பொறுமை காப்பதற்கான உன்னத பயிற்சிக்களம் | தினகரன் வாரமஞ்சரி

பொறுமை காப்பதற்கான உன்னத பயிற்சிக்களம்

மருதமுனை- 
ஏ. எம். எம். பாறூக்     

பொறுமை என்பது கடலிலும் பெரிதென்பார் இதனைக் கடைப்பிடித்து வாழ்வதால் ஈருயக வாழ்விலும் வெற்றிபெறலாம் என்பது அருள் மறையின் அழகிய கூற்று இதைவிட்டு எல்லை கடந்து செயற்படுவதால் ஏற்படும் விபரீதங்கள் பாரிய விளைவினை உண்டாக்கும்.

“விசுவாசிகளே (நீங்கள் உங்கள் முயற்சிகளில் சித்தியடையும் பொ ருட்டு) பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (2:153)

மானிட வாழ்வில் அன்பு, கருணை, விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு, கலந்துரையாடல் போன்ற உயர்ந்த பண்புகள் ஏற்பட்டால் அவற்றின் பயனாக சிறநத முன்மாதிரி உண்டாகின்றன.

இதனால் எல்லோரும் நன்மையடையலாம். மனங்களிடையே மாற்றுக் கருத்துக்கள் உருவாகும்போது மற்றவர்களைப் பற்றித் தவறான எண்ணங்கள் நோற்றம் பெற்று சகித்துக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை உண்டாகின்றன.

கஷ்டங்கள், நஷ்டங்கள் சகஜம். அவை நிரந்தரமானதல்ல. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மனங்களை தவறான திசைகளில் செல்ல விடாது, உறுதியுடனும், கட்டுப்பாட்டுடனும் வைத்துக்கொண்டு பொறுமையை கடைப் பிடித்து வந்தால் இறைவன் அவ்வாறான செயல்களுக்கு பெரும் நன்மையையே வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளான். உதவி தேடுவதில் பாராமுகமாக இருக்காமல் உறுதியுடன் இருந்து செயற்படவேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் அநேகமான சந்தர்ப்பங்களில் பொறுமையைக் கடைப்பிடித்து வாழ்ந்து பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள். இதனை மற்றவர்களும் கடைப்பிடித்து நடக்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்தியுள்ளார்கள்.

சமூகங்களிடையே நல்லெண்ணங்களையும் நல்லொழுக்கங்களையும் ஏற்படுத்தி ஒற்றுமையை வளர்க்க அயராது உழைத்து வந்துள்ளார்கள்.

பொறுமையைக் கடைப்பிடிக்காமல் எல்லை மீறி செயல்படும்போது ஏற்படும் விளைவுகள் கடைசியில் வேதனையையே கொடுக்கும். எந்த சந்தர்ப்பத்திலும் பொறுமையைக் கடைப்பிடித்தால் அதற்கு இறைவனிடத்தில் நற்கூலிகள் கிடைக்கின்றன. (எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக் கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். (2:45)

பொறுமை என்பது ஒரு இனத்துக்கும், ஒரு சமுதாயத்துக்கும் வரையறுக்கப்படவில்லை. ஒழுங்கான பெற்றோருக்கு பிறந்தவர்கள் பொறாமையின் காரணமாக பொறுமை இழந்து மற்றவர்களின் உடைமைகளுக்கு சேதத்தை விளைவிப்பது, கொலை பழி போன்ற தீய செயல்களைச் செய்யமாட்டார்கள். இதனையே எல்லா மதங்களும் அழகான முறையில் எடுத்துச் சொல்கின்றன. இவற்றை மீறிச் செய்பவர்கள் இவ்வுலகில் அதிகமான தீமைகளைச் சந்திக்க நேரிடும் அவ்வாறான சந்தர்ப்பஙகளில் மனச்சாட்சி முன்வந்து அதன் வேலைகளைச் செய்யும் என்பதை நாம் உணரவேண்டும்.

விசுவாசங் கொண்டு நற்கருமங்கள் செய்பவர்களை பூமியில் விஷமம் செய்பவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா அல்லது பயபக்தியுடையவர்களை (அஞ்சாது குற்றம் புரியும்) பாவிகளைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா (38:28)

பொறுமையை இழக்கச் செய்யக்கூடிய பேச்சுக்களையோ, செயல்களையோ, அதற்காக உடனிருந்து செயல்படுவதோ அவையெல்லாம் கீழ்த்தரமான செயலாகும் பொறுமையை மீறும செயல்களைச் செய்துவிட்டு அதன் பின்னர் வருந்துவதை விட சிந்தித்துச் செயற்படுவது மேலானதாகும்.

பொறுமையை இழந்து தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் அவர்கள் செய்தவைகளுக்காக நீண்ட நாள் வருந்தவேண்டி வரும். ஆகவே துன்பங்களை சகிர்த்துக்கொண்டு பொறுமையாய் இருக்க இறைவன் நல்லருள் பாலிப்பானாக.

Comments