பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு கட்டாய வரையறைகள் தேவையில்லை | தினகரன் வாரமஞ்சரி

பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு கட்டாய வரையறைகள் தேவையில்லை

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஜெமீலா ஹமீட் உடனான நேர்காணல்
றிசாத் ஏ காதர் ...
(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)  

 

பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு கட்டாய வரையறைகள் தேவையில்லை. பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை இலங்கையின் அரசியலமைப்பு எங்கும் தடைசெய்யவில்லை. தாராளமாக பெண்கள் அரசியலில் ஈடுபடும் சூழல் இருக்கின்றபோது குறித்த சதவீதம் பெண்கள் இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு பொருத்தமற்றது எனக் கூறுகின்றார் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஜெமீலா ஹமீட். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவரது நேர்காணலின் முழுவிபரம்...

 

 

கேள்வி :- அரசியல் பிரவேசம் பற்றி

பதில் :- நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக அறபா வட்டாரத்தில் போட்டியிட்டிருந்தேன். எனக்கு தேர்தலில் எவ்வித அனுபவமும், ஆர்வமும் இருந்திருக்கவில்லை. ஆனால் எனது கணவர் அரசியலில் மிக்க ஆர்வமுள்ளவர். அதன் காரணமாகவும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் பிரகாரம் பெண்களின் பிரதிநிதித்துவம் 25வீதம் இருக்கவேண்டும் என்கிற இறுக்கமான சட்டத்தின் காரணமாகவுமே இத்தேர்தலில் களமிறங்கும் சூழல் ஏற்பட்டது.

கேள்வி :- நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் பற்றிய அனுபவம்

பதில் :- நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண்கள் சார்பாக நான் களமிறக்கப்பட்டுள்ளதாக கணவர் கூறிய வேளையில் கோபமேற்பட்டது. ஆனால் எனது குடும்பத்தினரை அழைத்து விவகாரத்தினை க்கூறி ஆதரவு பெறலாம் என்று எண்ணியபோது அங்கும் எதிர்ப்புகள் கிளம்பின.

கணவரின் முடிவு பிழைத்துப் போகாது என்கிற மன தைரியம் என்னில் ஆட்கொண்டதனால் ஏலவே இருந்த மனநிலை இல்லாமல் மிக்க தைரியத்துடன் முகம்கொடுக்க தயாரானேன்.

எனது கணவர் தேசிய காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கில் கணவருக்கு ஒப்புதல் அளித்து குறித்த வேட்புமனு பத்திரத்தில் கையொப்பமிட்டேன்.

கேள்வி :- அதனூடாக முகம்கொடுத்த சவால்கள்?

பதில் :- எனது வட்டாரத்தில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள். நான் அரசியலுக்கு புதிதானவர் அதிலும் பெண் வேட்பாளர் என்பதனால் பல்வேறு சவாலுக்கு மத்தியிலே தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொண்டேன்.

எனது கணவர் அரசாங்க ஊழியர். குறித்த காலப்பகுதியில் எனது தேர்தல் பணிக்காக சுயேட்சைக் குழு சார்பாக கட்டுப்பணம் செலுத்தி தேர்தல் களப்பணியில் தன்னை அர்ப்பணித்தார்.

தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் இல்லாத நிலையிலும் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் இப்பிரதேசங்களில் மேற்கொண்ட அபிவிருத்திப்பணிகளும் தேர்தல் களத்துக்கு உதவிபுரிந்தது.

ஆரம்பத்தில் என்னை எதிர்த்த, விருப்பமற்றிருந்தவர்களும் எனது தேர்தல் பிரசாரப்பணிக்கு பக்கபலமாக நின்றனர்.

கேள்வி :- அரசியல் செயற்பாடுகளின் போது சமூகத்திலிருந்த விமர்சனங்கள்.

பதில் :- பெண்கள் அரசியலுக்கு வருவது தொடர்பில் ஏலவே பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்ற நிலையில் நான் அதற்கு விதிவிலக்கானவள் அல்ல. அதே விமர்சனங்கள் என்மீதும் சீறிப்பாய்ந்தன. ஆனால் அரசியல் என்பது சமூகப்பணி . அதுவே எனது பார்வை. வெறும் வியாபார நோக்கமாக இதனை நான் கருதவில்லை.

தேர்தல் பிரசாரப் பணிகளின் போது அநேகமானவர்கள் என்னிடம் கேட்ட கேள்வி இன்னும் எனது காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. ”பெண்கள் அரசியலுக்கு வந்து எதனை சாதிக்கப்போகின்றீர்கள், பெண்களுக்கு வாக்குப்போடுவதனால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை” என தேர்தல் களத்திலிருந்து மாற்றுக் கட்சி வேட்பாளர்கள் பிரசாரத்தினை முடுக்கி விட்டனர். இவை இரண்டும் பாரிய மனச்சோர்வைத் தந்தன.

ஆனால் இந்த நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மிக முக்கிய அமைச்சுக்களில் பெண்கள் இருந்து அலங்கரித்திருக்கின்றனர், மாத்திரமன்றி தற்போதுவரை இருக்கின்ற சூழலில் நான் ஏன் சங்கடப்படவேண்டும் என்கிற மன தைரியம் என்னுள் ஏற்பட்டது. முஸ்லிம் பெண் என்கின்ற வகையில் சில வரையறைகளை பின்பற்றவும் வேண்டியிருந்தது. அதனையும் முடியுமானவரை கடைப்பிடித்தேன். எவ்வித போஸ்டரோ, பெனரோ நான் அச்சிடவில்லை. வீடுவீடாக சென்று, நண்பர்கள் வட்டத்தை பலப்படுத்தி கணவரின் உதவியுடன் அதனை மிகச் சிறப்பாக மேற்கொண்டிருந்தேன்.

கேள்வி :- தேர்தலில் வெற்றி பெற்றீர்களா? அது எவ்வாறு அமைந்தது.

பதில் :- குறித்த தேர்தலில் தோல்வியுற்றிருந்தேன். ஆனால் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்தப்பெண்ணும்முதலில் முன்வராமையினால் எனது கணவர் எனது பெயரை சிபார்சு செய்து அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமையினாலும் கட்சிக்கு கிடைத்த பெண் பிரதிநிதித்துவத்தை நிரப்ப கிடைத்த சந்தர்ப்பத்தினை கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, கிழக்குமாகாண முன்னாள் அமைச்சரும் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெவ்வை ஆகியோர் என்மீது வைத்த நம்பிக்கையுமே தற்போது நான் பிரதேச சபையில் ஒரு உறுப்பினராக இருப்பதற்கு காரணமாகும்.

கேள்வி :- சபை அமர்வுகள் பற்றிய உங்களது பார்வை.......?

பதில் :- அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மொத்த உறுப்பினர்கள் 18 பேர். அதில் ஐ.தே.கட்சியின் ஊடாக தெரிவு செய்யப்பட்டோர் 08 பேர். தேசிய காங்கிரஸ் சார்பாக 06 பேர். அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக மூவர். பொதுஜன பெரமுன சார்பாக ஒருவர். இதில் ஆட்சியமைப்பது தொடர்பில் பல்வேறு இழுபறிகள் இடம்பெற்றன.

தேசிய காங்கிரஸ் கட்சி பிரதமர் ரணில் விக்சிரமசிங்க தலைமையிலான கட்சியில் கூட்டுச் சேர்வதில்லை என்கிற விடயத்தில் மிகத் தெளிவுடன் இருந்தது.

ஆட்சி அமைப்பது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டு வேட்பாளர்களை கட்சிக்கு அப்பால் சந்தித்து பணம் கொடுத்து வாங்கும் சூழல் மாற்றுக் கட்சியினருக்கு ஏற்பட்டது. இதற்கு தேசிய காங்கிரசினதும், அ.இ.ம. காங்கிரசினதும் உறுப்பினர்கள் சோரம்போகவில்லை. இதனால் எட்டு உறுப்பினர்களுடன் இருந்த ஐ.தே.கட்சி பொதுஜன பெரமுனவின் ஒரு உறுப்பினருடன் இணைந்து ஒன்பது ஆசனங்களையும், தேசிய காங்கிரஸ் ஆறு ஆசனமும், அ.இ.ம.காங்கிரசின் மூன்று ஆசனங்களுடன் ஒன்றிணைந்து சபையில் சம பலத்துடன் இருந்ததால் சபை அமர்வில் குலுக்கல் மூறைமூலம் தவிசாளரை தெரிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தவிசாளரை ஐ.தே.கட்சி தனதாக்கியது. அதேபோலவே உப தவிசாளர் தெரிவும் இடம்பெற்றது.தேசிய காங்கிரஸ் கட்சி அப்பதவியை பெற்றுக்கொண்டது. குறித்த அமர்வு ஒரு புதுவித அனுபவத்தினை அரசியல் ரீதியாக ஏற்படுத்தியது.

கேள்வி :- தேர்தல் முறையும், பெண்கள் அரசியலுக்கு வருவது பற்றிய உங்களது பார்வை

பதில் :- பொதுவாக எனது பார்வையில் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு கட்டாய வரையறைகள் தேவையில்லை. ஏனெனில் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதனை இலங்கையின் அரசியலமைப்பு எங்கும் தடைசெய்யவில்லை. தாராளமாக பெண்கள் அரசியலில் ஈடுபடும் சூழல் இருக்கின்றபோது குறித்த சதவீதம் பெண்கள் இருக்கவேண்டும் என்கிற கட்டுப்பாடு பொருத்தமற்றது. இலங்கையில் பெண்கள் ஜனாதிபதியாக, பிரதமராக மற்றும் பலம் பொருந்திய அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர், இருக்கின்றனர். உள்ளூராட்சி மாகாண சபை தேர்தல் திருத்த சட்டத்தை ஆதரிக்க வேண்டாம் என தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா எல்லா பிரச்சார மேடைகளிலும் முழங்கினார்.

ஆனால் அதனை எந்த முஸ்லிம் அரசியற் தலைவர்கள், அக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்போது கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்போது நடைமுறை ரீதியில் அனுபவிக்கத் தொடங்கிய பின்னரே நமது முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு இதிலுள்ள சிக்கல் நிலை விளங்கத் தொடங்கியுள்ளது.

கேள்வி :- இறுதியாக சொல்ல விரும்புவது.

பதில் :- அரசியல் ஒரு புனித பணி. அதனை வியாரபாரமாக அனேகம்பேர் பார்க்கின்றனர். அதனால் பெண்களுக்கும் அதற்குரிய கெளரவம் இல்லாமல் போகின்றது. தேர்தல் வெற்றிக்கு கொடுக்கின்ற இலஞ்சத்தினை வெற்றிபெற்று சம்பாதிக்கும் நிலை இல்லாமல் போகின்றபோதே அந்தப்பணி புனிதமானதாக அமையும். அதற்கு பொதுமக்கள் விழிப்புடன் இருத்தல் அவசியம். தனது பிரதிநிதி எப்படியானவர், எப்படி இருக்கவேண்டும் என்பதனை வாக்களிப்பதுக்கு முன்னர் அலசி ஆராய்தல் வேண்டும். அதுவல்லாமல் எப்படியானவர் என்றாலும் தனக்கும் தனது குடும்பத்துக்கும் உதவி செய்துவிட்டார் என்கிற ஒரே ஒரு காரணத்தை மையப்படுத்தி வாக்களித்துவிட்டு மீதமுள்ள 4 வருடங்களுக்கு கைசேதப்படும் நிலையினை வாக்காளர்களாகிய பொதுமக்கள் கவனத்திற்கொண்டு செயற்படுதல் வேண்டும். அதுவே இன்றைய அரசியல் நிலவரத்திலும் தாக்கம் செய்துள்ளதனை அறியமுடிகின்றது.

Comments