வாழ்க்கைச் செலவை சமாளிப்பது எப்படி? | தினகரன் வாரமஞ்சரி

வாழ்க்கைச் செலவை சமாளிப்பது எப்படி?

கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை

 

கொழும்பு பல்கலைக்கழகம்
 

'சுப்பர் மார்க்கட் எனப்படும் பல்பொருள் அங்காடிகள் பெருமளவில் பண்டங்களை வாங்கி வைத்துக்கொள்வதால் அவற்றை அவ்வப்போது விலை குறைப்பு செய்து அவற்றால் விற்க முடிகிறது. தற்போதுகூட 30சதவீத விலை குறைப்பு ஒன்று நடைமுறையில் உள்ளது. இணைய வணிக நிறுவனங்களும் குறைந்த விலையில் பொருட்களை விற்கின்றன. அங்காடிகள் வழங்கும் சலுகை அட்டைகள், கிரடிட் அட்டைகள் என்பனவற்றுக்கும் விலை குறைக்கப்படுகிறது. சரியாக திட்டமிட்டு இவ்வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் செலவை சமாளிக்கலாம்'

 

இலங்கையில் வாழும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வாழ்க்கைச் செலவு உயர்வை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. விலைவாசிகளின் உயர்வு வறியவர்களை அதிகம் பாதித்தாலும் அவர்களில் பலர் கிராமப்புறங்களில் வாழ்வதால் சுற்றுச் சூழலில் காணப்படும் வளங்களைப் பயன்படுத்தி ஒருவாறு சமாளித்துக் கொள்கின்றனர். நீர், விறகு, காய்கறிகள், மரம், குப்பை அகற்றல் போன்றவற்றை இலவசமாகப் பெறக்கூடிய வாய்ப்புண்டு.

ஆனால் நகர்ப்புறச் சூழலில் வாழும் சராசரிக் குடும்பமொன்று ஒரு சிறு துண்டு விறகு தொடக்கம் அனைத்தையும் பணம் செலுத்தியே பெறவேண்டும். வறிய குடும்பங்களின் வாழ்க்கைச் சூழல் வாழ்க்கைச் செலவு மாற்றத்திற்கேற்ப இசைவாக்கமடையும் தன்மையுடையது. ஆனால் மத்தியதரக் குடும்பமொன்று சமூக அந்தஸ்தைப் பேணவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். அதன் காரணமாக விலை மட்டங்கள் அதிகரித்து வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான உணவு, போசாக்கு போன்ற விடயங்களை தியாகம் செய்து மற்றவர்களுக்காக தமது அந்தஸ்தைப் பேணவேண்டிய நிலை ஏற்படுகிறது.

உதாரணமாக, கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் வாழும் ஒரு குடும்பத்தை எடுத்துக்கொள்வோம். கணவன் மனைவி இருவரும் தொழில் செய்தாலும் ஆகக்கூடியதாக ஒரு இலட்சம் ரூபாவை வருமானமாகப் பெறலாம். வீட்டு வாடகை 25,000 – 35,000 ஆயின் எஞ்சுவது 65,000 ரூபா. அதில் மின்கட்டணம், நீர் போன்ற செலவுகள், உணவு, உடை, போக்குவரத்து குழந்தைகளின் படிப்பு, மருத்துவச் செலவு போன்ற தேவைகளுக்கு இதைப் பயன்படுத்த வேண்டும். இவ்வருமானம் போதாது. மறுபுறம் சமூக சடங்குகளான திருமணங்கள், விழாக்கள், கொண்டாட்டங்கள் போன்ற செலவுகளும் அவ்வப்போது தலையெடுக்க, எவ்வாறு இவற்றைச் சமாளிக்க முயன்றாலும் பெரும்பாலான குடும்பங்களில் கடந்தகால சேமிப்புகளோ, வெளிநாட்டில் வசிக்கும் உறவினரின் உதவிகளோ, அல்லது கடன் வாங்குதல் இன்றி சமாளிப்பது மிகமிகக் கடினமாகும். தவணைக் கட்டணங்களில் நுகர்வுப் பொருட்களை வாங்கி நுகரவேண்டிய நிர்ப்பந்த நிலையில் ஏற்படும் விலைவாசி உயர்வு என்பது இப்போதைய சூழலில் தவிர்க்க முடியாதது. எனவே மாற்று வழிகளைத் தேடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

இப்போதெல்லாம் பல்பொருள் அங்காடிகளில் அடிக்கடி விலைக் கழிவுகள் வழங்கப்படுகின்றன. சரியான விதத்தில் அவதானித்துச் செயற்பட்டால் பல பொருட்களை 25%- - 40% கழிவு விலையில் பெறலாம். மரக்கறி, பழவகை, உணவுப்பொருள் போன்றவை இவ்வாறு குறைந்த விலையில் விற்பனைக்கு வருகின்றன. கொழும்பில், வெள்ளவத்தை போன்ற இடங்களில் உள்ள சாதாரண கடைகளில் நிலவும் விலைகளை விட குறைந்த விலையில் பொருட்களை பல்பொருள் அங்காடிகளில் கொள்வனவு செய்யலாம். வாங்குபவரே பொருட்களைத் தெரிவு செய்து வாங்குவதால் கடைக்காரர் கொடுப்பதை அப்படியே வாங்கிக் கொண்டு வரவேண்டியதில்லை. பல்பொருள் அங்காடிகள் வாடிக்கையாளர் அட்டைகளை வழங்குகின்றன. இவற்றைப் பயன்படுத்தியும் கழிவுகளைப் பெறலாம். பெரிய அளவுகளில் இவ்வகை அங்காடிகள் தமக்குரிய சரக்குகளைப் பெற்றுக் கொள்வதால் கழிவு விலைகளில் அவற்றை வழங்க அவற்றால் முடிகிறது.

அதுமட்டுமன்றி நெடுவாழ்வுப் பொருள்களான தொலைக்காட்சி பெட்டிகள், குளிர்சாதனங்கள், அடுப்புக்கள், வரவேற்பறை உபகரணங்கள் உட்பட பல்வேறு பொருட்களை மின்வணிக இணையத்தளங்கள் மூலம் நம்ப முடியாத குறைந்த விலைகளில் கொள்வனவு செய்யமுடிகிறது. ஆரம்பத்தில் ஓரிரண்டு மின்வணிக தளங்களே இலங்கையில் இருந்தபோதிலும் இப்போது புற்றீசல் போல நூற்றுக்கணக்கில் இவை தொழிற்படுகின்றன.

அது மட்டுமன்றி உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாட நுகர்வுப் பொருட்களை விநியோகிக்கும் இணையத் தளங்களும் உள்ளன. இவற்றின் ஊடாகவும் பொருட்களைப் பெறக்கூடிய நிலை உள்ளது.

ஆனால் இணையத்தள வாயிலாக வாங்கும் பொருட்கள் உரிய தரத்தில் இருக்குமா என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது. பெரும்பாலான இணையத் தளங்கள் தரமான பொருட்களை விற்பதில்லை. அத்துடன் ஒரே வகையான பொருட்களையே எல்லா இணையத்தளங்களும் விற்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. காட்சிக்கூடங்கள், விற்பனைக் கூடங்கள் என்பன அவசியமில்லாத படியாலும் ஏனைய செலவுகள் இல்லாததாலும் மொத்தமாக சரக்குகளை பெற்றுக் கொள்வதாலும் அவற்றால் சந்தையில் நிலவும் விலைகளை விட குறைவான விலையில் பொருட்களை வழங்க முடிகிறது.

இத்தகைய இணையத் தளங்களின் களஞ்சியங்கள் நகர்ப்புறங்களை அண்டியே இருப்பதால் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினருக்கு சந்தை விலையை விட குறைவான விலையில் பொருட்களை உடனடியாகக் கொள்வனவு செய்யமுடியும்.

பால்மா, சீனி, பருப்பு, அரிசி, கருவாடு, மரக்கறி, இறைச்சி, மீன், முட்டை, தகரத்தில் அடைத்த உணவுகள், எண்ணெய், பானங்கள், தேயிலை, கோப்பி மற்றும் பல அன்றாட உணவுப் பொருட்களையும் அத்துடன் சவர்க்காரம், ஷம்பூ, அழகு சாதனப்பொருட்கள் போன்றனவையும் குறைந்த விலைகளில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் இணையத் தளங்கள் மூலம் பெறலாம். இதன் மூலம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை ஓரளவேனும் தாக்குப்பிடித்துச் சமாளிக்க முயற்சிக்கலாம்.

ஆனால், இந்த அங்காடியில் எந்தப்பொருள் கழிவில் விற்கப்படுகின்றது என்ற தேடலை மேற்கொள்ள எல்லோரும் முயற்சிப்பதில்லை. அடிக்கடி அத்தகவல்களை பெறுவதும் இலங்கையில் சற்றுக்கடினம். ஆனால் அவ்வாறு தேடிச்செல்லும்போது பெறப்படும் கழிவுகள் செலவிடப்படும் பணத்தில் சிலவேளை 25% -- 40% வரையில் இருப்பதால் பணத்தை மீதப்படுத்தலாம்.

நெடுவாழ்வுப் பொருட்களைப் பொறுத்தவரை அவை அடிக்கடி வாங்க வேண்டியதில்லை. எனவே போதியளவு தேடலைச் செய்து குறைந்த விலை நிலவும் இடத்தில் அவற்றை வாங்க முடியும்.

ஆடை அணிகலன்களை விற்கும் நிலையங்களும் கழிவுகளை வழங்குகின்றன. எனவே விலைக்கழிவுகள் வழங்கப்படும் காலங்களில் மட்டும் அவற்றை கொள்வனவு செய்வதன் மூலம் செலவைக் கட்டுப்படுத்தலாம்.

பொருள் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்கள் தமது இலாப வீதங்களை அதிகமாக வைத்தே விலைகளை நிர்ணயிக்கும். எனினும் பெயரளவில் சரக்குகளைக் பெற்று விற்கும் நிறுவனங்களுக்கு விளம்பரச் செலவு, காட்சிப்படுத்தும் செலவு, ஆளணிச் செலவுகள் குறைவு. இணையத்தள வணிக நிறுவனங்களுக்கும் கழிவு விலைகளில் அவற்றை வழங்க முடிகிறது. எனவேதான் இது பற்றிய தெளிவு கொள்வனவாளருக்கு அவசியமாகிறது.

பல்பொருள் அங்காடிகளுக்குச் சென்றால் அதிகம் செலவாகிவிடுமோ, அவற்றின் விலை பலமடங்கு அதிகமாக இருக்குமோ என்ற காரணத்தால் ஆரம்பத்தில் வறிய மற்றும் மத்திய தர வர்க்கத்தினர் அங்கு செல்லாமல் தவிர்த்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. நகர மாந்தர் பலரும் இவற்றுக்குச் சென்று பயன்பெறுகின்றனர்.

சிறு நகரங்களிலும் இவற்றின் வருகை ஆரம்பித்திருப்பதால் நுகர்வோர் விழிப்புடன் செயற்பட்டு விலைக்கழிவுள்ள பொருட்களை மட்டும் கொள்வனவு செய்ய முயற்சித்தால் தமது தெரிவுக்கேற்ப பொருட்களை வாங்குவதுடன் வாழ்க்கைச் செலவையும் சமாளிக்கலாம்.

ஆனால் ஒரு விடயம், ஒரு பல்பொருள் அங்காடியில் நுழைந்தால் கழிவு விலைகளில் உள்ள பொருளை மட்டும்தான் ஒருவர் கொள்வனவு செய்வாரா? காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்கள் பலவற்றை வாங்கத்தூண்டும் வகையில் பல்பொருள் அங்காடிகள் இயங்கும்.

எனவே, மனக்கட்டுப்பாடு இங்கே அவசியமாகிறது. அது இல்லாதவர்கள் குறைந்தபட்சம் வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியலை முன்கூட்டியே தயாரித்து அதற்கேற்ப மட்டும் பொருட்களைக் கொள்வனவு செய்யலாம்.

Comments