நுண்கடன் திட்டத்தில் எங்கே நடந்தது தவறு? | தினகரன் வாரமஞ்சரி

நுண்கடன் திட்டத்தில் எங்கே நடந்தது தவறு?

உயிர்கள் காவு கொள்ளப்பட்ட பின்னர் தான் நமக்கெல்லாம் ஞானம் பிறக்கிறது. நம் நாட்டின் இன்றைய நிலை இப்படித்தான் சொல்ல வைக்கிறது.

சமூகப் பிரச்சினைகள் உருவெடுக்கும் போதெல்லாம் தனிநபர் பிரச்சினைகளைப் பார்ப்பதும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதும் நம் எல்லோருக்கும் பழக்கப்பட்டுப் போனதொன்றாகிவிட்டது.

நாட்டில் இன்று பேசு பொருளாக இருப்பது நுண்கடன் (Micro credit) என்ற மரணப்பொறி. சிறுசிறு பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் போதெல்லாம் யாரென்றே தெரியாமல் கை நீட்டிய சிலருக்கு மரணத்தின் நுழைவாயில் அது என்பது இப்போதுதான் புரிந்திருக்கிறது.

சட்ட அனுமதி பெற்ற நிதி நிறுவனங்களும் சட்டவிரோத நிதி நிறுவனங்களும் வறுமையில் வாடும் மக்களுக்கு வழிகாட்டுவதாகக் காட்டி பணங்களை வழங்குகின்றன. கிராமத்து மக்களின் காலடியில் பணத்தை கொண்டு சேர்க்கும் அளவுக்கு இந்த நிறுவனங்களின் செயற்பணிகள் இருக்கின்றன.

பொருளாதாரத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் சிதைந்து சின்னாபின்னமாகிப் போய்க்கிடக்கும் மக்களைக் கவரும் வகையில் பிரசாரங்களை முன்னெடுக்கும் இந்த நிதி நிறுவனங்கள், அப்பாவி மக்களை மிக இலகுவாகப் பொறிக்குள் ஈர்த்து விடுகிறார்கள் என்பது தான் யதார்த்தமான உண்மை.

கொடுக்கும் பணத்துக்கு வட்டி அறவிடுகிறார்கள். தாமதித்தால் வட்டிக்கும் வட்டியோடுகிறார்கள். சுருங்கச் சொன்னால், தமிழ் நாட்டில் ‘கந்துவட்டிக்கு’ ஒப்பானதாகவே இதனை கருத முடியும்.

குடும்பத்தின் பொருளாதாரத்தை முறைமைப்படுத்தி செயற்படுபவர்கள் பெண்கள். அந்தப் பெண்களையே இலக்கு வைத்து கடன்களை வாரிவழங்கியுள்ள இந்த நிதி நிறுவனங்கள் வட்டி வசூலிக்க வீடுகளுக்கு செல்லும் போது பாலியல் துஷ்பிரயோகங்களிலும் ஈடுபடுகின்றார்கள் என்பது பெரும் வேதனைக்குரியதாக இருக்கிறது.

இதனைவிடவும், வட்டிக் கொடுமையால் பாதிக்கப்படும் இந்த மக்கள் உயிரை மாய்த்துவிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.

முறைமைப்படுத்தப்படாத இந்த நிறுவனங்களின் செயற்பாட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள விதைவைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இதுவரை (கிட்டத்தட்ட) 90 பேர் தற்கொலை செய்திருப்பதாக மாவட்டப் பதிவுகள் கூறுகின்றன.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய யாழ் மாவட்ட எம்.பி ஸ்ரீதரன் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார்.

“யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு, மக்களின் பொருளாதாரத்தை உறுஞ்சுவதற்காக அந்தப் பிரதேசங்களில் அதிக நிதி நிறுவனங்களும், வங்கிகளும் செயற்படுகின்றன”

“இவர்கள் வழங்கும் நுண்கடன்களைப் பெற்று மீளச் செலுத்த முடியாமல் கூடுதலான பெண்கள் தற்கொலை செய்துள்ளார்கள். யாழ் மாவட்டத்தில் 56 பெண்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பெண்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 19க்கும் மேற்பட்ட பெண்களும் தற்கொலை செய்துள்ளனர்” எனக் பட்டியலிட்ட ஸ்ரீதரன் எம்.பி, “இந்நிலை தொடர்ந்தால், பாரிய சமூகச் சீரழிவுகளுக்குள் சிக்கி வடக்கு, கிழக்கு சின்னாபின்னமாகிவிடும்” என்ற கவலையை வெளியிட்டார்.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களை சுய எழுச்சி பெற்று வாழ வைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதே ‘நுண்கடன்’ (Micro credit) திட்டமாகும். இத்தகைய திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் உச்சத்தைத் தொட்ட நாடுகள் இல்லாமல் இல்லை.

நமக்கு அருகில் உள்ள நாடான வங்காளதேஷ் இதற்கு நல்லதொரு உதாரணம். வங்காளதேஷைச் சேர்ந்த பேராசிரியர் ‘முகமது யூனுஸ்’ என்பவரே இந்த சிறுகடன் (நுண்கடன்) திட்டத்தின் தந்தை. பொருளியியல் நிபுணரான இவர், கிராமிய வங்கியை (Banker to the poor) தோற்றுவித்து ஏழை மக்களின் சமூக முன்னேற்றத்திற்கு வித்திட்டார். இதன் மூலம், அதளபாதாளத்தில் கிடந்த வங்களாதேஷ் பொருளாதார எழுச்சி பெற்று இன்று உலகில் தலை நிமிர்ந்து நிற்கிறது.

ஏழை, எளிய மக்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டமைக்காக 2006ம் ஆண்டு முகமது யூனுஸ்க்கு நோபல் பரிசும் கிடைத்தது.

நுண்கடன் செயற்திட்டமொன்று ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பியிருக்கும் போது, நம் நாடு ஏன் பாரிய சீரழிவை எதிர்கொள்கிறதென்பது நமது பொருளாதார நிபுணர்களையும் சல்லடைபோட வைத்திருக்கிறது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் 30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம். அதேநேரம் சுனாமி பேரலையால் அழிவடைந்து பொருளாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் முழுமையாக இழந்த பிரதேசம் என்பதை எவரும் மறந்துவிட முடியாது.

நலிவுற்ற மக்களுக்கு வாழ்வழிக்கும் நோக்கோடு அரசு செயற்பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால், முகாமைத்துவப்படுத்தப்படாமல் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளால் அந்த மக்களின் வாழ்வாதாரத்திலோ பொருளாதாரத்திலோ அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

மத்திய வங்கியின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே நிதி நிறுவனங்கள் செயற்படுகின்றன. மத்திய வங்கியின் அனுமதி பெற்ற 70 நிதி நிறுவனங்கள் களத்தில் நிற்பதாக ஸ்ரீதரன் எம்.பி பட்டியலிட்டுள்ளார். என்றாலும், முறையான அனுமதி பெறாத நிதி நிறுவனங்கள் பலவும் செயற்படுவதாக பாராளுமன்றத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையில், நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் நோக்கமும் இலக்கும் என்ன? என்பது இன்னும் தெளிவில்லாமலேயே இருக்கின்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் உயிரிழக்கும் அளவுக்கு நிதி நிறுவனங்களின் செயற்பாடு இருக்கிறதென்றால், இவைகளை வழிநடத்துவது யார்? கட்டுப்படுத்துவது யார்?

இந்தக் கேள்விகளுக்கு அரசுதான் விடைகாண வேண்டும்.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் அறிவிப்பு இந்தக் கேள்விகளுக்கு ஓரளவு விடைகாண முயன்றிருக்கிறது.

ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் குறைவான நுண்கடன் பெற்ற பெண்களின் வட்டியை செலுத்துவதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கிறது. இது பாராட்டும் நடவடிக்கையாக இருந்தாலும் வட்டி கட்டுவதற்குத் தாமதிக்கும் வட்டிக்குக் கூட வட்டி கறக்கும் (வட்டிக்கு வட்டி) நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆரோக்கியமான நடவடிக்கையாகத் தெரியவில்லை.

வட்டிகட்டுவதை அரசு பொறுப்பேற்பதை விடவும் வட்டி அறவிடுவதில் மட்டுப்படுத்திய முகாமைத்துவமொன்றை நடைமுறைப்படுத்தினால், நுண்கடன் பெற்ற நம் பெண்கள் மீட்சி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

ஆகவே, கடன் வட்டியைப் பொறுப்பேற்பதென்பது அரசின் துணிச்சலான நடவடிக்கை. என்றாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக இது அமையாது.

பல நாடுகளில் வெற்றி கண்ட நுண்கடன் திட்டம் நம் நாட்டில் மரணப்பொறியாகிறதென்றால் நமது திட்டமிடலிலும் முகாமைத்துவம் செய்வதிலும் ஏதோ நடந்திருக்கிறது என்பதுதான் புலனாகின்றது.

Comments