அப்போதைய அரசு உருவாக்கி வெலி ஓயா (அப்போதைய மணலாறு) பகுதியில் 10 பெரிய கம்பனிகளுக்கு வழங்கியது. சிலோன் ரியட்டர் பாம், ஹென்பாம், டொலர் பாம், காக்கா போர், ஆர்பிஜி என்று அவை நீண்டு செல்கின்றன. அந்தக் காணிகள் கொழும்பில் இருந்த தமிழ் தனவந்தர்களுக்கு வழங்கப்பட்டன.

அவர்கள் இங்கு வந்து அதனை பண்ணையாக செய்து வந்தார்கள். அந்த நேரத்தில் தான் 1977 ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. கலவரத்தின் போது தென்னிலங்கையில் இருந்து வந்த தமிழ் மக்களையே அங்கு கொண்டு சென்று குடியேற்றினார்கள். பிறகு 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்துடன் அந்த மக்கள் அடித்து விரட்டப்பட்டார்கள். அந்த மக்கள் இன்றும் அகதிகளாக இந்தியா உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ளார்கள்.

அதன் பின்னர் யுத்த கைதிகளாக இருந்த சிங்கள கைதிகளை கொண்டு வந்து அங்கு குடியேற்றினார்கள். சிங்கள குற்றக் கைதிகளை பலவந்தமாக கொண்டு வந்து குடியேற்றிய இடம் தான் இன்றைய வெலிஓயா. பிறகு காலத்திற்கு காலம் அது அதிகரித்து விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற போது எல்லைப் புறங்களில் இருந்தவர்கள் மாத்திரம் மாறி மாறி இடம்பெயர்ந்தனர்.

இதனால் கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக வாழ்ந்த பூர்வீக கிராமங்கள் பல அங்கு உருவாக்கி விட்டது. 2009 இற்கு பிற்பாடு வடக்கில் வடக்கின் வசந்தம், கிழக்கில் கிழக்கின் உதயம் என்ற பெயரில் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மூன்று பேரின் பெயரைப் பயன்படுத்தி அவசர வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்தார்கள். இதன் போது தான் கிட்டத்தட்ட 3000 பேர் வரையில் அம்பாந்தோட்டை, மாத்தறை பகுதிகளில் இருந்து கொண்டு வந்து வவுனியா வடக்கில் குடியேற்றினார்கள். இராணுவத்தையும், ஆளுனரையும் தவிர எவரும் அங்கு போக முடியாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் உண்மையில் குடியேற்றங்கள் இடம்பெறவில்லை. மகாவலி அதிகார சபையின் கட்டுப்பாட்டில் அந்த இடங்கள் இருந்தாலும் அந்த மக்களே தற்போது கஸ்ரத்தில் இருக்கின்றார்கள். அவர்களும் பல பிரச்சினைகளை சொல்கிறார்கள். மாகாண சபையில் காலத்திற்கு காலம் இந்த விடயங்களை நாம் கொண்டு வந்துள்ளோம்.

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றத்தில் இதை ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டவில்லை.

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 22 மாகாண சபை உறுப்பினர்கள் சென்றிருந்தோம். அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்து வடக்கு மாகாணத்தில் உள்ள மாகாண சபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து உடனடியாக செயலணியொன்றை உருவாக்க தீர்மானித்தோம். இதன்படி மாகாண சபை உறுப்பினர்கள் 8 பேரும், இன்னும் 3 - 4 பேர் கொண்ட குழுவும் இணைந்து இந்தக் குடியேற்றங்கள் எவ்வாறு தடுப்பது. இல்லாமல் செய்வது என்பது குறித்து கூடி ஆராயவுள்ளோம்.

Comments