வெளிச்சக்திகளின் இயங்கு பொம்மைகள் | தினகரன் வாரமஞ்சரி

வெளிச்சக்திகளின் இயங்கு பொம்மைகள்

கருணாகரன்

“மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த கல்விமான்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டுச்செல்வது இன்று பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது” என்று சொல்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

சிரித்து விடாதீர்கள். இப்படியொரு பிரச்சினை நாட்டிலே உள்ளது என்றுரைத்த தலைவருக்கு தெரிந்திருக்கிறதே என இதையிட்டு நாம் நிறைவடைய முடியாது.

ஏனென்றால், தாம், அதாவது “அரசாங்கம் இந்த விடயத்தில் எதையுமே செய்யாது” என்று அவரே கூறுகிறார்.

“சட்டதிட்டங்களை விதித்து, புத்திஜீவிகள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடையை ஏற்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை. எனினும் இலவசக் கல்வியை பெற்ற குடிமக்கள் என்ற வகையில் மனச்சாட்சியின்படி தாய்நாட்டுக்கான தமது கடமைகளை நிறைவேற்ற அவர்கள் அர்ப்பணிப்புடையவர்களாக இருக்க வேண்டும்” என்கிறார் ஜனாதிபதி.

இந்த மாதிரி ஒரு குரலை – ஒரு கோரிக்கையை பொது மக்கள் முன்வைக்கலாம். அவர்கள் அப்படித்தான் சொல்ல முடியும். அவர்களுக்கான அதிகார வரம்பு அந்தளவுக்குத்தான் உண்டு. அதற்கு மேல் அவர்கள் இதை வலியுறுத்திச் சொல்ல வேண்டுமானால் அது போராட்டமாகவே இருக்கும். நாட்டைவிட்டு வெளியேறும் பட்டதாரிகளைத் தடுப்பதற்கான போராட்டமாக.

ஆனால், அரச தலைவர் இப்படிச் சொல்ல முடியாது. நாட்டின் வளமாக உள்ள புத்திஜீவிகளிடம் அவர் உரிமையோடு பேச வேணும். அது அவருடைய பொறுப்பு. அல்லது அரசாங்கம் மெது நிலைச்சட்டத்தைப் பிரயோகிக்கலாம். அதாவது மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்வியைப் பெறுவதனால், குறிப்பிட்டளவு காலம் மக்களுக்கு (நாட்டுக்கு) சேவை செய்தே தீர வேணும். அதற்குப்பிறகு மேற்படிப்பு உள்ளிட்ட பிற காரணங்களுக்காக வெளிச் செல்ல முடியும் என.

இப்படியான ஒரு இறுக்கத்தைப் புத்திஜீவிகளுக்குக் கொண்டு வரும்போது, அவர்கள் தமக்கான பிரச்சினைகளைப் பற்றியும் வாய்ப்புகளையிட்டும் பேச முற்படலாம். கேள்விகளை எழுப்பலாம். அப்படியான நிலைமைதான் இப்போது நாட்டிலுள்ளது.

அரச அதிகாரத்திலும் அரசியல் மையத்திலும் இருப்போரையும் அவர்களோடு இணைந்து நிற்கும் உயர்வர்க்கத்தினரான ஒரு சிறிய குழாத்தினரையும் தவிர, வேறு எவருக்கும் நல்வாய்ப்புகளும் உத்தரவாதமான சூழலும் இல்லை.

“மக்களுக்கான வாய்ப்புகள்” என்ற “ஜனநாயக விரிவு” காய்ந்து கருகி விட்டது. வல்லாதிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்கி, சொந்த நாட்டையே அழித்துக் கொண்டிருக்கும் அரசியல், “நலன் விளை சூழமைவு”களை இல்லாதொழித்து விட்டது.

இந்த வல்லாதிக்கச் சக்திகள் தம்மில் தங்கியிருக்கும் வகையிலான ஒரு பொறிக்குள் இலங்கையைத் தள்ளி விட்டுள்ளன. இலங்கையின் உற்பத்தித்துறை மற்றும் பொருளாதாரம், கல்வி, அரசியல் உறுதிப்பாடு, பாதுகாப்பு போன்றவற்றையெல்லாம் தளர்வுக்குள்ளாக்கியுள்ளன.

இதனால் இலங்கை பிற நாடுகளுக்கான சந்தையாகியுள்ளது. மட்டுமல்ல அரசியல் விவகாரங்கள் தொடக்கம் நாட்டின் பொருளாதாரச் சிந்தனை, கல்வி உள்ளிட்ட அனைத்தையும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி தொடக்கம் பிற சக்திகளே நிபந்தனைக்குட்படுத்தி வைத்திருக்கின்றன.

இதற்கேற்ற வகையில் புத்திஜீவிகளையும் ஆற்றல் மிக்கவர்களையும் இந்த வெளிச் சக்திகள் நாட்டை விட்டு வெளியே எடுத்து விடுகின்றன. அல்லது இலங்கையை விட்டு வெளியேற்றி விடுகின்றன. அதாவது நாட்டைத் தளர்வுக்குள்ளாக்கிப் பின்னடைய வைக்கும்போது அவர்கள் வேறு வழியில்லாமல் வெளியேறி விடுவார்கள்.

இப்படிப் படித்தவர்களும் ஆற்றலுள்ளவர்களும் வெளியேறினால் நாட்டை – இலங்கையை - கட்டியெழுப்ப முடியாது. மீளமைப்புச் செய்ய முடியாது. ஆகவே, எப்போதும் தம்மில் தங்கியிருக்கவே வேண்டும் என்ற விசச் சூழ்ச்சிப் பொறியை இவை வெற்றிகரமாக இயக்கிக் கொண்டிருக்கின்றன.

இதை மீளமைப்புச் செய்யக் கூடிய உறுதியும் தீர்க்கதரிசனமும் உள்ள தலைவர்களும் அரசியற் கட்சிகளும் இல்லாதொழிந்து விட்டன. இப்போதிருக்கின்ற அரசாட்சிச் சக்திகள் எல்லாம் வெளிச் சக்திகளின் இயங்கு பொம்மைகளே. இதற்கு மாறாக, நாட்டுக்குத் தேவையான மாற்று அரசியலை முன்வைக்கும் கட்சிகளையும் தலைமையையும் மக்களும் ஊடகங்களும் புத்திஜீவிகளும் அங்கீகரிப்பதில்லை என்பது இன்னொரு துயரம்.

இத்தகைய பல்நிலைச் சிக்கல்கள் நிறைந்த சூழலில் புத்திஜீவிகளின் மீதும் திறன் மிக்கோரிடத்திலும் அரசாங்கம் எத்தகைய விதிகளையும் பிரயோகிக்க முடியாது. இதனால்தான் அரசாங்கம் சட்ட இறுக்கத்தைக் கொண்டு வரமுடியாமல் நழுவுகிறது. உண்மையில் சட்ட இறுக்கமோ கோரிக்கையோ இந்த விசயத்தில் அவசியமில்லாத ஒன்று.

நாட்டில் நல்லதொரு சூழமைவு இருக்குமானால் படித்தவர்கள் நாட்டை விட்டு, ஊரையும் உறவுகளையும் விட்டு, இப்படிப் பரதேசம், பிறதேசம் என்று வெளியேறிச் செல்வார்களா?

வெளியே எதற்காகச் செல்ல வேண்டும்?

தொழில், வருவாய், நல்லதொரு எதிர்காலம், பாதுகாப்பு என்பவற்றுக்காகத்தானே!

இதற்காகத்தானே படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் எனப் பல்வேறு பிரிவினரும் நாட்டுக்கு வெளியே செல்ல முற்படுகிறார்கள். சிலருக்குப் பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக உள்ளது. பலருக்கும் பொருளாதாரப் பிரச்சினை காரணம்.

இதற்காகச் சிலர் பெருமளவு பணத்தை (40,45,50 இலட்சம் ரூபாய்க்கு மேல்) செலவழித்து பிரான்ஸ், கனடா, லண்டன், அவுஸ்திரேலியா, சுவிற்சர்லாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளுக்குப் போகிறார்கள். ஏற்கனவே படித்த கல்வித்தகமை, தொழில் அனுபவம் வேறு உண்டு. இவ்வளவு பெருந்தொகை பணத்தோடு பெற்றுக்கொண்ட அறிவும் நாட்டை விட்டு வெளியே போகிறது.

இந்தப் பெருந்தொகை பணத்தையும் தங்கள் திறனையும் அவர்கள் இங்கே – நாட்டில் - முதலீடு செய்து ஒரு தொழிலை ஆரம்பிக்கலாம். அதற்கு ஏற்றமாதிரி நாட்டில் அனைத்து ஏற்பாடுகளும் சூழமைவும் இலகுவாக இருக்க வேணும். ஆனால், அதற்கான ஊக்க நிலையும் ஏற்பாட்டு வசதிகளும் இல்லை. அப்படியில்லை என்றபடியால்தான் வேறு வழியில்லாமல் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

இன்னொரு சாரார், மிகக் கடினமான வேலைகளைச் செய்ய வேண்டிய, மிகக் கடுமையான சட்டப் பிடிகளுக்குள் ஒடுங்கி வாழ வேண்டிய, முற்றிலும் புதிய – வெக்கை நிரம்பிய சூழலில் தாக்குப் பிடிக்க வேண்டிய மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கிறார்கள். அங்கே இத்தனை நெருக்கடிகளையும் சந்திக்க வேணும் என்று தெரிந்து கொண்டே செல்கிறார்கள். இதை விட இவர்களுக்கு வேறு வழியில்லை.

இந்தப் பயணத்தில் போய் வந்து கொண்டிருப்பவர்களை விமான நிலையத்தில் தினமும் அவதானித்துப் பாருங்கள். அவர்கள் படுகின்ற சிரமங்களும் அவர்களுடைய வாழ்க்கை நிலையும் புரியும். வேணுமென்றால், அவர்களுடன் நேரில் பேசிப் பார்க்கலாம். ஒவ்வொரு கதையும் கண்ணீர்க்காவியங்கள். அந்தக் கண்ணீர்க்காவியங்களின் உள்ளே இருப்பது இந்த நாட்டின் துயரமன்றி வேறென்ன? இந்த அரசியல் தலைமைகளின் தவறுளன்றி வேறில்லை.

இத்தனைக்கும் இவர்கள் மத்திய கிழக்கில் ஒன்றும் பெரிதாக உழைத்துப் பெருக்குவது கிடையாது. தமது குடும்பத்தின் வயிற்றுப் பசியைப் போக்கவும் ஒரு சிறிய வீட்டைக் கட்டிக் கொள்வதற்குமாகவே இந்தப் பாடுகளைப் படுகிறார்கள்.

இன்னொரு பிரிவினர் ஆபிரிக்க நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் பறக்கிறார்கள். இங்கெல்லாம் பெரிய சம்பளமோ, நினைக்கும் அளவுக்கு வாழக்கூடிய வசதிகளோ உடனடியாக இவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆனாலும் இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்றமாதிரி ஒரு எதிர்பார்ப்பில் போகிறார்கள். மிகச் சிலருக்கு எதிர்பாராத வகையில் நிறையச்சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பதுண்டு. ஆனாலும் இதற்காக அவர்கள் கொடுக்கின்ற விலை அதிகம்.

இப்படிப் பல காரணங்கள் படித்த - இந்த இளைய தலைமுறையின் வெளியேற்றத்திற்குப் பின்னே உள்ளது.

இந்தக் காரணங்களை எப்படி இல்லாமற் செய்வது?

இதைப்பற்றியே அரசாங்கம் சிந்திக்க வேணும். அப்படிச் சிந்தித்து நல்லதொரு திட்டத்தை நாட்டுக்கு உருவாக்குவது அவசியம். அப்படிச் செய்யும்போது யாரும் வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. அரசாங்கமும் கவலைப்பட வேண்டியதில்லை. எமது நாட்டின் பணமும் மூளை வளமும் அப்படியே நாட்டுக்குள்ளேயே நிற்கும். அது நாட்டை வளப்படுத்தி, உயர்த்தும்.

இதைப்பற்றி பொறுப்பானவர்கள் ஏன் சிந்திக்கிறார்களில்லை? இதுவே இன்றைய பெரும் பிரச்சினை. இதைப்பற்றி ஜனாதிபதி என்ன சொல்வார்?

ஏனெனில் அவரே நாட்டின் தலைவர். அவரே பொறுப்புச் சொல்ல வேண்டியவர். மாற்றங்களை உருவாக்குவதற்கான அடித்தளங்களை உருவாக்க வேண்டியவர்.

அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழியே!

Comments