காலா பேசும் அரசியலும் சுப்பர் ஸ்டார் பிம்பமும் | தினகரன் வாரமஞ்சரி

காலா பேசும் அரசியலும் சுப்பர் ஸ்டார் பிம்பமும்

அருள் சத்தியநாதன்

 

இயலாமையை மனிதன் சந்திக்கும் போதெல்லாம் அதைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற அவனது எண்ணமே எல்லாம் வல்ல கடவுளை உருவாக்கியது. மனிதன் உருவாக்கிய முதல் சுப்பர் ஸ்டார் கடவுளே.

அரக்கர்களை அழித்து முனிவர்களைக் காத்ததாக சொல்லப்படும் கதைகளில் இராமனும் கிருஷ்ணரும் சுப்பர் ஸ்டார்களாக வருகிறார்கள்.

யூதர்களை வழி நடத்தி வாக்களிக்கப்பட்ட தேசத்துக்கு இட்டுச் சென்ற மோசஸ் ஒரு பைபிள் கால சுப்பர்ஸ்டார் என்றால் இந்தியர்களுக்கு மகாத்மா காந்தி ஒரு சுப்பர் ஸ்டார்.

இத்தகைய சுப்பர் ஸ்டார் பிம்பத்தைக் கொண்ட ரஜினியைப் பயன்படுத்தி தன் தலித் அரசியலை காலாவில் முன்வைத்திருக்கும் இரஞ்சித் பாராட்டுக்குரியவர்.

 

கடந்த வியாழனன்று தமிழகத்திலும் உலகெங்கிலும் வெளியாகி இருக்கும் ரஜினியின் காலா, கொட்டகை நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தைப் பார்த்தவர்கள் திரைப்படம் என்ற வகையில் சிறப்பாக இருப்பதாகவும, தலித் அரசியலை விரிவாகப் பேசும் ஒரு படமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். நிலத்தை அதாவது மக்களின் இருப்பை இந்த அளவுக்கு ஒரு அரசியலாகவே பேசும் ஒரு படம் இதற்கு முன் வந்ததில்லை என்ற அளவுக்கு படத்தை பலர் பாராட்டவும் செய்கிறார்கள்.

ஆனால், காலா ஒரு ரஜினிபடமா இயக்குநர் ப.இரஞ்சித் படமா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில் இந்தியாவில் பெரிய பட்ஜெட்டில் உச்ச நடிகர்கள் நடிக்கும் எல்லாப் படங்களுமே அந்த நாயகன் படம் முழுவதும் வரக்கூடியதாக, முக்கியமான திருப்பங்களில் எல்லாம் இருக்கக் கூடியதாகவே காட்சிகளும் வசனங்களும் அமைக்கப்பட்டிருக்கும். கதையும், திரைக்கதையும் நாயகனை முன்னிலைப்படுத்தியதாகவே இருக்கும். கமல், விஜயகாந்த், ரஜினி, விஜய், அஜித், முன்னர் எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினி கணேசன் அனைவருமே படம் முழுவதும் கோலோச்சுவார்கள். அதனால்தான் இயக்குநர் பின்தள்ளப்பட்டு அந்தந்த நடிகரின் படமாகக் கொண்டாடப்படுவது வழக்கமாக இருக்கிறது.

இயக்குநர் ப. இரஞ்சித் இதுவரை நான்கு படங்களைத்தான் கொடுத்திருக்கிறார். முதல் படம் அட்டகத்தி, ரசிகர்களின் கவனத்தை மட்டுமன்றி ஊடகங்கள், விமர்சகர்களின் கவனத்தையும் இப்படம் ஈர்த்தது. அடுத்து வந்த மெட்ராஸ் படம், இரஞ்சித்தின் பால் சினமா உலகத்தின் பார்வையை திரும்பச் செய்தது. இந்த இரண்டு படங்களின் வெற்றியால் கவரப்பட்ட சுப்பர் ஸ்டார் ரஜினி, நோய் வாய்ப்பட்ட பின்னர் தான் நடிக்க முடிவு செய்த முதல் படத்தை இரஞ்சித்துக்கே தந்தார். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் இரஞ்சித் இயக்கி, கபாலி வெளிவந்து வசூல் சாதனை படைத்தது. உடல் தளர்ச்சியும் ஆயாசமும் கொண்ட தன்னை அதே தோற்றத்தில் நடிக்கச் செய்து ஒரு வெற்றிப் படத்தை தர முடிந்த இரஞ்சித்தை வியப்புடன் கவனித்த ரஜினி, தன் அடுத்த படத்தையும் அவருக்கே தந்தார். இரஞ்சித் சொன்ன கதை அவருக்கு பிடித்துப் போனது. இரஞ்சித் தந்த முழு ஸ்கிரிப்டையும் படித்து உள்வாங்கிய பின்னரே, காலாவுக்கு சம்மதம் தெரிவித்தார் ரஜினி.

ரஜினி, தான் என்றைக்கும் முழு கதை வசனத்தையும் படித்துப் பார்த்து விட்டு ஒ.கே சொல்வதில்லை என்றும் இம்முறையே முழுவதையும் படித்துப் பார்த்துவிட்டு சம்மதம் தெரிவித்ததாகவும் கூறியிருக்கிறார். எனவே, தன்னுடைய சுப்பர் ஸ்டார் என்ற பிம்பம், அதைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளின் அவசியம், தனக்கு வெளியில் இருக்கக் கூடிய பெயருக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் என்பனவற்றை எண்ணிப் பார்க்காமல் காலாவுக்கு ரஜினி சம்மதம் சொல்லியிருக்க மாட்டார். எனவே அவரது சம்மதத்துடன்தான் காலாவில் அவர் தன் பார்திரத்தை ஏற்று, வசனங்களை பேசி நடித்திருக்கிறார்.

படம் பார்த்த பலரும் மற்றும் விமர்சகர்களும் இது ரஜினிபடம் அல்ல, இயக்குநர் இரஞ்சித்தின் படம் என்றே சொல்கிறார்கள். அதென்ன ரஜினி படம், இரஞ்சித் படம்?

ஒரு நாயகனை அனைத்தும் தெரிந்த, அனைத்தையும் முறியடிக்கக் கூடிய சுப்பர் நாயகனாகக் கட்டமைப்பது ஒன்றும் தமிழ்ச் சினமா பாணி அல்ல. உலகெங்கும் அப்படித்தான். மனித உளவியல் என்றைக்குமே தன்னால் சாதிக்க முடியாதவற்றையும், தான் அச்சப்படுபவற்றையும் தூக்கியெறிந்து வதம் செய்யக்கூடிய ஒரு சக்திக்காக வேண்டி நிற்கிறது. உயிரினங்களில், மனித உள்ளம் மட்டுமே கற்பனை செய்யக் கூடியது. தன்னால் எதிர்க்க முடியாவற்றை மிருகம் எதிர்க்காது. ஓரிரு முறை முயற்சித்த பின்னர் ஓடி ஒளிந்து கொள்ளும், மனிதன் மட்டுமே, முதலில் ஓடி ஒளிந்தாலும் அதை எப்படி எதிர்த்து வீழ்த்தலாம் என யோசிப்பான். இதற்கு அவனது கற்பனா சக்தியும் உதவுகிறது.

மனித மனம் கடவுள் என்ற பேரண்ட சக்தியை படைத்தது இவ்வாறுதான். தன்னால் சாதிக்க முடியாதவற்றை அவர் சாதிப்பார் என்றும் பதிலாக அவரை சேவித்து பலிகள் கொடுத்தால் போதும் என்ற பண்டைய சிந்தனையை உலகெங்கும் நாம் பார்க்கலாம். பண்டைய எகிப்திய இலக்கியங்களில் சுப்பர் நாயகர்களைப் பார்க்க முடியும். கிரேக்க புராணங்களில் வீராதிவீரர்களைப் பார்க்க முடியும். தம்மை பாதிக்கக் கூடிய ஒவ்வொரு இயற்கை சக்திக்கும் கிரேக்கர்கள் தனித் தனி கடவுளர்களை படைத்திருந்தார்கள். இதே சாயலை இந்து புராணங்களில் காண முடியும். அவ்வப்போது, துஷ்ட நிக்ரஹம் செய்து சிஷ்ட பரிபாலனத்தை நிலை நிறுத்துவற்காக நான் அவதரிப்பேன் என்று கிருஷ்ணர் சொல்கிறார். இராமரும், கிருஷ்ணரும் மகா வீரர்களான அசுரர்களை அழிந்து தேவர்களையும், முனிபுங்கவர்களையும் காத்தருள்வதாகவும், நவீனமான ஆயுதங்களை பாவிப்பதாகவும் நாம் புராணங்களில் காண்கிறோம். தமது வாழ்விடத்தில் இருந்து ஆக்கிரமிப்பு செய்திருக்கும் ரோமர்களை அகற்றுவதற்காக வந்த ஆபத்பாந்தவராகவே யூதர்கள் இயேசுவை கருதியிருந்தார்கள் என்றொரு வரலாறும் உள்ளது.

இந்த மனிதனின் எதிர்பார்ப்பு பின்னர் கலை வடிவங்களாகி, கிராம கூத்துகளாகவும், மேடை நாடகமாகவும் பின்னர் திரைப்படங்களாகவும் மாறின. எல்லா வெற்றிகரமான கதைகள் அல்லது அது சொல்லப்படும் பாணி என்பது அன்றைக்கும் இன்றைக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. மிகவும் பலம் பொருந்திய ஒரு துஷ்ட பாத்திரம், அவனை எதிர்க்கும் வீரன் பாத்திரம். அவனது வருகைக்காகவும் எழுச்சிக்காகவும் காத்திருக்கும் நலிந்தவர்கள் (பெற்றோர்/ காதலி/ நண்பர்கள்/ மக்கள் கூட்டம்), ஏகப்பட்ட சிக்கல்கள், பின்னடைவுகளுக்கு மத்தியில் மிகவும் சூட்சுமமான முறையில் நாயகன் இறுதியாக தீய சக்தியை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவான். இந்த மையக் கருதான், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக புராணங்களில் சொல்லப்பட்டு வந்தன. இன்று உலக சினமாக்களில், கோடி கோடியாக சம்பாதிக்கும் வெற்றித் திரைப்படங்களாக தந்து கொண்டிருப்பதும் மனித உளவியலின் அடிப்படை கட்டமைப்புகளில் ஒன்றான ‘துஷ்ட நிக்ரஹம்’ தான்!

யூதர்களை வாக்களிக்கப்பட்ட தேசத்துக்கு இட்டுச் செல்லும் மோசஸ் பாத்திரம் ஒரு சுப்பர் ஹிரோவாக பைபிளில் காட்டப்பட்டுள்ளது. ஐம்பதுகளில் வெளிவந்த சிசில் பீ டிமெல்லின் பத்து கட்டளைகள் என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் இந்த சுப்பர் ஹீரோ பாத்திரத்தில் சாள்ஸ்டன் ஹெஸ்டன் நடித்திருப்பார். படம் படுவெற்றி பெற்றது. பின்னர் மிகவும் விஞ்ஞான பூர்வமான மதிநுட்பம் மிக்க ஜேம்ஸ் பொண்ட் பாத்திரம் வடிவமைக்கப்பட்டு, இன்றளவும், கதை அதே பழைய பல்லவியாக இருந்தாலும், பொண்ட் படங்கள் வசூலை வாரி இறைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. அதன் பின்னர் நம் சுப்பர் நாயகன் அண்டவெளிக்குத் தாவினான். ‘ஸ்டார் வோர்ஸ்’ படங்கள் வெளிவந்து, பூமிக்கு வெளியே அண்டவெளி இருள் சத்திகளுடன் மோதும் சுப்பர் நாயகர்களை நமக்கு அறிமுகப்படுத்தின.

இதே பாணியில்தான் தமிழ்ப் படங்களும் சுப்பர் நாயகர்களை, தியாகராஜா பாகவதர், எம்.ஜி.ஆர். ரஜினிகாந்த், விஜய், அஜித் எனத் தந்து கொண்டிருக்கின்றன. கதை என்னவோ, ராமர் கானகம் புகுந்து வல்லமை கொண்ட அசுரர்களை வதம் பண்ணி பாதிக்கப்பட்டோரை இரட்சிக்கும் அதே பழைய கதைதான்! ஆனால் நாம் சலிப்பில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ரஜினி நல்ல நடிகரானபோதும் சுப்பர் ஸ்டார் பிம்பத்துக்குள் சிக்கிக் கொண்டதால் அதை விட்டு வெளியே வரமுடியாதவராக உள்ளார். மாற்றத்துக்கு குசேலனில் நடித்துப் பார்த்தார். அதில் அவருக்கு சுப்பர் ஹீரோ பாத்திரம் கிடையாது. படம் ஊற்றிக் கொண்டு விட்டது. காலாவும் அத்தகைய ஒரு முயற்சியாகவே தெரிகிறது.

திரைப்படங்களில் மட்டுமல்லாது அரசியலிலும் எவர் சுப்பர் ஹீரோவாக விளங்குவாரோ அவருக்கே மக்கள் வாக்களித்து, நெஞ்சங்களில் தாங்கிக் கொள்வார்கள். காந்திஜி அப்படியான ஒரு சுப்பர் ஹீரோ! சீனாவுக்கு மாவோ, வியட்நாமுக்கு ஹோசிமின், கியூபாவுக்கு பிடல்காஸ்ட்ரோ, அமெரிக்காவுக்கு ஆபிரகாம் லிங்கன், தமிழர்களுக்கு அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எல்லாம் உச்ச கட்ட நாயகர்கள் தான்!

இந்த அடிப்படையில்தான், அரசியலுக்கு வருவேனா இல்லையா என்று முடிவு செய்யப்படாத இரண்டாண்டுகளுக்கு முன்னர், காலாவில் நடிப்பதற்கு ரஜினி ஒப்புக் கொண்டார்.

மும்பை தாராவி, கடற்கரை சார்ந்த ஒரு சேரிப்பகுதி. சேரி என்பதற்கு அர்த்தம் சேர்ந்து வாழ்தல் என்பதாம். பல தரப்பட்ட ஏழை மக்களும் ஓரிடத்தில் வந்து சேர்ந்து வாழ்ந்த இடமே தாராவி. இங்கே பெரும்பான்மையானோர் தமிழர்கள். தாராவியை மையப்படுத்தி பல படங்கள் வந்துள்ளன. கமல் நடித்து, மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த நாயகன், தாராவியை ஆண்ட ஒரு தமிழ் தாதாவை மையப்படுத்தியது. அந்த தாதா மறைந்தபோது, மும்பையின் மிகப் பிரபலமானவர்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். நடிகர் ராஜ் கபூரும் அதில் கலந்து கொண்டிருந்ததை அந் நாளில் பத்திரிகைகள் பெரிய அளவில் பேசின.

தாராவி ஒரு பரந்த குடிசைப் பகுதி. அங்கே மக்களை விரட்டிவிட்டு மாடிவீடுகளை அமைக்க முயல்வதையும் அதை காலா தடுப்பதையும் மையப் புள்ளியாக வைத்து இரஞ்சித் பின்னிய கதை இது.

சரி, யார் இந்த இரஞ்சித்?

தன்னை ஒரு தலித் என தைரியமாக அழைத்துக் கொள்ளும் இளைஞன். கடந்த வாரம் ஊடகங்களுடன் பேசியபோது, தன்னை ஒரு அரசியல்வாதி என அழைத்துக் கொண்டார். அவர் கட்சி ஆரம்பிக்கும் நோக்கத்தில் இதைச் சொல்லவில்லை. திரைப்படங்கள் மூலம் தலித் அரசியலை மக்களிடம் எடுத்துச் செல்லும் அரசியல்வாதி என்பதே இதன் பொருள். இதுவரை இவர் எடுத்த மூன்று படங்களும் வெற்றி பெற்றுள்ளன. காலா நான்காவது படம். கபாலியில் ஓய்வுபெற்ற தாதா, ‘நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்றபடி களத்துக்கு திரும்பி வருவார். கதைக் களம் மலேசியாவில் வைக்கப்பட்டிருந்தது. காலாவின் கதைக்களம் தாராவி. கதைக் களத்தை தமிழகத்தில் வைத்தால் வேறு சில குழப்பங்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்பதால் தான் தாராவியை வரிந்து கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

தலித் அரசியலை வன்மையாக பேச வேண்டும் என்ற வேட்கை கொண்ட இரஞ்சித், பெண்களின் பிரச்சினையை மையப்படுத்தி ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் வெளியிட்டுள்ளார். அவரது வெற்றியே, கபாலியிலும் சரி, காலாவிலும் சரி ஒரு சுப்பர் நாயகனைப் பயன்படுத்தி தான் சொல்ல நினைத்தவற்றை சொல்லி இருப்பதுதான். சுப்பர் நாயகன் எனப்படுபவர், இயக்குநரை ஆட்டிப் படைத்து தனது கட்டமைக்கப்பட்ட பிம்பத்துக்கு ஏற்ற மாதிரி படத்தை எடுப்பதே வழக்கம். அவர் நினைத்தபடியே அந்தப் படமும், ரஜினி படமாக, கமல் படமாக அல்லது அஜித் படமாக இருக்கும். எனினும் காலாவில் ரஜினி விருப்பப்பட்டே நடித்திருந்தாலும் கூட, படமென்னவோ ரஜினி பாணி படமாக இல்லாமல் தலித்தியம் பேசும், ஒடுக்கு முறைக்கு எதிராக குரல் எழுப்பும் இரஞ்சித்தின் படமாகவே இருக்கிறது.

போராட்டம் இல்லாமல் ‘ஆண்டகை’களை வெற்றிகொள்ள முடியாது; போராட்டமே ‘சிஸ்ட’த்தை மாற்றும் என்று பேசுகிறது படம். மூன்று பெண் போராளிகளையும் தனிப் பாதைகளில் விட்டு அவர்களின் போராட்டங்களையும் சித்தரிக்கிறது. அடிப்படையில் இது நில மீட்புக்கான போராட்டக் கதை. தமிழகத்தில் தலித்துக்களுக்கு பெரும்பாலும் சொந்த நிலம் கிடையாது. அவர்களின் பூர்வீக காணிகள், பஞ்சமர் நிலங்கள் எப்போதோ உயர் சாதியினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டது. இதற்கான போராட்டம் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது. இதைத்தான் இரஞ்சித், என்ற ஒரு சுயமரியாதை சிந்தனை கொண்ட இயக்குநர், தாராவி வழியாக, ஒரு சுப்பர் ஸ்டாரை நகர்த்துவதன் ஊடாக மக்களிடம் எடுத்துச் சென்றிருக்கிறார்.

எனவே இரஞ்சித் தன் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். சுப்பர் ஸ்டார் ரஜினி வெற்றி பெற்றிருக்கிறாரா என்பதுதான் இன்று தமிழகத்தில் விடை தேடும் கேள்வியாக மாறி இருக்கிறது.

(17 ஆம் பக்கம் பார்க்க)

Comments