பிரதி சபாநாயகர் தெரிவு; சு.கவை கழுத்தறுத்த ஒன்றிணைந்த எதிரணி | தினகரன் வாரமஞ்சரி

பிரதி சபாநாயகர் தெரிவு; சு.கவை கழுத்தறுத்த ஒன்றிணைந்த எதிரணி

 

நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ஐ.தே.க கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அரசியலில் தனியான வெற்றியொன்றை ஈட்டி கட்சிக்குள் தலை தூக்கியிருக்கும் உட்பூசல்களுக்கு தற்காலிக முடிவு கட்டியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பிரதி சபாநாயகர் தெரிவில் ஐ.தே.க வேட்பாளர் வெற்றியடைந்தது. ஐ.தே.க விற்கு சற்று நிம்மதியை தந்துள்ளது. ஒன்றிணைந்த எதிரணியும் சு.க மாற்றுக் குழுவும் இணைந்து நிறுத்திய வேட்பாளர் தோல்வியடைந்தார். இந்த வெற்றி தோல்விகளின் பின்னணியில் பல அரசியல் வெட்டுக்குத்துகள் இடம்பெற்றிருப்பது முக்கிய அம்சமாகும்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவுக்கு தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. இந்த நிலையில் ஏற்பட்ட பிரதி சபாநாயகர் வெற்றிடத்திற்கு யார் நியமிக்கப்படுவார் என்பது தொடர்பில் தெளிவாக எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் கட்சித் தலைவர் கூட்டத்தில் ஒருவரின் பெயர் முதலில் அடிபட்டது. அங்கஜன் ராமநாதனின் பெயர் தான் அது. பிரதி சபாநாயகர் பதவி சு.கவிற்கே ஒதுக்கப்பட வேண்டிய நிலையில் சு.க தரப்பில் 3 எம்.பிகள் (ஆளும் தரப்பு) மாத்திரமே உள்ளதால் அதில் ஒருவருக்கு வழங்குவது தவிர ஜனாதிபதிக்கு வேறு மாற்றுவழி இருக்கவில்லை.

இதற்கு ஏனைய கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் த.தே.கூ மாத்திரமே ஆட்சேபணை வெளியிட்டிருந்தது.

த.தே.கூட்டமைப்பின் எதிர்ப்பு காரணமாக ஐ.தே.கவும் சற்று பின்வாங்கியது. இதற்கிடையில் வேறு சிலரின் பெயர்கள் அடிபட்டன. ஒன்றிணைந்த எதிரணியும் தமது பலத்தை காண்பிக்க இதனை பயன்படுத்திக் கொள்ள திட்டம் தீட்டியது. சு.க வின் கோட்டா என்பதால் உடன்பாட்டுப்படி அவர்களுக்கு வழங்க ஐ.தே.க தரப்பு அமைதி காத்தாலும் ஒன்றிணைந்த எதிரணியின் பிரவேசத்தையடுத்து ஐ.தே.க சற்று உசாரானது. ஐ.தே.க தரப்பிலும் ஒருவரை நிறுத்துவது குறித்து கட்சியில் ஒரு தரப்பு ரகசிய பேச்சுக்களை முன்னெடுத்தது. ஆனால் ஆளும் தரப்பிலுள்ள சு.கவை பகைத்துக் கொள்ளக் கூடாது என பிரதமர் உறுதியாக கூறிய நிலையில் இது பற்றி ஜனாதிபதியுடனும் பேசப்பட்டதாம். ஐ.தே.க தரப்பில் ஆனந்த குமாரசிறியை நிறுத்த இருப்பது பற்றி அவரிடம் கூறப்பட்ட போது அவர் அதற்கு சம்மதம் வெளியிட்டதாக அறிய வருகிறது.

ஒன்றிணைந்த எதிரணியில் ஒருவரை நிறுத்தினால் சகல தரப்பினதும் ஆதரவை பெற முடியாது என்பதால் சு.க 16 ​பேர் அணியில் ஒருவரை நிறுத்த ஒன்றிணைந்த எதிரணி அந்த அணியுடன் பேச்சு நடத்தியது. இதன் படி சுதர்சினி பெர்ணாந்துவை நிறுத்த முடிவானது. ஆனால் திட்டத்தை ஒன்றிணைந்த எதிரணி தரப்பில் முன்வைத்தாலும் இதற்கான பிரசாரங்கள் வெற்றிக்கான முன்னெடுப்புகள் என்பன பெரியளவில் இடம்பெறவில்லையாம். ஏனென்றால் சு.க 16 பேர் குழு தங்களுடன் இணைவதை விரும்பாத பல ஒன்றிணைந்த எதிரணி எம்.பிகள் தமது வேட்பாளர் வெல்வதை கொஞ்சமும் விரும்பவில்லை.

இதற்கிடையில் பிரதி சபாநாயகர் தெரிவிற்கான நாளும் வந்தது. அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்றத்திற்கு வந்திருந்தார். தனது தரப்பு எம்.பிக்களை அழைத்து சுதர்சினி பெர்ணாந்துவை ஆதரிக்குமாறு அவர் ​கேட்டுக் கொண்டாராம். இதற்கு ஒன்றிணைந்த எதிரணி எம்.பிகள் சம்மதம் தெரிவித்திருந்தனர். அன்று முக்கிய தினம் என்பதால் ஆளும் தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் கூடுதலான எம்.பிகள் சபைக்கு வருகை தந்திருந்தார்கள்.

இந்த நிலையில் தனது பாராளுமன்ற செயலாளருக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்த ஜனாதிபதி,சுதர்சினிக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ஆளும் தரப்பிலுள்ள சு.க அமைச்சர்கள் மற்றும் எம்.பிகளுக்கு அறிவித்தார்.அதற்கு சு.கவினர் விருப்பம் தெரிவித்திருந்தனாராம்.

பிரதி சபாநாயகர் தெரிவு தொடர்பான பேச்சுக்கள் கடைசி ஓரிரு தினங்களில் தான் சூடு பிடித்திருந்தது. இதில் த.தே.கூட்டமைப்பின் வாக்குகள் முக்கியமானது என்பதை பிரதமர் நன்கு உணர்ந்திருந்தார். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு த.தே.கூ தொடர்ந்து உதவிவந்தாலும் இந்த தெரிவில் அதன் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என தெளிவில்லாத நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரடியாக எதிர்க்கட்சித் தலைவருடன் இது பற்றி பேசினாராம்.

அவருக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்து தமது தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவதையும் அதற்கு ஆதரவு வழங்குமாறும் வினயமாக கோரினாராம். எதிர்க்கட்சித் தலைவரின் பதில் பிரதமருக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. தமது தரப்பு சு.க தரப்பில் நிறுத்தும் வேட்பாளரையே ஆதரிக்கும் எனவும் பிரதி சபாநாயகர் பதவி சு.கவிற்குரியது என்ற உடன்பாட்டுடனே இந்த தெரிவு நடக்க வேண்டும் எனவும் சம்பந்தன் உறுதியாக கூறினாராம்.

தினப்பணிகளை தொடர்ந்து கடந்த செவ்வாய்க் கிழமை பிரதி சபாநாயகர் தெரிவு நடைபெற்றது.

ஆனந்த குமாரசிரியின் ​பெயரை புத்திக பதிரண பிரேரித்தார். சுதர்சினி பெர்ணாந்து புள்ளேயின் பெயரை எஸ்.பி திசாநாயக்க பிரேரித்தார். பிரதி சபாநாயகர் தெரிவிற்கான முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சபையில் எதிர்பாராத சில திருப்பங்களும் நடந்தன. சுதர்சினியை ஆதரிப்பதாக அறிவித்த த.தே.கூ எம்.பிகள் ஒவ்வொருவராக வெளியேறினார்கள். எதிரணி எம்.பியை ஆதரித்து அரசாங்கத்துடனான உறவை த.தே.கூ உடைத்துக் கொள்ளப் போவதாக அனைவரும் நினைத்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் தனது அரசியில் சாணக்கியத்தை வெளிப்படுத்தி தமது குழுவுடன் வெளிநடப்பு செய்தார். மறுபக்கம் ஒன்றிணைந்த எதிரணி சார்பில் சபைக்கு வந்திருந்த 18 எம்.பிகள் மெதுவாக சபையில் இருந்து நழுவிச் சென்றதை பலரும் அவதானிக்கத் தவறவில்லை.

சமல் ராஜபக்‌ஷ,குமார வெல்கம. எஸ்.எம்.சந்ரசேன, ரோஹித அபேகுணவர்தன,ரமேஷ் பதிரண, செஹான் சேமசிங்க, ஜனக ஹேரத், டீ.வி சானக்க, பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர, இந்திக அநுருத்த, தாரக பாலசூரிய, துலீப் வெதாரச்சி, நிமல் ரங்சா, பியல் நிசாந்த, காஞ்சன விஜேசேகர, மற்றும் தேனுக விதானகமகே ஆகியோரே இவ்வாறு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது வெளியேறியவர்களாகும். இது தவிர ஆளும் தரப்பிலுள்ள சு.க ராஜாங்க அமைச்சரான மொஹான் லால் கிரேருவும் மெதுவாக நழுவியவர்களில் ஒருவராம்.

கடும் போட்டியை எதிர்பார்த்த ஐ.தே.கவுக்கு வாக்கெடுப்பின் ஆரம்பத்திலேயே வெற்றி தமது பக்கம் என்பது புரிந்து விட்டது. சபை நடுவில் அமைக்கப்பட்ட சிறிய மறைப்பிற்குள் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக வாக்குப் பெட்டி திறந்து எம்.பிகளுக்கு காண்பிக்கப்பட்டது. முதலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தான் வாக்களித்தார். அவர் வாக்களிக்க வந்த போது எதிரணியில் இருந்த தயாசிறிஜெயசேகர எம்.பியும் வேறு சிலரும் பெண்ணின் வெற்றிக்கு பிரதமர் பங்களித்து வாக்களிப்பார் என சத்தமாக குரல் எழுப்பினார்கள். பிரமர் மெதுவாக சிரித்தவாறு வாக்களித்தார். அடுத்து அமைச்சர்கள் வாக்களித்தார்கள். ஒவ்வொருவர் வாக்களிக்கும் போது எதிரணி எம்.பிகள் அதற்கு சத்தம் எழுப்பி கிண்டலடிக்கத் தவறவில்லை.

ஐந்தாறு பேர் வாக்களிக்கும் போதே ஒவ்வொரு ஐ.தே.க எம்.பியாக குமாரசிரி எம்.பியின் அருகில் சென்று கைலாகு கொடுத்து தமது வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்தார்கள்.

இறுதியில் ஆனந்த குமாரசிறி எம்.பிக்கு 97 வாக்குகளும் சு.க வேட்பாளருக்கு 53 வாக்குகளும் கிடைத்திருந்தன.

55 ஒன்றிணைந்த எதிரணி எம்.பிகளில் சிலர் வெளிநாடு சென்றிருந்தனர். சபையில் இருந்த சுமார் 30 பேர் வரை சுதர்சினி பெர்ணாந்துவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள்.சு.க 16 பேர் அணியிலும் ஓரிருவர் சபைக்கு வந்திருக்காததோடு ஏனையவர்கள் வாக்களித்திருந்தார்கள். ஆளும் தரப்பிலுள்ள 23 சு.க எம்.பிகளில் அனைவரும் சபைக்கு வந்திருக்கவில்லை. வந்தவர்களில் அநேகர் சுதர்சினிக்கு ஆதரவாகத் தான் வாக்களித்திருந்திருந்தார்களாம். ஐ.தே.கவில் ஒருவர் சுதர்சினி பெர்ணாந்துவுக்கு வாக்களித்திருக்கலாம் என பேச்சடிபடுகிறது.

சுதர்சினி பெர்ணாந்து வெல்வதற்கு இருந்த வாய்ப்பு ஏன் தவறியது என்பது குறித்து 16 பேர் அணிக்கு தாமதமாகத் தான் புரிய ஆரம்பித்துள்ளது. தங்களை ஒன்றிணைந்த எதிரணியில் ஒரு தரப்பு ஏமாற்றியிருப்பது விளங்கும் போது எல்லாம் நடந்து முடிந்திருந்தது.

ஒன்றிணைந்த எதிரணியின் 55 பேரும் சு.கவின் 16 பேரும் ஆளும் தரப்பிலுள்ள 23 சு.வினரும் த.தே.கூபில் 16 பேரும் இ.தொ.கா மற்றும் ஈ.பி.டி.பி என்பனவற்றில் தலா ஒருவர் இணைந்தால் 112 வாக்குகள் பெற வாய்ப்பிருந்தது. இதில் வெளிநாடு சென்றவர்கள் தவிர்த்து மற்றவர்கள் வாக்களித்திருந்தாலும் சுதர்சினி வெல்லக்கூடியதாக இருந்தாலும் தங்களை நம்பி ஏமாற வைத்திருப்பது சு.க 16 பேர் அணிக்கு தாமதமாகத் தான் புரிந்திருந்தது. சு.க 16 பேர் குழு எதிரணிக்கு வந்ததால் தங்களின் தொகுதி அமைப்பாளர் பதவிக்கு அபாயம் ஏற்படும் என்ற பயத்தில் ஒன்றிணைந்த எதிரணி எம்.பிகளில் பலர் வாக்களிப்பை தவிர்த்திருப்பது பின்னர் தெரிய வந்துள்ளது.

ஆளும் சு.க அமைச்சர்களில் பலரும் சபைக்கு வராமல் தவிர்த்திருப்பது பின்னர் அம்பலமாகியிருந்தது.

ஜனாதிபதி கூறியிருந்தும் முன்னாள் ஜனாதிபதி கோரியும் பலர் வாக்கெடுப்பில் பங்கேற்காததன் ரகசியம் என்ன? அவர்களை விட மேலே இருப்பது யார் ? என சு.க 16 குழு குழம்பிப் போயுள்ளதாம்.

ஆனால் ஜனாதிபதியையும் முன்னாள் ஜனாதிபதியையும் இணைக்கும் முன்னெடுப்பிற்கு இந்த நகர்வு நல்ல வாய்ப்பாக அமைந்திருப்பதாக கூறி தங்களை தாங்களே தேற்றிக் கொண்டிருப்பதாக தகவல். இரு தலைவர்களும் ஒரே நிலைப்பாட்டில் செயற்பட இந்த தெரிவு வாய்ப்பாக அமைந்தாக அவர்கள் கூறுகின்றனர்.

Comments