போதிய ஆதரவை நான் பெறாத சூழ்நிலையில் ஒதுங்கியிருக்கவே தீர்மானித்தேன் | தினகரன் வாரமஞ்சரி

போதிய ஆதரவை நான் பெறாத சூழ்நிலையில் ஒதுங்கியிருக்கவே தீர்மானித்தேன்

எம்.எஸ்.எம்.நூர்தீன் 

 

மண்முனைப் பற்று பிரதேசத்தை சகல வகையிலும் அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்காக அனைத்து அரசியல்வாதிகளும் வேறுபாடின்றி ஒத்துழைப்புக்களை தரவேண்டும் என மண்முனைப் பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் தெரிவித்தார். தினகரன் வாரமஞ்சேரிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 

கேள்வி: மண்முனைப்பற்று பிரதேச சபையினால் எவ்வகையான பிரச்சினைகள் மற்றும் தேவைகளை இப்பிரதேசத்தில் அடையாளம் கண்டுள்ளீர்கள்?

பதில்: வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்துக் காணப்பட்டுள்ளதுடன், மழை காலங்களில் வீதிகளில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக போதியளவு வடிகாண்கள் இல்லாமையும், வீதிகளில் நடப்பட்டுள்ள மரங்களினால் விபத்துக்களும் ஏற்படுவதும் அறியவருகின்றது. ஆரையம்பதி பொதுச் சந்தை ஒழுங்குபடுத்தப்படாததால் நிறையப்பிரச்சினைகள் அங்கும் காணப்படுகின்றன.

இந்த பொதுச் சந்தையில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்துவதற்குஇடம் இல்லாமையினாலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. நிர்வாக ரீதியாகவும் நிறைய குறைபாடுகளும் காணப்படுகின்றன.

உதாரணமாக, புதுக்குடியிருப்பு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டு வதற்கு இடமில்லாத நிலையும் காணப்படுகின்றது. அதை ஒழுங்குபடுத்துவதில் நிறையப் பிரச்சினைகள் காணப்பட்டன. அவற்றைத் தீர்த்து வைத்து தற்போது, திண்மக்கழிவுகளை கொட்டுவதற்கு போதியளவு வசதிகளை ஒழுங்குபடுத்தியுள்ளோம்.

கேள்வி: உங்கள் சபையில் பிரதி தவிசாளர் உறுப்பினர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு எவ்வாறுள்ளது?

பதில்: அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்புக்களை வழங்குகின்றார்கள். எந்த உறுப்பினரும் முரண்பாடான நிலையில் இல்லை.

ஆரம்பத்தில் முரண்பாடுகள் இருந்தாலும் அதன் பின்னர் நடைபெற்ற கூட்டங்களிலெல்லாம் அனேக தீர்மானங்கள் உறுப்பினர்களினால் ஏகமனதாகத்தான் எடுக்கப்பட்டுள்ளன.

இன வேறுபாடுகளின்றி எந்தப் பிரச்சினையுமில்லாமல் எமது சபையை சீராகக் கொண்டு செல்கின்றோம்.

சபையின் அனைத்துக் கூட்டங்களுக்கும் 17 உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர். கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் முடிவுகள் சுமூகமாக எடுக்கப்பட்டுள்ளன..

கேள்வி: உங்கள் சபையில் திண்மக்கழிவகற்றல் மற்றும் அதனை முகாமைத்துவம் செய்கின்ற பிரச்சினை இருக்கின்றதா?

பதில்: திண்மக் கழிகவற்றலில் பொது மக்களின் ஒத்துழைப்புகள் கொஞ்சம் குறைவே தவிர கழிவகற்றுவதில் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் எதுவுமில்லை.

திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதில் ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. எங்கள் சபையில் போதியளவு வாகனம் இருக்கின்றது. ஆனால் சாரதி பற்றாக்குறையும் தொழிலாளர் பற்றாக்குறையும் காணப்படுகின்றன.

இந்தப் பற்றாக்குறை நீக்கப்படுமாக இருந்தால் திண்மக்கழிவகற்றலில் எந்தப் பிரச்சினையுமிருக்காது.

திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இடப்பிரச்சினை இருக்கின்றது. அதனைச் சுற்றி பற்றையாக காணப்படுவதால் வேலி அமைக்க வேண்டும். அதற்கு நிதி தேவைப்படுகின்றது. நிதி கிடைக்குமாக இருந்தால் அதன் சுற்று மதிலை அமைத்து அதனை தீர்த்துக் கொள்வோம்.

அங்கு கட்டாக்காலி மாடுகள் வருவதால் சில சிரமங்களை அங்கு எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதனால் சுற்று மதில் அவசிய தேவையாக உள்ளது.

கேள்வி: எதிர்காலத்தில் உங்கள் சபையினால் என்ன வேலைத்திட்டங்களை செய்வதற்கு திட்டமிட்டுள்ளீர்கள்?

பதில்: மண்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள ஒரேயொரு மாவட்ட வைத்தியசாலை ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையாகும். அது தரமுயர்த்தப்படல் வேண்டும்.

தரமுயர்த்தப்படுவதன் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருக்கின்ற நெருக்கடியை குறைத்து இந்த வைத்தியசாலையை பயன்படுத்த முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலேயே மட்டு கல்முனைக்கிடைப்பட்ட பிரதான வீதியில் இருக்கின்ற ஒரேயொரு வசதியுள்ள வைத்தியசாலை எமது ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையாகும்.

இங்கு போதிய இடவசதி இருக்கின்றது. ஆனால் அதற்குரிய வளங்கள் போதுமானவையாக இல்லை.

வளங்கள் அதிகமாக இருக்குமானால் இந்த வைத்தியசாலை பெருமளவான நோயாளர்களை கையாளக் கூடிய சிறந்த வைத்தியசாலையாக இருக்கும். அதற்கு இந்த வைத்தியசாலை தரமுயர்த்தப்படல் வேண்டும். இந்த வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கான தீர்மானத்தை எமது சபையில் நாங்கள் எடுத்துள்ளோம்.

அரசியல்வாதிகள் அதிகாரத்திலுள்ளவர்களின் ஒத்துழைப்பையும் உதவியையும் நாடி நிற்கின்றோம். அத்தோடு எமது மண்முனைப் பற்று பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்துவதற்கும் தீர்மானம் எடுத்துள்ளோம். அதனையும் செய்வதற்கு அரசியல்வாதிகளின் ஆதரவு தேவையானதாகும்.

நான் ஒரு கட்சியையும் சாராதவனாகவும் அரசியலில் பிறரில் தங்கியில்லாதவனாகவும் இருப்பதாலும் எல்லா அரசியல்வாதிகளும் எனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்வதுடன் அனைத்து அரசியல் வாதிகளையும் நான் நாடுவதற்கு தயாராக இருக்கின்றேன்.

 

கேள்வி: நீங்கள் சுயேச்சையாக போட்டியிட்டே தவிசாளராக வந்துள்ளீர்கள். நீங்கள் தவிசாளராவதில் சந்தித்த சவால்களை கூறமுடியுமா?

பதில்: மக்களின் போதிய ஆதரவை பெறாத சூழ் நிலையை உணர்ந்து நான் ஒதுங்கிக் கொள்வதற்கு கூட தீர்மானத்திருந்தேன். ஆனால் சந்தர்ப்ப சூழ் நிலையினால் மற்றைய அரசியல் கட்சிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் காரணமாக எல்லோருக்கும் பொதுவானவனாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவனாக எந்தக்கட்சியாலும் நிராகரிக்கப்பட முடியாதவனாக என்னை அவர்கள் இனம் கண்டு எல்லோருக்கும் பொதுவான ஒரு தவிசாளராக தெரிவு செய்துள்ளார்கள் என நான் நம்புகின்றேன்.

கேள்வி: மண்முனைப் பற்று பிரதேச சபை பிரிவில் கல்வி முன்னேற்றத்திற்கும் வறுமை ஒழிப்புக்கும் நீங்கள் எவ்வகையான நடவடிக்கைகளை எடுப்பீர்கள்

பதில்: கடந்த 30 வருட கால யுத்தத்தினால் எமது கல்வி வளம் முற்றாக அழிந்து போய் விட்டது என நான் நினைக்கின்றேன். ஒரு காலத்தில் நானும் ஒரு ஆசிரியராக இருந்தவன்.

1985 1990 ஆண்டுகளில் அதிபர் பதவிகளுக்கு போட்டி போடக் கூடியளவுக்கு தகமையுள்ளவர்கள் எமது மண்முனைப் பிரதேசத்தில் இருந்தார்கள்.

ஆனால் இன்று மண்முனைப் பிரதேசத்திலுள்ள ஆரையம்பதியின் இரண்டு பாடசாலைகளை நிருவகிப்பதற்கு பொருத்தமான அதிபர்கள் இல்லாத சூழ் நிலை இங்கு காணப்படுகின்றது. தகுதியான அதிபர் இல்லாத நிலையையே நாங்கள் காண்கின்றோம். அந்தளவுக்கு எமது கல்வி வளம் அழிந்து போயுள்ளது.

ஒரு காலத்தில் ஆரையம்பதியிலிருந்து கல்முனை அக்கரைப்பற்று திருகோணமலை போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று கல்வி கற்பித்த காலம் போய் இன்று ஆரையம்பதி மகா வித்தியாலயத்திற்கு கல்முனையிலிருந்து மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தெல்லாம் வந்து கற்பிக்கின்ற ஒரு சூழ் நிலை இருக்கின்றது.

அந்தளவு எமது பகுதியில் போதியளவு கல்வித்தரமுள்ளவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது.

இந்த நிலையை மாற்றி கல்வியின் பால் அக்கறை செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

சிறந்த திறமையான மாணவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் நகர்ப்புற பாடசாலைகளுக்கு சென்று அங்கு சிறந்த பெறுபேறுகளைப் பெற்று நகர்ப்புற பாடசாலைகளுக்கு பெயரைத் தேடிக் கொடுக்கின்ற பெரும்பாலான மாணவர்கள் ஆரையம்பதி மாணவர்களாக இருக்கின்றார்கள்.

ஆரையம்பதியிலுள்ள பாடசாலையும் விழுந்து விட்டது அதில் வளப்பற்றாக்குறை, மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறையும் காணப்படுகின்றது. அத்தோடு அதிபர் இன்மையும் எங்கள் மாணவர்கள் வெளியிடங்களுக்கு செல்வதற்கு காரணமாக உள்ளது.

இந்த வளங்களை ஒருங்கிணைத்துக் கொடுத்தால் எமது பிரதேசத்தில் எதிர் காலத்தில் சிறந்த ஒரு கல்வி நிலையை ஏற்படுத்தலாம்.

கேள்வி: மண்முனைப் பற்று பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். இன ஐக்கியம் நல்லிணக்கம் எவ்வாறுள்ளது?

பதில்: நான் கல்லடி சிவானந்தா பாடசாலையில் தான் கல்வி கற்றேன். அவ்வாறு கல்வி கற்கும் போது என்னுடன் நெருக்கமாக பழகியது ஒரு முஸ்லிம் நண்பராகும்.

இன ஐக்கியம் இன நல்லிணக்கம் என்பது இயல்பாக மக்களிடம் மனதிலிருந்து உருவாக வேண்டும்.

அந்த உருவாக்கம் ஏற்பட முடியாத வகையில் சில சம்பவங்கள் நடந்தேறி விட்டன.

அந்த கசப்பான சம்வங்களை மறந்து ஒருவரை யொருவர் புரிந்து எதிர் காலத்தில் ஒன்றுபட்டால்தான் எமது பிரதேசத்தை வளமுள்ள பிரதேசமாக உருவாக்க முடியும்.

இங்கு குறிப்பாக இருக்கின்ற பிரச்சினை காணிகள் தொடர்பான பிரச்சினைகளே இருக்கின்றன. அந்தப்பிரச்சினைகளில் தமது நிலம் மாற்று சமூகத்துக்கு போக கூடாது என்பதில் எல்லா சமூகத்துக்கிடையிலும் கருத்து நிலைப்பாடு காணப்படுகின்றது.

ஆனால் எந்த சமூகமும் இன்னொரு சமூகத்தை புறக்கணித்து வாழ முடியாது என்பது எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் யதார்த்த பூர்வமான நிலையாகும்.

இந்த யதார்த்தத்துடன் விட்டுக் கொடுப்புக்களுடன் மற்றவர்களின் உரிமைகளை பறிக்காத வகையில் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நமது நடவடிக்கைகளை மேற் கொண்டால் இன ஒற்றுமையென்பதை சாத்தியமாக்கி கொள்ளலாம்.

அதற்கான மன மாற்றம் ஏற்பட வேண்டும். மற்றவர்களின் உரிமையை அங்கீகரிக்கும் வகையில் இருப்பதுடன் ஒருவரை அடக்கி மற்றவர் வாழ நினைப்பது நிச்சயமாக நல்லிணத்துக்கு சவாலாக இருக்கும்.

கேள்வி: உங்களுக்கு அருகாமையில் காத்தான்குடி முஸ்லிம் நகர சபை ஒன்றுள்ளது. அந்த சபையுடன் உங்கள் உறவு எப்படி உள்ளது?

பதில்: நான் தவிசாளராக வந்ததன் பின்னர் காத்தான்குடி நகர சபையோடு எந்த ஒரு முரண்பாடும் வரவில்லை; நான் பல தடவை கூட்டங்களில் காத்தான்குடி நகர சபை தவிசாளரை சந்தித்துள்ளேன். சுமூகமாக கலந்துரையாடினோம்.

 

 

Comments